அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 2 | செல்லம் ஜெரினா

 அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 2 | செல்லம் ஜெரினா

அத்தியாயம் – 2

கெட்டி மேளம் கெட்டி மேளம்” என்றதுமே மேளம் முழங்கியது. மஞ்சள் சரட்டை எடுத்தவன் அருகில் சொர்ண பூம்பாவையாய் நின்றிருந்தவளை ஏறிட்டான். அவளோ நிலம் தவிர எங்குமே நோக்கவில்லை. கைகள் தயங்கியே நிற்க

“மாப்பிளே! கட்டுடா தாலியை “

என்று செந்தில் குரல் கொடுக்க மணப்பெண்ணின் நீள்விழிகள் லேசாய் இமைக் குடை உயர்த்த ‘சட்’டென்று அந்த நொடி நேரத்தில் அந்த மைவிழிகளைக் கவ்வியது நந்தனின் விழிகள்.

“சம்மதம் தானே! “

என்று கண்கள் தொடுத்த வினாவிற்கு கதுப்புகள் செம்மையேற இதழ் நடுங்க நயனங்களைத் தழைத்துக் கொண்டு விட்டாள்.

விரல் பிடித்து அக்னி வலம் வந்து அம்மி மீது பாதங்களைப்பிடித்து வைத்து மெட்டியை அணிவித்தது ஆணின் வலிய விரல்கள். புது ஸ்பரிசம் நெஞ்சில் புதுராகமும் பயமுமாய்  களைகட்டியது. பாதங்கள் தடுமாற பிடிமானமின்றி தள்ளாடியவளை  மென்மையாகப் பற்றியது மன்னவனின் கைகள்.

தாமரைப்பூ நிறச்சேலையில் ஜரிகைப்பூக்களுடன் மிகுந்த படாடோபமில்லாத பட்டுப்புடைவையில் மிதமான நகைகள்.பூ பாரம் மட்டுமே அதிகப்படி.

அந்த சேலையை கவனித்ததும்  சந்தோஷச்சாரலில் நனைந்தான் நந்தன் சக்ரவர்த்தி.

மருமகனின் எண்ணவோட்டம் புரிந்தது போல தோளை அழுத்திப் பற்றியது மாமனின் கை.

“மாப்பிள்ளே! இதுதான் கடவுள் போட்ட முடிச்சு யோசிச்சுப்பாரு. அன்னிக்கு நாமும் ஜவுளி எடுக்கப் போனதும் இந்தப் பொண்ணுக்கும் பிறந்தநாளைக்குத் துணியெடுக்க எங்க அண்ணன் அண்ணி குடும்பம் அதே கடைக்கு வந்ததும் ஒரே நேரத்தில் பார்த்து பேசுனதும் எல்லாமே கடவுளோட திருவிளையாடல்டா.அந்தப் புடைவையை நீயே தேர்வு செய்ததும் அதுவும் இன்னிக்கு அதோட பிறந்த நாள்னு அதையே உடுத்திக்கிட்டு வந்ததும் இவ்ளோ பிரச்சனை நடந்ததும் எல்லாமே தெய்வ சங்கற்பம்டா …”

மாமனின் குரல் முணுமுணுப்பாய் கேட்டது. உண்மைதான்!

அன்றைக்கு ….. முகூர்த்தப்புடைவை எடுக்க பெண் வரவில்லை .பெண் வீட்டார் மட்டுமே வந்திருக்க இவனையும் அருகில் அமர்த்திக்கொண்டு முகூர்த்தப் புடைவையை பார்க்க நந்தனுக்கோ கடுப்பாக இருந்தது. வேலையிலிருந்தவனை பிடித்திழுத்து வந்திருக்க மணப்பெண் என்னவோ வரவேயில்லையாம். ஏதோ சப்பைக்காரணம் சொல்கிறார்கள்.தன்னையென்னவோ இந்தத் தாத்தாவும் பாட்டியும் ஏதோ தெய்வக்குத்தம் ரேஞ்சுக்கு இழுத்து வந்து விட்டார்கள். நந்தனும் பெண்ணை நேரில் பார்க்கலாம் என்றுதான் ஒப்புக் கொண்டதே! போட்டோவில் பார்த்திருந்தான் பெரியவர்களே பேசி முடித்தாகி விட்டது.  அசட்டையாக பார்த்துக் கொண்டிருந்தவன் கண்ணில் இந்த இளஞ்சிவப்பு புடைவை விழ அதை கையிலெடுக்க அவன் கையோடு வளைக்கரம் ஒன்று உரசி அந்தத் தீண்டலில் திடுக்கிட்டு கையையிழுத்துக் கொண்டது.

