மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 4 | பெ. கருணாகரன்
தைரியமாகச் சொல் நீ மனிதன்தானா?
பறைகள் காது கிழித்து அதிர்ந்தன. சிறிய அளவில் ஒலித்துக் கொண்டிருந்த அழுகுரல்கள் திடீரென்று உச்சம் பெற்று உயிர் பறிபோவதுபோல் அலறின. தலைக்கு வெண்நிற பேண்டேஜ் சுற்றப்பட்ட அந்த இளைஞனின் உடல் தள்ளுமுள்ளான சூழலில் கொண்டு வந்து பாடையில் வைக்கப்பட்டது. அந்த ஐம்பது வயது மதிக்கத்தக்க மனிதர் முகத்தில் அடித்துக் கொண்டு அரற்றினார்.
“எனக்கு நீ கொள்ளி வைப்பேன்னு நினைச்சுகிட்டிருந்தேன். உனக்கு நான் வைக்கும்படி பண்ணிட்டியேடா… நான் செத்தா எனக்கு யாருடா கொள்ளி போடுவா?” ஆற்றாமை நிறைந்த அந்தக் கண்களில் நில்லாமல் வழிந்து கொண்டே இருந்தது நீர். சுரேஷ் அவரது ஒரே மகன். முன்நாள்தான் அவனது பிறந்தநாள். 21 வயது முடிந்து 22 வயது. பிறந்தநாள் அன்று இரவு, தான் குடியிருக்கும் ஹவுசிங் போர்டு வீட்டின் மொட்டை மாடியில் நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்திருக்கிறார். அவரது வீட்டிலிருந்தவர்களும் அதற்கு அனுமதித்தனர். பார்ட்டியில் கலந்து கொண்ட அனைவருமே அவன் வயதுக்காரர்கள். பார்ட்டி ஆரம்பித்த சிறிது நேரத்தில் பக்கத்துக் கடையில் சிக்கன் வாங்கி வருவதாகச் சொல்லி கிளம்பியிருக்கிறார். கைப்பிடி நழுவி விட நான்காவது மாடியிலிருந்து கீழே விழுகிறார். அவரது பிறந்தநாளே அவருக்கு இறந்த நாளும் ஆனது. சுரேஷ் என்பது ஒரு பானை சோற்றுக்கான ஒரு சோற்றுப்பதம் மட்டுமே. இதுபோல் இன்னும் ஏராளமான சுரேஷ்கள் உண்டு. மதுப்போதையில் விபத்தில் சிக்கி உயிர் விடுவதும், மதுப்பழக்கம் இல்லாத அப்பாவிகள் மீது வண்டியை ஏற்றி அவர்களது உயிர்களைப் பறிப்பதும், உடல் நலம் கெட்டு, அவதிகள்பட்டு உயிர் துறப்பதும்… கணக்கெடுத்தால் லட்சங்களை எட்டும் அந்தக் கண்ணீர்க் கதைகள்.
இன்றைய நிலையில் தமிழகத்தில் மண் வீடானாலும் மரண வீடானாலும் காதல் தோல்வி என்றாலும் வேலை இல்லை என்றாலும் எல்லா இடத்திலும் மது நீக்கமற நிறைந்துவிட்டது. மது மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. பெட்டிக்கடைகளைப்போல் தெருவுக்குத் தெரு மதுக்கடைகள். திருவிழாக் கூட்டம்போல் அங்கெல்லாம் ‘குடிமக்கள்’ கூட்டம். முப்பது வயதுக்குக் கீழுள்ளவர்கள்தான் இன்று அதிக அளவில் மதுப்பழக்கம் உள்ளவர்களாக உள்ளனர் என்பதுதான் மிகப்பெரும் வேதனை. 21 வயதுக்குக் குறைவானவர்களுக்கு மதுக்கடைகளில் மது தரக்கூடாது என்கிற விதிகள் இருந்தாலும் பதினைந்து வயதுக்காரர்களையும் மதுக்கூடங்களில் இன்று சகஜமாகக் காண முடிகிறது.
