மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 3 | பெ. கருணாகரன்
காதலிலே மூன்று வகை!
நீண்ட வருடங்களுக்குப் பிறகு, உறவினர் பையன் ராஜேஷை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சமீபத்தில் கடைவீதியில் சந்தித்தபோது, அதிர்ந்து போனேன். கடைசியாக அவன் ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்தபோது பார்த்தது.
பள்ளி நாட்களில் விதவிதமாய் உடையணிந்து ரோமியோ கணக்காகச் சுற்றியவன் – இன்று… நம்பத்தான் முடியவில்லை. கோடு போட்ட பழைய மஞ்சள் நிற காட்டன் சட்டை, கசங்கி அழுக்கேறி இருந்தது. முள்முள்ளாய் தாடி. சவரம் செய்து ஒரு வாரம் இருக்கலாம்.
அவனிடமிருந்து மட்டமான சாராய நெடி வெளிப்பட்டது.
‘‘ஏய்… உனக்கு என்னடா ஆச்சு? ராஜா மாதிரி இருந்தவன், ஏன்டா இப்படி ஆயிட்டே?’’
நான் கேட்டதுதான் தாமதம் – குழறலாகக் குமுறினான் ராஜேஷ்.
‘‘அது பெரிய கதை மாமா. என் இந்த நிலைமைக்குக் காரணம், ஒரு பொண்ணு… எல்லாப் பொண்ணுங்களும் ஏமாற்றுக்காரிங்க. ஆசையை வளர்த்துவிட்டு, கடைசியில ஏமாற்றி மோசம் பண்ணிடறாளுங்க மாமா. நம்மளை பைத்தியக்காரனாக்கிடறாளுங்க.’’ அவனது கண்களில் பச்சாதாபத்தில் நீர் முட்டி நின்றது. அவனிடம் அந்தச் சூழலில் பேசுவது சரியில்லையென்று பட்டது.
‘‘சரி… இப்ப நீ வீட்டுக்குப் போ. நாளை காலையில வீட்டுக்கு வந்து உன்னைப் பார்க்கறேன்...’’
மறுநாள் மதியம், அவனது வீட்டுக்குச் சென்றேன். கொஞ்சம் தெளிவாக இருந்தான். கூரை வீடு. ஐம்பது வயதில் அம்மா. எனக்கு அத்தை முறை வேண்டும். மாமா பத்து ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டிருந்தார். திருமண வயதில் ஒரு தங்கை. அவன் ஆட்டோ ஓட்டிதான் குடும்பம் நடக்கவேண்டும். நான்கு நாட்களாக அவன் தொழிலுக்குப் போகவில்லையென்று அத்தை கவலையுடன் கூறினார். குடும்பத்தில் வயிற்றுப் போராட்டம்.
அவனை அழைத்துக்கொண்டு டீக்கடைக்கு வந்தேன்.
‘‘இப்ப உன் பிரச்சினையை டீடெய்லா சொல்லு ராஜேஷ்…’’ என்றேன். சொன்னான்.
பிரச்சனை? பெரிதாக ஒன்றுமில்லை. கடைவீதியில் உள்ள ஒரு வங்கியில் அந்தப் பெண்ணுக்கு உத்தியோகம். பெரியார் நகரில் அவர் வீடு. ஒருநாள் ஆட்டோவில் கொண்டுபோய் விடும்போது பழக்கம். தொடர்ந்து அதுவே வழக்கமானது. தினமும் மாலையில் அவன் எங்கிருந்தாலும் அந்த வங்கிக்குச் செல்வான். அந்தப் பெண்ணை ஆட்டோவில் கொண்டுபோய் வீட்டில் சேர்ப்பான்.
