பூத்திருக்கும் விழியெடுத்து – 9 | முகில் தினகரன்

 பூத்திருக்கும் விழியெடுத்து – 9 | முகில் தினகரன்

 

அத்தியாயம் – 9

போலீஸ் ஸ்டேஷனில் அசோக்கிற்காக காத்திருந்தாள் வைசாலி.

அவன் உள்ளே வந்ததும், “இதோ இவர்தான் சார் அந்தப் பையனுக்கு டிரெய்னிங் குடுக்கற ஆள்” என்று அசோக்கை அங்கிருந்த இன்ஸ்பெக்டருக்கு அடையாளம் காட்டினாள்.

“என்னப்பா…. டான்ஸ் டிரெய்னிங் தவிர வேற எல்லா டிரெய்னிங்கும் கரெக்ட்டா குடுக்கறே போலிருக்கு!” தன் கர்ண கொடூர குரலில் இன்ஸ்பெக்டர் அசோக்கைப் பார்த்துக் கேட்க,

 “சார்… நீங்க… என்ன கேட்கறீங்க!ன்னே எனக்குப் புரியலை சார்!… ஆக்சுவலா நான் இவங்க மேலேதான் கம்ப்ளைண்ட் குடுக்க வந்திருக்கேன்” அசோக் உரத்த குரலில் சொன்னான்.

 “என்னது இவங்க மேலே கம்ப்ளைண்ட் குடுக்க வந்தியா?… எதுக்கு… அந்தப் போதை ஸ்டூடண்ட்டோட சேட்டைகளை வெளிய சொல்லாம இருக்கவா?” இன்ஸ்பெக்டர் தன் டை அடித்த  “கரு…கரு” மீசையைத் தடவிக் கொண்டே கேட்டார்.

 “சார்…. உண்மை என்னன்னா?” அசோக் சொல்ல முயல,

 “த பாருப்பா நீ ஒரு காலேஜ் ஸ்டூடண்ட் என்பதினால் உன் கூட டீஸண்டா பேசிட்டிருக்கேன்… ”

 “இல்லேன்னா?… இல்லேன்னா என்ன பண்ணுவீங்க இன்ஸ்பெக்டர்!… அந்தப் பையன் டான்ஸ் போட்டில கலந்துக்கிட்டா எங்கே தான் தோத்திடுவோமோ?ன்னு பயந்துக்கிட்டு… அவனைத் தனியா வரவழைச்சு.. ஆரம்பத்துல “பணம் குடுக்கறேன்… விலகிடு”ன்னு கெஞ்சிப் பார்த்திட்டு… அவன் ஒத்து வராததினால…அவனுக்கு போதை மருந்து கலந்து குளிர் பானத்தைக் குடுத்து… விபத்து ஏற்பட வெச்சு… அவனைக் கொன்னிருக்கா சார்… இவ!” அசோக் கத்தலாய்ச் சொல்ல,

“என்னப்பா… நீ வேற மாதிரி கதை சொல்றே?… இந்தப் பொண்ணு என்னடான்னா…. போதை மருந்துக்கு அடிக்ட் ஆயிட்ட அந்த மாணவன் இவளுக்கு தொடர்ந்து லவ் டார்ச்சர் குடுத்ததாகவும்… அதன் உச்ச கட்டமாய் இன்னிக்கு அவ தங்கிருந்த ஹோட்டல் ரூமுக்கே போய் தகாத முறையில் நடந்துக்கிட்டதாகவும் கம்ப்ளைண்ட் குடுக்கறாங்க!…” இன்ஸ்பெக்டர் அசோக்கையும் வைசாலியையும் மாறி மாறிப் பார்த்தார்.

