மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 5 | பெ. கருணாகரன்
இந்தியாவின் ‘தாலி’பன்கள்
முதலில் ஒரு காட்சி : விடிகாலை மூன்று மணி. மூன்றாம் சாமம் படைக்கப்பட்டது. அடுத்து ஆரம்பமானது அந்த ரணகளம். வெள்ளை உடை அணிந்த அந்த நான்கு பெண்களும் கல்யாணப்பெண் போல் அலங்கரிக்கப்பட்டிருந்த நாற்பது வயது மதிக்கத்தக்க அந்தக் பெண்ணை நெருங்குகிறார்கள். அந்தப் பெண்ணின் விழிகள் பீதியுடன் இயலாமையோடு அலைபாய்கின்றன. அவரது உடலில் மெல்லிய நடுக்கம். அந்தப் பெண்ணின் கைகளில் கலர் கலராய் கண்ணாடி வளையல்கள். தலை கொள்ளாத அளவுக்குப் பூ. சிவப்பு நிறச் சேலை கட்டி நெற்றியில் பெரிய அளவில் குங்குமம் வைக்கப்படுகிறது.
நான்கு வெள்ளுடைப் பெண்களும் அந்தப் பெண்ணின் இரணடு கைகளையும் ஒன்றுடன் ஒன்றாக மோதி கண்ணாடி வளையல்களை தூள் தூளாக்கி நொறுக்குகிறார்கள். அந்தப் பெண் ‘விட்டுடுங்க….’ என்று கெஞ்சுகிறார். அவர்கள் அதைக் கண்டு கொள்ளவில்லை. உடைந்த வளையல்கள் கிழித்து அந்தப் பெண்ணின் கைகளில் ரத்தம் வழிகிறது. அவர் கதறி அழுகிறார். அடுத்து, அவரது தலையில் சூட்டப்பட்டிருந்த மலர்ச்சரங்களைப் பிய்த்தெறிகிறார்கள். அடுத்து, அவரது நெற்றியில் இடப்பட்டிருந்த பெரிய சைஸ் குங்குமமும் அழிக்கப்படுகிறது. உச்சகட்டமாக அவரது கழுத்திலிருந்த அந்த மங்கலச் சின்னம் அறுக்கப்படுவதற்கான முயற்சி… அப்போது அடி வயிற்றிலிருந்து ஒரு பீறிட்ட அலறல் எழுகிறது அந்தப் பெண்ணிடமிருந்து.
“ஐயோ… வேணாம்…. நான் கொடுக்க மாட்டேன்… நான் என்ன பாவம் செய்தேன். விட்டுடுங்க…. என்னைக் கொன்னுடுங்க பாவிகளா…” அந்தப் பெண்ணின் அலறலுக்கு நடுவே அவளது கழுத்திலிருந்த ‘அது’ அகற்றப்படுகிறது.
சடங்கு என்கிற போர்வையில் ஒரு பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக, ஒரு பெரிய மக்கள் சபையின் ஆதரவுடனும் ஆசிர்வாதத்துடனும் மனிதாபிமானமே இல்லாத அந்தக் காட்டுமிராண்டித்தனம் அமோகமாக அரங்கேறி முடிந்தது. தடுப்பார்தான் யாருமில்லை.
***சாதாரணமாக அந்தச் செய்திகளை தினசரிகளில் படித்துவிட்டு நாம் கடந்து போய்விடுவோம். ஆனால், அந்தச் செய்தியில் சம்பந்தப்பட்டவருக்கு அது எவ்வளவு பெரிய மன உளைச்சல் என்பது அதில் தொடர்புடைய பெண்ணுக்குத்தான் தெரியும். அது, ‘தாலிச் சங்கிலி பறிப்பு’ செய்தி. பறிக்கப்பட்டது தங்கம் என்பதால் ஏற்படும் பொருளாதாரம் சார்ந்த உளைச்சலல்ல. அது சென்டிமென்ட் உளைச்சல். அந்தச் சங்கிலிக்குப் பின்னால் கால, காலமாகப் பின்னிப் பிணைந்திருக்கும் சென்டிமென்ட். அது ஒரு சிறிய தங்கத் தகடு மட்டுமல்ல. அதுதான் அந்தப் பெண்ணுக்கு உயிர். அதுதான் அவரது கணவன். அதுதான் அவரது வாழ்க்கை. அது அவள் சுமங்கலி என்பதற்கான அடையாளம்.
