திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் பிரம்மோற்சவம் ! | தனுஜா ஜெயராமன்
திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் பிரம்மோற்சவம் தற்போது நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கோயில் முழுவதும் பல்வேறு வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கோயிலின் ராஜகோபுரம் முற்றிலும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலின் ஐந்தாம் திருநாளான இன்று காலையில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி அணிந்து மோகினி அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்தார். இரவு கருட வாகனத்தில் உலா வரும் மலையப்பசுவாமியை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ 4-ம் நாளான நேற்று சர்வ பூபால வாகன புறப்பாடு கோயில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 4வது நாள் இரவு ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமியின் சர்வ பூபால வாகன புறப்பாடு கோயில் மாட வீதிகளில் நடைபெற்றது.
கோயிலில் இருந்து வாகன மண்டபத்தை அடைந்த உற்சவர்கள் தங்க சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து உற்சவர்களுக்கு சர்வ திருவப்பரண சமர்ப்பணம், தூபதீப நெய்வேத்திய சமர்ப்பணம் ஆகியவை நடத்தப்பட்டது. பின்னர் மலையப்ப சுவாமியின் சர்வ பூபால வாகன புறப்பாடு கோயில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.
5ஆம்நாளன்று கருட வாகன சேவையை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர். பெரிய திருவடி என்று போற்றப்படும் கருடவாகனத்தில் கம்பீரமாக அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார் மலையப்பசுவாமி. பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் திருநாளில் ஏழுமலையானுக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, ஆண்டாள் அணிந்திருந்த வஸ்திரம் ஆகியவை மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பின்னர் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை திருமலை தேவஸ்தான அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.