இந்துக்களை கனடாவை விட்டு வெளியேறுமாறு மிரட்டும் காலிஸ்தான் சார்பு அமைப்பு! | தனுஜா ஜெயராமன்
இந்தியா மற்றும் கனடா இடையேயான உறவில் பெருமளவு ப்ரச்சனை ஏற்பட்டுள்ள நிலையில் கனடாவுக்கான விசா சேவையை இந்தியா அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே ப்ரச்சனைகள் அதிகரித்துள்ளது என்கிறார்கள்.
இந்தியா கனடா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்துக்களை கனடாவை விட்டு வெளியேறுமாறு மிரட்டும் விதமாக காலிஸ்தான் சார்பு அமைப்பான சீக்கியர்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் (SFJ) வீடியோவை ஒன்றை வெளியிட்டது.
இது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இதனை கனடா அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் வன்மையாக கண்டித்துள்ளனர்.
இதுகுறித்து கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் டொமினிக் லெப்லாங்க் தெரிவித்துள்ளதாவது..
“அனைத்து கனேடிய மக்களும் தங்கள் சமூகங்களில் பாதுகாப்பாக உணர தகுதியானவர்கள். கனடாவில் வசிக்கும் இந்துக்களை குறிவைத்து ஆன்லைன் வெறுப்பு வீடியோவின் பரப்பப்படுகிறது. இவை கனடியர்களாகிய நமது நாட்டின் மதிப்புகளுக்கு முரணாக உள்ளது. ஆக்கிரமிப்பு, வெறுப்பு, மிரட்டல் அல்லது பயத்தைத் தூண்டும் செயல்களுக்கு கனடாவில் இடமில்லை” என்று அவர் தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் பதிவிட்டுள்ளார்.