எந்த ஓர் ஆணும் நீண்டநாள் வாழவே ஆசைப்படுவான். ‘தீர்க்காயுசுடன் வாழ்க’ என்று வாழ்த்தப்படுவதையே விரும்புவான். ஆனால், பெண்கள் மட்டும் அப்படி வாழ்த்தப்படுவதை விரும்புவதில்லை. ‘தீர்க்க சுமங்கலியாக இரு’ என்று வாழ்த்தப்படுவதையே விரும்புகிறார்கள். கணவன் இறப்பதற்கு முன், தான் இறந்து போக வேண்டும் என்றே பலரும் நினைக்கிறார்கள்.
அவர்களுக்குக் கணவன் மீதென்ன அவ்வளவு அன்பா? பாசமா? காரணம், அதுவல்ல. தன் கணவன் குடிகாரனாக இருந்தாலும், கொடுமை செய்பவனாக இருந்தாலும் பெரும்பாலான இந்தியப் பெண்கள் கணவனுக்கு முன்பே இறந்து போக வேண்டும் என்றே வேண்டுதல் செய்கிறார்கள். இங்கு கணவனை இழந்து உயிர் வாழ்தல் அவ்வளவு எளிதானதல்ல. அது ஒரு நரகம். கொடுமை. தினம் தினம் செத்துப் பிழைக்க வேண்டும். நடைபிணமாய் ஒரு வாழ்க்கை வாழ்வதை விட, மரணமே அவர்களுக்கு மேலாகத் தோன்றுகிறது.
கணவன் இறந்தபின் ஒரு பெண் துயரம் கொள்வது முழுக்க முழுக்க அவள் உள்மனம் சார்ந்த விஷயம். தனிப்பட்ட விஷயம். ஊர் கூட்டி விழாவாகக் கொண்டாடி அவளை அவமானப்படுத்துவதுபோல் சடங்கு நடத்தி சோகத்தைப் பகிர்ந்து கொள்வது அருவருப்பான மிகைப்படுத்தப்பட்ட நாடகம். இதனால் ஒரு பெண்ணுக்கு அந்த நேரத்தில் கணவனை இழந்த சோகத்தை விட வெறுப்புதான் வருகிறது. ஆண் துணை இழந்தவுடன் பெண் எதற்கும் பயனில்லாதவள் என்பதை இந்தச் சமூகத்தைக் கூட்டிவைத்து அறிவிக்கும் உத்திதான் அந்தச் சடங்கு. ஆணாதிக்கத்தின் பெண்ணுக்கெதிரான முரட்டுத் தாக்குதல் அது.
‘பெண்டாட்டியை இழந்தவன் புது மாப்பிள்ளை’ என்று சொலவடை சொல்லும் அதே சமூகம்தான் ‘புருஷனை இழந்தவள் பொணத்துக்குச் சமானம்’ என்றும் சொல்கிறது. கணவன் இறந்தவுடன் ஒரு பெண்ணின் வாழ்க்கை முடிந்து விட்டதாகவே தீர்ப்பெழுதுகிறது. தாலி இருக்கும் வரை அவள் கட்டுக்கழுத்தி என்று போற்றும் சமூகம்தான், அது அகற்றப்பட்டால் அவளை மூளி என்றும் அபசகுனம் என்றும் தூற்றுகிறது.
