மதுரத்வனி…. மயக்கும் மாலை…
நேற்று மதுரத்வனி இலக்கிய நிகழ்வினை நேரலையில் பார்க்கும் பாக்கியம்
மதுரத்வனி அருமையான முருகர் பாடலுடன் தொடங்கியது.
மாலன் நாராயணன் அவர்கள் மாதாமாதம் நடத்தும் அழியாத ரேகைகள்.
ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நேற்று மாலை (17-11-2025) நடந்தது. அடர் மழைக்கு கதகதப்பாய், மிடறுமிடறாய் தன் அன்பர், அய்யா தீபம் நா.பா அவர்களைப் பற்றி திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் உரையாற்றினார்.
எழுத்துலக ஆளுமைகளோடு, நா.பா அவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டது மகிழ்வைத் தந்தது. நல்லதொரு மாலை…
நேற்றைய நிகழ்வு பற்றிய நிகழ்வுத் தொகுப்பினை திருமதி. அகிலா ஜூவாலா அவர்கள் கட்டுரையாக மின்கைத்தடியில் எழுதியிருக்கிறார்.
கூடவே youtube லிங்க்கும் இணைக்கப்பட்டு இருக்கிறது.

நிகழ்வை மாதந்தோறும் நடத்தும் மாலன் அவர்களுக்கு வணக்கங்கள்.
மனம் மயக்கிய மதுரத்வனி
குறிஞ்சி மலர் நா பார்த்தசாரதி அவர்களைப் பற்றிய அமுதசுரபி ஆசிரியர் உயர்திரு திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் உரை.
பேச்சா அது பிரவாகமா!!
பேச்சின் துவக்கத்தில்
பிரதாப முதலியார் சரித்திரம்
பரிதாப முதலியார் என தவறாக அச்சான ஒரு நிகழ்வினை சொல்லி புன்னகைக்க வைத்த ஆசிரியர்..
எழுத்து சூப்பர் ஸ்டார் நா.பா அவர்களுக்கும் தனக்குமான உறவினை மிக இனிதாய் விவரித்தார்.
எழுத்தில் பண்பாடு எத்தனை முக்கியம் என்பதையும் வலியுறுத்தினார்.
தீபம் பத்திரிகை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் வந்த போது.. இனி பத்திரிகை வராது என அறிந்த ஒரு பெயர் வெளியிட விரும்பாத சகோதரி தன் வளையலை அனுப்பி வைக்க
அன்பளிப்பை ஏற்று அதை அடகு வைக்காமல் விற்காமல்
இறுதி வரை “தீபம்” வரும் என உறுதி தந்தவர் நா.பா என குறிப்பிட்ட அவர்
“சத்திய வேட்கையுடன் செய்யும் செயலுக்கு என்றும் துணை உண்டு”
என அழுத்தமாக கூறினார்.
நா.பா சென்னை விட்டு கிராமம் பக்கம் சென்றுவிட நினைத்த போது ஆனந்த விகடன் இதழில் சரித்திர நாவல் எழுத கிடைத்த வாய்ப்பு.
அதற்காக ஆனந்த விகடன் ஆசிரியர் திரு பாலசுப்ரமணியம் அவர்கள், நா பார்த்தசாரதி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி மொத்த தொடருக்கான பணத்தை முன் பணமாக கொடுத்த நிகழ்வு,
எழுத்தாளர்களுக்கும் வறுமைக்குமான பிணைப்பு..ஆகியவற்றை விவரித்த விதம் அபாரம்.
நா.பா தன் படைப்பை மரியாதையாக
கையாளுவார்.
சுஜாதா அவரது படைப்பில் எதையாவது edit செய்ய சொன்னால்
“நீதானே எடிட்டர் நீயே எடிட் செய்” என்பார்
ஜெயகாந்தன் கதையின் இறுதிப் பகுதியை முதலில் எழுதுவார்.
என பல அரிய அறிந்திராத செய்திகளை தாங்கி இருந்தது அவரின் உரை
சென்னை வானொலியில் பணிபுரிந்த
இலக்கிய ரசிகை திருமதி லீலா
நா.பா வை பேட்டி காண விரும்பி அழைத்தார்.