அவர் பிராமனப் பெண். அவனிடம் வெகு இயல்பாகப் பேசுவாராம். இப்போது வீட்டில் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டார்களாம். மாப்பிள்ளை பிடித்து, அவளும் சம்மதம் சொல்லிவிட்டாளாம். “என்னைக் காதலிச்சுட்டு, இப்போ இன்னொருத்தனை நீ கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதித்தது பச்சைத் துரோகம்… பெண் குலத்துக்கே இழுக்கு….” என்று இவன் அந்தப் பெண்ணிடம் டயலாக் பேச, அந்தப் பெண் கொந்தளித்து, “நான் காதலிச்சேனா? உன்னையா? உனக்கும் எனக்கும் எந்த வகையிலாவது பொருந்தி வருமா? யோசிச்சுப் பார்த்தியா?” என்று அவனை வார்த்தைகளால் வறுத்தெடுத்து விட்டுப் போய்விட்டாளாம். அன்றிலிருந்து அவள் இவன் ஆட்டோவில் வருவதில்லை.
அடுத்த மாதம் அந்தப் பெண்ணுக்குக் கல்யாணம். உடனே இவன் தன்னை ஒரு காதல் தோல்வியாளனாய் முடிவு செய்து கொண்டு விட்டான். காதலில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒரு பெருமிதம் இருப்பதைப்போல், தோல்வி அடைந்து விட்டதாய்ச் சொல்லிப் புலம்பிக் கொள்வதிலும் சிலருக்கு இங்கே பெருமித உணர்வே உள்ளது. நமது இலக்கியங்களும் சினிமாக்களும் காதல் தோல்விகளை காவியங்களாகவே சித்திரித்து, அது குறித்த பெருமித உயர் மனோபாவத்தை உருவாக்கி மனங்களில் பதிய வைத்திருக்கின்றன. காதலில் தோல்வி என்று கூறிக் கொள்வதில் ஒரு சுகம்! சோகம் கொடுக்கும் சுகம்! அது ஒரு மனோபாவம். ஆனால், அது ஆரோக்கியமானதல்ல.
அதெல்லாம் ஒரு மாயை. பாவனை. அந்தப் பாவனை கிறுக்குத்தனம்; முட்டாள்தனம்.
ராஜேஷ் விஷயத்தில் என்ன நடந்தது? அந்தப் பெண் எந்த இடத்திலும் அவனைப் பார்த்து ‘ஐ லவ் யூ’ சொன்னதில்லை. ‘‘நீங்க தமாஷா பேசுறது எனக்குப் பிடிச்சிருக்கு…’ என்று சில தடவை கூறியிருக்கிறாள். அது அவனது சின்சியாரிட்டி மீது அவள் காட்டிய மரியாதையாக இருக்கலாம்.
ஆனால், அவள் தன் மீது காதல் வயப்பட்டதாக அவனுக்குள் ஒரு கற்பனை. நான் அவனிடம் உரிமையுடன் கேட்டேன். “அந்தப் பெண் சொன்னதில் என்ன தவறு? அவளைக் கல்யாணம் பண்ணிக்க உனக்கென்ன யோக்கிதை இருக்கு?’’ – இத்தகையவர்களிடம் அனுதாபம் காட்டக்கூடாது.
‘‘என்ன யோக்கிதை வேணும் மாமா? நான் ஆண்… அவள் பெண்…’’
‘‘அது மட்டுமே தகுதியாகுமா? அவள் பேங்க்ல வேலை பார்க்கிறாள். நீ ஆட்டோ ஓட்டறே. அவள் சைவம். நீ அசைவம். ரெண்டு பேருக்கும் பொருந்தி வருமா? இது சினிமாவுல வர்ற மாதிரி இல்லை… நீ அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டால், அவள் எதிர்பார்ப்பை உன்னால நிறைவேற்றி வைக்க முடியுமா? அவள்தான், உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, ‘திஸ் ஈஸ் மை ஹஸ்பெண்ட் ஆட்டோ டிரைவர்’ன்னு ஃப்ரண்ட்ஸ்கிட்டே அறிமுகப்படுத்தி வைக்க முடியுமா? அந்தப் பெண் புத்திசாலி. நீ ஒரு முட்டாள். எல்லாத்தையும் அழிச்சுட்டுப் புதுசா ஆரம்பி. ’’
‘‘ஏமாந்து போனவன் முட்டாள்தானே மாமா…’’
– வேதாளம் முருங்கை மரத்திலிருந்து கீழே இறங்கவே மறுத்தது. இனி அவனிடம் பேச எனக்குப் பொறுமை இல்லை. எரிச்சலே வந்தது. நான் பாதிரியாரல்ல, அவனுக்கு உபதேசிக்க.