கணவன் இறந்தவுடன் உடன்கட்டை ஏறும் சம்பவமாவது அந்தப் பெண்ணுக்குச் சில நிமிட வலிகளில் முடிந்து போகும் துயரம். ஆனால், கணவன் மறைவுக்குப் பிறகு பெண்ணுக்கு நிகழும் தாலி எடுப்பு என்னும் கொடூரமான அவமானம், ஆயுள் முழுதும் ஒரு பெண்ணைச் சிறுகச் சிறுக அவமானப்படுத்தி, மனதளவில் துன்புறுத்தி, சமூகத்தில் இயல்பான மனுஷியாக வாழவிடாமல் அலைகழித்து, அவளை ராசியில்லாதவள் என்று ஒதுக்கி, வாழ்நாள் முழுக்க மன அழுத்தத்துடனான வாழ்க்கையை வாழ வைத்து… இவற்றுக்கான முன்னோட்டம்தான் அந்தச் சடங்கு. கணவனை இழந்தவள் இன்னொரு வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே கூடாது. அவளது கணவனோடு அவளது வாழ்வும் முடிந்து போகிறது என்பதை உணர்த்த இந்தச் சமூகம் அந்தப் பெண்ணுக்குக் கொடுக்கும் அதிர்ச்சிகரமான ‘நாக்அவுட்’தான் அந்தச் சடங்கு.
அந்தக் காலத்தில் உடன்கட்டைச் சடங்குக்கு எந்தப் பெண்ணும் விரும்பி ஒப்புக் கொண்டதில்லை. அவளைக் கதறக் கதற நெருப்பில் தள்ளிதான் ‘கொலைச் சடங்கு’ பண்ணியிருக்கிறார்கள். இன்று உடன்கட்டை ஏறுதலின் இன்னொரு வடிவான ‘தாலி எடுப்பு’ நிகழ்வுக்கும் எந்தப் பெண்ணும் சம்மதிப்பதில்லை. குடும்பத்தின் பெரியவர்களாலும், ஏற்கெனவே தாலியிழந்த பெண்களாலும்தான் அந்தச் சடங்கு அரங்கேறுகிறது. எந்தக் கணவனும் தன் மரணத்துக்குப் பிறகு தன் மனைவிக்கு நேரும் இத்தகைய கண்றாவிகளை நிச்சயம் விரும்பவும் போவதில்லை. இன்னும் சொல்லப் போனால், இது அவர்கள் வாழ்ந்த வாழ்வை அவமானப்படுத்துவது மாதிரியான சடங்குதான்.
தாலி என்பது புனிதம். அதனை பூஜிக்க வேண்டும். அது அணியும் வரைதான் ஒரு பெண்ணுக்கு மரியாதை என்றெல்லாம் கால காலமாகப் பதிவிக்கப்பட்டு வந்துள்ள பிம்பங்கள் ஒரு பெரிய ஆணாதிக்கச் சதித்திட்டத்தின் நீண்ட பெரும் திரைக்கதையைக் கொண்டது.
இந்தத் தாலிப் புனிதத்தை உயர்த்திப் பிடிப்பதில் மத உபதேசிகளுக்கும் மீடியாக்களுக்கும் சம அளவிலான போட்டியுண்டு. மதம் ஆடித் தாலிப் பெருக்கு, வரலட்சுமி நோன்பு இன்ன பிற சடங்குகள் என்று தாலிக் கொடியை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்க, தமிழ் சினிமாவும் பகுத்தறிவுக்குச் சிறிதும் பொருந்தாத தாலி, சுமங்கலித்தனம் இவற்றை அடிப்படையாகக் கொண்ட அசட்டுக் காட்சிகளை வழங்கத் தவறவில்லை.
தமிழ் சினிமாவை கோலிவுட் என்பார்கள். அதன் கடந்த கால தாலி சென்டிமெண்ட்களைப் பார்க்கும்போது, அதனை தாலிவுட் என்றே அழைத்திருக்கலாம் போலும். வலுக்கட்டாயமாகத் தாலி கட்டிவிட்டு, ’மூணு முடிச்சாலே முட்டாளா ஆனேன்…’ என்று முட்டாள்தனமாகப் பாட நம் தமிழ்ப்பட நாயகர்களால்தான் முடியும். ஒரு பெண் ஒருவனை விரும்ப மாட்டாள். உடனே அவன் அவளை மயக்க மருந்து கொடுத்து, தாலி கட்டிய பிறகு, அந்தப் பெண் இதுவரைச் சிறிதும் தனக்குப் பிடிக்காத காதலனின் காலில் விழுந்து கதறி ‘வாழ்க்கை கொடு என் பிராணநாதா…’ என்று கெஞ்சும் அச்சு பிச்சுகள் எல்லாம் தமிழ் சினிமாவில்தான் சாத்தியம்.