சேலையை நழுவ விட்டவன் சட்டென்று அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டான்.

தயக்கத்தோடு அதை வருடிக் கொண்டிருந்தவளை

“நிலா! என்னம்மா யோசனை?  என்று பெற்றோர் வர கூடவே செந்திலும்.

“சித்தப்பா! வாங்க வாங்க! “

என்றாள் எழுந்து நின்று. . செந்தில் நிலாவின் அப்பாவுக்கு தம்பிமுறை உறவு. விசேஷங்களின் போதும் வேறு எங்கேனும் பார்க்கும் போதும் செந்தில் மகள் தந்தையுறவை நிலைநிறுத்திக்கொள்வார். நிலாவின் மீது தனிப்பாசம் .

அழகு, படிப்பு, பண்பு, என்று அவருக்கு தனி வாஞ்சையுண்டு எப்போதுமே!

இன்றும் துணிக்கடையில் வைத்துப் பார்த்ததும் மகிழ்ச்சியோடு அவளை நெருங்கியவர்

“நிலாம்மா! இது பிடிச்சிருக்கா? அப்புறம் என்ன யோசனை? எடுத்துக்கடா ….”

“இல்லே சித்தப்பா! …அ..அவங்க கையில வச்சு பார்த்துட்டிருந்தாங்க. நானும் பார்க்கவே வேண்டாம்னு போயிட்டாங்க. அவங்க இஷ்டப்பட்டு எடுத்ததை… எப்படி…நான் “

அவள் காட்டிய இடத்தில் நின்று போனை நோண்டிக் கொண்டிருந்த மருமகனைக் கண்டதும் பெருஞ்சிரிப்புடன்

“அட! நீ வேறம்மா! சும்மா பார்த்திருப்பான் இதை நீயே எடுத்துக்கோம்மா உனக்கு பொருத்தமாயிருக்கும் “

எனும் போதே விற்பனைப் பெண் மடிப்புகளாகப் புடைவையை நிலாவின் தோள் மீது வைத்து பரத்தினாள். எதேச்சையாக நிமிர்ந்தபோது எதிரிலிருந்த கண்ணாடியில் தெரிந்த அவளின் உருவம் நந்தனை ஒருகணம் அசத்தியது. அவளுக்கு அத்தனை கச்சிதமாய் பொருந்தியிருந்தது அந்தப்புடைவை.

. “எடுத்துக்கம்மா! உனக்குன்னே நெய்தாற் போலிருக்கு. அப்புறம்!  அண்ணே இதுக்கு நான்தான் பணம் கொடுப்பேன். இது என் பொண்ணுக்கு என்னோட பிறந்த நாள் பரிசு “

“அச்சோ! வேண்டாம் சித்தப்பா. பிறந்த நாளைக்கு எதுக்கு இத்தனை காஸ்ட்லியாய்….நானும் சும்மா தான் பார்த்தேன். “

“ஓ…அப்போ சும்மாதான் என்னை சித்தப்பான்னு வாய் வார்த்தைக்கு கூப்பிடுறே “

“அச்சோ! அப்படியெல்லாமில்லை! “

“ஆனா நான் மனப்பூர்வமா உன்னை என் சொந்த மகளாத்தான்மா நினைக்கேன் “

செந்தில் குரல் தழதழத்ததுமே   அவர் கையைப் பற்றிக்கொண்டு “சித்தப்பா! “

என்று சிணுங்கினாள். அவள் தந்தையும் அனுமதி தர அவள் சம்மதித்தது என்று எல்லாவற்றையும் கவனிக்காதது போல் கவனித்துக் கொண்டிருந்தான் நந்தன்.

