பூத்திருக்கும் விழியெடுத்து – 10 | முகில் தினகரன்

 பூத்திருக்கும் விழியெடுத்து – 10 | முகில் தினகரன்

அத்தியாயம் –10

 “மாம் ரூபா மேடம்… அந்த வைசாலி கதையேதான் என் கதையும்”

மனதிற்குள் அவனைத் தன் ராஜகுமாரனாக எண்ணிக் கொண்டு, கனவுக் கோட்டைகளை கலர் கலராய்க் கட்டிக் கொண்டு, காதல் ராகங்களை கணமும் ஓயாமல் இசைத்துக் கொண்டு, கற்பனை வாழ்க்கையில் அசோக்குடன் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தவள், தலையே வெடித்துப் போனது போல் அலறினாள்.

 “ந்ந்நோ……ஓ…ஓ…ஓ…ஓ…ஓ”

அவள் கத்தலில் வெலவெலத்துப் போனான் அசோக்.  “மேடம்… என்ன?… என்னாச்சு?”

நொடிப் பொழுதில் தன்னை சுதாரித்துக் கொண்ட ரூபா, “அ…து   வ…ந்…து… ஒண்ணுமில்லை” என்றாள்.  ஆனால், அசோக் அவள் கத்தலுக்கான காரணத்தை யூகித்து விட்டான்.  “பாவம் இவள்… என் காதல் என்றைக்காவது ஒரு நாள் கிடைத்தே தீரும் என்கிற நம்பிக்கையில் இத்தனை நாளும் என்னைச் சுற்றிச் சுற்றி வந்தாள்… இனி என்ன செய்யப் போகிறாளோ?”

மெலிதாய்த் தொண்டையைக் கனைத்துக் கொண்ட ரூபா, “நான் இதைக் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை சார்!… இந்த விஸ்வாமித்திரர் எந்த மேனகைக்கும் மயங்கியிருக்கவே மாட்டார்!ன்னு உறுதியா நம்பியிருந்தேன்!… ப்ச்” விரக்தியாச் சொன்னவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்த அசோக்,

“என்ன மேடம்… இதுக்கே இப்படி அதிர்ச்சியாயிட்டீங்கன்னா… அடுத்து நான் சொல்லப் போற விஷயத்தை எப்படித் தாங்குவீங்க?”

புருவங்களை நெரித்துக் கொண்டு, கலவர முகத்துடன் அசோக்கைப் பார்த்தாள் ரூபா.

“என் கல்லூரிக் கால காதலி… வேற யாருமில்லை… உங்க கஸின் சிஸ்டர்…. இதே வைசாலிதான்”

“ஹக்”கென்று நெஞ்சில் கை வைத்து அதிர்ந்தாள்.  “என்ன அசோக்… நிஜமாவா சொல்றீங்க?”

 “யெஸ் மேடம்… கல்லூரிக் காலத்தில் பிரிந்தவர்கள்… சுத்தமா இருபத்தியஞ்சு வருஷத்துக்கு அப்புறம் இங்கதான் சந்திக்கிறோம்”

 “ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பீங்களே?” பொறாமையோடு கேட்டாள் ரூபா.

 “இல்லை… ரொம்ப பயப்பட்டேன்” சட்டென்று சொன்னான் அசோக்.

 “வாட்?… பயப்பட்டீங்களா?… ஏன்?… நீங்க ஏன் அவளைக் கண்டு பயப்படணும்?… ஏதாச்சும் பெரிய தப்பா பண்ணிட்டீங்களா?” உடனே கேட்டாள் ரூபா.

 வைசாலியுடனான அந்த மோசமான அனுபவங்களை அவளுடைய கஸின் சிஸ்டரான ரூபாவிடம் சொல்லலாமா?…. வேண்டாமா?…என்று அவன் யோசித்துக் கொண்டிருந்த வேளையில்,

 “அசோக்… என்னை நம்பி நீங்க எதை வேணாலும் சொல்லலாம்!… நான் அவளோட கஸின் சிஸ்டர்தான்… ஆனாலும் எந்த விஷயத்திலும் நியாயத்தின் பக்கம் நிக்கறவ!…” என்றாள் ரூபா.

அவளுடைய அந்தப் பேச்சு ஏற்படுத்திய நம்பிக்கையில், கல்லூரியில் நிகழ்ந்த டான்ஸ் போட்டியின் போது வைசாலி ஏற்படுத்திய உயிர்ப்பலி விஷயத்தை சுருக்கமாய்ச் சொல்லி முடித்தான் அசோக்.  “ஒரு சாதாரண ஆனிவல் டே காம்படிஸனுக்காக ஒரு அப்பாவி இளைஞனோட உயிரையே பலி கொடுத்தவ… இப்ப இங்க என்ன பண்ணப் போறாளோ?”

