தனது சி எஸ் ஆர் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக கொமாட்சு இந்தியா நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் அமைந்துள்ள பண்ருட்டி கிராமத்தில் ஒரு ஆர் ஓ குடிநீர் ஆலை அமைப்பதற்கு நிதியுதவி அளித்துள்ளது. இத்திட்டத்தின் பூமி பூஜை 16 டிசம்பர் 2025 அன்று நடைபெற்றது. சேவாலயா இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு திட்டப் பணிகளை மேற்கொள்ளும்.
கொமாட்சு இந்தியா நிறுவன மனித வள மற்றும் பொது விவகாரங்கள் துறை உதவி பொது மேலாளர் எஸ் கைலாஷ் மற்றும் துணை மேலாளர் டி அருண் ராஜ் ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
8 இலட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படும் இந்த ஆலை மணிக்கு 1,000 லிட்டர் நீரை சுத்திகரிப்பு செய்யும் திறன் கொண்டது. இதன் மூலம், ஏறத்தாழ 3,500 கிராம மக்கள் பயன் பெறுவர். கொமாட்சு இந்தியா நிறுவனம் பண்ருட்டி கிராமத்தில் 2024 ஆம் ஆண்டு இதே போல் சேவாலயாவுடன் இணைந்து ஒரு சமுதாயக் கூடத்தை அமைத்துக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. விழாவில் சேவாலயாவின் திட்டங்கள் துறை வைஸ் ப்ரெசிடெண்ட் மோசஸ் பால்மர் ஹெச் மற்றும் நன்கொடையாளர் துறை ஏ வி பி நவீன் குமார் என் ஆகியோரும் பங்கேற்றனர்.
1988 முதல் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் சேவாலயா, தென்னிந்தியா முழுவதும் 55 மையங்கள் மூலம், ஏழை எளிய குழந்தைகளுக்கு இலவசக் கல்வி, கிராம இளைஞர்களுக்கான தொழிற்கல்வி, ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லங்கள், மருத்துவமனைகள், சுகாதாரம் மற்றும் கிராம வளர்ச்சித் திட்டங்கள், கோசாலைகள் மற்றும் இயற்கை விவசாயம் ஆகிய துறைகளில் இலவச சேவை செய்து வருகிறது. 37 ஆண்டுகளில் 16 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளின் வாழ்க்கை முன்னேற்றத்தில் பங்காற்றியுள்ளது.