‘சின்னத்தம்பி’ கதையே தாலியை அடிப்படையாகக் கொண்டதுதான். இதேபடத்தில் கொடுமையான காமெடி, கிளைமாக்ஸ்தான்.
கைம்பெண்ணான மனோரமாவைக் கட்டி வைத்து, அவருக்குப் பூ வைப்பார்கள். அவரது வெள்ளைச் சேலையில் மஞ்சள் நீரை ஊற்றுவார்கள். வளையல் பூட்டுவார்கள். கொடுமையிலும் கொடுமை. மனோரமாவுக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும்தான்.
நடிகர் சந்திரபாபுவின் வாழ்வில் நடந்த நெகிழ்வான சம்பவம் இது. அவருக்குத் திருமணம் நடக்கிறது. முதலிரவில் மணமகள் இன்னொரு ஆடவனை விரும்புதாகக் கூறுகிறார். உடனே சந்திரபாபு அந்தப் பெண்ணை அந்தக் காதலனுடன் இணைந்து வாழும்படி கூறி அனுப்பி வைக்கிறார். இது நிஜம். அது சந்திரபாபுவின் ஆரோக்கியமான மனோபாவம். இந்தக் கதையைப் படமாய் எடுக்கும்போது இந்தக் காட்சி அப்படியே தலைகீழாக மாற்றப்பட்டது.
படத்தில் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட கணவர் அவளது பழைய காதலனுடன் சேர்த்து வைக்கவே நினைக்கிறார். காதலன் போடும் நிபந்தனை, அந்தப் பெண்ணை ‘நீங்க கட்டிய தாலியைக் கழற்றிட்டு அனுப்புங்க’ என்பது. கணவன் அந்தப் பெண்ணிடம் தாலியைக் கழற்றித் தரச் சொல்கிறார். அவர் மறுக்கவே, அவரே வலுக்கட்டாயமாகப் பறிக்க முயல்கிறார். அந்தப் பெண் கதறி அழுது தாலியை தர மறுத்து, காதலனுடன் இணைய மறுக்கிறார்.
ஒரு பெண்ணுக்கு அவள் விரும்பும் வாழ்வை விட, சடங்குகள் மூலம் கட்டப்படும் தாலியே முக்கியம் என்பதையே இந்தப் படம் வலியுறுத்துகிறது. தாலி சென்டிமென்ட்டை ஒரு அபின் போலவே சினிமாக்காரர்கள் பெண்கள் மனதில் விதைத்துச் சென்றிருக்கிறார்கள்.
‘நான் பாடும் பாடல்’ என்கிற படத்தில் நாயகி ஒரு கைம்பெண். நாயகன் அவளை விரும்புவதாகச் சொன்னவுடன் அவனது கன்னத்தில் அறைந்து விட்டு, ஒரு வசனம் பேசுவார். ‘என் கழுத்தில் தாலி இல்லாமல் இருக்கலாம். ஆனால், என் உடம்பில் ஓடற ஒவ்வொரு நரம்பும் என் புருஷன் எனக்குக் கட்டிய தாலிதான்…’ இங்கு கைம்பெண் மறுமணம் என்கிற அற்புதமான விஷயம் நடந்திருக்க வேண்டும். ஆனால், தாலி சென்டிமெண்ட் என்கிற பெயரில் அத்தகைய முற்போக்குச் சிந்தனை முடக்கப்பட்டது.
ஒரு பெண், குழந்தை ஈன்ற பிறகுதான் முழுமையடைகிறாள் என்று தீர்மானம் இயற்றியிருக்கும் இதே சமூகம்தான் கணவன் மறைந்த பிறகு முடிந்தும் போகிறாள் என்றும் தீர்ப்பெழுதியிருக்கிறது. இங்கு ஆண்களின் சுண்டாட்ட வில்லைகள்தான் பெண்கள். அவர்களது தேவைக்காக ஏற்படுத்தப்பட்டவளே பெண். இங்கு ஆணுக்காகவே பெண். ஆணைச் சார்ந்து மட்டுமே பெண். கணவன் இல்லையென்றால் அவள் வாழ்வு அஸ்தமித்து விட்டது என்றே அர்த்தம் சொல்கிறது.
