மரப்பாச்சி – 2 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்
அத்தியாயம் – 2
அந்தக் கணம் யோதித்தாள் பிருந்தா.. இந்தப் பூமி அப்படியே பிளந்து நான் உள்ளே போய்விடக் கூடாதா? தங்கைகள் சுக வாழ்விற்குத் தடையாய் இந்தப் பூமி ஏன் இன்னும் என்னை விழுங்காமல் வைத்திருக்கிறது என்று! தங்கைகள் கூறியது போல் எதற்காக இந்த தாய பாக்ஸ்,இந்த மரப்பாச்சி உயிரோட இருக்க வேண்டும்?எண்ணியவள் கண்கள் மேலும் கண்ணீரை உதிர்த்தது.வாய் விட்டு அழவேண்டும் என்று வந்த ஆசையை சிரமப் பட்டு அடக்கினாள்.வயதான தாய் தந்தை இல்லை என்றால் இவர்கள் வாழ்விற்கு தடையாய் இருக்காமல் இறந்து போகலாம்.தன் தாய் தந்தையருக்காக நான் வாழ வேண்டும்.
கட்டிலில் விழுந்தாள்.. கட்டிய பட்டுப் புடவையை அவிழிக்கக் கூட தோன்றாமல் அப்படியே கிடந்தாள் பிருந்தா. ஒரு யுகத்தின் அலுப்பு அவள் உடலிலும் மனத்திலும் அப்பொழுது குடி கொண்டிருந்தது.படைப்பின் ஓர வஞ்சனையை எண்ணிப் பார்த்தாள் அக்கணம். தங்கைகள் இருவரையும் கோயில் சிற்பம் போல் செதுக்கியிருந்த பிரம்மன் தன்னை மட்டும் கோயில் கொடி மரம் போல் படைத்து விட்டானே?. தன்னை பெண் பார்க்க வரும்போதெல்லாம் தாய் தங்கைகளை பக்கத்து வீட்டு சரசு மாமி வீட்டிற்கு அனுப்பி விடுவாள். இந்த முறை அவர்கள் போகாமல் அடம் பிடித்து வீட்டில் இருந்தனர். பார்க்க வருபவன் கண்களில் தங்கைகள் பட்டு விட்டால் கண்டிப்பாக இந்த மரப்பாச்சி அக்காவை ஏற்றுக்கொள்ள மாட்டான் என்பது அந்த தாயுள்ளத்திற்கு தெரிந்து போயிருந்தது. அப்படியும் இன்னும் யாரும் அவளை கட்டிக் கொள்ளச் சம்மதிக்கவில்லை.
கதவு தட்டப்படும் ஓசை கேட்கவும் கட்டிலில் இருந்து எழுந்து வந்து கதவைத் திறந்தாள் பிருந்தா. வெளியே தாய் தமயந்தி..
விரக்தியாய் தாயைப் பார்த்தவள் கேட்டாள்.. “ஏம்மா தங்கச்சிங்க பேசுனதைக் கேட்ட நான் தூக்க மாத்திரை கீத்திரை போட்டுட்டு போய்ச் சேர்ந்திடுவேன்னு பயந்திட்டியா? அப்படியெல்லாம் உங்களை அம்போன்னு விட்டுட்டு போயிட மாட்டேன். தங்கச்சிங்க பேருலயும் தப்பில்லை எத்தனைக் காலம் தான் அவங்க சுக வாழ்வுக்கு ஒருத்தி தடையா இருக்கிறது.. பொறுத்துப் பொறுத்து பார்த்தாளுங்க இன்னிக்கு வெடிச்சு சிதறிட்டாளுங்க. நானும் நந்தி மாதிரி இனி குறுக்கே நிற்கக் கூடாது”
மகள் தன் இளைய மகள் பேசியதை முழுவதும் கேட்டு விட்டாள். அவர்களும் இவள் காதில் விழட்டும் என்று தான் அப்படிச் சத்தமாக பேசியிருந்தார்கள். தன் மகளின் மனம் படும் பாட்டை எண்ணி அந்தத் தாய் மனம் அனலில் இட்ட புழுவாய்த் துடித்தது. அந்தத் தாய் அவளை என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் தவித்து நின்றாள்.. ஆனாலும் அவளை ஆறுதல் படுத்தக் கூறினாள்.
“நீ மனசுல எதையும் வச்சுக்காதம்மா அந்த எளவெடுத்தச் சனியன்கள் பேசுனதை”
“என்ன வார்த்தைமா பேசுற? அவளுங்க சரியாத்தான் இருக்கறாங்க.. நான்தான் சரியில்லை. அவங்களுக்கும் வயசாகுது,அது அது நடக்க வேண்டிய காலத்து அது அது நடக்கணும். எனக்கு இப்படியே மாப்பிள்ளை பார்த்துட்டே இருந்தா அவளுங்களும் மூத்து நரைச்சு முத்தின கத்திரிக்கா ஆயிடுவாங்க. அதுக்காக நான் ஒரு முடிவெடுத்திருக்கறேன்”
“என்ன முடிவு?” பதை பதைப்புடன் தாய் கேட்டாள்..
“எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறதை விட்டுட்டு தங்கச்சிங்களுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிங்க”
“என்னடி சொல்லுற?” கத்திவிட்டாள் தமயந்தி.
“அம்மா கத்தாதே.. நான் இப்ப ஊருல ஒலகத்து நடக்காததையா சொல்லிட்டேன். மூத்தவ மொடமா இருந்தா இளையவளுக்கு கல்யாணமே பண்ணி வைக்க மாட்டாங்களா?”
“அதுக்கு மொடமாடி நீ? என் செல்லமே” கூறியவள் அடக்க முடியாமல் கதறி அழ ஆரம்பித்தாள்.