அந்தப்புடைவையை அவள் கையில் திணித்து

“இதே போல அடுத்து உன் முகூர்த்த சேலையையும் நான் தான் எடுத்துத் தருவேன். ” என்று உச்சியில் கை பதித்தார்.

செக்கர் வானமாய் சிவந்தது அவள் முகம்.

“உன் வாக்கு பலிக்கட்டும் தம்பி இந்தப் பொறந்த நாளிலிருந்தே குருப்பார்வை ஆரம்பம்னு சொன்னார் ஜோசியர்.”

“நல்லதே நடக்கும் ண்ணா! நம்ம வீட்டு இளவரசிக்கு என்ன குறை ப்ரிதிவிராஜன் மாதிரி குதிரையில் வருவான் பாருங்க “

 இந்தப்பக்கம் நந்தனுக்கு சிரிப்பு வந்தது.

‘இந்த மாமா இருக்காரே! குதிரையெல்லாம் ஏது இப்போ? ஒரு ஆடீக்கார் ஒரு பிஎம்டபிள்யூ ன்னு சொல்லலாம் தானே! ‘

அதன்பிறகு

அந்த சேலைக்கான பணத்தை அவன் தான் கட்டினான். செந்தில் பர்சை வீட்டிலேயே வைத்து விட்டு வந்திருந்தார்.

அவன் பணத்தைக் கட்டியபின்பு அதை சொல்லி கலாட்டா பண்ணியது வேறுகதை.

இன்றுதான்

அவள் பிறந்த நாளாம். கோயிலுக்குப் போய்விட்டு மண்டபத்துக்கு குடும்பமாய் வந்திருந்தாள்.

இங்கே நடந்த களேபரத்தில் ஏதேதோ நடந்து முடிந்து அவள் அவனின் சரிபாதியாகி விட்டாள்.

சடங்குகளோடு ஆசிர்வாதங்களும் தொடர மனம் என்னவோ காலையில் நடந்து முடிந்ததையே வட்டமிட்டது.

பலராமன் அதிகாரமாக

“ஏய்! மாப்பிள்ளையை கூட்டிகிட்டு வாய்யா! “

 என்று தன்னோடு வந்த கான்ஸ்டபிளை அனுப்பினான்.

“வாடா மச்சி! வா! வா! வைக்கிறேன் பாரு இப்போ ஆப்பு. வச்சு செய்றேன்டா உன்னை “

அருகில் நின்ற டிப்டாப்பான இளைஞன் கண்களில் ஆவலும் கலக்கமுமாய் மண்டபத்தைத் துழாவினான்.

“ஐயா!  இன்ஸ்பெக்டர் வந்திருக்கார் உங்களை கூப்பிடுறாங்கய்யா! “

சிவநேசம் மீசையை முறுக்கியபடியே அங்கவஸ்திரத்தை சரி பண்ணிக் கொண்டார்.

“பலராமனா வந்திருக்கான்? வில்லங்கத்துக்குப் பொறந்தவனாச்சே “

“ஆமாங்கய்யா! மாப்பிள்ளையை பார்க்கனுமாம். “

எல்லோருமே கூட்டமாய் வர பின்னாலேயே மணப்பெண்ணும் அவள் குடும்பமும்.

“வாய்யா மாப்பிள்ளே! உன்னை அரெஸ்ட் பண்ணதான்யா வந்திருக்கேன். வா! வா!  போலாம். “

“என்ன கழுதைக்கு இப்ப குதிக்கிறாப்பல “

“யோவ்! பெரியவரே! ஒம்ம பேரன் இன்னொருத்தன் பொஞ்சாதிய கல்யாணம் பண்ணிக்க ஏற்பாடு பண்ணியிருக்கான்யா.  என்னா திண்ணக்கம். இவ்ளோ பேரை அழைச்சு மண்டபமெடுத்து….சும்மா சொல்லக் கூடாதுய்யா குடும்பமே தில்லாத்தான் நிற்கிறீங்க “

“அய்யோ ஸார்! இவங்களுக்கு விஷயமே தெரியாது ஸார். தெரியாம நடந்த விஷயம். எங்க ரெண்டு பேத்துக்கும் கல்யாணமானது யாருக்கும் தெரியாது ஸார்.”

