மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 2 | பெ. கருணாகரன்

 மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 2 | பெ. கருணாகரன்

தாய்மை சிறகா? சிலுவையா?

ண்களை விட பெண்களுக்கு மல்டி டாஸ்க்கிங் எனப்படும் பல்பணி ஆளுமைத் திறன் அதிகம். குறிப்பாக இந்தியப் பெண்களிடம் இது இன்னும் அதிகம்.  வீட்டுக்குச் சமைத்து, துணிமணிகள் துவைத்து, கணவனுக்கு மனைவியாய், குழந்தைகளுக்குத் தாயாய், பிறந்த வீட்டின் மகளாய், புகுந்த வீட்டின் மருமகளாய் ஒரு பெண்ணின் சமூகப் பாத்திரம் பல்வேறு முகங்கள் கொண்டது.

கால நீட்சியில் பெண்களும் ஹேண்ட் பேக் மாட்டிக் கொண்டு பணிக்குச் செல்லும் சூழல் வந்தபோதும் அவர்கள் வகித்து வந்த பாத்திரங்களின் எண்ணிக்கையில் ‘ஊழியர்’ என்ற ஒரு பாத்திரம் கூடுதலானதே தவிர, அவர்களது மற்ற பாத்திரங்களின் எண்ணிக்கை குறைந்து விடவில்லை. பெண்களின் மல்டி டாஸ்க்கிங் ஆளுமை, அவர்களை இந்தப் பாத்திரத்திலும் சிறப்பாகப் பரிமளிக்கவே செய்தது. ஆனால், ஒரு குழந்தை பெற்ற பிறகுதான் அவர்கள் ஒரு குருஷேத்திரத்தைச் சந்திக்க நேரிடுகிறது.

என் உறவினர் பெண் சந்திராவுக்குத் திருமணமாகி மூன்றாண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. சந்திராவும் அவரது கணவரும்  சென்னையில் பணியாற்றிக் கொண்டிருந்தனர். இருவரின் பெற்றோரும் ஊரில். இந்நிலையில் கணவரின் பெற்றோர் தங்களுக்குப் பேரக் குழந்தை வேண்டுமென்று நச்சரிக்க, இருவரும் ஒரு மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனைக்குச் சென்றனர். இருவரையும் பரிசோதித்த மருத்துவர், இருவருக்கும் உடல் ரீதியாக எந்தக் குறைபாடும் இல்லை என்பதைக் கண்டறிந்தார். பிறகு சந்திராவிடம் அவர் தனியாகப் பேசியபோதுதான் அந்தத் திடுக்கிடும் உண்மை வெளிவந்தது.

சந்திரா கர்ப்பமாகாமல் இருக்க, கணவருக்குத் தெரியாமல்  கருத்தடை மாத்திரை பயன்படுத்தி வந்திருக்கிறார். அதற்குக் காரணம் இருந்தது. சந்திராவின் உறவுப் பெண் ஒருவர் நல்ல சம்பளத்தில் வேலையில் இருந்துள்ளார். அவருக்குத் திருமணமானபோது, பிரச்சினை இல்லை. திருமணமாகி முதல் ஆண்டிலேயே அவர் குழந்தை பெற்றுக் கொண்ட பிறகுதான் பிரச்சினை ஆரம்பித்துள்ளது. கோவையில் இருந்த அவர் குழந்தையைப் பார்த்துக் கொள்ள ஆள் இல்லாத நிலையில்,  தனது வேலையை விடவேண்டியிருந்தது. அந்த உறவுப் பெண் இப்போதும் வீட்டிலேயே இருப்பதாகவும் தான் குழந்தை பெற்றுக் கொண்டால் குழந்தைக்காக தானும் வேலையை விட்டு விடவேண்டி வரும் என்கிற அச்சத்தின் காரணமாகவே  கர்ப்பத்தடை மாத்திரைளை பயன்படுத்தியதாக அழுது கொண்டே கூறியுள்ளார் சந்திரா. அதன் பிறகு மருத்துவர் சந்திராவின் கணவரை அழைத்துப் பேசினார். இப்போது சந்திராவுக்கு எட்டு மாதம். சந்திராவின் மாமியார் சென்னையில் வந்து மருமகளுடன் தங்கியுள்ளார்.

