மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 01 | பெ. கருணாகரன்

 மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 01 | பெ. கருணாகரன்

எங்கள் அலுவலகத்துக்குப் பக்கத்தில் ஒரு பெட்டிக் கடை. அந்தக் கடை எதிரில் நடைமேடையை ஒட்டியபடி ஒரு சிறிய குல்மொகர் மரம். நம் பாஷையில் சொல்வதானால் காக்காப்பூ மரம். இடர்பாடுகளுக்கு நடுவே போராடிப் போராடி பூமிக்குள் வேர் பாய்ச்சி வளர்ந்து கொண்டிருந்தது. அது வளர்வதற்கென்று யாரும் பிரத்யேக கவனம் செலுத்தவில்லை. மாநகராட்சி நட்டு வைத்தது. மரம் வைத்தவன் தண்ணீரும் ஊற்றவில்லை. என்றாலும் அது தானே முனைந்து, மழையில் நனைந்து வளர்ந்து கொண்டிருந்தது. தினமும் நானும் எனது சகா யுவகிருஷ்ணாவும் அங்கு நின்று பேசிக் கொண்டிருப்போம். அன்று யுவகிருஷ்ணா உற்சாகமாகக் கூவினார். “சார்… அதோ…” அவர் கை காட்டிய திசையில் பார்வையைச் செலுத்தினேன். என் முகத்தில் ஒரு புன்னகை. அந்த மரத்தின் உச்சிக் கிளையில் சிவப்பு நிறத்தில் ஒரு பூ. பார்த்தவுடன் மனம் நெகிழ்ந்தது.

முளைக்கத் துடிக்கும் விதைகள் பாறாங்கல்லிலும் போராடி தன் வேர்களை ஊன்றி விடுகின்றன. வளரத் துடிக்கும் ஒரு மரம் எந்தவொரு இடர்ப்பாடுகளுக்கிடையிலும் வளர்ந்து காய்த்து விடுகிறது. மரங்களுக்கு மட்டுமல்ல இந்த விதி. மனிதர்களுக்கும் பொருந்தும்.

நான்காவது படித்துக் கொண்டிருந்தபோது, ஒருநாள் நானும் நண்பன் செல்லக் கண்ணனும் தோளில் புத்தகப் பையுடன் கடைத்தெருவில் சுற்றிக் கொண்டிருந்தோம். அந்த போஸ்டர் கண்ணில் பட்டது. நின்று நீண்ட நேரம் அந்த போஸ்டரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று முடிவெடுத்துச் சொன்னேன் “டேய்… நாம மெட்ராஸ் போறோம். எம்.ஜி.ஆர். மாதிரி சினிமாவில் நடிச்சு பெரிய ஆளா ஆகறோம். மூட்டை மூட்டையா சம்பாதிக்கிறோம்…’’

“டேய்…. என்னடா சொல்றே..?” என்றான் அவன் அதிர்ச்சியுடன்.

“இப்பவே கிளம்பறோம். வா…“ என்று அவன் கையைப் பிடித்து இழுத்தேன்.

“வெளையாடுறியா? பிள்ளை பிடிக்கிறவன் புடிச்சுக்கிட்டுப் போயிடுவான்…” என்று அச்சம் காட்டினான்.

“போடா இவனே… நீ வரலேன்னா விடு. நான் போறேன்… ரயில்ல போறேன்…” என்று கூறிவிட்டுக் கிளம்பினேன். என்ன நினைத்தானோ அரை மனதுடன் அவனும் என் பின்னேயே வந்தான்.

ஆற்றைக் கடந்து மாரி ஓடையைக் கடந்து கல்லூரி வழியாக ஜங்ஷனை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

“கருணா… மறுபடியும் யோசிக்கலாம்டா…” என்றான் செல்லக் கண்ணன்.

“போடா தொடை நடுங்கி. இந்த வாத்தியார்கள்கிட்டே இனியும் அடிவாங்கிச் சாக முடியாது. நாம எம்.ஜி.ஆர். ஆகணும்னா இதை விட்டால் வேறு வழியில்லே…” என்றேன். நேற்று முட்டி போட வைத்து, கெண்டைச் சதையில் ‘அண்ண வாத்தியார்’ அடித்த அடியில் அந்த இடம் இன்னும் புடைத்தே இருந்தது.