இந்து மதம் கொண்டாட்ட மனோபாவம் கொண்டது. அதன் எந்த விழாவாக இருந்தாலும் ஆட்டம், பாட்டமாக இருக்கும். கோயில் திருவிழாவா? தாரை, தப்பட்டை, பொய்க்கால் குதிரை நடனம் என்று அதகளப்படும். பெண் பூப்பெய்திய சடங்கா? அதற்கும் விழா… அவர்களுக்குக் கொண்டாடுவதற்கு ஏதேனும் காரணங்கள் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இந்தக் கொண்டாட்ட மனோபாவத்தின் திரிபு நிலை நீட்சி தான் மரண வீடுகளில் நடக்கும் சடங்குகளோ என்றே நினைக்கத் தோன்றுகிறது.
ஒப்பாரி, மாரடித்தல், பறையிசை இவையெல்லாம் அந்தக் கொண்டாட்டங்களின் தொடர்ச்சி தானோ? தாலி கட்டப்படும்போது, அதற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவமும் கொண்டாட்டங்களும் அது அகற்றப்படும்போதும் கொடுக்கப்படுகிறதோ? கொண்டாட எவ்வளவோ விஷயங்கள் இருக்கும்போது ஒரு பெண்ணை திண்ணடாட வைத்துக் கொண்டாடிக் களிப்பது எந்த வகை மனோபாவம்?
பெண்ணுக்குத் திருமணமானதற்கு அடையாளமாகத் தாலி கட்டப்படுவது போலவே ஒரு காலத்தில் ஆண்கள் மெட்டி அணிந்து கொள்வதும் அடையாளமாக இருந்திருக்கிறது. ஆனால், ஆண்கள் அடையாளங்களுக்குள் சிக்க விரும்பவதில்லை போலும். மெட்டி அணியும் வழக்கத்திலிருந்து தங்களைக் கொஞ்ச கொஞ்சமாக விலக்கிக் கொண்டு அதனையும் பெண்களின் கால் விரல்களில் மாட்டி விட்டார்கள்.
என் உறவினர் ஒருவரின் மகள். பத்தாம் வகுப்பு முடித்தார். அவருக்குத் தொடர்ந்து மேலும் படிக்க ஆசை. ஆனால், அவளது முறை மாமாவுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டார். திருமணமாகி மூன்றே ஆண்டுகளில் அவரது கணவர் ஒரு விபத்தில் இறந்துவிட, அந்தப் பெண் கதறி அழுதிருக்கிறார். கணவன் இறந்த சோகத்தை விட, தாலிச் சடங்குதான் அவர் மனதில் பெரிய பாரமாக, அழுத்தமாக இருந்திருக்கிறது.
‘எனக்கு அந்தச் சடங்கு வேண்டாம். அதைச் செய்யுறதா இருந்தால் நான் செத்துப் போயிடுவேன்…’ என்று தனது பட்டதாரி அண்ணனிடம் அவர் அழுது கொண்டே கூறியிருக்கிறார். அதன்பிறகு அவரது அண்ணன், கணவரின் வீட்டாருடன் பேசி தாலியெடுப்புச் சடங்குகள் இல்லாமல் எளிதாக அந்தப் பெண்ணையே தாலியைக் கழற்றிக் கொடுக்கும்படி செய்திருக்கிறார்கள்.