அமைதியாய் முழுவதையும் கேட்டு முடித்த ரூபா, “வைசாலி இவ்வளவு மோசமானவளா?.. பார்த்தா வெண்புறா மாதிரியிருக்கா… ஆனா உள்ளுக்குள் வெறி பிடிச்ச ஓநாயாய் இருப்பாள்ன்னு நெனச்சுக்குடப் பார்க்க முடியலை!…  ஒரு சாதாரண டான்ஸ் வெற்றிக்காக ஒரு இளைஞனோட உயிரையே எடுத்திருக்காள்!ன்னா….ச்சே… என்னால இதை ஜீரணிக்கவே முடியலை அசோக்!… நிச்சயமா அவ இதுக்கான தண்டனையை அனுபவிப்பா” முகத்தை வெறுப்பாய் வைத்துக் கொண்டு சொன்னாள்.

 “இல்லை ரூபா மேடம்… வேண்டாம்… அவளைச் சாபமிடாதீங்க!… அவ எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும்!.. என்னோட ஒரே வருத்தம் என்ன?ன்னா… அப்படித்தான்.. அந்தப் போட்டி நடந்து அவள் ஜெயிச்சிருந்தால் கூட பரவாயில்லை..”

 “என்னாச்சு?… தோத்துட்டாளா?”

“தோற்கலை!… அந்த மாணவன் சாவு காரணமா போட்டியே  நடக்கலை!… அவ நோக்கமே அதுதான்!.. “தான் தோற்கக் கூடாது… அப்படித் தோற்றுத்தான் போவோம்!ன்னு ஒரு நிலைமை வந்தா போட்டியையே நிறுத்திடணும்!” அதுதான் அவ எண்ணம்… அதையே செயல்படுத்தியும் காட்டிட்டா” அசோக் சொல்ல,

 இப்படிப்பட்ட ஒருத்தியை எப்படிங்க காதலியா செலக்ட் பண்ணுனீங்க?”

 “என்ன பண்றது எல்லாம் விதி!… நல்லவேளை பாதியிலேயே அவளோட உண்மையான சுயரூபத்தைப் புரிஞ்சு விலகிட்டேன்… இல்லேன்னா… என் வாழ்க்கையே நரகமாயிருக்கும்!”

“என்ன அசோக்… இப்படிக் கூட இருப்பாங்களா?…”

“இருக்காளே… அதுதானே என் பயமும்”

“பயமா?… எதுக்கு திரும்பத் திரும்ப பயம்ன்னே சொல்றீங்க?…அப்படி என்ன பண்ணிடுவா?”

 “உங்களுக்குத் தெரியாதுங்க மேடம் அவளைப் பத்தி… எனக்குத் தெரியும்… நல்லாவே தெரியும்!… அன்னிக்கு டான்ஸ் போட்டில தான் ஜெயிக்கணும் என்பதற்காக ஒரு மாணவனோட உசுரை பலி குடுத்தவ… இன்னிக்கு தன்னோட டீம் ஜெயிக்கணும் என்பதற்காக என்னோட டீம் ஸ்டூடண்ட்ஸை ஏதாச்சும் பண்ணிடுவாளோ?ன்னு நெனச்சா அடிவயிறு கலங்குது” குரல் நடுங்கச் சொன்னான் அசோக்.

சில நிமிடங்கள் கீழே குனிந்து யோசித்த ரூபா, “எனக்கென்னவோ…. இப்ப அவ  மாறிட்டாளோ?ன்னு தோணுது அசோக்!… ஏன்னா பேசுற பேச்சிலேயே நிறைய மாற்றங்கள் தெரியுது!… முந்தியெல்லாம் யார்கிட்டேயும் மரியாதையாகவோ… பணிவாகவோ பேசமாட்டா… ஒரு மாதிரி திமிர்த்தனமாய்த்தான் பேசுவா… ஆனா இப்ப அப்படியில்லை… ரொம்ப பொறுமையா…. நிதானமா…. மெச்சூர்டா பேசறா!… ஒருவேளை… காதல் தோல்வி அவளை ரொம்பவே மாத்திடுச்சோ?” என்றாள்.

 “ம்ம்ம்…ஓ.கே….அப்படி அவ மாறியிருந்தா அதுக்காக சந்தோஷப்படற மொதல் ஆள் நான்தான்!…சரி… வாங்க… நம்ம இடத்துக்கே போவோம்” சொல்லியபடி அசோக் முன் செல்ல, ரூபா பின் தொடர்ந்தாள்.

****

தங்கள் அறைக்கு வந்ததும் மாணவர்களும், மாணவிகளும் தங்களது நடனப் பயிற்சியினைத் தொடர முயல, “போதும்ப்பா… இனி பிராக்டீஸ் வேண்டாம்” என்றான் அசோக்.