நாங்கள் ஜங்ஷன் வந்தோம். “இனி இந்தப் பை நமக்கெதுக்கு?” என் பையையும் அவன் பையையும் அருகில் நின்றிருந்த ஒரு கூட்ஸ் வண்டியின் பெட்டிக்குள் வீசினேன். பிறகு இருவரும் பிளாட்ஃபாரத்துக்கு வந்தோம். அங்கிருந்த ஒரு பெஞ்ச்சில் அமர்ந்து ரயிலுக்குக் காத்திருந்தோம் (அப்போது சென்னைக்கு பகலில் ரயில் கிடையாது. அது எங்களுக்குத் தெரியாது). சிறிதுநேரம் ஓடியிருக்கும். ரயில்வே ஊழியர் ஒருவர் (அவர் போலீஸா அல்லது டிடிஆரா என்று சரியாக நினைவில்லை) எங்களை நோக்கி வந்தார்.

“யார் நீங்க?” என்றார்.

நான், “மெட்ராசுக்குப் போறோம்…” என்றேன்.

“அது சரி… கூட யாரும் வரலையா?” என்றார். நாங்கள் முழித்தபடி இல்லை என்று தலையாட்ட, “படிக்கிறீங்களா?” என்று கேட்டார்.

“ம்…” என்றேன்.

“அப்புறம் எதுக்கு மெட்ராசுக்கு? திருட்டு ரயிலா? வாங்க… உங்களை ஜெயில்ல போட்டால்தான் சரிப்படுவீங்க…” என்றார். இந்த வார்த்தையைக் கேட்டவுடன் அதுவரை அருகில் மவுனமாய் நின்று கொண்டிருந்த செல்லக் கண்ணன் எகிறிக் குதித்து ரயில் ட்ராக்கில் பாய்ந்து ஓடத் தொடங்கி விட்டான்.

எனக்கும் இப்போது மனசுக்குள் உதறல் எடுக்க ஆரம்பித்திருந்தது. அடுத்து அவர் என்னைப் பற்றி, என் அப்பாவைப் பற்றியெல்லாம் விசாரிக்க ஆரம்பித்தார். பிறகு நிறைய அறிவுரை சொல்லி, என் புத்தகப் பை எங்கே என்று விசாரித்து அதனை எடுத்து வரச் சொன்னார். நான் எடுத்து வந்தவுடன் ஸ்டேஷனுக்கு வெளியே அழைத்து வந்து, அங்கிருந்த குதிரை வண்டிக் காரரிடம் ஐம்பது காசு கூலி கொடுத்து என்னைப் பத்திரமாக பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விடச் சொன்னார்.

பள்ளி மாணவனுக்கு மெட்ராசுக்குத் தனியாகச் செல்வதற்கான துணிச்சலை அளித்தது எது? அது அச்சத்தால் எழுந்த துணிச்சல். பாடங்களின் மேல் எழுந்த அச்சம். அதனைப் புரிந்து கொள்ளாமல் ‘அடியாத மாடு படியாது’ என்ற ஆறறிவு ஜீவனை அஃறினை ஜீவனுடன் ஒப்பிட்டுப் பயன்படுத்தப்படும் பழமொழியை நடைமுறைப்படுத்திய ஆசிரியர்கள் மீதெழுந்த அச்சம். அதே பெரியோர்கள்தான் ‘ஆடற மாட்டை ஆடிக் கறக்கணும். பாடற மாட்டைப் பாடிக் கறக்கணும்’ என்றார்கள். இந்தப் பழமொழியைப் பின்பற்றியிருந்தால் என்னவெல்லாமோ நடந்திருக்கலாம். நான் ஒருவேளை மருத்துவன் கூட ஆகியிருக்கலாம். பொறியாளர் ஆகியிருக்கலாம். பிரம்புகளின் கீழ் வகுப்புகளை நடத்தும் சர்வாதிகார ஆசிரியர்களால் நான் ‘மக்கு மாணவன்’ என்றே  முத்திரை குத்தப்பட்டேன்.  