சந்திராவைப் போலவே குழந்தை மீது ஆர்வம் இருந்தும் குழந்தை பெற்றுக் கொள்வதில் தயக்கம் உள்ள வேலைக்குச் செல்லும் பெண்கள் இன்று ஏராளம். ‘வாராது வந்த மாமணி’போல் இன்று பெண்களும் வேலைக்குச் செல்லும் ஆரோக்கியச் சூழல் நிலவி வரும் நிலையில், ஒரு பெண் குழந்தை பெற்றுக் கொள்ளும்போது, முதலில் பலியாவது அவளது வேலைதான். கூட்டுக் குடும்பம் என்றால் அதிகப் பிரச்சினை இல்லை. சிங்கிள் பேரண்ட் ஆக இருக்கும்போதுதான் பெண் தன் பணியைப் பலி கொடுத்து, ஒரு தாயாகத் தன்னை நிரூபிக்க வேண்டியிருக்கிறது. அல்லது, தாய், ஊழியர் என்கிற இரண்டு நிலைகளையும் சமன் செய்ய மன அழுத்தங்களுடன் போராடி யுத்தம் நடத்த வேண்டியிருக்கிறது.

ஒரு சர்வதேச கம்பெனியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் அந்தப் பெண். மிகப் பெரிய பதவி. இந்த மகிழ்ச்சியான செய்தியை ஏராளமான கனவுகளுடன் வீட்டுக்கு வந்து தன் தாயிடம் கூறியபோது, அவர் அலட்டிக் கொள்ளவே இல்லை. ‘‘அது அப்புறம். முதலில் வீட்டில் பால் இல்லை. வெளியில் போய் கொஞ்சம் பால் வாங்கி வா…” என்பதுதான்.

அவர் அம்மா தொடர்ந்து சொன்னார். “நீ ஒரு பெரிய நிறுவனத்தின் பிரசிடெண்ட்டாக இருக்கலாம். நீ போர்டு ஆஃப் டைரக்டராகவும் இருக்கலாம். ஆனால், இந்த வீட்டுக்குள் நுழையும்போது, நீதான் மனைவி. நீதான் மகள். நீதான் மருமகள். நீதான் அம்மா. இது எல்லாமே நீதான். இந்த இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது. அந்த மலிவான கிரீடத்தை வீட்டுக்கு வெளியிலேயே விட்டுட்டு வா. அதை வீட்டுக்குள் கொண்டு வராதே…”

இதே அவரது மகன் பதவி உயர்வுடன் வந்திருந்தால், அந்தத் தாய் இப்படிச் சொல்லியிருப்பாரா?  ஓர் ஆண் கணவன் இல்லையா? மகன் இல்லையா? அப்பா இல்லையா? மருமகன் இல்லையா? இந்த உறவு ஸ்தானங்கள் ஆண்களுக்கும் உண்டுதான். ஆனால், இந்தியாவில் பெண்களின் உறவு ஸ்தானங்கள் வலிமையான மரபணு உத்தரவுப் பாரம்பரியச் சங்கிலிகளால் விட்டு விலகிட இயலாத அளவு பிணைக்கப்பட்டுள்ளன. இந்த மரபணு உத்தரவுகள் தாங்கிய உணர்வு நிலை அவற்றைப் பெருமிதத்துடன்  ஏற்றுக் கொள்ளும் அல்லது சகித்துக் கொள்ளும் மனோநிலைக்கு அவர்களைத் தயார்ப்படுத்தி வைத்திருக்கிறது.  பெண்கள் தங்கள் அலுவலகத்தில் என்னதான் வென்று வந்தாலும் அலுவலகத்தில் என்னதான் மன அழுத்தங்களை எதிர்கொண்டு துவண்டு வந்தாலும் பெரும்பாலான வீடுகளில் பாராட்டவோ அரவணைத்து அனுசரணை காட்டவோ ஆட்கள் இல்லை என்பதே நிஜம். அதுவும் குழந்தைப் பேறுள்ள பெண்கள்தான் இன்னும் அதிகளவு மன அழுத்தங்களை எதிர்கொண்டு மனநல ஆலோசகர்களிடம் கவுன்சிலிங் செல்லும் அளவுக்கு நிலைமை போகிறது.