‘இங்கே பார் ராஜேஷ்... உன் வழிக்கே வர்றேன். அவள் உன்னை முட்டாளாக்கிட்டா. சரி, இன்னும் நீ மிகப்பெரிய முட்டாளாகணும்னு விரும்பறியா? உன் அம்மா, தங்கச்சியை நினைச்சுப் பாரு. யாரோ ஒருத்தி… உன் வாதப்படி பார்த்தால், உன்னை மதிக்காத ஒருத்தி … அவளுக்காக உன்னையும், உன் குடும்பத்து எதிர்காலத்தையும் நாசமாக்கிக்காதே. இதெல்லாம் கொஞ்ச நாள்தான். இன்னொரு பெண் உன் லைஃப்லே கிராஸ் ஆகும் போது எல்லாம் மாறிடும். அப்போ புரிஞ்சுக்குவே…’’
விடை பெற்றேன். இனி, அவன் அழிகிறானோ, வாழ்கிறானோ – அவனது அறிவு நிலையைப் பொறுத்தது அது. ஆனால், ராஜேஷ் என்பவனின் நிலையை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. ஏனென்றால், இங்கே எத்தனையோ முட்டாள் ராஜேஷ்கள் இருக்கிறார்கள்.
அழித்துக் கொள்வதா காதல்? ஆக்குவதல்லவா காதல். காதலினால் மானுடர்க்குக் கவிதை உண்டு. கவலை உண்டா? காதலிக்காத பெண்ணை காதலிப்பதாக நினைத்துக் கொள்வதும் காதலிக்க மறுத்தவளை விடாமல் துரத்தித் தொல்லை செய்வதும் முதிர்ச்சியற்ற சிறுபிள்ளைத்தனம். மனித உரிமையை மீறும் குற்றம். ஆனால், காதல் பாவனையாளர்கள் என்றேனும் அந்தப் பெண் தன்னை ஏற்றுக் கொள்வாள் என்கிற மூட நம்பிக்கையிலேயே சுற்றி வருகிறார்கள். ஆண் என்கிற அதிகாரம், அல்லது அனுதாபம் காட்டி எட்டாக்கனியை எட்டி விடத் துடிக்கிறார்கள்.
விரும்பிய ஆணோ, பெண்ணோ கிட்டாமல் போகும் நிலையில் தற்கொலை போன்ற முயற்சிகளில் தன்னைத் தானே அழித்துக் கொள்வது, தன்னைத் துன்புறுத்திக் கொள்ளும் விதமாக சிகரெட் நெருப்பால் கையில் சூடு வைத்துக் கொள்வது, தாடி வைத்து தண்ணியடித்து தேவதாஸாய் செயற்கைச் சோகத்தில் மூழ்கித் திளைத்து தன்னைத் தானே தொலைத்துக் கொள்வது போன்ற செயல்பாடுகளால் ஆகப் போவது ஒன்றுமில்லை. தன்னைத் தானே அழித்துக் கொள்வதை விட, காதலில் தன்னைப் புறக்கணித்தவர்களின் முன் கம்பீரமாக வாழ்ந்து காட்டுதலே ஆரோக்கியமான மனோபாவம். காதல் ‘தோல்வி’க்காக தன்னை அழித்துக் கொள்ளும் முட்டாள்களைக் கூட அரை மனதுடன் மன்னித்து விடலாம். ஆனால், நினைத்த காதலன், காதலி கிடைக்கவில்லை என்பதற்காக காதலித்தவரை அழிக்கத் துடிக்கும் முரட்டுக் காட்டுமிராண்டிகள் ஆபத்தானவர்கள். மன்னிக்கவே முடியாதவர்கள். ஆத்திரப்பட்டு சில நிமிடங்களில் நம்மை வேண்டாம் என்று கூறிவிட்டாளே என்ற ஈகோவால் உசுப்பேற்றப்பட்டு, அவர்கள் செய்யும் காரியத்தால் ஒரு குடும்பமே காலம் முழுதும் தண்டனையை அனுபவிக்கும் துன்பியல் சம்பவம் அது.
