பயணக்கட்டுரை.by அலெக்சாண்டர்
பகுதி -1
மனங்கவர்ந்த தாய்லாந்து (பேங்க்காக் மற்றும் பட்டாயா)
பயணக்கட்டுரை.by அலெக்சாண்டர்
பகுதி -1
பேங்க்காக்கிலிருந்து பட்டாயா சுமார் 150 கிலோமீட்டர் தூரம் உடையது.
இரண்டு மணி நேர சாலை பயணம் என எங்களுடைய பயண குறிப்பில் குறிப்பிட்டிருந்தது.
ஆனால் வழியில் மழை மேகங்கள் சூழ்ந்து அவ்வப்போது மழை பெய்ததால் இரண்டரை மணி நேரம் பயணிக்க வேண்டி இருந்தது.

இருபுறமும் மலைகளுக்குடையே அமைக்கப்பட்ட சாலையில் அந்த மழை மேகங்கள் சூழ்ந்த காட்சி மிகவும் ரம்யமாக இருந்ததால் அதை படம் எடுத்துக் கொண்டேன். (இயற்கையை அதிகமாய் நேசிப்பவன் நான்)
பட்டாயாவில் நாங்கள் தங்குகிற நான்கு நட்சத்திர ஹோட்டலாகிய Mind Resort ஹோட்டல் வந்து சேர்ந்தோம்.
செக் இன் செய்து விட்டு தங்கைக்கும் அவரது கணவருக்கும் ஒதுக்கப்பட்ட அறைக்கும் எனக்கு தனியாக ஒதுக்கப்பட்ட அறைக்கும் சென்று எங்களை ரெப்ரெஷ் செய்து கொண்டு மீண்டும் அதே ஹோட்டலில் சுவையான சைவம் மற்றும் அசைவம் அடங்கிய மதிய உணவை உட்கொண்டோம்.
பின்னர் அறைகளுக்கு திரும்பி சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டோம்.
நாங்கள் இருந்தது நான்காவது தளத்தில்.
அறையின் பின்புறத்தில் உள்ள பால்கனி கதவை திறந்தால் அங்கே நாற்காலிகளும் மேஜையும் போடப்பட்டிருந்தது. அங்கிருந்து பார்த்தால் கீழே மூன்றாம் தளத்தில் நீச்சல் குளம் மிகவும் அழகாக தெரிந்தது.
அதில் சிறப்பு என்னவென்றால் அந்த மூன்றாம் தளத்தில் உள்ளவர்கள் பின்பக்க கதவை திறந்தால் அந்த நீச்சல் குளத்தின் பகுதி இணைப்பாக அவரவர் கதவுக்கு நேராக கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் அந்தக் கதவை திறந்து கொண்டு படியில் தண்ணீரில் இறங்கினால் நீந்திக் கொண்டே நீச்சல் குளத்தின் மையப்பகுதிக்கு போய்விடலாம்.
நமக்கு மூன்றாம் தளத்தில் அறை ஒதுக்கப்பட்டு இருந்தால் நன்றாக இருக்குமே என நினைத்துக் கொண்டோம். பிறகு தான் அந்த அறைகளுக்கான வாடகை மிகவும் அதிகம் எனத் தெரிய வந்தது.
எங்களை சுற்றுலா அழைத்துச் சென்ற நிறுவனம் அவ்வளவு வாடகை கொடுத்து அந்த அறைகளை ஏற்பாடு செய்ய முடியாது என்பதால் எங்களுக்கு அதற்கு மேல் தளத்தில் அறை ஒதுக்கப்பட்டிருக்கிறது.