“சார்… அந்த ஸ்டூடண்ட்டை நான் என் ரூமிலிருந்து வெளியே தள்ளிய போதே அவன் பயங்கர போதைல இருந்தான்… இவன் எப்படி பைக்கை ஓட்டிட்டுப் போவானோ?ன்னு அந்த நிலைமையில் கூட எனக்கு கவலையாயிருந்திச்சு சார்!… இப்ப இவர் வந்து சொன்ன பின்னாடிதான் அந்த ஸ்டூடண்ட் செத்திட்டார்ன்னே எனக்குத் தெரியுது” ஆஸ்கார் விருதை எளிதாய் அள்ளிக் கொண்டு வந்து விடுபவள் போல் அபாரமாக நடித்தாள் வைசாலி.

 வைசாலியின் அன்றைய செயல்பாடுகளை எண்ணிப் பார்த்த அசோக்கிற்கு உறக்கமே பிடிக்கவில்லை.  இனம் புரியாத ஒரு தவிப்பும், குழப்பமும் அவனை வாட்டியெடுத்தன. “அந்தக் காலத்தில்… ஒரு சாதாரண கல்லூரி ஆண்டு விழா நடனப் போட்டியில் தான் ஜெயிக்கணும் என்பதற்காக ஒரு மாணவனோட உயிரையே பலி கொடுத்தவள்… இன்னிக்கு தான் அழைத்து வந்திருக்கும் தன் கல்லூரி டீம் ஜெயிப்பதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்யத் துணிவாளே?…நான் என் ஸ்டூடண்ட்டை டான்ஸில் ஜெயிக்க வைக்க பாடுபடுவதா?….இல்லை… இந்த ராட்சஸியிடமிருந்து அவர்களைப் பாதுகாக்கப் பாடுபடுவதா?… தெரியலையே?”

மறுநாள், அதிகாலையிலேயே தன் மாணவர்களை எழுப்பி, டான்ஸ் பிராக்டீஸைத் துவக்கினான் அசோக்.

 “ஸ்டூடண்ட்ஸ்…. இப்ப மணி ஐந்து….இன்னும் அஞ்சு மணி நேரம்தான் இருக்கு… திஸ் ஈஸ் யுவர் ஃபைனல் ரிகர்ஸல்… ஸோ… பி அலர்ட்… ”

அப்போது அந்த அறையின் கதவு சன்னமாய்த் தட்டப்பட, சிறிய கோபத்துடன் போய்த் திறந்த அசோக் வியப்பானான்.

சயின்ஸ் லெக்சரர் ரூபா கையில் கேக் கோடு நின்றிருந்தாள்.

“மேடம்… நீங்க… எப்படி…இங்கே?”

“ஏன்?… வரக் கூடாதா?… நம்ம காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் டான்ஸ் ஆடப் போறாங்க… அதுவும் இண்டர் ஸ்டேட் காம்படிஸன்ல ஆடப் போறங்க… அவர்களை பார்வையாளரா இருந்து ஊக்குவிப்பதற்காகவே புறப்ட்டு வந்திருக்கேன்” என்றாள் ரூபா.

ஆனால், உண்மையில் அவள் தன்னைக் காணத்தான் வந்திருக்கிறாள், என்பதைப் புரிந்து கொண்ட அசோக், ”அதுக்காக… கோயமுத்தூரிலிருந்து மதுரை வரணுமா மேடம்?” கேட்டான்.

 “மதுரைதானே?…. மாஸ்கோ இல்லையே?” என்றவள், அசோக்கை நெருங்கி வந்து, “ம்…நீங்க உங்க பிராக்டீஸைக் கண்டினியூ பண்ணுங்க” என்று சொல்லி விட்டு அறையின் மூலையிலிருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

டான்ஸ் பிராக்டீஸ் மறுபடியும் தொடர, அவள் பார்வை முழுவதும் டான்ஸ் சொல்லிக் கொடுக்கும் அசோக்கின் மீதே படிந்திருந்தது.  “டேய்….வசியக்காரா… நான் இங்க வந்தது உன்னைப் பார்க்கத்தாண்டா… ஏண்டா புரிஞ்சும் புரியாதவனாட்டம் நடிக்கறே?… கேட்டா நான் வயசானவன்… அதுஇதுன்னு சொல்லுவே… இருக்கட்டுமே…உனக்கு நாப்பத்தியொண்ணு…. எனக்கு முப்பத்தியொண்ணு… தாராளமா ஜோடி சேரலாம்டா”