இன்றைய நிலையில் உலகிலேயே இளைஞர்கள் அதிகமுள்ள தேசம் இந்தியா. இவர்களில் கிட்டத்தட்ட மூன்றரைக் கோடி பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த இளைய சக்தி அனைத்தும் ஆக்கச் சக்தியாக, உழைப்புச் சக்தியாக மாறும்போது, இந்தியாவின் வளர்ச்சி விகிதம் ராக்கெட் வேகத்தில் உயரும் என்றெல்லாம் கணிக்கிறார்கள் பொருளாதார அறிஞர்கள். ஆனால், இந்த விஷயத்தில் தமிழகத்தில் அந்த இளைய தலைமுறையின் உழைப்புச் சக்தி மதுப்பழக்கத்தால் தடுமாறிக் கொண்டிருக்கிறதோ என்றே அஞ்சத் தோன்றுகிறது.
இந்தியர்களின் சராசரி ஆயுள் அதிகரித்துக் கொண்டிருப்பதாக புள்ளி விவரங்கள் சொன்னாலும் நாற்பது வயதைத் தாண்டாத பலர் மரணமடைவதை இன்று சாதாரணமாகக் காண முடிகிறது. அவர்களில் 25, 30 வயதுக்காரர்கள்தான் அதிகம். விசாரித்தபோது அவர்கள் அனைவரும் மதுப்பழக்கம் உள்ளவர்கள் என்பது தெரிந்து கொள்ள முடிந்தது. விபத்தில் மரணம், மாரடைப்பு, சிறுநீரகச் செயலிழப்பு, கல்லீரல் பிரச்சினை என்று இறந்தவர்களின் சாவுக்கான காரணங்கள் நீளுகின்றன. மரண அஞ்சலி போஸ்டர்களில் கண்ணில் படும் பலர் இளைஞர்களே. மூத்தோரின் புகைப்படத்தை எப்போதாவது அரிதாகவே காண முடிகிறது.
மதுப்பழக்கத்தால் இளவயது மரணங்கள் அதிகரிப்பதால் தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகரிக்கும் அவலமும் நேர்கிறது. தந்தையை இழந்த சிறு குழந்தைகளின் எதிர்காலம் புதிர்க்கோலம் ஆவதால் இளஞ்சிறார் குற்றங்கள் அதிகரிக்கவும் குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிக்கவுமே அவை துணையாகின்றன. இரண்டாண்டுகளுக்கு முன்தான் திருமணமானது கடலூர் நண்பன் ஒருவனுக்கு. அவனது மனைவி எட்டு மாத கர்ப்பஸ்திரியாக இருக்கும்போது, மது குடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வந்தபோது, விபத்தில் சிக்கி இறந்து போனான். அந்தக் குழந்தை பிறக்கும்போதே தந்தையை இழந்து. அப்பனை விழுங்கிய பிள்ளை என்கிற அவச்சொல்லுடன் இன்று வளர்ந்து வருகிறது. இவன் செய்த குற்றத்துக்கு தண்டனை அனுபவித்து வரும் அந்தக் குழந்தை என்ன பாவம் செய்தது? சிறுவயதிலிருந்தே மன அழுத்தம், மன இறுக்கத்துடன் வளரும் அந்தக் குழந்தை இளைஞனாகும்போது, ஆரோக்கியமான மன நலனுடன் இருப்பானா?
மதுப்பழக்கத்துக்கு ஆளாகி மரணம் தவிர, கை, கால் நடுக்கம், நினைவுத்திறன் குறைவு, பக்கவாதம் போன்ற செயல் திறனைப் பாதிக்கும் நிலைகளுக்கும் ஆளாகிறார்கள் தமிழக இளைஞர்கள். இதனால் பொருளாதார நெருக்கடியில் வீட்டிலுள்ள பெண்களும் வெளியில் கூலி வேலைக்குச் செல்லும் அவலமும் நேர்கிறது.