நா.பா அவர்களும்
“குற்றால குறவஞ்சி” எனும் தலைப்பில் பேச …பேச்சை பதிவு செய்யும் பொறுப்பை ஒரு இளம்
பயிற்சியாளரிடம் லீலா அவர்கள் விட்டு செல்ல…
பேசி முடித்த பின்,தவறுதலாக அந்த உரை பதிவு ஆகாமல் இளைஞர் விழிக்க ..இதை அறிந்து நா.பா
பரவாயில்லை நான் திரும்ப பேசுகிறேன்..ஆனால் ஒரு condition
இப்போதும் அந்த இளைஞர்
தான் பதிவு செய்ய வேண்டும் என்றதும் அந்த இளைஞருக்கு ஏற்பட்ட நெகிழ்ச்சி
( கேட்ட நமக்கும்)
பின்னொரு முறை நா.பா இறந்தபின், அவரது நினைவு நாளில் ஆசிரியர் அவர்கள் பேசியபோது..
ஆசிரியருக்கு
அதை record செய்தவர் அன்று record செய்த அதே இளைஞரே.. துண்டு காகிதம் அனுப்பி
தான் தான் அன்றைய இளைஞர் சோமஸ்கந்தன் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நிகழ்வு…இனிமை
நா.பா- காமராஜர் மேல் வைத்திருந்த மரியாதை
“நல்லதை மட்டும் தான் எழுதணும்”
என்ற காமராஜரின் அறிவுரை இன்றைய எழுத்தாளர்களுக்கு பாடம்..
காமராஜ் மறைவின் போது
தீபம் பத்திரிக்கையில் நா.பா அவர்கள் காமராஜர் புகைப்படத்தை அட்டையில் போட்டிருக்கிறார்
ஏன் தீபத்தில் அவர் அட்டை? அவர் கட்சி சார்ந்தவர் ஆயிற்றே .. இது இலக்கிய பத்திரிகை என கடிதம் வர அதை பிரசுரித்த நா.பா அதன் கீழ்
“பெருந்தலைவரே இலக்கியம்தான்”
என அசத்தலாய் பதில் அளித்து இருக்கிறார்.
MGR தொலைபேசி இல் அழைத்து இலக்கிய கூட்டத்தில் பேச அழைத்தது, கலைஞர் நா.பா வை பற்றி பெருமையாக குறிப்பிட்டதும் என பல மலரும் நினைவுகள்..
பலருக்கு கடினமானவராக காட்சியளிக்கும்
ஜெயகாந்தன்
“என் தாய் நா.பா வின் ரசிகை” என பெருமையாக குறிப்பிட்டது ஆச்சரியம்.
நா.பா வின் மரணம்
“கார்த்திகை இல் மறைந்த தீபம்” என குறிப்பிடப்பட்டது..அவரின் மறைவின் போது பத்திரிகையாளர் மாலன் அவர்களுடன் வந்த எழுத்தாளர் சிவசங்கரி 10,000 ரூபாயை கொடுத்தது என பல விஷயங்களை பேசிய ஆசிரியர்..இறுதியாக கூறிய கருத்து..
“சுய கம்பீரத்துடன் தனி மனித ஒழுக்கத்துடன் வாழ வேண்டும்”
இலக்கியம் என்பது எப்போதுமே மனதுக்கு நெருக்கமானது.. நம் உணர்வுகளில் இருந்த இடத்திலேயே பல வண்ணங்களை காட்சிப்படுத்த முடிவது…அதற்கு ஆசிரியரின் இந்த உரை ..ஒரு உரைகல்!
– அகிலா ஜ்வாலா
குறிப்பு மாலன் அவர்கள் ஆசிரியருக்கு கொடுத்த புத்தகத்தின் பெயர்
” கண்களுக்கு அப்பால் இதயத்திற்கு அருகில்”
மறைந்த எழுத்தாளர்களும் அப்படித்தானே!!!