இந்த நிலையில், வேலைக்குச் செல்லாத மாமியார்கள், பரிவு காட்ட வேண்டிய தங்கள் மருமகளைப் பற்றிப் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் அடிக்கும் கமெண்ட்கள் சொல்லும் தரமன்று. “பொல்லாத பிள்ளையைப் பெத்துட்ட மாதிரி அலட்டிக்கிறா. நாங்க பெத்துக்காததா? இந்தக் கழுதையை யார் வேலைக்குப் போகச் சொன்னது? பணம் இல்லாம ரோட்லயா நிக்கிறோம். வேலையை விட்டு நின்னுட்டு வீட்ல கிடக்க வேண்டியதுதானே.’’  என்கிற வகையில் நீளும் மாமியாரின் அலப்பறைகள். அவர்களது விமர்சனங்களுக்குப் பின்னணியில் இருப்பது தான் சம்பாதிக்கவில்லை, மருமகள் சம்பாதிக்கிறாளே என்கிற பொறாமையும் வக்கிரமும் மட்டுமே. குழந்தை பெற்ற பெண்கள், குழந்தையைப் பிரிந்து அலுவலகம் வரும்போது, அதே நினைவில்தான் இருக்கிறார்கள். இந்த மனவாட்டத்தால், மன அழுத்தத்தால், கவனச் சிதைவு காரணமாகத் தங்கள் பணிகளைச் சரிவரச் செய்ய முடியாமல் மேலதிகாரிகளிடம் திட்டு வாங்கிக் கொண்டு, மெமோ வாங்கிக் கொண்டு தங்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றையும் இழக்க வேண்டியுள்ளது. சிலநேரங்களில் வேலையையும்.

க்ரெஷில் அல்லது வீட்டில் ஆயாவிடம் பெற்ற குழந்தை தாய்ப்பால் இன்றி பால் பவுடர் கரைசலைக் குடித்துக் கொண்டிருக்கும். ஆனால்,  அந்தத் தாயோ மார்பில் பால் கட்டிக்கொண்டு  அலுவலகத்தில் வலியில் துடித்துக் கொண்டிருப்பாள். குழந்தை குடிக்க வேண்டிய பால் அலுவலக வாஷ்பேசினில் பீய்ச்சியடித்து விரயமாக்கப்படும். இதனால், பால்கட்டு வலி வேண்டுமானால் குறையலாம். மன வலி இன்னும் கூடத் தானே செய்யும். இன்று அலுவலகம் செல்லும் பெண்கள் தஙகள் குழந்தைகளுக்கு ஆறு மாதங்களுக்குத் தொடர்ச்சியாகத் தாய்ப்பால் புகட்ட முடிவதில்லை. தமிழக அரசு மகப்பேறுக்காகஆறு மாதங்கள் வரை விடுப்பு அளிக்கிறது. குழந்தைப் பராமரிப்புக்காக வேறு சலுகைகள் இல்லை. ஆனால், மத்திய அரசு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மகப்பேறு விடுமுறையைத் தவிர்த்து, குழந்தைப் பராமரிப்புக்காக குழந்தையின் பதினெட்டு வயதுக்குள் 730 நாட்கள் வரை மூன்று பிரிவுகளாக எப்போது வேண்டுமானாலும்  விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்கிறது உச்ச நீதிமன்ற உத்தரவு. மத்திய அரசு ஊழியர்களுக்கான இந்தக் குழந்தைப் பராமரிப்பு விடுப்புச் சலுகையை மாநில அரசுகளும் அளிக்கலாமே.