விரும்பியது கிடைக்காது என்கிறபோது, அதனை அழித்தொழிக்கும் மூர்க்கம்தான் காட்டுமிராண்டித்தனம். காதலிக்காத பெண் முகத்தில் ஆஸிட் அடிப்பது… கை நழுவிப் போன காதலியைக் கல்யாணத்துக்குப் பிறகு, பழைய காதலை வைத்து மிரட்டுவது… ஏன், அதிகபட்சமாகத் தன்னைக் காதலிக்காத பெண்ணைக் கொலை செய்கிற அளவுக்குக் கூட காதல் காட்டுமிராண்டிகள் போய்விடுகிறார்கள். எவ்வளவு ஆசிட் வீச்சுச் சம்பவங்கள். காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியைக் கத்தியால் குத்தி, பிளேடால் கிழித்துக் கொன்ற காதல் காட்டுமிராண்டிகள் எவ்வளவு பேர். செய்தித்தாள்களில் இத்தகையச் செய்திகளைப் பார்க்கும்போது, கோபத்திலும் சோகத்திலும் அடிவயிறு பதைக்கிறதே.
தங்கை விநோதினியை மறக்க முடியுமா? தமிழகத்தையே உலுக்கியச் சம்பவம். இருபத்து மூன்றே வயதான காரைக்காலைச் சேர்ந்த விநோதினி, சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பொறியியல் பட்டதாரி. 2012 ஆண்டு தீபாவளிக்கு ஊருக்கு வந்துவிட்டு, சென்னைக்குத் திரும்புவதற்காக பேருந்து நிலையம் வந்தவரை, தன் காதலை ஏற்கவில்லை என்கிற காரணத்துக்காக சுரேஷ் என்பவன் வழிமறித்து அவர் மீது, திராவகத்தை வீசினான். பார்வை இழந்து, கடுமையாக முகம், உடல் சிதைந்து போனநிலையில் 3 மாதங்கள் சென்னையில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த விநோதினி சிகிச்சைப் பலனின்றி இறந்து போனார். ஒருவனின் மனிதாபிமானமில்லாத முரட்டுத்தனத்தால் ஒரு பெண்ணின் வாழ்க்கை முடிந்ததோடு, அந்தப் பெண்ணின் பெற்றோரின் வாழ்க்கையும் இறுதிக் காலத்தில் நரகமாய் நகர்ந்து கொண்டிருக்கிறதே. இதுபோல் ஏகப்பட்ட நந்தினிகளின் குடும்பங்கள் ஒரு காட்டுமிராண்டித்தனத்தின் விளைவாக தினம் தினம் துன்பங்களை அனுபவித்து வருகிறதே.
ஒருவரை விரும்புவதும் விலகுவதும் ஒவ்வொரு தனிமனிதரின் முடிவு. அதில் தலையிட, வலியுறுத்த யாருக்கும் உரிமையில்லை. காதலை வெளிப்படுத்துவதில் தவறில்லை. வெளிப்படுத்தப்பட்ட இடத்தில் காதல் நிராகரிக்கப்பட்டால் விலகி விடுவதே நாகரீக சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவனின் நடைமுறையாக இருக்க முடியும். தான் ஆண். தான் நினைத்த பொருளை அடைய வேண்டும். தனக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால் அது யாருக்கும் கிடைக்கக் கூடாது. அழிந்து போக வேண்டும் என்கிற மனவோட்டம் எல்லாம் மனச்சிதைவின் வெளிப்பாடுகளே. இவர்களுக்குச் சிறையில் தண்டனையல்ல, மனநோய் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதே பொருத்தமாக இருக்கும்.
