அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 3 | செல்லம் ஜெரினா
அத்தியாயம் – 3
ஆரத்தி எடுக்கப்பட்டு வலதுகால் வைத்து வந்தாள் நிலவழகி. பூஜையறையினுள் விளக்கேற்றி பின்பு பொண்ணு மாப்பிள்ளைக்கு பாலும் பழமும் தந்து விட்டு மணமக்களை ஓய்வெடுக்கும்படி அனுப்பி வைத்தனர். அதற்குள் லோகநாயகி
“நிலா! இதை மாத்தி உடுத்திக்கம்மா! பட்டுச்சேலை கசகசன்னு இருக்கும். “
என்று லகுவான புதியபுடைவை ஒன்றை தந்து விட்டுப்போக. அதைக் கட்டிக் கொண்டாள்.
அம்மா அப்பாவுடன் போய் அவளுக்குத் தேவையானதை கொண்டு வர அவளுடைய வீட்டுக்குப் போயிருந்தார்.
அங்கிருந்த சோபாவில் அமர்ந்தவளின் கைகள் கழுத்தைத் தடவ மஞ்சளின் வாசனையோடு குங்குமிடப்பட்ட பொன்தாலி நிரடியது. ஒரு நான்கு மணி நேரத்தில் என்னவெல்லாம் நடந்து முடிந்து விட்டது.விழிகளை மூடிக் கொண்டாள்.
அப்பா அம்மாவுடன் பிறந்தநாளுக்காக கோயிலுக்குப் போய் விட்டு பிறகு பெரிய தனக்காரர் வீட்டுக் கல்யாணத்துக்கு போய்வரலாமென்று திட்டம். கல்யாணத்திற்கு போகவெனவும் பிறந்தநாளுமென புதுப்புடைவையுடன் அதிகப்படியான நகைகளுமாய் கிளம்பியிருந்தாள்.
மூவரும் உள்ளே நுழையும் போதே ஏதோ சரியில்லை என்று தோன்றியது. கல்யாண வீட்டுக்கேயுரிய மங்கல வாத்ய முழக்கமோ
சலசல பேச்சு சப்தமோ கலகலவென சிரிப்போ
குறுக்கும் நெடுக்குமாய் நடக்கும் விளையாடும் குழந்தைகளோ எந்த உயிர்ப்புமின்றி ஊமைப்படம் பார்ப்பது போலிருந்தது கல்யாண மண்டபம்.
அங்கங்கே கசகசவென்று நின்றபடி சப்தமெழாது பேசிக்கொண்டிருந்தனர் பலரும்.
இவர்கள் மூவரும் நுழையும் போதே செந்திலின் பார்வை படிந்து நிலாவைத் தொடர்ந்தது. அவள் இயல்பாக அருகில் வந்தமர்ந்த தோழியிடம் பேச ஆரம்பிக்க இவர் யோசனையோடு நோக்கினார்.
“அத்தான் இப்போ மாப்பிள்ளைக்கு இதே முகூர்த்தத்திலே கல்யாணமாகனும். அப்போதான் நல்லது “
“இப்போதைக்கின்னு பொண்ணுக்கெங்கே போறது? “
” நான் ஒரு பொண்ணை சொல்லவா?
அக்கா… நாம
ஏன் நம்ம சதாசிவம் அண்ணனுடைய பொண்ணு நிலாவை பார்க்கக் கூடாது. நம்ம இனம். அண்ணனும் நல்ல வசதி ஒரே பொண்ணு படிச்சுமிருக்கு பார்க்க நல்லாவுமிருக்கும். “
“பார்க்கலாம் தான்! சின்னதுல பார்த்தது … அப்பா நீங்க என்னப்பா சொல்றீங்க “
“அத்தான் பின்னாலே மெதுவாத் திரும்பிப் பாருங்க! அண்ணன் கல்யாணத்துக்காக குடும்பத்தோடு வந்திருக்கார் பாருங்க.”
“யாருடா ரெண்டு பொண்ணுங்க இருக்கே! “
“ரோஜாப்பூக்கலர் புடைவை கட்டியிருக்கிற பொண்ணு அத்தான். “
தாத்தாவும் திரும்பினார்.
“ரங்கா நீ என்ன சொல்றே? “
“என்ன சொல்ல! பொன்னுத்தாயி வளர்ப்பு பத்தி எதுவும் சொல்ல முடியுமா? “
“அத்தே! அவங்க தப்பா ஏதும் நினைச்சுட்டா “
“தப்பா நினைக்க என்னடியிருக்கு. நம்ம என்னை மறைச்சா செய்றோம். அபய்! நந்தனை ரெடிபண்ணு . செந்திலு! உன் அண்ணனை குடும்பத்தோடு மணமகள் அறைக்கு அழைச்சிட்டு வா! பேசிடுவோம். “
செந்தில் அம்புபோல கீழிறங்கி இவர்களை நோக்கி வந்து கை கூப்பினார்.