சில தனியார் நிறுவனங்களில் நிலைமை மிக மோசம். மகப்பேறுக்காக பலர் 7வது மாதத்திலேயே விடுமுறை எடுத்து விடவேண்டிய சூழல். இதனால், மகப்பேறு முடிந்து மூன்று மாதங்கள் வரை மட்டுமே அலுவலகப் பணிக்குச் செல்லும் பெண்களால் குழந்தைக்கு முறையாகப் பாலூட்ட முடிகிறது. அதன் பிறகு அலுவலகம் செல்லத் தொடங்கியவுடன் காலையிலும் மாலையிலும் என்று ரேஷன் முறையில் தாய்ப்பால் பெறும் நுகர்வோர் போல் அந்தக் குழந்தை மாறிவிடுகிறது.

6 மாதம் வரை வேறு திரவ உணவுகள் இல்லாமல் தொடர்ச்சியாகக் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்ட வேண்டியது ஆரோக்கியத்துக்கு அவசியம். அப்படி ஊட்டினால்தான் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியுடன் ஒரு குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். அது இல்லாதபோது, அந்தக் குழந்தை ஆரோக்கியக் குறைவோடு வளர்வதுடன் அம்மாவின் அருகாமையின்றி சவலைப் பிள்ளையாகவும் வளர்கிறது.

ஒரு குழந்தைக்கு எவ்வளவு காலம் பால் கொடுக்க வேண்டும் என்பதை மருத்துவப் பூர்வமாக ஆராய்ந்து அந்தக் கால அளவுக்குச் சலுகையாகப் பெண்களுக்கு காலையிலும் மாலையிலும் பணிநேரத்தில் வெட்டளித்துச் சலுகை காட்டலாம்.

நார்வே, கனடா, டென்மார்க், சுவீடன் ஆகிய நாடுகளில் தாய்மையடைந்த பெண்களுக்குப் பாலுட்டும் நேரங்கள் என குறுகிய நேர விடுமுறைகள் வழங்கப்படுகின்றன. அதனை இங்கும் நடைமுறைப்படுத்தலாம்.

‘மகளிர் மட்டும்’ திரைப்படத்தின் கிளைமாக்ஸில், ஆண் நிர்வாகம் செய்து கொண்டிருந்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தின் நிர்வாகியாக ரேவதி பொறுப்பேற்பார். பொறுப்பேற்றவுடன் அவர் முதலில் புரிந்து கொள்வது, தாய்மைப் பேறுள்ள பெண்களின் பிரச்சினைகளை. உடனடியாக அலுவலகத்திலேயே க்ரெஷ் ஒன்றை அவர் அமைப்பார். தங்கள் குழந்தைகளை க்ரெஷில் விட்டுவிட்டு, பெண்கள் ‘விட்டு விடுதலையாகி’ தங்கள் முழு கவனத்தையும் பணியில் காட்டுவார்கள். குழந்தை அழுதால் அதனைப்போய் சமாதானம் செய்து விட்டு, மீண்டும் பணியில் முழு ஈடுபாடு காட்டுவார்கள். இதனால் நிறுவனத்தின் உற்பத்தி அதிகரிக்கும். லாபம் அதிகரிக்கும். இதுபோல் சென்னையில் ஒரு சில நிறுவனங்களில் அலுவலகத்துடன் இணைந்த க்ரெஷ்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், பல நிறுவனங்களில் அதற்கு அனுமதியில்லை.

சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்று. அங்கு மூன்று பெண்கள் கைக்குழந்தைகளுடன். வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள ஆள் இல்லாத நிலையில், அலுவலகத்தில் க்ரெஷ் அமைத்துக் கொள்வதற்கு அனுமதி கேட்டிருக்கிறார்கள். அவர்கள் கேட்டது இடம் மட்டுமே. பராமரிப்புச் செலவை அவர்களே பார்த்துக் கெள்வதாகக் கூறியிருக்கிறார்கள். ஆனால் அதன் நிர்வாகியோ, ‘இது அலுவலகம். குடும்பம் அல்ல. ஒன்லி பிஸினஸ். நோ சென்டிமெண்ட்ஸ்… முடியலேன்னா வேலையை விட்டுப போயிடுங்க…’ என்று கறாராகச் சொல்லி விட்டார்.

உளவியல் அறிஞரான நண்பர் ஒருவரிடம் இது குறித்துப் பேசிக் கொண்டிருந்தபோது, “ஒரு பெண் தன் குழந்தையைப் பராமரிக்க முடியாமல் வீட்டில் விட்டு விட்டு வந்தால், அவரைக் குற்ற உணர்ச்சியே கொன்று விடும். மேலும் குழந்தை நினைவிலேயே அவர் பணியாற்றும்போது, நிறுவன உற்பத்தியும் பாதிக்கப்படும். குழந்தைக்குப் பாலூட்ட முடியாத நிலையில் உடல் ரீதியான அவஸ்தைகள். அதேநேரம் அந்தக் குழந்தை அவரது கண்காணிப்பில் இருந்தால், அந்த உணர்வே அவரை உற்சாகமாக வைத்திருக்கும். குற்றவுணர்ச்சி இல்லாத ஆரோக்கியமான மனநிலையில் அவர் இருப்பார். அம்மாவின் அருகாமையில் இருக்கும் குழந்தைக்கும் அது உடல் ரீதியாகவும் மனோ ரீதியாகவும் ஆரோக்கியம். தன் குழந்தை பாதுகாப்பாக இருக்கிறது என்ற நிம்மதி உணர்விலேயே அந்தப் பெண் முழு கவனத்தையும் பணியில் காட்டுவார். இதனால் அவர் பணியாற்றும் நிறுவனத்தின் உற்பத்தி உயரும். மேலும் குழந்தையின் பொருட்டு சாயங்காலம் விரைவில் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்கிற நிலைமை இருக்காது. கூடுதல் நேரம் கூட பணியாற்றுவார்…” என்கிறார். எனவே ஓர் அலுவலகம் என்பது சிமெண்ட், செங்கல், மரச்சட்டங்களால் மட்டுமே ஆனதல்ல. அதனுள் பணியாற்றுபவர்கள் ரத்தமும் சதையும் சென்டிமெண்ட்டும் நிறைந்த மனிதர்கள். அலுவலகத்துடன் இணைந்த க்ரெஷ் அமைக்கப்படும்போது, அது அந்த நிறுவனத்துக்கும் ஆதாயம். அதில் பணியாற்றும் பெண்களுக்கும் ஆரோக்கியம். ஐந்து பெண்களுக்குமேல் பணியாற்றும் அரசு, தனியார் அலுவலகங்களில் க்ரெஷ் அமைக்க வேண்டும் என்பதைச் சட்டமியற்றிக் கட்டாயமாக்கலாம். பராமரிப்புச் செலவை நிறுவனமும் பயன்படுத்தும் பெண்களும் பகிர்ந்து கொள்ளச் செய்யலாம்.

