மரப்பாச்சி – 5 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

 மரப்பாச்சி – 5 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

அத்தியாயம் – 5

ன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து வீட்டிற்கு கிளம்ப எத்தனித்தவளின் கைப்பையில் இருந்த செல்போன் கனைக்கவும் கைப்பையைத் திறந்து செல்லை எடுத்துப் பார்த்தாள். எதிர் முனையில் அழைப்பது மணிமாறன்.. ஆன்சர் பட்டனைத் தேய்த்து காதில் வைத்தாள் காதில் மணிமாறன் குரல் ஒலித்தது.

“வண்டியை அப்படியே ஓட்டிட்டு ரோட்டு முனையில இருக்கற காஃபி ஷாப்புல வெய்ட் பண்ணு உங்கிட்டப் பேசணும்”

செல்லை காதில் வைத்த வாறே கண்களை சுழட்டினாள்.. அலுவலக வாசலில் நின்றவாறு செல்லில் பேசிக்கொண்டீருந்தார் மணிமாறன். தொடர்பை அவர் துண்டிக்கவும் செல்லை அணைத்து கைப்பையில் இட்டவள் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பினாள் மணிமாறன் கூறிய காஃபி ஷாப்பை நோக்கி. இதயத் துடிப்பு அவளுக்கு எகிற ஆரம்பித்திருந்தது.. என்ன சொல்லப் போகிறார்? தன்னை கல்யாணம் செய்வதற்கு மறுப்பு சொன்னதற்கு காரணங்களைக் கூறுவார் அதை உக்கார்ந்து கேட்க வேண்டும். இவர் காரணங்களை நான் ஏன் கேட்கவேண்டும்? பேசாமல் வண்டியை வீட்டிற்கு விட்டால் என்ன?’ கேட்ட மனதிற்கு அவளே சமாதானம் கூறினாள்.. ‘என்ன இருந்தாலும் அவர் என் மேலதிகாரி அதற்காவது மதிப்புக் கொடுத்து அவர் பேச்சைக் கேட்டுத்தான் ஆகவேண்டும்’ அவள் எண்ணங்கள் தொடரும் முன் காஃபி ஷாப் வந்திருந்தது.. கடையின் முன் வண்டியை ஸ்டேண்ட் இட்டு விட்டு கடையின் உள்ளே சென்றாள். சென்றவள் ஓரமாய் இருந்த இருக்கை ஒன்றை தேர்ந்தெடுத்து அமர்ந்தாள்.பேரர் வந்து கேட்டான்..

“ஆர்டர் ப்ளீஸ்..”

“இன்னும் ஒருத்தர் வரணும்”

“ஓகே மேடம்..” என்று நகர்ந்தான் அந்த இள் வயது பேரர்.

வினாடிகள் கரைந்து நிமிடங்கள் ஆயிருக்க காஃபி ஷாப்பினுள் பிரவேசித்தார் மணிமாறன். பிருந்தா இருந்த இருக்கையை அடைந்தவர் அவள் இருக்கையின் எதிரே அமர்ந்தார். வந்த பேரரிடம் இரண்டு சாண்ட்விச் காஃபி ஆர்டர் செய்தார்.

சற்று நேரம் பேசாமல் இருந்தவர் கேட்டார்..

“என்ன பிருந்தா அப்படி முகத்துல அடிச்சாப்புல பேசிட்டுக் கிளம்பிட்ட?”

“சாரி சார் என்னால நிராகரிப்புகளை தாங்க முடியலை..நான் எந்தப் பாவமும் செய்யலை சார் ஒல்லியா ஒரு மரப்பாச்சியா நான் இருக்கிறதுக்கு நான் காரணம் இல்லையே? எனக்கு ஜனனம் கொடுத்த எங்க அப்பா அம்மா செய்த பாவம்..அதுக்கு தண்டனை நான் அனுபவிச்சிட்டிருக்கிறேன்.என்னை பார்க்கிற ஆண்கள் எல்லாம் என்னை வினோதமா பார்க்கறாங்க. என் போட்டோவைப் பார்த்து பொண்ணு பார்க்க வர்றவன் நேருல பார்த்துட்டு வேண்டாமுங்கறான். சரிடா தங்கச்சிங்க வாழ்க்கைக்காக கல்யாணம் ஆகி மனைவியை இழந்த ஒருத்தருக்கு ரெண்டாம் தாரமா வாழ்க்கைப் படலாமுன்னு உங்ககிட்டக் கேட்டா நீங்களும் எதேதோ காரணங்கள் சொல்லி நிராகரிக்கிறீங்க. நிராகரிப்பு..நிராகரிப்பு முடியலை சார்.இந்த மனநிலையில் இருக்கற ஒரு பெண் வேற எப்படி சார் ரியாக்ட் பண்ண முடியும்?”

கொட்டித் தீர்த்து விட்டாள் பிருந்தா. அவள் கண்களில் இப்பொழுது கண்ணீர்த் துளிகள், அந்தக் கண்ணீரின் வலி அவளின் உள்ளக் குமுறல்களை மணிமாறனுக்குள் கடத்தியது.’