யோகாசனம் செய்வதற்கு முன் எங்கள் யோகா மாஸ்டர் உடலுக்கு மனப்பூர்வமாக நன்றி சொல்லச் சொல்வார். நம்மிடம் எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பாராமல், நமக்காக ஓய்வின்றி 24 மணிநேரமும் உழைத்துக் கொண்டிருக்கும் இதயம், சிறுநீரகம், மூளை, கல்லீரல், கண்கள், கைகள், கால்கள் என்று அனைத்து உறுப்புக்களுக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல வேண்டும். ஆனால், நன்றி சொல்ல வேண்டிய அந்த உடல் உறுப்புகளிடம் நன்றி கொல்வது எவ்வகை நியாயம்? காரணம், இதயம், சிறுநீரகம், கல்லீரல், மூளை, கண்கள் என்று உடலின் அத்தனை முக்கிய உறுப்புகளையுமே பதம் பார்த்து பஞ்சராக்குகிறது மது.
பொதுவாக இளைஞர்களிடம் மதுப்பழக்கம் விளையாட்டாகவே ஆரம்பிக்கிறது. பழக்கம் இல்லாத ஒருவன் நண்பர்கள் கலந்து கொள்ளும் ஒரு பார்ட்டியில் ‘கூல் டிரிங்க்ஸ் பார்ட்னராக’க் கலந்துகொள்ளும்போது, ‘ஒண்ணும் செய்யாது மாப்பிள்ளை. ஒரு சிப் குடிச்சிப் பாரு…’ என்று நண்பன் வற்புறுத்தலை மீற முடியாமல் ஒரு சிறிய சிப்பில் ஆரம்பித்து, அதுகுறித்த குற்ற உணர்ச்சி குறைந்து, அது பழக்கமாகி பிறகு அளவு அதிகமாகி தொடர்ப்பழக்கமாகி ஒருவரை மது அடிமையாக்குகிறது. ஒரு சிலந்திப் பூச்சியைப்போல் ஆரம்பிக்கும் பழக்கம்தான் பின் ஆக்டோபஸ்போல் இறுக்கி ஒருவரைத் தனக்கு இரையாக்கிக் கொ(ல்)ள்கிறது.
கல்லூரி மாணவர்கள் மது அருந்துவது ஒரு புறமென்றால் இப்போதெல்லாம் சில இடங்களில் பள்ளி செல்லும் மாணவர்களும் மது அருந்துவதாகச் செய்திகள் வந்து அதிர்ச்சியூட்டுகின்றன. வீடுகளில் தந்தை மது அருந்துவதும் மதுக்கடைகள் பெருகியிருப்பதும் மது குடிப்பதைச் சாதாரண ஒரு செயலாகக் காட்டும் சினிமாத் தொலைக்காட்சிகளின் தாக்கங்களுமே நல்லது கெட்டதைப் புரிந்து கொள்ளும் பக்குவமற்ற அந்த மாணவர்களை மதுப்பழக்கத்துக்கும் இட்டுச் செல்கிறது.
தனியார் ஒரு செயலைச் செய்வதற்கும் அதே செயலை அரசே செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. தனியார் ஒன்றைச் செய்யும்போது அது வியாபாரம் மட்டுமே. லாபம் மட்டுமே அதில் பிரதானம். ஆனால், அரசின் செயல் என்பது மக்கள் சேவை. மக்கள் நலம். இதுவே பிரதானம். தமிழகத்தில் அரசே நேரடியாக மது விற்பனை செய்ய ஆரம்பித்த பிறகு, முதலில் மாறியது மது மீதான மக்கள் பார்வை. மது அருந்துதல் குற்றம் என்கிற சமூகத்தின் பொதுப்புத்தியைத் தகர்த்தெறிந்தது அரசின் நேரடி மது விற்பனை. இதன் விளைவு, இப்பேதெல்லாம் பொது இடங்களில் மது அருந்துவது பெருமிதமாக பார்க்கப்படுகிறது. முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் மதுக்கோட்டையுடன் புகைப்படம் போடுவதைச் சிலர் பெருமையாக கருதும் போக்கும் நீடிக்கிறது. மது அருந்துதல் ஒரு தவறான செயல். கண்ணியக் குறைவான செயல். அவமானம் என்பது மாறி இன்று அது ஒரு கௌரவத்தின் அடையாளமாகப் பார்க்கும் மனோபாவத்துக்கு இளைய தலைமுறை மாறிவிட்டிருப்பது கவலையளிக்கிறது.
