மதுரையில் எல்.ஐ.சி. அலுவலகத்தில் தீ விபத்து; பெண் மேலாளர் பலி

மதுரை

தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் 3 தீயணைப்பு வாகனங்கள் அந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மதுரை ரெயில் நிலையம் எதிரே உள்ள ஒரு கட்டிடத்தின் 2-வது தளத்தில் எல்.ஐ.சி. அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் 50 பேர் பணியாற்றி வருகின்றனர்.

எல்.ஐ.சி.க்கான புதிய பாலிசி இன்று (வியாழக்கிழமை) அறிமுகப்படுத்த இருப்பதாகவும், அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து நேற்று இரவு ஊழியர்கள் ஆலோசனை நடத்தியதாகவும் தெரியவருகிறது. அந்த கூட்டத்தை முடித்துவிட்டு பணியாளர்கள் வீட்டுக்கு கிளம்பிக்கொண்டு இருந்தனர்.

அப்போது இரவு 8.30 மணி அளவில் அந்த அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது அங்குள்ள அனைத்து அறைகளிலும் வேகமாக பரவத்தொடங்கியது. உடனே ஊழியர்கள் ஒருவர் பின் ஒருவராக பதறியடித்து வெளியே ஓடிவந்தனர். சிலர் மட்டும் கட்டிடத்தின் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

இதுபற்றிய தகவலின்பேரில் தல்லாகுளம் மற்றும் திடீர் நகர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கட்டிடத்தில் சிக்கியவர்களை ஒவ்வொருவராக வேகமாக மீட்கும் பணி நடந்தது. ஆனால், அதற்குள் தீ பெரும் அளவில் பரவிவிட்டது. கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.

இந்த சம்பவத்தில் நெல்லையை சேர்ந்த எல்.ஐ.சி. முதுநிலை மேலாளர் கல்யாணி (வயது 55) உடல் கருகி பலியானார். அவரது உடலை மீட்டனர். அலுவலக உதவி நிர்வாக அதிகாரி ராம், தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என தெரியவருகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!