காஃபியை கையில் எடுத்தவர் சாண்ட்விச் எதையும் தொடாமல் அமர்ந்திருந்ததளை சாப்பிடப் பணித்தார். சாப்பிடும் மனநிலையில் இல்லை பிருந்தா அப்பொழுது. ஆனால் அவரின் வர்புறுத்தலினால் சாண்ட்விச்சை ஒரு விள்ளல் எடுத்து வாயில் வைத்தாள்.

“பிருந்தா நீ என்னை தப்பா புரிஞ்ச்சுக்கிட்ட..நான் எப்பவுமே புற அழகுக்கு முக்கியத்துவம் குடுக்கறவனில்லை.. நான் உன்னை நிராகரிச்சதுக்குக் காரணம் நீ ஒல்லியா இருக்கிறதில்லை நமக்குள்ள இருக்கர வயசு வித்தியாசம் தான். நான் ரெண்டாவதா கல்யாணம் பண்ணிக்க நெனச்சதுக்கு முக்கிய காரணம் என் பொண்ணை நெனச்சுத்தான். இப்ப அவளுக்கு வயசு பதினொன்ணு ஆகுது.. அவ எப்ப வேணுமுன்னாலும் பெரிய பொண்ணு ஆயிடுவா. இதுவரை ஒரு ஆம்பளை அவளை வளர்த்திட்டேன் இனி அவளுக்கு ஒரு பொண்ணோட குறிப்பா ஒரு தாயோட அரவணைப்பு தேவைப்படும். அந்த ஒரு காரணம் தான் என்னை ரெண்டாம் கல்யாணம் பண்ண முடிவெடுக்க வச்சுது. எங்க அம்மா இருந்த வரை பிரச்சனை இல்லை அவங்களும் போன வருஷம் இறந்து போயிட்டாங்க. அது உனக்குத் தெரியும் உடல் தேவைக்கு கல்யாணம் பண்ணிக்க நான் முடிவெடுக்கலை அழகு இல்லை உடல் வாளிப்பா இல்லை இதெல்லாம் எனக்கு ஒரு பிரச்சனையே இல்லை. எனக்குத் தேவை என் மகளைப் பார்த்துக்கிறதுக்கு ஒரு அன்பான தாய். அதுக்குத்தான் இந்த ரெண்டாம் கல்யாண முயற்சி. உன்னோட வயசுதான் எனக்குப் பிரச்சனையா இருந்துச்சே தவிர வேற எதுவும் இல்லை, இதை உங்கிட்ட விளக்குறதுக்கு முன்னாடி பொரிஞ்சு தள்ளிட்டே..”

தெளிவான மணிமாறனின் பேச்சில் தெளிந்தவள்.. “சாரி” என்றாள்.. கட்லெட்டை சாப்பிட வர்புறுத்தினார் மணிமாறன்.. சாப்பிட ஆரம்பித்தவள் கூறினாள்.. “’இப்பவும் சொல்லுறேன் வயசு எனக்கு ஒரு பிரச்சனை இல்லை நீங்க உங்க மகளுக்காக கல்யாணம் செய்துக்க விரும்புற மாதிரி, நான் என் தங்கைகளுக்காக கல்யாணம் செய்துக்க விரும்புறேன்..”

“முடிவா என்ன சொல்ல வர்ற?”

“எனக்கு உங்களை கல்யாணம் செய்துக்க எந்த ஆட்சேபனை இல்லை, நீங்க என்னை கட்டிக்கிட்டா உங்களுக்கு புண்ணியமா போகும்..”

பிருந்தாவை ஊடுருவிப் பார்த்தவர் கூறினார்.. “என்னை நீ கட்டிக்க்கிட்டா நீ நெறைய இழப்புகளை சந்திக்கணும்..”

“எதையும் சந்திக்க நான் தயார்..”

“அப்புறமா பின் வாங்கக் கூடாது..”

“நிச்சயம் அப்படி ஒரு சந்தர்ப்பம் வராது..”

“அப்ப சரி.. நான் வந்து உங்க அப்பா அம்மாவை பார்க்கிறேன்..”

“அங்கதான் ஒரு சிக்கல்..”

“என்ன சிக்கல்?”

“எங்க அம்மா அப்பா இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிடமாட்டாங்க”

“பின்ன எப்படி?”

“நான் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டு எங்க அம்மா, அப்பாவை போய்ப் பார்க்கணும்..”

“என்ன.. இந்த வயசுல திருட்டுக் கல்யாணமா?” அதிர்ச்சியாய் கேட்டார்..

“நம்ம ஃபிரண்ட்ஸ்களை சாட்சியா வச்சு கல்யாணம் பண்ணிக்குவோம்..”

மௌனமாய் சிந்தித்தார் மணிமாறன்.. பருவத்தின் வாசலில் நிற்கும் மகள் முகம் அவர் முன் வந்து போனது. சில நிமிட யோசனைக்குப் பின்..

“சரி நாம கல்யாணம் பண்ணிக்குவோம்” என்று மணிமாறன் கூற பிருந்தாவின் முகம் பிரகாசத்தில் மின்னியது!

(-தொடரும்…)

முந்தையபகுதி – 4 | அடுத்தபகுதி – 6

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...