சில வேலைகளை ஆன்லைனிலேயே முடித்து விட முடியும். அத்தகைய வேலைகளை ஆன்லைனிலேயே முடித்துவிட்டு, வீட்டில் குழந்தையுடன் இருப்பதற்கான வாய்ப்புகளை வழங்கலாம். வீட்டுக் கடமைகள், அலுவலகக் கடமைகள் இரண்டையும் பேலன்ஸ் செய்து செல்வது ஒரு பெண்ணுக்கு சவாலான டாஸ்க். அது ஓர் அலுவலகத்தில் கிளார்க் உத்தியோகம் பார்க்கும் பெண்ணாக இருந்தாலும் சரி, பெரிய நிறுவனங்களில் நிர்வாகியாக இருந்தாலும் சரி. இரண்டில் ஒன்றை இழந்துதான் ஒன்றில் நிறைவு காண முடிகிறது. ஆனால், வெளியில் அது நிறைவு போலத் தோன்றினாலும் மாறாத ரணமாகக் குற்ற உணர்ச்சியாகவே காலம் முழுதும் அது பெண்ணின் மனதில் தங்கியிருக்கும். குழந்தைக்காகத் தன் பணியை விடுக்கும் பெண்ணுக்கு, தன் கேரியர் முடக்கப்பட்டு விட்டதே. தான் தொடர்ந்து வேலைக்குச் சென்றிருந்தால், இன்று அந்தக் கம்பெனியில் பெரிய பதவியில் இருந்திருபோமே, நம்முடன் பணியாற்றியவர்கள் எல்லாம் இன்று பொருளாதாரச் சுதந்திரத்துடன் நன்றாக உள்ளனரே என்கிற எண்ணம் சாகும்வரை தோன்றிக் கொண்டே இருக்கும். அதேநேரம் கேரியரில் ஜெயித்த ஒரு பெண்ணுக்கோ, தன் குழந்தைகளை அருகிலிருந்து வளர்க்க முடியாமல் போய் விட்டதே என்கிற உறுத்தல் கடைசிவரை தொடர்ந்து கொண்டே இருக்கும்.

சென்னையில் ஒரு பத்திரிகை அலுவலகத்தில்  செய்திப் பிரிவில் பெரிய பதவியில் இருந்த பெண் அவர். அவரது குழந்தை சென்னையில் உள்ள பிரபலமான பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தது. திடீரென்று ஒருநாள் அந்தக் குழந்தை அவரிடம் வந்து, ‘அம்மா நீ நாளையிலிருந்து ஆபீஸ் போக வேண்டாம்…’ என்றது. அவர் அதிர்ச்சியுடன் ஏன் என்று விசாரித்தபோது, ‘ஆமாம். மிஸ்தான் சொன்னாங்க. அம்மா வீட்டிலிருந்து சமைத்துப் போடுவார். அப்பா ஆபீஸ்போய் சம்பாதித்து வருவார். அதனால, நீ வேலையை விட்டுட்டு, வீட்டில் இருந்து சமைத்துப் போட்டுக்கிட்டு என்னை கவனிச்சுக்குவியாம்…” என்றது. இந்தப் பதிலைக் கேட்டு அவர் திடுக்கிட்டார். என்றாலும் குழந்தை மனது மென்மையானது. அதன் முடிவுக்கு மாறாக செயல்பட்டால், அது எதிர்காலத்தில் மனோரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் எனபதை உணர்ந்து, அடுத்த மாதமே தன் பணியை ராஜினாமா செய்தார். ‘‘குழந்தை சொன்னதற்காக வேலையை விட்டுட்டேன். ஆனால், அது பற்றிய வலி இருக்கதான் செய்யுது. அதேநேரம், நாளை அந்தக் குழந்தை வளர்ந்து வரும்போது, என்னிடம் ‘நீ என்னைச் சரியா கவனிக்கலே…’ என்று குற்றம் சாட்டக் கூடாது. அப்படி ஒரு சூழல் வந்தால் வாழ்க்கையில்  அதை விடப் பெரிய துயரம் இருக்க முடியாது…” என்கிறார் அந்தப் பத்திரிகையாளர்.

