மனங்கவர்ந்த தாய்லாந்து பயண கட்டுரை (பாங்க்காக் மற்றும் பட்டாயா)
பகுதி – 4
இரண்டாம் நாள் மாலை எங்களுக்கு free time.
ஹோட்டல் அமைத்திருந்த இடம் ஷாப்பிங் ஏரியா போல் தான் இருந்தது. பல்வேறு விதமான கடைகளும் இருந்தன. எங்கள் ஓட்டலுக்கு எதிரிலேயே ஒரு பர்மிய உணவகம் இருந்தது.
என் மைத்துனருக்கு அந்த உணவின் மீது மிகுந்த நாட்டம் ஏற்பட்டது.
சரி இரவு உணவை அங்கே உட்கொள்ளலாம் என்று முடிவு எடுத்துக் கொண்டு மற்ற கடைகளுக்கு சென்றோம்.
அப்படியே நடந்து ஒரு ரவுண்டு வந்தோம்.
வழியில் நம்ம ஊர் தள்ளுவண்டி போல் வைத்து கண்ணாடி பெட்டிக்குள் பல்வேறு விதமான வித்தியாசமான பழங்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்கள்.
பழங்களின் பெயர் தெரியாததால் நாங்கள் சில பழங்களை சுட்டி காண்பித்து அதை வாங்கி சாப்பிட்டோம். மிகவும் சுவையாகவும் இனிப்பாகவும் இருந்தது.
நடந்து போகும் வழியில் எல்லாம் மசாஜ் பார்லர்கள். மசாஜ் கட்டண விவரங்கள் அடங்கிய விலைப் பட்டியலும் வெளியே வைக்கப்பட்டிருந்தது. பார்லர்களுக்கு முன்பு இளம் பெண்கள் முதல் முதியவர்கள் வரை அமர வைக்கப்பட்டு போகிற வருகிறவர்களை எல்லாம் ஏதோ ஒரு ராகத்தோடு கூவி அழைக்கிறார்கள்.
ஏதோ ஒன்று இரண்டு ஆண்களும் பெண்களும் அந்த மசாஜ் பார்லருக்குள் செல்கிறார்கள். அந்த பெண் பிள்ளைகளை பார்க்கும் பொழுது உண்மையிலேயே உள்ளம் மிகவும் வருத்தம் அடைந்தது. பாவம் வருமானத்திற்காக இப்படி சாலையில் செல்பவர்கள் எல்லாம் கூவி கூவி மசாஜ் செய்ய அழைக்கிற ஒரு நிலைமை இவர்களுக்கு என்று அவர்கள் மீது பரிதாபம் தான் ஏற்பட்டது.
வரிசையாக இத்தனை பாரலர்கள் இருந்தால் எப்படி அவர்களுக்கு தினசரி பிழைப்பு நடக்கும் என்று தெரியவில்லை.
அருகில் ஒரு மினி சூப்பர் மார்க்கெட் இருந்தது.
அந்த சூப்பர் மார்க்கெட்டின் வெளிச் சுவற்றில் டீ காபி இதர கிடைக்கும் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.
என் மைத்துனர் “மச்சான் டீ குடிக்கலாமே “என்று என்னிடத்தில் சொன்னார்.’சரி’ என்று அந்த சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து’ டீ வேண்டும்’ என்று கேட்டதற்கு அங்கு இருக்கிற விற்பனை பெண்கள்’டீ எல்லாம் இங்கே கிடையாது’ என்று ஆங்கிலத்தில் சொன்னார்கள்.
என் மைத்துனர் விடுவாரா ‘வெளியே சுவரில் டீ காபி கிடைக்கும் என எழுதப்பட்டிருக்கிறதே ‘என்று சொன்னார்.
ஆனால் அந்த விற்பனை பிள்ளைகள் ‘அது மிகப் பழைய போர்டு.
இப்போது டீ காபி எல்லாம் இங்கே விற்பனை செய்யப்படுவதில்லை.’ என்று தெரிவித்தார்கள்.
சரி வேறு கடைக்கு போய் குடிக்கலாம் என்று வெளியே வந்தோம்.
பின்னாலே அந்த விற்பனை பிள்ளைகளில் ஒருவர் ஓடிவந்து ‘சார் உங்களை உள்ளே அழைக்கிறார்கள்’ என்று சொன்னார்.