இத்தகைய ஈவிரக்கமற்ற செயல்களைச் செய்பவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் ஆசிட்ட்டால் காயம்பட்ட ஒருவருக்குக் குறைந்தபட்சம் 10 அறுவை சிகிச்சைகளாவது மேற்கொள்ள வேண்டியுள்ளது. சிகிச்சைக்காக லட்சக் கணக்கில் பணமும் செலவாகிறது. பணத்தை விடுங்கள். இதில் பாதிக்கப்பட்ட நபர் அனுபவிக்கும் வலிகள்… உயிருக்குயிராய் காதலிப்பதாய்தான் இந்தக் காட்டுமிராண்டிகள் உணர்ச்சி வசப்பட்டுச் சொல்கிறார்கள். உயிருக்கிணையாய் நேசித்த ஒருத்தியின் உயிரை எடுக்க எப்படிடா உங்களுக்கு மனசு வருது?
காட்டுமிராண்டிகள் பட்டியலில் ஆண்கள் மட்டுமல்ல. சிலநேரங்களில் பெண்களும் உண்டு. நம்பிக்கையும் ஏமாற்றுவதும் காதல் என்ற நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.
கண்மூடித் தனமான நம்பிக்கையும், தயவு தாட்சண்யமற்ற ஏமாற்றுத் தனமும் காதல் வயப்படும்போது, நம்பிக்கை காயம் சுமக்கிறது. ஏமாற்றுத்தனம் சந்தோஷம் கொள்கிறது. ஆயிரம் பொய்கள் சொல்லி கல்யாணம் பண்ணுவதாகச் சொல்வார்கள். காதலிலும் ஆயிரம் பொய்கள் சொல்லி கரையேறியவர்கள் உண்டு. காதல் பொய்கள் சுவாரஸ்மானவை. எதிராளி சொல்வது பொய்யென்று தெரிந்தும் அதனை ரசிப்பதுபோல் பாவனை காட்டுவது ஒரு சுகம். நாம் சொன்ன பொய்களை நம் ஆள் நம்பிவிட்டார் என்று கர்வம் கொள்வது இன்னொரு வகை சுகம். சின்னச் சின்னப் பொய்கள் காதலைச் சுவாரஸ்மாக்குகின்றன. சுவாரஸ்யப் பொய்களை காதல் உலகம் அங்கீகரித்து அதையும் காதலில் ஓர் அங்கமாகவே ஏற்றுக் கொள்கிறது.
உடலைத் தொடுவதே பிரதானமாய் நினைத்து, அதற்காகவே தயாரிக்கப்படும் திட்டமிட்ட பொய்கள்? அவை கயவாளித் தனத்தின் உச்சம் அல்லவா?
இருபது வருடங்களுக்கு முந்தைய சம்பவம் இது. என் நண்பன் குமரேசன். சரோஜா (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) என்ற பெண்ணைக் காதலித்தான். அவன் பெண்கள் விஷயத்தில் பலஹீனன். ஒருநாள் உற்சாகமாக கடைத்தெருவில் வந்தவன், ‘முடிஞ்சுட்டுதுடா…’ என்றான். சரோஜாவின் திசைக்கே அதன்பிறகு கும்பிடு போட்டான். பலமுறை குமரேசனைச் சந்திக்க அவள் முயன்று அவனால் புறக்கணிக்கப்பட்டாள். “நீ பொம்பளை… வெளியே சொன்னால் உனக்குத்தான் அவமானம்…” என்று அவளை பிளாக்மெயிலும் செய்தான். இதனால், சரோஜாவுக்கு மனதளவில் பெரும்காயம். நாட்கள் ஓடின. குமரேசன் தன்னை ஒருநாள் திருமணம் செய்து கொள்வர்ன் என்று காத்திருந்தாள் சரோஜா.