நமது கல்வி முறை பெண்களை பணிக்குச் செல்லக் கூடாது என்பதையே மறைமுகமாக வலியுறுத்தி வருகிறது. அம்மாவையும் சமையல் கட்டையும் தொடர்புப்படுத்தியே அங்கு பாடங்கள் போதிக்கப்படுகின்றன. ஆசை முத்தம் தந்து, இலையில் சோறு போட்டு ஈயை தூர ஓட்டச் சொல்லி அம்மாவுக்கு உத்தரவு போடுவதற்கே தமிழ் மனப்பாடப் பகுதிகள் மூலம் மனதில் பதிவிக்கப்படுகின்றன. இது வளரும் குழந்தைகளின் மனதில் நஞ்சையே விதைக்கிறது. அம்மா சமைப்பார். அப்பா ஆபீஸ் போவார் என்பதாகவே அந்தக் குழந்தைகள் புரிந்து கொள்கின்றன. இதுவே பொதுப்புத்தியாக அவர்களின் மனங்களில் ஆழமாகப் பதிந்து விடுகிறது. இது பாடத்திட்டம் என்றல்ல, நமது மீடியாவும் இந்தப் பொதுப்புத்தியையே ஆழமாக வலியுறுத்துகின்றன. நமது சென்டிமெண்ட் கதை எழுதும்  எழுத்தாளர்களும் இந்த விஷவாதத்தை புதுப்புது விதமாகத் தங்கள் புனைகதைளில் புதுப்பித்துக் கொண்டுள்ளனர்.

தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றின் சீரியல். கதைப்படி, ஒரு பெண் அமெரிக்காவில் சிறப்புப் பயிற்சிக்குத் தேர்வாகிறார். அந்தப் பயிற்சிக்குச் சென்று வந்தால் அவரது சம்பளம் இப்போதிருப்பதை விட, பல மடங்கு அதிகரிக்கும். ஆனால், பயிற்சிக்குச் செல்லும் பெண் கர்ப்பமாக இருக்கக் கூடாது என்பது விதி. ஆனால், அந்தப் பெண் கர்ப்பமாகியிருப்பார். அந்தக் கர்ப்பத்தைக் கலைத்துவிட்டு, அவர் அமெரிக்கா செல்ல முடிவெடுக்கிறார். ஆனால், அவரது கணவரும் மாமியாரும் இந்த வீட்டுக்குத் தலைச்சன் வாரிசு. கலைக்கக் கூடாது…’ என்று ஒற்றைக் காலில் நின்று அவரது கர்ப்பத்தை வளர்த்து, கனவைக் கலைத்துத் திருப்தி அடைகிறார்கள். இது சினிமா, சீரியல் என்றல்ல, நிஜவாழ்க்கையிலும் இன்று நடைபெற்று வரும் விஷயங்களே.
தாய்மை என்பது பெண்ணுக்குச் சிறகா? சிலுவையா? இந்தியச் சமூகத்தின் குடும்பம் மற்றும் நிறுவனங்களின் அணுகுமுறை அதனைச் சிலுவை போலவே வேலைக்குச் செல்லும் பெண்களை உணர வைக்கிறது. பெண்கள் வெறும் மனைவிகளாக, அம்மாக்களாக கல்வி மறுக்கப்பட்டு வீட்டுக்குள் முடக்கப்பட்டது ஒரு காலம். ஆனால், இது வாய்ப்புகளின் பொற்காலம். அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம். அதற்கான ஆரோக்கியமான சூழலை உருவாக்க வேண்டியது அவளது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பணியாற்றும் நிறுவனங்களின் கையில்தான் உள்ளது. பெண்கள் தாய்மை உணர்வை மன அழுத்தம் இல்லாமல் சந்தோஷமாக அனுபவிக்க விடுவோம். அதனை ஒரு குற்றவுணர்ச்சியாக ஒரு தாய் சுமந்து கொண்டிருக்கும் அவலம் வேண்டாம். அப்படிதான் என்றால் அது இந்தச் சமூகத்துக்கே அவமானம்.

தன் குடும்பத்திற்காகவே வாழும் பெண்ணுக்கென்று வெளியிலும் ஒரு வாழ்க்கை உண்டு. பொருளாதாரச் சுயசார்பு, சமூக கௌரவம் ஆகியவை தொடர்பானது அது. அந்த வாழ்க்கையை அவள் வாழ பரிவுடன் உதவி செய்வோம். குழந்தை வளர்ப்பில் உறுதுணையாய் இருந்து அவளுக்குத் தோள் கொடுப்போம்.