தமிழகத்தின் மதுக்கலாச்சாரத்தை டாஸ்மாக்குக்கு முன். டாஸ்மாக்குக்குப் பின் என்று இரண்டு விதமாகப் பகுக்கலாம். முன்பு தந்தை குடித்ததால் ஒரு குடும்பம் அவமானத்திலும் வறுமையிலும் தத்தளித்தது. இன்று மகன் குடித்ததால் அந்த அவமானச் சிலுவையைப் பெற்றோர் சுமக்கின்றனர். முன்பெல்லாம் மதுப்பழக்கத்துக்கு அடிமையான கணவனை சிகிச்சைக்கு மனைவி அழைத்து வருவார் என்றால் இப்போதோ மதுவுக்கு அடிமையான மகனை பெற்றோர் சிகிச்சைக்கு அழைத்து வரும் அவலச்சூழல். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் மதுப்பழக்கத்தால் உடல்நலன் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்களில் 80 சதவிகித்தினருக்கு மேல் இளைஞர்களே.
தமிழகத்தில் குடும்ப வன்முறைகளும் அதிகரித்திருப்பதாகக் கூறுகிறது ஒரு புள்ளிவிவரம். மதுபோதை காரணமாகச் சின்ன சின்ன குடும்பச் சண்டைகளும் போதையின் உச்சத்தில் கொலையிலும் வன்முறையிலும் முடிகின்றன. இதுவே மனஅழுத்தம் தாங்காமல் பெண்களைத் தற்கொலைக்கும் தூண்டுகின்றன.
காதலில் தோல்வி, வேலை கிடைக்கவில்லை, பணிநெருக்கடி, மனஅழுத்தம் என்று மனம் மது அருந்த ஆயிரம் காரணங்களை கற்பித்துக் கொள்கிறது என்பதே நிஜம். ஆனால், மது அவற்றிலிருந்து விடுதலை வாங்கித் தந்து விடுவதில்லை. மூளையின் செயல் திறனில் ஒரு மாயா விநோத குழப்பத்தை ஏற்படுத்தி அது மனதைத் திசை திருப்புகிறது. அது விடுதலை அளிப்பதுபோல் ஏமாற்றி ஒருவனை நிரந்தரச் சிறையில் தள்ளி விடுகிறது. முதல் தலைமுறையைச் சேர்ந்த ஒருவன் சம்பாதித்து குடுமபத்தை தரமுயர்த்துவான் என்று பெற்றோர் கனவு கண்டு கொண்டிருக்க, அவர்களோ மதுவில் மூழ்கி எதற்கும் தேறாதவர்களாகி, செயல் திறன் இழந்து நோயாளிகளாகி வீட்டுக்கே சுமையாகிவிடும் நிலையில் ஒரு தலைமுறையே தனது முன்னேற்றத்தில் பின்தங்கி விடும் பரிதாபமே நிகழ்கிறது.
சமீபத்தில் இணையத்தில் அப்துல் கபூர் (Abdul gafoor) என்பவர் எழுதியிருந்தார். “மது பயன்பாடு அதிகமாகி வருகிறது என்பதை விட கவலைக்குரியது அதிகமான இளைஞர்களும், மாணவர்களும் அதற்கு அடிமையாகி வருவது என்பதுதான். என் மருமகன் கோவையில் பொறியியற் கல்லூரியில் படிக்கிறான். அவனுடன் கூடப் படிக்கும் நல்ல மாணவர்களை இணைத்து ஒரு வீடு எடுத்து தங்கலாம் என்று முனையும்பொழுது, குடிக்காத ஒரு மாணவன் கூட கிடைக்கவில்லை என்பதுதான் அதிர்ச்சியானது.