 ‘தாரே ஜமீன் பர்’.  என்றொரு ஹிந்திப் படம். படத்தை இயக்கி அதில் ஆசிரியர் ராம் ஷங்கர் நிகும்ப்பாக நடித்திருந்தார் அமீர்கான். கற்றல் குறைபாடுள்ள சிறுவன் ‘இஷான் அஸ்வத்’தின் உண்மைப் பிரச்சினை என்னவென்றே புரிந்து கொள்ளாத பொறியாளர் தந்தை. பாடம் சொல்லித் தரும்போது, கவனிக்கவில்லை. சரியாகப் படிக்கவில்லை என்பதற்காகவெல்லாம் கடுமையாகத் தண்டித்து, கடுஞ்சொல் பேசி வகுப்பறைக்கு வெளியே நிறுத்தி அவமானப்படுத்தும் ஆசிரியர்கள். அந்த அவமானங்களையெல்லாம் தாங்கித் தாங்கி மனம் மரத்து உணர்வுகளற்று அசைபோடும்  ஒரு மாடு போல மாறிவிடும் இஷான் வகுப்புக்குச் செல்ல பயந்து கட் அடித்துவிட்டு ஊர் சுற்றுகிறான். அவன் வகுப்புக்குச் செல்லவில்லை என்று தெரிந்து நையப்புடைக்கும் தந்தை. அவன் ‘நன்றாக’ப் படிக்க வெளியூரில் கடுமையான பயிற்சியளிக்கும் ஒரு பள்ளியில் கொண்டு சேர்க்கிறார்கள் (கிட்டதட்ட நம் நாமக்கல் பள்ளி போல).

அங்கு ஆசிரியராக வரும் அமீர்கான் இஷான் முட்டாள் மாணவனல்ல. கற்றல் குறைபாடுள்ள குழந்தை என்பதைக் கண்டறிந்து, அவனிடம் கூடுதல் அக்கறை காட்டி, அவனது தனித்துவமான ஓவியத் திறமையைக் கண்டறிந்து பள்ளி ஓவியப் போட்டியில் முதல் மாணவனாகக் கொண்டு வருவார். அதற்கு எவ்வளவு அர்ப்பணிப்புள்ள மனம் வேண்டும். நான் வாழ்க்கையில் இழந்தது அமீர்கானைப் போன்ற ஓர் ஆசிரியர் என்பதை அப்போது உணர்ந்தேன்.

எத்தனைப் பிரம்புகள் என் உடலில் ரத்த ருசி பார்த்தன? எத்தனை வசைச்சொற்கள் என்னை அவமானப்படுத்திக் கதற வைத்தன? மன உளைச்சலும் மன அழுத்தமும் கொடுத்த சம்பவங்கள் எத்தனையெத்தனை? கி.ராஜநாராயணன் ஒரு கட்டுரையில் கூறுவார் ’மழைக்காகத்தான் நான் பள்ளிக்கு ஒதுங்கினேன். அப்போது கூட நான் பாடத்தைக் கவனிக்கவில்லை. மழையைத்தான் வேடிக்கைப் பார்த்தேன்’ அதேநிலைமைதான் எனக்கும்.

வகுப்பில் ஆசிரியர்கள் நடத்தும் பாடம் எனக்குப் புரியவில்லை. அதற்குக் காரணம் பாடங்களா? நடத்தப்பட்ட விதமா? என் குறைபாடா? அறிந்திலேன். ஆனால், பாடங்களுக்கும் எனக்கும் மிகப் பெரும் இடைவெளி. எண்களைப் பார்த்தாலே தலைசுற்றியது. புரிந்து கொள்ள இயலாதவர்களையெல்லாம் பிரம்புகளால் விதவிதமாகத் துவம்சம் செய்தார்கள் ஆசிரியர்கள். இனி பள்ளிக்குச் சென்று அடிவாங்கிச் சாக முடியாது என்ற நிலையில்தான் பள்ளிக்கு மட்டம் போட்டு விட்டு ஊர் சுற்றல் தொடங்கியது. அவ்வப்போது எனக்கு கம்பெனி கொடுத்தவன்தான் செல்லக் கண்ணன். விருத்தாசலத்தின் மணிமுக்தாற்றங்கரையும் மாரி ஓடையும் சினிமாத் தியேட்டர்களும் பெரிய கோயிலின் மூன்றாம் மாடமுமாகப் பகல் பொழுதுகள் கழிந்த காலம். பாடப் புத்தகங்கள் கசந்தன. பாடமல்லாத புனைகதைகள் இனித்தன. விஞ்ஞானம் பிடிக்கவில்லை. ஆனால், விஞ்ஞானக் கதைகள் பிடித்தன. வகுப்பறை பிடிக்கவில்லை. வயல்வெளிகள் பிடித்தன. ஆசிரியர் பிடிக்கவில்லை. நூலகம் பிடித்தது.