சில்லி மசாலா

நான் நல்ல அம்மாவா?

குடும்பம், கேரியர் இரண்டையும் சமன் செய்து கொண்டு செல்வதைப் பற்றி பெப்சி நிறுவனத்தின் சிஇஓ  இந்திரா நூயி ஒரு டிஸ்கஷனில் கூறியதிலிருந்து….

“ஒரு பெண்ணால் அனைத்தையும் அடைந்து விட முடியும்னு நான் நினைக்கவில்லை.  அதைலாம் அடைஞ்சுட்டதா பாவனைதான் பண்ணிக்கிறோம். என்னுடைய கவனிப்பில், ஒவ்வொரு பெண்ணுக்கும் பயாலஜிக்கல் கிளாக்கும் கேரியர் கிளாக்கும் ஒட்டு மொத்தமாக முரண்பட்டே நிற்கிறது. இந்த நிலையில் குழந்தையும் பெற்றுக் கொண்டு கேரியரிலும் வளர வேண்டியுள்ளது. குழந்தைகள் வளரும்போது, பதின்ம பருவத்தில் தாயின் அருகாமையும் கவனிப்பும் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. இந்நிலையில் கேரியர், குழந்தைகள் இவை இரண்டுக்கும் பாதிப்பில்லாத ஒரு நடுநிலையான நிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு நடுவே உங்கள் கணவருக்கும் நீங்கள் தேவைப்படுகிறீர்கள். இவற்றையெல்லாம் சமாளித்து நீங்கள் கேரியரில் வளரும்போது, உங்கள் பெற்றோருக்கும் வயதாகி அவர்களுக்கும் உங்கள் தேவை அவசியமாகிறது. அதனால், மனஅழுத்தத்தால் துளைக்கப்படுகிறோம்.

எனக்கு இரண்டு குழந்தைகள். என் பணி காரணமாக அவர்களது பள்ளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடிவதில்லை. அப்போதெல்லாம் குற்ற உணர்ச்சியில் பல நேரங்களில் செத்துப் போனது போல் உணர்வேன். மாலையில் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வரும் குழந்தைகள் என்னிடம் ‘அம்மா… இன்னிக்கு எங்க ஸ்கூல் நிகழ்ச்சியில் எல்லா அம்மாக்களும் கலந்துக்கிட்டாங்க. நீதான் வரலை…” எனறு ஏக்கத்துடன் கேட்பார்கள்.அப்போதெல்லாம் மனம் தவிக்கும். அதன்பிறகு, நிகழ்ச்சி நடைபெறுகிற அன்று மாலை, நான் பள்ளியைத் தொடர்பு கொண்டு எந்தெந்த பெற்றோர் கலந்து கொள்ளவில்லை என்று போன் பண்ணி முன் கூட்டியே தெரிந்து கொள்வேன். மாலையில் நான் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாததைப் பற்றிக் குழந்தைகள் கேட்கும்போதே, நான் கலந்து கொள்ளாத மற்ற பெற்றோரின் பட்டியலைச் சொல்லி ‘அவர்களும்தான் கலந்து கொள்ளவில்லை’ என்று சொல்லிச் சமாளிப்பேன்.

என் குழந்தைகளிடம் என்னைப் பற்றிக் கேட்டால், என்னை அவர்கள் நல்ல அம்மா என்று சொல்வார்களா என்று உறுதியாக என்னால் சொல்ல முடியவில்லை. எங்களுக்கென்று எதுவுமில்லை. எங்களால் எல்லாவற்றையும் அடைந்து விடமுடியாது.”

(-தொடரும்…)

முந்தையபகுதி | அடுத்தபகுதி

சதீஸ்

1 Comment

  • Awesome post! An eye opening post! Hats off to Mr. P. Karunakaran.
    Keep up the great work! Keep writing, Sir!💐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...