டீ தான் இல்லை என்று சொல்லிவிட்டார்கள் பிறகு எதற்காக மீண்டும் உள்ளே அழைக்கிறார்கள் என்று தயக்கத்தோடு உள்ளே சென்றோம்.
அங்கே ஒரு பஞ்சாபி நின்று கொண்டிருந்தார். அவர் எங்களை பார்த்து ‘நீங்கள் இந்தியாவில் இருந்து வருகிறீர்களா’ என்று கேட்டார்.
‘ஆமாம் தென்னிந்தியாவின் சென்னை நகரில் இருந்து வருகிறோம்’ என்று கூறினோம்.
‘சரி உள்ளே வாருங்கள்’ என்று உள்ளே அழைத்துச் சென்று கடைக்கு பின்புறத்தில் கடையை ஒட்டி இருக்கிற ஒரு மிகப்பெரிய அறையில் உள்ள சோபாவில் எங்களை அமரச் செய்தார்.
பின்னர் அவர் குரல் கொடுக்கவே அங்கே ஒரு பெண்மணி வந்தார். அவரிடம்’ இவர்களுக்கு டீ போட்டு எடுத்துக் கொண்டு வா’ என்று சொன்னார். எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.
அதன் பிறகு தான் அவர் சொன்னார் என் மகன் நீங்கள் வந்து விசாரித்ததை சிசிடிவி யில் பார்த்துவிட்டு ‘அவர்களை அழைத்து டீ போட்டுக் கொடுங்கள்’ என்று சொன்னார் என்று கூறினார்.
அந்த பெண்மணி பர்மா தேசத்தை சேர்ந்தவர் என்றும் 10 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு பணியாற்ற வந்தவர் என்றும் கூறினார். பிறகு நன்றாக பழக்கப்பட்டவர் போல் சிறிது நேரம் பேசினார்.
எனக்கு சற்று பயம்தான். முன்பின் அறியாத இவர் போட்டுக் கொடுக்கும் டீயை எப்படி நம்பி குடிப்பது என்று.
ஆனால் ஒரு இந்தியர் என பாசமாக அவர் அழைத்து டீ போட்டுக் கொடுப்பதால் அவரை நம்பி குடிக்கலாம் என்று மனதில் முடிவெடுத்துக் கொண்டேன்.
அப்போது மீண்டும் அவரது மகன் வீடியோ காலில் வந்து அவரிடம் பேசினார். அவர் பேசிய பிறகு அவருடைய அலைபேசியை என்னிடம் கொடுத்தார்.
வீடியோ காலில் இருந்து அவரது மகனும் மிகவும் அன்போடு என்னோடு பேசினார்.
அவர்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தாய்லாந்து வந்து வியாபாரம் செய்து அங்கேயே செட்டில் ஆகி விட்டார்களாம்.
அதற்குள் டீ தயாரிக்கப்பட்டு எங்களுக்கு கொண்டு வந்து அந்த பெண்மணி கொடுத்தார்.
மிக அருமையான ஒரு டீ.
சக்தி சார் குறிப்பிட்ட நீலோபர் டீயைப்போல் சுவையாக இருந்தது.
சுவையான அந்த டீயை குடித்த பின்பு நன்றி தெரிவித்து விட்டு அவரிடம் இருந்து விடை பெற்றுக்கொண்டு வெளியே வந்தோம்.
பிறகு அங்கு இருந்து டுக் டுக் வாகனம் மூலம் பட்டாயா நகரின் கடற்கரைக்கு சென்றோம்.
மோட்டார் சைக்கிளுடன் இணைக்கப்பட்டுள்ள இருக்கைகளும் மேற்கூரையும் உள்ள வாகனம் தான் டுக் டுக்.

அங்குதான் தாய்லாந்துக்கு (Black pearl) வேறொரு முகம் உண்டு என்று அறிந்தோம்.
எனவே சிறிது நேரத்திலேயே கடற்கரை பகுதியிலிருந்து புறப்பட்டு மீண்டும் டுக் டுக் மூலம் பர்மிய உணவகத்திற்கு வந்தோம்.