ஆசிரியர்களால் நான் புரிந்து கொள்ளப்படாத நிலையில் தனிமையில் ஒதுங்கினேன். தனிமை இனித்தது. என்னை தனிமையில் இனங்கண்டு கொண்ட சூழல் அது. ஒரு புழு வண்ணத்துப் பூச்சியாக உருவான பரிணாமம் அது. வெளியில் அதிக நண்பர்கள் இல்லை. எனவே எனக்குள் தனிமையில் பேசிக் கொண்டும் தனிமையை ரசித்துக் கொண்டும் எனக்குள் நானே இன்னொருவனாய் வளர்ந்த காலகட்டம். நான் கவிதை எழுதுவேன். யாருக்கும் தெரியாது. கதை எழுதுவேன். அதுவும் யாருக்கும் தெரியாது. பன்னிரண்டாம் வகுப்பு வரை நான் பள்ளியில் நடந்த எந்தக் கட்டுரை, கவிதைப் போட்டியிலும் கலந்து கொண்டதில்லை. நான் பெயர் கொடுத்தாலும் ஆசிரியர்கள் ஏற்கத் தயாராயில்லை. கல்லூரிப் பேராசிரியர்கள்தான் என்னை அடையாளம் கண்டு கொண்டார்கள். அவர்கள்தான் என்னை நண்பனாக நடத்தியவர்கள்.

40 ஆண்டுகளுக்கு முன் கற்றல் குறைபாடு என்றால் என்ன என்கிற விஷயமே ஆசிரியர்களுக்குத் தெரியாத சூழல். அப்படி ஒரு குறைபாடு எனக்கு உள்ளதென்று எனக்கும் தெரியாது. நன்றாகப் படிக்காத எனக்கு ‘மக்குப் பிளாஸ்த்திரி’ என்றே பெயர் சூட்டினார்கள். மக்குப் பிளாஸ்திரிகளுக்கு தினமும் மண்டகப் படி உண்டு. ‘இது எங்க உருப்படப் போவுது?’ ‘முட்டாப் பயலே.. நீ ஒண்ணுக்கும் லாயக்கில்லே…’ போன்ற கடும் அர்ச்சனைகள் அவநம்பிக்கையையே வளர்த்தன. மன அழுத்தமும் அவமான உணர்வும் சோர்வுமாக வகுப்பறை என்பது சித்ரவதைக் கூடமாகவே இருந்தன எனக்கு.

தாங்கள் வடிவமைத்த அச்சில் ஊற்றி வார்க்கப்படும் செப்புச் சிலைகளாகவே மாணவர்கள் உருவாக்கப்பட்டார்கள். மதிப்பெண் எடுக்கும் உயிரற்ற ‘மம்மி’களாகவே மாணவர்கள் மாற்றப்பட்டனர். புரிந்து கொள்ளும் மாணவனை விடவும் மனப்பாடத் திறன் அதிகமுள்ள மாணவர்களே அந்த ஆசிரியர்களின் ‘நெஞ்சு நேர்ந்தவர்’களாக இருந்தார்கள். அவர்கள்தானே அதிக மதிப்பெண் எடுத்து ஆசிரியர்களின் ‘மானத்தை’க் காப்பாற்றுவார்கள். ஆசிரியர்களுக்குப் பிடிக்காத விஷயம் கேள்வி கேட்பது. கேள்வி கேட்டால் ‘முந்திரிக் கொட்டை… அதிகப் பிரசங்கி…’ என்று சுளீர் வார்த்தைகள் கூறி உட்கார வைத்து விடுவார்கள். அதன் பிறகு கேள்வி தோன்றுமா? தோன்றினாலும் கேட்கத் தோன்றுமா?