சீயாம் என்ற பழைய பெயரைக் கொண்ட தாய்லாந்து மியான்மர் (பர்மா)லாவோஸ் வியட்நாம் கம்போடியா மலேஷியா ஆகிய நாடுகளால் சூழப்பட்ட ஒரு நாடு ஆகும்.
தாய்லாந்தின் தட்பவெப்ப நிலை இந்திய தட்பவெப்ப நிலைக்கு ஒத்து தான் இருக்கிறது.
அந்த மக்கள் மெஜாரிட்டி (90 சதவிகிதம்) தேரவாத புத்த மதத்தை சார்ந்தவர்கள் தான். 2500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றிய புத்தம் மதம் அங்கே தழைத்தோங்கி வளர்ந்திருக்கிறது.
இது பௌத்த சமயத்தின் பாரம்பரிய, மூத்த பிரிவுகளில் ஒன்றாகும். அவர்கள் தாய்லாந்து மொழியில் மட்டுமே பேசுகிறார்கள்.
ஆங்கில மொழி அவர்களுக்கு தெரியவில்லை.
எனவே வரும் சுற்றுலா பயணிகளிடம் ஏதாவது தெரிவிக்க வேண்டுமென்றால் தங்களுடைய கைபேசியை எடுத்து கூகுள் ட்ரான்ஸ்லேட்டில் அவர்கள் தாய்லாந்து மொழியில் பேசி அதை ஆங்கிலத்தில் ட்ரான்ஸ்லேட் செய்து அந்த மொபைலை காண்பிக்கிறார்கள்.
நாம் அந்த ஆங்கில வார்த்தைகளை படித்து அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
நாமும் அதே பாணியில் ஆங்கிலத்தில் குரல் பதிவு செய்தால் தாய்லாந்து மொழியில் வருவதை அவர்கள் படித்து புரிந்து கொள்கிறார்கள்.
அங்கே google translate மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
ஒரு கடைக்கு சென்று தண்ணீர் பாட்டில் வாங்கினோம். அந்த கடையின் பெண்மணி தன்னுடைய கால்குலேட்டரில் அந்த தண்ணீர் பாட்டில் விலையை டைப் செய்து அதை நமக்கு காண்பிக்கிறார். அதன்படி நாங்களும் பணத்தை கொடுத்து விட்டு வந்தோம்.
வெளியில் கடைகளுக்கு சென்று பர்ச்சேஸ் செய்யும் போது கடைக்காரர்கள் சுற்றுலா பயணிகளிடம் சற்று கடுமையாகவே நடந்து கொள்வதாக தெரிகிறது.
சுற்றுலாவை நம்பி இருக்கிற ஒரு நாட்டின் வியாபாரிகள் இப்படி நடந்து கொள்வது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.
ஒரு வேளை இந்தியர்களிடம் மட்டும் இப்படி நடந்து கொள்கிறார்களா என்பது தெரியவில்லை.
இத்தனைக்கும் ஆண்டுக்கு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் தாய்லாந்துக்கு சுற்றுலா செல்கிறார்களாம்.
நமது நாட்டைப் போல பெரிதாக எந்த வளமும் தாய்லாந்து நாட்டில் இருப்பதாக தெரியவில்லை.
ஆனால் நாம் ஒரு தாய் பாட் பெறுவதற்கு இரண்டு ரூபாய் எழுபது காசுகள் கொடுக்க வேண்டும்.
நான் தாய்லாந்தில் செலவு செய்வதற்காக 25,000 தாய் பாட் வாங்கிச் சென்றேன். அதற்காக நான் கொடுத்த தொகை ரூபாய் 67 ஆயிரத்து 500 ஆகும். தங்கையும் அவரது கணவரும் இணைந்து 25000 தாய் பாட் கொண்டு வந்தார்கள்.
எந்த வகையில் நம் நாட்டை விட தாய்லாந்து உயர்ந்துள்ளது என்பதும் சுற்றுலாவை நம்பி இருக்கக்கூடிய ஒரு நாடு எப்படி பொருளாதாரத்தில் நம்மை விட உயர்ந்திருக்கிறது என்பதும் தாய்லாந்தின் பண மதிப்பு நமது ரூபாயை விட அதிகமாக இருப்பது என்பதும் புரியவில்லை.
இந்த நினைவுகளின் இடையில் சரியாக 5:00 மணிக்கு எங்களை அழைத்துச் செல்லும் ஓட்டுநர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு லாபிக்கு வருமாறு அழைத்தார்.
எங்களை வாகனத்தில் அழைத்துக் கொண்டு பட்டாயா நகரின் மிகப்பெரிய Terminal 21 மாலில் எங்களை இறக்கிவிட்டு ‘ஒன்றரை மணி நேரம் ஏதாவது பர்ச்சேஸ் செய்ய வேண்டும் என்றால் செய்து கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டு அவர் காத்திருந்தார்.
இந்த Terminal 21 ஒரு பன்னாட்டு பொருட்கள் கிடைக்கும் ஒரு மிகப்பெரிய வணிக வளாகம்.
வணிக வளாகத்தின் வெளியே ஒரு விமானம் நிலை நிறுத்தப் பட்டுள்ளது. அதள் எதிரே நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.
வளாகத்தில் ஒவ்வொரு தளத்திலும் ஒரு நாட்டின் ஒரு முக்கிய நகரத்தின் பெயர் குறிக்கப்பட்டு விமான நிலையத்தில் உள்ளது போல் Arrival என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. அந்த தளத்தில் அந்த நாட்டின் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

நான் பாரிஸ், லண்டன், டோக்கியோ, இத்தாலி, சான் பிரான்சிஸ்கோ அரைவல் என்று குறிக்கப்பட்ட தளங்களில் இருக்கிற இடத்தில் நின்று படம் எடுத்துக் கொண்டேன்.
அதன் பின்பு நடந்த சுவாரஸ்யமான நிகழ்வை அடுத்த பகுதியில் காண்போம்.
நன்றி வணக்கம்.


- அலெக்சாண்டர்