கூடவே வந்த அந்த வாலிபன் பதறினான்.

“ஹலோ! விசாரிச்சிட்டிருக்கேன்ல! ஏன்யா உன் பொஞ்சாதியத் தானே இவன் கடத்திகிட்டு வந்திட்டான்”

“இல்லை ஸார் இது சின்ன மிஸ் கம்யூனிகேஷன். என் வொய்ஃப் அவங்க வீட்டாருக்கு பயந்து போயிட்டாங்க. இவங்க மேல தப்பு கிடையாது. “

“யோவ்! உனக்கு வெட்கமாயில்லை நீ தாலிகட்டினவளுக்கு அவன் மறுதாலி கட்ட ரெடியாகி ஊரைக் கூப்பிட்டு வச்சிருக்கான் நீ என்னமோ மிஸ் கம்யூனிகேஷன் மிஸர்ஸ் கம்யூனிகேஷன்ங்கிறே!

அட! நீ சொன்னதும் சரிதான்! உன் மிஸர்ஸ்ஸோட மிஸ் கம்யூனிகேஷன் என்னா ரைம்ல வருது பார்ய்யா”

“இந்தா ஏட்டு! இந்தக் குடும்பம் மொத்தத்தையும் விலங்கு போட்டு ஜீப்ல ஏத்து “

கூட்டம் கூடி  நிற்க பெரிய குடும்பத்தின் விசுவாசிகள் சீற்றத்தோடு கொல்லவா?  போடவா என்று முறைக்க நந்தனின் விழிகள் தீயாய் சிவந்தன.

அதற்குள்ளாக. மணப்பெண்ணை பார்த்துவிட்ட புது இளைஞன் “ராகினி “என்று கூவ அவளோ தாயின் கையை உதறிக்கொண்டு இரண்டெட்டில் அவன் நெஞ்சில் தஞ்சம் புகுந்தாள்.

அவளை தன் கைவளைவில் பிடித்தபடியே

“லுக்! மிஸ்டர் இன்ஸ்பெக்டர்! நான் உங்களிடம் உதவி கேட்டேனா? கம்ப்ளெயிண்ட் கொடுத்தேனா? நீங்களே சும்மா நின்னவனை விசாரிச்சிங்க ஏதோ உங்க உடைக்கு மதிப்பு தந்து என் பிரச்னையை சொன்னேன். நீங்களும் இங்கே தான் வருவதா சொல்லிட்டு என்னை அழைச்சிட்டு வந்திட்டு இதென்ன இப்படி பேசுறீங்க. எங்க பிரச்சனையை நாங்க பார்த்துக்கிடுவோம். நீங்க கிளம்புங்க”

“ஏய்! நீ யாருகிட்டே பேசறேன்னு தெரியுதா? “

“தேவையேயில்லை. நீங்க யாராயிருந்தா எனக்கென்ன “

இந்தப்பக்கம் திரும்பியவன் பெரியவர் சிவநேசத்தின் முன்பாக கை கூப்பினான்.

“மன்னிச்சிடுங்க! எல்லாருமே பெரிய மனசு பண்ணி மன்னிக்கனும்.

நானும் இவளும் காதலித்தோம். அந்தஸ்துலே நான் கீழே. என்னை உயர்த்திக்க வேண்டி வெளிநாடு வேலைக்கு கிளம்பினேன். அப்போதும் இங்கே இவளுக்கேதும் ஆகிடுமோன்னு ரிஜிஸ்டர் மேரியேஜ் பண்ணிகிட்டேன். மூணு வருஷம் ஓரளவு சம்பாதிச்சுட்டேன். அதனாலே இங்கேயே செட்டிலாகலாம்னு முயற்சி பண்ணிட்டிருந்தப்பதான்….. இவங்கப்பாவுக்கு விஷயம் தெரிஞ்சு அவசரஅவசரமா இந்த ஏற்பாட்டை செய்திட்டார். இவள் என்னிடம் சொன்னதுமே நானும் இவரிம் பேசி கன்வின்ஸ் பண்ணினேன். இவங்க ….இவங்க …என் வீட்டாளுங்களை மிரட்டியிருக்கிறாங்க. எனக்கும் உடனே கிளம்பி வர முடியலை இவளையும் கான்டாக்ட் பண்ண முடியலை இவளை ஹவுஸ் அரெஸ்ட் பண்ணிட்டாங்க. எனக்கும் ஒன்னுமே புரியைலை கடைசி நிமிஷத்திலே தான் டிக்கட்டும் கிடைச்சுது. ஒரு நண்பன் மூலமா இவருடைய மெயில் ஐடீயும் கிடைச்சது. இவருக்கு தகவலை சொல்லிட்டு இப்போதான் ஓடி வரேன். இன்னும் அம்மா அப்பாவைக்கூட பார்க்க போகலை….”