பணிவுடன் இருத்தல் அவர்களுக்கு மிக முக்கியம். ஒரு முறை தமிழ் வகுப்பில் ஆசிரியர் மனப்பாடத் திருக்குறள் ஒன்றைக் கேட்க, நான் எழுந்து நின்று கூற ஆரம்பித்தவுடன் சுரீர் என்று வேப்பங்கழியால் கையில் அடித்தார். “முதல்ல கையைக் கட்டுடா… பெரிய புடுங்கியாட்டம்…” என்று திட்டித் தீர்த்தார். நான் என்ன தவறு செய்தேன்? அன்றிலிருந்து அவர் வகுப்புக்குச் செல்வதில்லை என்று முடிவு செய்து கொண்டேன். இப்படியாக நான் வகுப்புக்குச் செல்ல நினைத்தாலும் வகுப்பை நேசிக்க முடியாதபடியான சூழலையே ஆசிரியர்கள் உருவாக்கினார்கள்.  

ஐந்தாம் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்புக்குச் சென்றபோது, யார் எனக்கு வகுப்பு ஆசிரியராக வரக்கூடாது என்று வேண்டினேனோ அவரே வகுப்பாசிரியராக வந்தார். அவர் கண்ணப்ப பத்தர். காது கிள்ளல் எக்ஸ்பர்ட். பல மாணவர்களின் காதுகளில் அவர் விரல் நகம்பட்டு ரத்தம் வந்திருக்கிறது. இந்த ஆண்டு ஒரு வழி ஆகப் போவது உறுதி என்ற கலக்கத்துடன் முதல்நாள் வகுப்புக்குச் சென்றேன். அன்றே அவர் மாணவர்களின் ஆங்கில அறிவை ‘உரசி’ப் பார்த்தார். பலர் அவரது உரைகல்லில் சொக்கத் தங்கங்களாக ஜொலித்தார்கள். நான் அவரது மதிப்பீட்டில் வெறும் பித்தளை. “எப்படியோ ஆறாம் வகுப்பு வந்துட்டே. ஆனா, ஒரு இங்கிலீஷ் வார்த்தை கூட தெரியலே. கீழ் வகுப்பில் என்னத்தைப் படிச்சே? யாரும் சொல்லித் தரலையா? என்கிட்டே நீ படிச்சிருந்தால் தோலை உறிச்சிருப்பேன். இனிமே உன் ஜம்பம் என்கிட்டே பலிக்காது….” என்று நாக்கைத் துருத்தி மிரட்டல் விடுத்தவர், “நீ ஆறாம் வகுப்பு இங்கிலீஷ் படிக்க லாயக்கில்லே. நாளைலேர்ந்து மூன்றாம் வகுப்பு இங்கிலீஷ் புக் கொண்டு  வந்து அதனைப் படி…” என்றார். ஆண்டவா… மறுபடியும் முதல்லேர்ந்தா?

இந்த நிலையில் அதிர்ஷ்டம் என் பக்கம் இருந்தது. கண்ணப்பப் பத்தரின் வகுப்பில் மாணவர் எண்ணிக்கை அதிகமிருந்ததால் பத்துப் பேரை வேறு பிரிவுக்கு மாற்றப் போவதாகவும் விருப்பப்பட்டவர்கள் கை தூக்கலாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டோம். முதலில் உயர்ந்தது என் கைதான். ஒரு வழியாக என் காதுகளைக் காப்பாற்றிக் கொண்டேன்.

மற்ற ‘மக்குப் பிளாஸ்திரி’களுக்கு மத்தளம் போல இரண்டு பக்கமும் அடி. ஆசிரியர்கள் ஒரு பக்கம் என்றால் பெற்றோர் இன்னொரு பக்கம். இதில் எனக்கு ஒரே ஆறுதல் என் பெற்றோர். என் படிப்பைப் பற்றி அவர்கள் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. என் வீட்டுக்கு அருகிலிருந்த ஒரு பையனின் கையெழுத்து கிறுக்கலாக இருந்ததென்று, அவனது தந்தை  அவன் விரலைக் கோபத்தில் திருக ஆள்காட்டி விரல் ஒடித்துக் கொண்டது. அவன் மூன்று மாதங்கள் விரலுக்குக் கட்டுப் போட்டுக் கொண்டான். ஆனாலும், கட்டு போட்டாலும் சுட்டுப் போட்டாலும் அவன் கையெழுத்து கடைசி வரை அப்படியேதான் இருந்தது. அப்படிப்பட்ட கொடுமைகள் ஏதும் என் வீட்டில் இல்லை. நான் பத்தாம் வகுப்பில் ஃபெயிலான அன்று, என் சித்தப்பா என்னை பம்பாய் மெயில் என்ற சினிமாவுக்கு அழைத்துச் சென்றார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