சிறிது நேர பயிற்சிக்குப் பிறகு தன் குழுவினருக்கு ஓய்வு கொடுத்து விட்டு, “:ஸ்டூடண்ட்ஸ்… கமான்… காண்டின் வரை போய் ஒரு காஃபி சாப்பிட்டு விட்டு வந்து பிராக்டீஸைத் தொடர்வோம்” என்ற அசோக், ரூபா பக்கம் திரும்பி, “நீங்களும் வாங்க மேடம்” என்றான்.

காண்டீனில் இவர்கள் அனைவரும் கும்பலாய் நின்று காஃபி அருந்திக் கொண்டிருந்த போது, வைசாலியும் அவள் குழுவினரும் உள்ளே நுழைந்தனர்.

அவளைப் பார்த்ததும் தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான் அசோக்.  ஆனால், அவனே வியக்கும் வண்ணம், “ஹேய்… வைசாலி… நீ எப்படி இங்கே?” சிரித்த முகத்துடன் எழுந்து வைசாலியை நோக்கிச் சென்றாள் ரூபா.

 சில நிமிடங்கள் அவளுடன் பேசி விட்டுத் திரும்பிய ரூபாவிடம் அசோக் கேட்டான்.  “அந்தப் பெண்ணை உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா மேடம்?”

 “அவ என் கஸின் சிஸ்டர்… திருச்சி விசாகா காலேஜ்ல வொர்க் பண்றாளாம்!… அவங்க டீமை அவதான் கூட்டிட்டு வந்திருக்கா”

அசோக் வைசாலியைப் பற்றி விசாரித்ததில் ரூபாவிற்குள் லேசாய் பொறாமை அரும்பி நின்றது.

“பாவம் வயசு நாற்பதாகியும் இன்னும் கல்யாணம் பண்ணிக்காமலே இருக்கா” ரூபா சொல்ல, அதிர்ந்தான் அசோக்.

“ஏன்?…நல்ல மாப்பிள்ளை கிடைக்கலையா?.. இல்லை… ஏதாவது வரதட்சணைப் பிரச்சினையா?”

“வரதட்சணைப் பிரச்சினையா?… அவளுக்கா?… அவ பெரிய பணக்கார வீட்டுப் பெண்ணாக்கும்… இது வேற பிரச்சினை?”

மேற்கொண்டு அதைக் கிளற விருப்பமில்லாதவன் போல் அசோக் வேறு டாபிக் பேச ஆரம்பித்தான்.  “ஆமாம்.. நீங்க டிரெயின்ல வந்தீங்களா?.. இல்லை பஸ்ஸா?”

ஆனாலும், ரூபா விடாமல் வைசாலியைப் பற்றியே பேசினாள். “அவ கல்யாணம் பண்ணிக்காம இருக்கறதுக்குக் காரணம்… காதல் தோல்வி”

அசோக் ரூபாவின் முகத்தையே பார்க்க,

“காலேஜ் படிக்கும் போது.. யாரோ சக மாணவன் ஒருத்தனை லவ் பண்ணியிருக்கா… அது ஃபெயிலியர் ஆயிடுச்சு… அதுக்குக் காராணமும் இவதான்… இவ கொஞ்சம்… கொஞ்சமென்ன… நிறையவே திமிர் பிடிச்சவ… பிடிவாதக்காரி… பணக்காரி வேறயா?… யாரையும் மதிக்க மாட்டா… எல்லோரையும் ரொம்ப சீப்பா நெனச்சிட்டு…சர்வ சாதாரணமா எடுத்தெறிஞ்சு பேசுவா!..”