அவன் முகத்தில் அத்தனை களைப்புத் தெரிந்தது.

ராகினியின் பெற்றோர் தலை குனிந்தனர்.

“என்னப்பா இது பெரிய மனுசன் செய்ற காரியமா இது? “

“ச்சீசீ! நான் உங்கிட்டே இதை எதிர்பார்க்கலைப்பா”

“”ஏம்மா? நீ பெத்த தாயார் தானே? பெத்த பொண்ணுக்கு செய்ற காரியமா இது? “

“இதெல்லாம் தெரியாம தாலி ஏறியிருந்தா என்னாகிறது? “

“நான் பொணமாகியிருப்பேனுங்க! “

“ஏய்! ராகினி! வாயை மூடு! “

“ஆமாங்க இந்த கல்யாணப்பேச்சு துவங்கினது முதலே பாதி ஜீவன் போயிடுச்சு.  மீதியை இதோ இதைக்குடிச்சு போக்கிடலாம்னு ரெடியாத்தானிருந்தேன். கடைசி நிமிஷம் வரை என் காதல் உங்களை கொண்டு வந்து சேர்த்திடும்ன்னு நம்புனேனுங்க! எப்படியாவது இதை பெரிய குடும்பத்துக்கு சொல்ல நினைச்சேன். கல்யாணப் புடைவை எடுக்கிற சாக்கில சந்திச்சு சொல்ல நினைச்சேன். என்னை வீட்டுக் காவலில் வச்சிட்டாங்க. இவங்க தற்கொலைபண்ணிக்கிடறதா என்னை மிரட்டினாங்க. நான் செத்தே போலாம்னு விஷபாட்டிலோடு மண்டபம் வந்திட்டேன்.போனையும் பிடுங்கி வச்சிட்டாங்க “

“ராகினி “

அந்த இளைஞன் சுற்றுப்புறம் யோசிக்காமலே அவளை இறுக்கியணைத்துக் கொள்ள அவளும் அவனுடன் இழைந்தாள்.

யாரோ சப்தமாக இருமி  செரும சுயநினைவு வந்தவன். தன் மனைவியை இழுத்தபடியே மூத்த தம்பதியர் காலில் பணிந்தான்.

“நல்லாருங்க நல்லாருங்க! “

அவன் கை கூப்பி

“பெரிய மனக் கஷ்டத்தைத் தந்திட்டேன். நாங்க வரோம் அய்யா! என் அம்மா அப்பாவைப் போய் பார்க்கணும் “

என்று விடைபெற ரங்கநாயகி செந்திலைப்பார்க்க அவர் நிமிடத்தில் பெரிய தாம்பாளத்தோடு வந்தார். புதுத்துணிகளும் பூவும் பழமும் கவரில் பணமும் இருக்க….அதை அவர்கள் முன் நீட்டி

” வாங்கிக் கொள்ளுங்க! அமோகமா இருக்கனும்”.

என்று ஆசிர்வதிக்க. அவர்களும் கண்கலங்க பெற்றுக் கொண்டனர். பெண் வீடு தலைகுனிந்து நிற்க

“பெரிய தனக்காரர் மனசே மனசு தான்ப்பா “என்று சிலர் பேசிச் சிலாகிக்க …மற்றவர்கள் குழப்பத்தில் நிற்க இவள் தேவதையைப் போல மண்டபத்தினுள் நுழைந்தாள்.

(சஞ்சாரம் தொடரும்)

முந்தைய பகுதி – 1 | அடுத்தபகுதி – 3 

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...