படிப்பது, நிறைய மதிப்பெண் எடுப்பது இரண்டை மட்டுமே ஆசிரியர்கள் மாணவ லட்சணமாகக் கருதியிருந்தார்கள். அந்த நாட்களில் மாணவர்களின் கற்றல் குறைபாடுகளைப் புரிந்து கொள்ளாத அறியாமை காரணமாக, கற்பித்தலில் பெருங்குறைபாடு நிலவியதாக இப்போது உணர்கிறேன். ஆசிரியர்கள் தங்களை ஒரு ஜமீன்தாராகவே நினைத்துக் கொண்டு உலா வந்தார்கள். அவர்களின் மனோபாவம் அது. அந்த மனோபாவம் இன்று ஓரளவு மாறியிருப்பதாகத் தோன்றுகிறது. இன்றைய நிலையில் தமிழகத்தில்  ஆறாம் வகுப்பு வரையிலான மாணவர்களில் இருபது சதவிகிதம் பேர் கற்றல் குறைபாடுடையவராக கணக்கிடுகிறது ஒரு புள்ளி விவரம். இதனைக் களைய அவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு மாற்றுமுறைக் கல்வி சொல்லித்தர அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலம் அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது. தமிழக அளவில் 2000 ஆசிரியர்களுக்கு இத்தகைய குழந்தைகளுக்குப் பயிற்றுவிப்பதற்காக சிறப்புக் கல்வி முறையில் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.

கற்றல் குறைபாடு ஒரு குற்றமல்ல. இழிவுமல்ல. குறிப்பாக அது மனநோயும் அல்ல. போதுமான பயிற்சியும் சிறப்பு கவனமும் செலுத்தினால் சரியாகும் பிரச்சினைதான் அது. இத்தகைய மாணவர்களுக்கு அரசுச் சான்றிதழ் அளிக்கிறது. சான்றிதழ் பெற்றவர்களுக்குப் பத்தாம் வகுப்புப் பொதுத் தோவில் தேர்வெழுத ஒரு மணிநேரம் கூடுதலாக வழங்கப்படுகிறது. கணிதக் குறைபாடு உள்ளவர்கள் தேர்வில் கால்குலேட்டர் பயன்படுத்தலாம். இவையெல்லாமே காலமும் மனோபாவங்களும் மாறியிருப்பதன் அடையாளமே. யார் வீட்டிலும் ஓர் இஷான் இருக்கலாம். அவர்களை மதிப்பெண் எடுக்கச் சொல்லி மன அழுத்தம கொடுக்காமல், நாமக்கல் பள்ளிகளில் சேர்த்து சதைக்கோழியாக்குவதற்காக வதைப்படுத்தாமல் பிரச்சினையைப் புரிந்து கொள்ள வேண்டியது பெற்றோரின் முதல் கடமை.

படிக்கவில்லை என்றால் அவனது பிரச்சினை என்னவென்று பாருங்கள். கற்றல் குறைபாடு உள்ளவர்களுக்குக் கற்பனை வளம் அதிகம். மாற்றி யோசிக்கும் ஆற்றல் அதிகம். அவர்கள் மதிப்பெண்கள் வேண்டுமானால் குறைவாக எடுக்கலாம். ஆனால், வாழ்க்கையில் அந்தக் கண்மணிகள் அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு இணையாகவும் சில நேரங்களில் அவர்களைவிட அதிக உயரங்களையும் எட்டுவார்கள். அதனால் ஏட்டுக் கல்வியை மட்டுமே அவர்களை எடை போடும் தராசுத் தட்டாகப் பார்க்காதீர்கள். அவர்களிடம் உள்ள தனித்திறன் என்ன என்பதை அவர்களது நடவடிக்கைகளை கவனித்துக் கண்டுபிடித்து அதில் ஊக்கப்படுத்துங்கள்.