இந்த நிலையில் குமரேசனுக்கு ஒரு பணக்கார இடத்தில் பெண் பார்த்துக் கல்யாணம் செய்து வைத்தார்கள். திருமணமாகி ஒருவாரம் கூட ஆகியிருக்காது. ஒருநாள் அவன் தனது மனைவியுடன் வெளியில் கிளம்பிக் கொண்டிருந்தபோது, அவனது வீட்டருகில் சென்ற சரோஜா, தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொண்டு ஓடிச் சென்று அவனை இறுகத் தழுவிவிட்டாள். இதில் அந்த இருவருமே கருகி இறந்து விட்டனர். சரோஜாவின் பழிவாங்கல் செயல்பாடு, இன்னொரு பெண்ணின் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கி விட்டதே.
காதலில் முட்டாள்களும் காட்டுமிராண்டிகளும் தவிர்க்கப்பட வேண்டியவர்கள். அதேநேரம் ஆதரிக்கப்பட வேண்டிய, பின்பற்றப்பட வேண்டிய இன்னொரு ரகம் உண்டு. அது அறிவுஜீவி ரகம்!
தனக்குக் கிடைக்காத ஒன்றுக்காக அழிந்தொழிவது முட்டாள்தனம்.
தனக்குக் கிடைக்காத ஒன்றை அழித்தொழிப்பது காட்டுமிராண்டித்தனம்.
தனக்குக் கிடைக்காத ஒன்றுக்கு குட்பை சொல்லிவிட்டு, தன்னைத் துன்புறுத்திக் கொள்ளாத, கிடைக்காத ஒன்றைத் துன்புறுத்தாத தன் சந்தோஷத்தை எதன்பொருட்டும் இழக்காத உன்னதமான நிலை அது!
வலி கொடுப்பதா காதல்? களி கொடுப்பதன்றோ அது. காதல் என்ற பெயரில் இனி சாத்தான்களின் சாபங்களைப் பெறவேண்டாம். தேவதைகளின் வரங்களைப் பெற முயல்வோம்.
அதற்குத் தேவை – மனதில் தெளிவு! தயவுதாட்சண்யமற்ற முடிவு! ஆனால், இங்கே காதலில் அறிவு ஜீவிகள் மிகக் குறைவே! காட்டுமிராண்டிகளும் முட்டாள்களும்தான் காதல் தேசத்தை ஆக்கிரமித்துக கொண்டிருக்கிறார்கள்.
நேற்றுவரை நிலவு முகம் என்று நினைத்தவன், வர்ணித்தவன், கனவு கண்டவன் அவள் தன்னை மறுக்கும் நிலையில், நிலவில் அமிலத்தைக் தேய்க்கத் துடிப்பது ஏன்?
காரணம் – அளவுக்கதிகமான அன்பு… ஆசை… அது வளர்த்தெடுக்கும் உரிமை! உயிரற்ற பொருட்களை உரிமை கொண்டாடலாம். மனிதர்களை உரிமை கொண்டாடலாமோ? தனக்குக் கிடைக்கவில்லை என்பதற்காக அதை அழிக்க நினைக்கலாமோ?
‘எங்கிருந்தாலும் வாழ்க!’ என்பது காதல் தேசத்தின் தேசிய கீதமாகட்டும். நேற்று வைத்த அன்பு, இன்றும் நாளையும் நிலையானதாகட்டும்.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. அன்பு கூட அப்படித்தான். அன்புக்கு அணை கட்டுவோம். அதனை ஒரு கூரிய ஆயுதமாய்க் கையாள வேண்டாம். காதல் என்கிற பெயரில் யாரையும் யாரும் சார்ந்திருக்க வேண்டாம். காதல் என்பது ஒப்படைத்தல் அல்ல! பகிர்ந்து கொள்ளுதல்.