உணவகத்தில் ஏறக்குறைய அனைத்து டேபிள்களும் நிரம்பி இருந்தது.
ஒரு மூலையில் மட்டும் ஒரு டேபிள் காலியாக இருந்தது.
நாங்கள் சென்று அதில் அமர்ந்து பர்மிய உணவுகளான நூடுல்ஸ் மற்றும் அத்தோ மொய்ங்கா உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டோம்.
எல்லாம் நல்ல சுவையுடன் தான் இருந்தது.
பின்னர் இரவு உணவை முடித்துக்கொண்டு மீண்டும் ஹோட்டலுக்கு திரும்பினோம்.
அப்போது தான் பார்க்கிறேன் எனது மற்றொரு போன் காணவில்ல.
முக்கிய வங்கி கணக்குகள் மற்ற முக்கிய விவரங்களை எல்லாம் எனது ஐபோனில் வைத்திருப்பேன்.
போட்டோ எடுப்பது போன்ற இதர காரணங்களுக்காக ஆண்ட்ராய்டு போன் ஒன்றை இரண்டாவது போனாக வைத்திருப்பேன்.
கடந்த பிப்ரவரி மாதம் தான் எனது பழைய ரெட்மி நோட் 10 ப்ரோ போனை உறவினர் ஒருவருக்கு கொடுத்துவிட்டு புதிதாக மோட்டோ ஜி 85 என்று ஃபோனை ரூபாய் 18000 கொடுத்து வாங்கினேன்.
அந்த போன் தான் காணாமல் போய்விட்டது.
எப்படி காணாமல் போயிருக்கும் என்று ஒரே குழப்பம்.
அப்போதுதான் கடற்கரையில் ஆடைகளை கழற்றி வைத்த போது அந்த ஆடைகளுக்குள் வைத்து தங்கையை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு தான் நானும் எனது மைத்துனரும் கடலில் குளிக்க சென்றது
நினைவுக்கு வந்தது.
கடலில் குளித்துவிட்டு வந்த பின்பு அவற்றை எல்லாம் கையில் அப்படியே எடுத்துக் கொண்டுதான் நல்ல தண்ணீரில் குளிக்கிற குளியலறை இருக்கும் இடத்திற்கு சென்றோம். அங்கு ஓரிடத்தில் வைத்துவிட்டு குளித்து உடை மாற்றினோம். அங்கே தான் அந்த போன் கைதவறி இருக்கக்கூடும் என்பதை யூகித்துக் கொண்டேன்.
போட்டோ எடுக்க பயன்படுத்தியதால் அந்த போன் அனைத்து வைக்கப்படாமல் on ல் தான் இருந்தது.
ஆனால் இன்டர்நேஷனல் ரோமிங் இல்லாததால் அந்த எண்ணுக்கு கால் செய்ய இயலாது.
தங்கையின் ஹேண்ட் பேக்கிலும் தேடிப் பார்த்தோம். அதிலும் இல்லை ஆனால் எனக்கு நன்றாக தெரியும் ஹேண்ட் பேக்கில் வைக்கவில்லை என்பது.
இரவெல்லாம் சரியாக உறக்கம் வராமல் அந்த போனை எப்படி தொலைத்தோம் என்று யோசித்துக் கொண்டே இருந்தேன்.
மூவருக்குமே மனதுக்கு சற்று கஷ்டமாகிவிட்டது. நான் சரி என்ன செய்வது தாய்லாந்து பயண செலவோட கூட அந்த 18 ஆயிரத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டியது தான் என்ற மனதை தேற்றிக் கொண்டேன்.
ஆனாலும் உள் மனம் தவிக்கிற தவிப்பு எனக்கு தானே தெரியும்.
குளியல் அறையில் குளிக்கும் இடத்தில் அதை பார்த்த யாரும் அதை எடுத்துக் கொண்டு போயிருக்க முடியும்.
எனவே அது மீண்டும் கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை என கருதி கருதினேன்.
பின்னர் களைப்போடு அப்படியே இரவு உறங்கிப் போனேன்.
அடுத்த நாள் காலையில் ஓரிடமும் பிற்பகல் ஓரிடமும் என அழைத்து செல்வதாக ஐட்டனரியில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
(தொடரும் )
-அலெக்சாண்டர்