“அம்மா அழாதே.. ஒரு விஷயத்தை வச்சுப் பார்த்தா நானும் ஒரு மொடம் தான்.பாரு உன் இளைய பொண்ணுங்களை அவளுங்களைப் பார்த்தா யாரும் வரதட்சணை கூட வேண்டாமுன்னு கட்டிகிட்டுப் போயிடுவாங்க.ஆனா என்னைப் பாரு இது வரை என்னை எத்தனை பேரு பார்த்துட்டுப் போனாங்க ஒருத்தான் என்னை கட்டிக்க முன் வந்தானா? இல்லையே ஒரு விதத்துல நானும் ஒரு முடம் தாம்மா” விரக்தி குரலில் கொப்பளிக்கக் கூறிய மகளை என்ன சொல்லித் தேற்றுவது என்று தெரியாமல் நின்ற தாய் கூறினாள்.
“யாரு என்ன சொன்னாலும் சரி மூத்தவ இருக்கும் போது இளையவளுக்கு கல்யாணம்.. இது இந்த வீட்டுல நடக்காது. அவளுங்க இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்து தான் ஆகணும். அவளுங்களுக்கு மாப்பிள்ளை பார்க்க நான் ஒருபோதும் ஒத்துக்க மாட்டேன்”
“அம்மா நெலமை புரியாம பேசாதே, நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னா சொல்லுறேன். எனக்கான ராஜகுமாரன் வர்ற வரைக்கும் காத்திருக்கிறேன். அதுக்கு முன்னடி தங்கச்சிங்க கல்யாணத்தை முடிச்சிடுவோம்”
“ஊர் ஒலகம், சொந்தகாரங்க என்ன நெனைப்பாங்க? மூத்தவ இருக்கும்போது இளையவளுக்கு கல்யாணம் பண்ணுனா நம்ம சாதி சனம் சிரிக்காது?”
“சிரிக்கற சாதி சனத்துக்கிட்ட அவங்க சொந்தத்துல ஒரு பையனை என்னைக் கட்டிக்கச் சொல்லு பார்ப்போம்?”
“நான் விதண்டாவாதம் பேச வரலை.. மூத்தவளுக்கு கல்யாணம் முடிச்சிட்டுத் தான் இளையவளுக்குக் கல்யாணம். அப்படி என்ன கேட்குது அவளுங்களுக்கு?”
“அம்மா அவங்களுக்கு கல்யாண வயசு வந்து நாளாகுது.. அக்காளுக்கு கல்யாணம் எத்தனை நாள் கழிஞ்சு ஆனாலும் பரவாயில்லாய் அப்புறம் நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு தங்கச்சிங்க சொன்னா பரவாயில்ல…என்னை அவங்களுக்கு தடை கல்லா பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க அவங்க இப்ப.இப்படியே போனா என்னை அடுத்தது அவளுங்க ஒரு எதிரியா பார்க்க ஆரம்பிப்பாங்க. அப்படி ஒரு நிலையை உருவாக்கிடாதம்மா..அப்பாக்கிட்டச் சொல்லி அவங்களுக்கு வரன் பார்க்கச் சொல்லு”
“கண்டிப்பா அப்பா இதுக்குச் சம்மதிக்க மாட்டாரு”
“நீ தான் அப்பாவை நிலமையை எடுத்துச் சொல்லி சம்மதிக்க வைக்கணும்”
“பிருந்தா விதண்டாவதம் பண்ணாதே”
“அம்மா இது விதண்டாவதம் இல்லை இது தான் நிதர்சனம்..வீட்டுல அமைதி போயிடுச்சுன்னா இது நரகம் ஆயிடும்.நான் சொல்லுறதைக் கேழு”
“என்னடி கேட்கறது.. உன்னை விட கொஞ்சம் அழகா பொறந்துட்டாளுங்க அப்படிங்கறதைத் தவிர வேற என்னடி இருக்குது அவளுங்க கிட்ட நல்லா படிக்க வச்சோம் நீ மட்டும் நல்லா படிச்சி நல்ல உத்யோகத்துக்குப் போன அவளுங்க ஒழுங்கா படிச்சாளுங்களா? இப்பவும் உன் சம்பாத்யத்துல ஒக்கார்ந்து தின்னுறாளுங்க. அந்த நன்றி விஸ்வாசம் இல்லாம உன் மேல பழி போடுறாளுங்க. இப்படிப் பட்ட ஜந்துக்களுக்கு நீ சப்போர்ட் பண்ணலாம் கூடப் பொறந்ததுக்கா, ஆனா நான் சப்போர்ட் பண்ண மாட்டேன்.. இப்பவும் சொல்லுறேன் ஒனக்கு கல்யாணம் முடிஞ்சப்புறம்தான் அவளுங்களுக்குக் கல்யாணம் அதையும் மீறி இந்த வீட்டுல கல்யாணம் நடக்கணும்னா இன்னும் ஒரு வருஷம் ஆகணும்”
“அது என்னம்மா ஒரு வருஷக் கணக்கு?”
“வீட்டுல துஷ்டி விழுந்தா ஒரு வருஷத்துக்கு நல்ல காரியம் செய்ய முடியாதுல்ல?”
“அம்மா என்ன சொல்லுற?”
“ஆமாம்.. செத்து ஒரு வருஷம் முடிஞ்சாத்தான் நீ உன் தங்கச்சிங்களுக்கு கல்யாணம் செய்து வைக்க முடியும்..” தாய் கூறி முடிக்கவும்
“அம்மா”.. என்று அலறினாள் பிருந்தா!
(தொடரும்…)
முந்தையபகுதி | அடுத்தபகுதி