 “ஓ… பார்த்தா அப்படித் தெரியலையே?”

 “அந்த குணத்தினாலேயே இவ காதலன் இவளைத் தூக்கி வீசிட்டுப் போயிட்டான்!.. ”

 “சரி… அதுக்காக கல்யாணம் பண்ணிக்காமலேவா இருப்பாங்க… வசதியானவ தானே?… வேற நல்ல மாப்பிள்ளையா பார்த்துக் கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே?”

 “அதைத்தான் நானும் பல வருஷமா சொல்லிக்கிட்டிருக்கேன்… கேட்க மாட்டேங்கறா…” விரல்களின் நெயில் பாலீஷை ஆராய்ந்து கொண்டே சொன்னாள் ரூபா.

 “அதுதான் ஏனாம்?” ஆர்வமாய்க் கேட்டான்.

 “இவளைக் கழட்டி விட்டுட்டுப் போன அந்தக் காதல் மன்னனை மறக்க முடியலையாம்!… அவன் இருந்த மனசுல வேறொருத்தனை வைக்க முடியாதாம்!…. ஹும்… இந்தக் காலத்துப் பொண்ணுகளெல்லாம் தெனமும் ஒரு காதலன் கூட சுத்திக்கிட்டு… கடைசில நல்ல பிள்ளைகளாட்டம் வீட்டுல பார்க்கிற பணக்கார மாப்பிள்ளையைக் கட்டிக்கிட்டு குடும்பக் குத்து விளக்காயிடறாங்க!… இவ என்னடான்னா… இன்னும் அந்தக் கல்லூரிக் காதலனையே நெனச்சுக்கிட்டு… மொத்த இளமையையும் வீணாக்கிட்டுக் கிடக்கறா….” ரூபா சொல்லிக் கொண்டே போக,

அசோக் அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.  அவனால் ரூபா சொல்வதை நம்பவே முடியவில்லை.  “வைசாலி… இப்படிப்பட்ட பொண்ணா?… நான் பார்த்த வரைக்கும் அவ பயங்கர அடமண்ட்டா பிஹேவ் பண்ணிக்கிட்டு… ஒரு ராட்சஸி மாதிரியல்ல இருந்தா?… அவளுக்குள் இப்படியொரு மென்மையான பெண்மை உணர்வா?… “எனக்கு போட்டில ஜெயிக்கறதுதான் முக்கியம்… அதுக்காக என்ன வேணாலும் செய்வேன்!… ஏன் உன்னையும்… உன் காதலையும் கூடத் தூக்கி எறியத் தயங்க மாட்டேன்”ன்னு சொன்னவளாச்சே?… அவளா இன்னமும் என்னை நெனச்சுக்கிட்டு… கல்யாணம் பண்ணிக்காம இருக்கா?”

அசோக் திடீரென அமைதியாகிப் போனதில் குழப்பமான அந்த ரூபா, “என்ன மேன்… திடீர்ன்னு அமைதியாயிட்டீங்க?…” கேட்டு விட்டு அவனை ஏற இறங்கப் பார்த்தாள்.

 “அது… வந்து… ஒண்ணுமில்லை” திக்கித் திணறினான்.

 “நீங்க ”இல்லை”ன்னு சொல்ற விதத்திலேயே தெரியுது… என்னமோ இருக்குன்னு!… சொல்லுங்க… உங்க பிளாஷ்பேக் என்ன?… நீங்களும் அவளை மாதிரியே காலேஜ் டைம்ல எவளையாச்சும் காதலிச்சிட்டு… அது ஃபெயிலியர் ஆனதும்… அவளை நெனச்சுக்கிட்டு காலந் தள்ளிட்டிருக்கீங்களா?” தமாஷாய்க் கேட்ட ரூபா, அசோக் சொன்ன பதிலில் ஆடிப் போனாள்.
-( மலரும்… )

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...