கட்டுரையில் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்த குல்மொகர் போன்ற ஒன்றிரண்டு மரங்கள் எந்த ஓர் உதவியுமின்றி சுயம்புவாக வளர்ந்து விடலாம்தான். ஆனால், அலைக்கழிப்பு, அவமானம், மனஅழுத்தம் போன்ற புயல்களில் எத்தனை குல்மொகர்கள் கன்றிலேயே அழிந்து விடுகின்றன.

இப்போதைய தேவை, பெற்றோர் ஆசிரியர்களுக்கு கற்றல் குறைபாடு பற்றிய விழிப்புணர்வே. மாணவர்களுக்குத் தேவை பரிவும், அக்கறையும் அரவணைப்புமே.

 


‘புத்திசாலிப் புள்ள…’

பள்ளி நாட்களில் ஒரு தமிழாசிரியர். அழகாகப் பாடம் நடத்துவார். என்னைப் போன்றவர்களுக்கு அவர்கள் எப்படி நடத்தினால்தான் என்ன? மண்டையில் ஏறினால் தானே?

அவர் தவறு செய்யும் மாணவர்களைத் தண்டிக்கும் விதமே வித்தியாசமானது. மாணவனைக் கை நீட்டச் சொல்லி,

‘தடித்தவோர் மகனைத் தந்தையீண் டடித்தால்…’

என்ற வள்ளலாரின் திருவருட்பா செய்யுளைப் பாடிக் கொண்டே ‘அம்மையப்பா இனி ஆற்றேன்’ எனறு பாடல் முடியும்போது, கையில் உள்ள ஸ்கேலால் சுளீர் என்று உள்ளங்கையில் இழுப்பார். வலியில் உயிர் போய்விடும்.

நாமெல்லாம் செத்து செத்து ஆடும் கெத்துப் பிள்ளைகள் இல்லையா? அவர் அடியைச் சமாளிக்க ஒரு டெக்னிக் உண்டு. அவர் ஓங்கி அடிக்கும்போது, கையை லைட்டாக கீழ் நோக்கி இழுக்க வேண்டும். இது அறிவியல் இயங்கு விதியின்படி, ஒரே திசையில் பயணிக்கும் இரண்டு பொருட்கள் மோதிக் கொள்ளும்போது, சேதாரம் குறைவாக இருக்கும் என்பதன் கீழ் வருகிறது. அதனால் வலி குறைவாகவே இருக்கும்.

அப்படிதான் ஒருநாள் தண்டிக்கும்போது, பாடிக் கொண்டே ஸ்கேலை அவர் விசிறியபோது, கையைப் பின்னுக்கு இழுத்தேன். கொஞ்சம் அதிகப்படியாய் இழுத்ததால் ஸ்கேல் கையில் படாமல் வெற்றுக் காற்றில் சுழன்றது. அவர் சிரித்துவிட்டு, ‘புத்திசாலிப் புள்ளையா இருக்கியே. மறுபடியும் கையை நீட்டு ராசா…’ என்றார். நானும் அலட்சியமாக நீட்டினேன்.

இந்த முறை அவர் ‘அம்மையப்பா…’ என்று முடிக்கும்போது, கையை லேசாகப் பின்னுக்கு இழுத்தேன். ஆனால், அவரோ, எதிர்பாராத விதமாக மேலிருந்து ஸ்கேலைக் கீழுக்குக் கொண்டு சென்று, மீண்டும் மேல் நோக்கி சர்ரென்று நெட்டுக்குத்தாக இழுத்தார். பின்பக்க முட்டியில் ஸ்கேல் செங்குத்தாக நங்கென்று அடிக்க, துடித்து விட்டேன்.

இயங்கியல் விதியின்படி எதிர் எதிர் திசையில் பயணிக்கும் பொருட்கள் மோதிக் கொள்ளும்போது, சேதாரம் அதிகமாயிருக்கும் என்பதை அப்போது புரிந்து கொண்டேன்.

நாங்கள்லாம் தமிழ் வகுப்பில் அறிவியல் படிச்சோம். அறிவியல் வகுப்பில் வரலாறு படைச்சோம். இதைலாம் புரிஞ்சிக்காம எங்களைப்போய் படிக்காத பசங்கன்னு வாத்தியார்கள் சொல்லிக்கிட்டுத் திரிந்தார்கள்.

(தொடரும்…)

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...