அது உரிமை கொண்டாடுதல் அல்ல. சுதந்திரமாய் விடுதல். அன்பின் அளவு குறைப்போம். அறிவு வளர்ப்போம்.
நாம் சிரிக்கப் பிறந்தவர்கள். சிரித்துக் கொண்டேயிருப்போம். காதல் என்கிற பெயரில் நம் சிரிப்பைப் பறிகொடுப்பதோ, அடுத்தவர் சிரிப்பைப் பறிக்க முயல்வதோ முட்டாள்தனம்; காட்டுமிராண்டித்தனம். இந்த வாழ்க்கை அரிதாய் அமைந்தது. இது எல்லோருக்கும் ஒரே ஒருமுறைதான். மறுவாய்ப்புக்கு வாய்ப்பே இல்லை. எனவே நமக்கு வலியில்லாமல், அடுத்தவர்களுக்கும் வலியூட்டாமல் அதனை வாழ்ந்து முடிப்போம். பல்லாயிரம் கோடி உயிரணுக்களுக்கிடையே நடந்த மராத்தான் ரேஸில் அபாரமாய் ஓடி வெற்றி வாகை சூடி நம்மை உருவாக்கியிருக்கிறது நம் உயிரணு. அதற்கு கால் கூட இல்லை. வாலாலேயே புயலாய் ஓடி கருவறை என்னும் வெற்றிக் கோட்டைத் தொட்டு நம்மை உருவாக்கிய ‘வால் பையன்’ அது. நாம் வாழும் வாழ்க்கை அதனை கௌரவிப்பதாகவே இருக்க வேண்டும்.
வெற்றிடத்தைக் காற்று நிரப்பும். நதியில் நதி இணையும். காதல் தோல்வி இன்னொரு காதலால் நிரப்பப்படட்டும். ‘காதல் போயின் சாதல்’ என்று ஏன் துவளவேண்டும்? வாழ்வோம். ‘காதல் போயின் இன்னொரு காதல்’! செத்துப்போய் அழுவாச்சி காவியமாய் இருப்பதில் அர்த்தமில்லை. ஒரு சிறுகதையாகவே இருந்தாலும் அது சந்தோஷமானதாகவே இருக்கட்டும். முதலில் நம்மைக் காதலிப்போம். நமக்கு அடுத்துதான் மற்றவர் என்ற சுயநலவாதியாக இருப்போம். விரும்பியவர் கிடைக்காத நிலை ஏற்பட்டால், குட்பை சொல்வோம், புன்னகையுடன். எந்த நிலையிலும் நம் மன அமைதியை, சந்தோஷத்தை இழக்கவேண்டாம்.
அளவாய் நேசிப்போம். நம்நிலை உணர்ந்து ஆசை கொள்வோம். நெருங்கியிருக்கும் போதே மனதளவில் சற்று விலகியும் இருப்போம். நம் முட்டாள்தனத்தையும் காட்டுமிராண்டித்தனத்தையும் கொன்று அறிவுஜீவிகளாவோம்.
அழியவும் வேண்டாம். அழிக்கவும் வேண்டாம். விட்டுக் கொடுப்போம். காதலையே விட்டுக் கொடுக்க வேண்டி வந்தாலும் விட்டுக் கொடுப்போம். காதலர் என்கிற ஸ்தானத்தை விட, நலம்விரும்பி என்கிற ஸ்தானம் உயர்வானது. அர்த்தமுள்ளது. நாம் காதலிப்பவர்களின் நலம் விரும்பியாக இருப்பது மட்டுமே உண்மையாக ஒருவரைக் காதலிப்பதற்கு அடையாளமாகும்.
ஹன்சிகா இல்லேன்னா நயன்தாரா… அவரும் இல்லேன்னா காஜல்… இதுதான் வாழ்க்கை! மனசை ஃபிரீயா வுடு மச்சி…
(-தொடரும்…)
முந்தையபகுதி – 2 | அடுத்தபகுதி – 4