தாலி என்பது மூன்று முடிச்சுக்கள் மட்டுல்ல, பொய்யான முன்னூறு சென்டிமெண்ட் முடிச்சுக்களைக் கொண்டு அது இறுகக் கட்டப்பட்டுள்ளது. நம்பிக்கையில் ஊறிப் போன அந்தப் பிற்போக்கு முடிச்சுக்களை அவ்வளவு எளிதில் அவிழ்த்து விடவோ, அறுத்து விடவோ முடியாது. கால வேகத்தில் கல்வியறிவும் பகுத்தறிவும் வளர வளர பின்பற்றத் தேவையில்லாத அந்த முடிச்சுகள் தானாகவே இற்றுப் போகும். அவை இற்றுப் போவதற்கு முன் அற்றுப் போகச் செய்ய வேண்டியது ஒன்றுண்டு. அது மனிதாபிமானமில்லாத தாலியெடுத்தல் என்ற சடங்குதான்.
இன்று ஒரு சில படித்த சமுதாயத்தில் இதன் தீவிரம் சற்றுக் குறைந்திருப்பதும் அதன் வலியை அவர்கள் புரிந்திருப்பதும் சற்றே ஆறுதல் அளிக்கிறது. கணவனை இழந்தவர்கள் வண்ணப் புடவைகள் அணிந்து கொள்ளுவதையும், வளையல் அணிந்து கொள்வதையும் நகரங்களில் காண முடிகிறது. இன்னும் சிலர் ஸ்டிக்கர் பொட்டு கூட வைத்துக் கொள்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக கனிவு காட்டும் பெற்றோரும் உறவினர்களும்தான்.ற்றோர், உடன்பிறந்தவர்களை விட, திருமணம் முடிந்த ஒவ்வொரு ஆணுக்கும் இதுகுறித்த உறுத்தல் ஏற்பட வேண்டும். தன் மரணத்துக்குப் பிறகு தாலியெடுப்புச் சடங்குகள் தன் மனைவிக்குச் செய்யப்படக் கூடாது என்பதில் உறுதியாய் நிற்க வேண்டும். கடுமையான உடல் நோயால் பாதிக்கப்பட்ட, ஆபத்தான அறுவைச் சிகிச்சைக்குச் செல்லக் கூடிய நிலையில் இருப்பவர்கள் தனக்கு சிகிச்சையின்போது ஏதேனும் விபரீதம் நேருமானால் தன் மனைவிக்கு இத்தகையச் சடங்கு செய்யக் கூடாது என்று தனது பெற்றோர் உறவினர்களிட்ம் வலியுறுத்த வேண்டும்.
பெண்ணை தெய்வம் என்று பூஜித்து அவளை போலியாகப் புகழ்ந்து ஏமாற்றியது போதும். அவளை மனுஷியாக முதலில் ஏற்றுக் கொள்வதற்கான மனோபாவத்தை இந்தச் சமூகத்துக்குக் கற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு படித்த சமூகத்தின் கையில்தான் உள்ளது.
அந்த 16 நாட்கள்
இருபதாண்டுகளுக்கு முன் தனக்கு நேர்ந்த அந்தக் கொடூரத்தைப் பற்றி உடல்நடுங்கப் பேசுகிறார் அறுபது வயது ராஜாமணி அம்மாள் “கணவர் இறந்த துக்கம் ஒருபுறம் என்றால் அந்தப் பதினாறாம் நாள் சடங்கு பெரிய நடுக்கம். நான் ஏற்கெனவே சில இடங்களில் அந்தக் கொடூரத்தைப் பார்த்திருந்ததால் நாள் செல்லச் செல்ல எனக்கு அது குறித்த அச்சம் அதிகமாகிக்கிட்டே இருந்தது. தாலியைக் கழட்டணும்னா புருஷன் இறந்தவுடனே கழற்றச் சொல்லிட வேண்டியதுதானே. எதுக்குப் பதினாறு நாள் காத்திருந்து, ஊரைக் கூட்டி வெச்சு கல்யாணம் மாதிரி நடத்தணும் அதை? அந்தப் பதினாறு நாள். இப்ப நினைச்சாலும் உடல் நடுங்கற மாதிரி இருக்கு. ஒவ்வொரு நாள் செல்வதும் பெரிய நரகமா இருந்தது. கசாப்புக் கடைக்காரன் கையிலே இருக்கிற கத்தியைப் பார்த்து அஞ்சி நடுங்கற ஆடு மாதிரியே இருந்தது என் நிலைமை.