அவனுடன் படிக்கும் அனைத்து மாணவர்களும் குடிப்பார்களாம். கொஞ்சம் வசதி குறைவான குடும்பத்திலுள்ள மாணவன் சொன்னது அதிர்ச்சியிலும் அதிர்ச்சி. ‘என் தந்தைதான் எனக்கு மது வாங்கித் தருவார். நான் குடிப்பேன்’ என்றான் அந்த மாணவன்.” அடக்கொடுமையே.
மதுவுக்காக கிராமப் புற மக்கள் தங்கள் வருமானத்தில் 24 சதவிகித்தைச் செலவு செய்கிறார்கள். நகர்புற மக்களோ 32 சதவிகிதம். இப்போது அவர்களுக்காக ஒரு சிறிய கணக்கு. மதுப்பழக்கத்துக்கு அடிமையான ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 100 ரூபாய் செலவு செய்கிறார் என்று வைத்துக் கொண்டால், ஒரு மாதத்துக்கு 3000 ரூபாய் செலவாகிறது. அது ஆண்டுக்கு 36 ஆயிரம் ரூபாய். பத்து ஆண்டுகளுக்கு 3 லட்சத்து அறுபதாயிரம் ரூபாய். அந்தப் பணத்துக்கு வட்டியும் கணக்கிட்டால் கிட்டதட்ட நாலரை லட்சம் ரூபாயைத் தாண்டும். அந்தப் பணத்துக்கு என்னென்ன செய்ய முடியும்? யோசித்துப் பார்த்தால் ஒரு குடும்பத்தில் பலரது தேவைகளை நிறைவேற்றி வைக்க முடியும்.
கல்விக் கூடம், விளையாட்டு மைதானம், ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றில் இருந்து சாதனைக்கான பாதைகளில் கம்பீர நடை பயில வேண்டிய இளைய தலைமுறை மதுக்கடைகளில் தவமிருந்து தன்னை அழித்துக் கொள்வதுடன் தேசத்தின் முன்னேற்றத்துக்கும் பின்னடைவை ஏற்படுத்துகிறது என்பது எத்தகைய வேதனை? ஒவ்வொரு மரக்கன்றிலும் ஓராயிரம் கனிகள் உள்ளன. ஒவ்வொரு குழந்தைக்கு உள்ளும் ஓராயிரம் சாதனைகள் ஒளிந்துள்ளன. அந்தக் கன்றுகள் ஆல்கஹாலால் கருகி விடாமல் பாதுகாப்பது அவசியம். ஏனென்றால் மதுப்பழக்கம் தனிநபர் பிரச்சினை மட்டுமல்ல. சமூகத்தின் பிரச்சினை. தேசத்தின் பிரச்சினை.
மது ஒரு பாவச்செயல். அறியாமை. சமூக அவமானம். அது மரணத்தின் தூதுவன். குடும்ப வன்முறைகளின் காரணி. செயல் திறன் இழக்கச் செய்து வறுமையில் தள்ளும் முன்னேற்றத் தடைக்கல். இதனைப் புரிந்துகொண்டு எந்த வகையிலும் மதுவால் ஒரு துளி நன்மையும் நமக்கு இல்லை என்பதை இளைய தலைமுறை உணர்ந்து அதிலிருந்து வெளியே வரவேண்டும்.
காலம் கடந்து விடவில்லை. தேவை மனஉறுதியும் எதிர்காலம் குறித்த கனவும் சுயநம்பிக்கையும் கூடவே குடும்பத்தின் மீதும் தேசத்தின் மீதும் மாறாத அக்கறையும் மட்டுமே.
(-தொடரும்…)
முந்தையபகுதி – 3 | அடுத்தபகுதி – 5