 “சார்… இப்ப மணி ஏழரைதான் ஆகுது சார்… பத்து மணிக்குத்தான் டான்ஸ் போட்டி ஆரம்பமாகுது!… அப்படியே ஆரம்பிச்சாலும்…. நம்ம டர்ன் வர்றதுக்கு எப்படியும் பனிரெண்டு மணியாயிடும் சார்… அதுவரைக்கும் பிராக்டீஸ் பண்ணலாமே சார்” ஒரு மாணவன் சொல்ல,

 “நோ…ஜஸ்ட் ஸ்டாப் ஆல் யுவர் பிராக்டீசஸ்” கண்டிப்புக் குரலில் சொன்னான் அசோக்.

 “சார்… நம்ம கான்ஸெப்ட்ல… லாஸ்ட் டென் மினிட்ஸ் தான் ரொம்ப முக்கியம்… அதை மட்டும் இன்னொரு வாட்டி…” ஒரு மாணவி இழுக்க,

 “ச்சூ… வேண்டாம்ன்னா விட்டுடுங்க… ஆர்க்யூ பண்ணாதீங்க”

 பொதுவாகவே பிராக்டீஸ் என்கிற பெயரில் மாணவ மாணவிகளை கடுமையாக டிரில் வாங்கும் அசோக் அப்படிச் சொன்னது ரூபாவிற்கே மிகவும் ஆச்சரியமாகிப் போனது.  மெல்ல நடந்து அவன் அருகில் வந்து, “ஏன் அசோக்?… ஏன் பிராக்டீஸை ஸ்டாப் பண்ணிட்டீங்க?… பசங்க கூட எவ்வளவு ஆர்வமாயிருக்காங்க பாருங்க” என்றாள்.”

 “இல்லை மேடம்…. எனக்கென்னமோ இந்த முறை அந்த வைசாலியோட காலேஜே ஜெயிக்கட்டும்ன்னு தோணுது” அசோக் கிசு…கிசு…குரலில் ரூபாவிற்கு மட்டும் கேட்கும்படி சொல்ல,

தன் வாய் மீது கையை வைத்து தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினாள் ரூபா.  “என்ன சார் இப்படி பின் வாங்கிட்டீங்க?… பழைய காதல் புதுப்பிக்கப்படுதா?”

“இதுக்கு பேர் பின் வாங்கறது இல்லை மேடம்!… விட்டுக் கொடுக்கறது!… தன் வாழ்க்கைல தான் எதிலுமே தோற்கக் கூடாது!…ன்னு ஒரு வைராக்கியத்தோட இருக்கற ஒரு ஜீவனை தோற்கடிப்பதை விட… விட்டுக் கொடுத்து அந்த ஜீவனை ஜெயிக்க வைப்பதுதான் உண்மையான வெற்றி…” அசோக் தணிந்த குரலில் சொன்னான்.

நெகிழ்ந்து போன ரூபா, “ஆனா நீங்க விட்டுக் கொடுத்து அவ ஜெயிப்பதை அவள் விரும்ப மாட்டாளே?” கேட்டாள்.

 “அவளுக்குத் தெரிஞ்சாத்தானே?… அதுக்காகத்தான் என் ஸ்டூடண்ட்டோட பிராக்டீஸையே நான் ஸ்டாப் பண்ணிட்டேன்!… என்னால உறுதியா சொல்ல முடியும்… கடைசி வரைக்கும் அவங்க காலேஜ் டீமுக்கு டஃப் கொடுத்திட்டு… கடைசில வின் பண்ணப் போறது எங்க காலேஜ்தான்… அதுல எந்தவித சந்தேகமும் இல்லை!… ஆனா அந்த வெற்றி எங்க காலேஜை சந்தோஷப்பட வைக்கும்… ஆனா என்னை சந்தோஷப்பட வைக்காது… காரணம் வைசாலி தோல்வியைத் தாங்க மாட்டா.. அவ கவலைப்பட்டா அதை நான் தாங்க மாட்டேன்”

சில நிமிடங்கள் அசோக்கின் முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்த ரூபா, “அசோக்… நீங்க விட்டுக் குடுப்பதால் உனக்கு என்னென்ன பிரச்சினைகள் வரும்ன்னு யோசிச்சுப் பார்த்தீங்களா?…” கேட்க,

“என்ன வேணாலும் ஆயிட்டுப் போகட்டும்… ஐ டோண்ட் கேர்”

 “வாட் மிஸ்டர் அசோக்… கருகிப் போன காதல் செடி மீண்டும் துளிர்க்குதா?” கேட்டாள்.

 “நோ.. இதுக்கு அர்த்தம் அதுவல்ல!…”

 “வேறென்னவாம்?”

 “தெரியலை…” என்று அசோக் சொன்னதும். எதையோ சொல்ல வந்து விட்டு, அதை அப்படியே நிறுத்திக் கொண்டு, “உங்க கிட்ட ஒண்ணு சொல்லணும்…. வந்து இப்ப வேண்டாம்… இன்னொரு நாள் சொல்றேன்” என்று சொல்லி விட்டு அறைக்கு வெளியே சென்றாள் ரூபா.

-( மலரும்… )
                                                               முந்தைய பகுதி  | அடுத்த பகுதி 

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...