ஒரு சூன்யமான வாழ்க்கைக்குப் பழகிக்கப் பெண்களுக்குப் பயிற்சி கொடுக்குறதுக்காகத்தான் அந்த பதினாறு நாட்கள் காத்திருக்க வைக்கிறாங்களோ? என்ன கருமமோ தெரியலை. அம்மா வீட்ல எடுத்துக் கொடுத்த ஒரு புடவை. அதை மட்டுமே நானே துவைச்சுக் கட்டிக்கணும். கொடுமையான நாட்கள் அவை. ஏன்டா பெண்ணாய்ப் பொறந்தோம்னு துன்பப்பட்ட நாட்கள். இந்தச் சடங்கை ஏற்பாடு செய்தவர்களின் உள்நோக்கமும் அத்தகைய எண்ணம் ஒரு பெண் மனதில் ஏற்பட்டு, அவள் தன்னம்பிக்கை இழக்க வேண்டும் என்பதாகக் கூட இருக்கலாம்.
கணவன் இறந்தவுடன் தாலியைப் பறிக்கிறாங்க. மெட்டியைக் கழற்றுறாங்க. சரி…. பூவையும் பொட்டையும் வளையலையும் பயன்படுத்துவதை ஏன் தடுக்கிறாங்க? தாலி, மெட்டி புருஷன் அளித்தது. பூ, பொட்டு வளையல் புருஷன் அளித்ததா? சின்ன வயதில் தலை வாரி பூச்சூட்டி, பொட்டு வைத்து அழகு பார்த்த அம்மா அளித்தது அந்தப் பூவும் பொட்டும். திருவிழா, பொங்கல் மாதிரி நேரங்களில் நானும் அம்மாவும் தங்கச்சியும் கடை கடையா போய் வளையல் வாங்குவோம். கலர் கலரா தேடி தேடி வாங்குவோம். சின்ன வயசிலிருந்து நான் அணிந்து அழகு பார்த்த விஷயங்களையும் ஏன்டா பறிக்கறீங்கன்னு அந்தக் கொடுமையான நேரத்தில் கத்தணும் போல இருந்தது. இது லாஜிக்கே இல்லாத முட்டாள் சடங்கு. சில படித்த சமுதாயத்திலும் இன்றும் இது நடந்து வருவதுதான் பெரிய அவலம்.
இந்து மதத்தில் ஒவ்வாரு சடங்குக்கும் ஒரு காரணம் இருக்கும். சிலது அதில் அபத்தமாவும் இருக்கும். இந்தச் சடங்குக்கு என்ன காரணம்னு நான் நிறைய பேர்க்கிட்டே கேட்டுட்டேன். புத்தகங்களிலும் தேடிப் பார்த்துட்டேன். இதுவரை உருப்படியா ஒரு காரணமும் கிடைக்கலே. புருஷன் ஆத்மா சாந்தியடையும். சடங்கு செய்யலேன்னா வம்சம் விருத்தியாகாதுன்னு பொத்தாம் பொதுவா காரணம் சொன்னாங்க. காரணமே இல்லாமதான் இதுநாள் வரைக்கும் இந்தச் சடங்கு செய்து பெண்ணை அவமானப்படுத்தி துன்புறுத்தறாங்க.
கடைசியா என் கருத்து என்னன்னா, பெண்களை அடக்கி வைக்கும் மூக்கணாங் கயிறாகத்தான் தாலியைத் தந்திரமா பயன்படுத்துறாங்க. உண்மை என்னவென்றால் மனதளவில் ஒரு வெறுப்புடன்தான் அதனை ஒரு பெண் சுமந்து கொண்டிருக்கிறாள். ஒரு பெண்ணைக் கட்டுப்படுத்துவது தாலியல்ல. அவளை மதித்து அவளிடம் நேர்மையான அன்பு காட்டுவதே அவளைக் கட்டுப்படுத்தும்… ’’ என்று ஆற்றாமையுடன் கூறி முடித்தார்.
(-தொடரும்…)
முந்தையபகுதி – 4 | அடுத்தபகுதி – 6