“அண்ணே அண்ணி வாங்க வாங்க! நிலாம்மா! பிறந்த நாள் வாழ்த்துகள். “
“நன்றி சித்தப்பா! என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க “என்று பாதம் பணியப் போனவளை தடுத்து உச்சி முகர்ந்தார்.
“நல்லாயிரும்மா! நல்லாயிரும்மா! மனசுக்கேத்த மகராஜனோடு தீர்க்க சுமங்கலியா வாழனும்”
அவர் எல்லோரையும் தன்னோடு வரும் படி கூறினார்.
அங்கே ஏற்கெனவே பெரியவர் சிவநேசம் தம்பதியும் ஸ்ரீநிவாசன் மரகதத்துடன் நிற்க இவர்கள் தயங்கினர்.
“அண்ணே அத்தானும் தாத்தாவும் உங்களோடு பேசணும்னு சொன்னாங்க போய் பேசுங்கண்ணே”
என்றவர் கதவை சாற்றிக் கொண்டு வெளியேறினார்.
அனைவருமே அமைதியாக நிற்க ரங்க நாயகி தான் துவங்கினார்.
நடந்த விஷயத்தைச் சுருக்கமாகச் சொல்லிவிட்டு தங்களுடைய விருப்பத்தை முன் வைத்தார்.
ஸ்ரீநிவாசனும்…..”நாங்க ஏதோ சங்கடத்துலே உங்களை நிறுத்தி வச்சு கேட்கிறதா நினைக்கக்கூடாது “
“ஆமாண்ணா! உங்களுக்கும் ஏதேதோ கனவு இருக்கும் . யோசிச்சு பொண்ணையும் கேட்டு சொல்லுங்க அண்ணி.”
“சதாசிவம்! உங்களை நெருக்கிறதா நினைச்சுக்க வேணாம். நந்தனைப்பத்திச் சொல்லித் தெரிய வேணாம். என்னவோ இப்படி நடந்துடுச்சு…என்ன செய்றதுன்னு யோசிக்கிறப்போதான் செந்திலு உங்க பொண்ணை பிரஸ்தாபிக்கவும் அவ தேவலோகப் பொண்ணு போல உள்ளே நுழையவும் சரியாயிருந்தது. மனசுக்குள்ளே இந்தப்பொண்ணே பேரனுக்கு அமைஞ்சா நல்லாயிருக்குமேன்னு எண்ணம் ஓடும்போது செந்திலும் அதேப்பொண்ணுதான் நான் சொன்னதும்னு கை காட்டினான்.
நீங்களும் வீட்டுலே கலந்து பேசுங்க. நாங்க இப்போ வெளியே போறோம். எதுவானாலும் சங்கடமில்லே. மனசுலே வச்சுக்க வேணாம். இதொன்னும் அசலுஇல்லே. என்னிக்கும் உறவுதான். “
என்ற பெரியவர் அனைவரையும் அழைத்துக் கொண்டு வெளியேறினார் அவர்களுக்கு தனிமையைத் தந்து.
வாயடைத்துப் போய் நின்றவர்கள் சுதாரித்து
“இப்ப என்னங்க பண்றது “
“பெரிய இடம்! அதான் ரோசனையா வருது “
“நாமளும் இருக்கப்பட்டவங்கதானே காடு கரை தோட்டம் தொரவுன்னு இருக்கு. அவ பேருலயும் நிலம் நீச்சுன்னு கிடக்கே. .பொண்ணுக்கும் என் நகை அவ பாட்டியா நகைன்னு சேர்த்தா நூறு பவுனு வரும் ஒத்தைப் பொண்ணு… பெரியஇடத்துலே வாக்கப்பட்டா நல்லது தானே! சின்னவரும் குணத்திலே தங்கம். அவங்களே முன்னே வந்து கேட்கறாங்க. !”
பொன்னுத்தாய்க்கு மகள் பெரியதனக்காரக் குடும்பத்தில் வாக்கப்படுவதென்பது பெருமையும் சந்தோஷமுமாயிருந்தது. நந்தனும் பெரிய படிப்பு படித்துவிட்டு வந்தாலும் மரியாதை குறையாம நடப்பவன் முக்கியமாக பெண்ணுக்கு ஏத்த ஜோடி …ஆசை கனிந்து எரிந்தது.
“அம்மாடீ நிலாம்மா …என்ன சொல்றே “
“உங்க இஷ்டம் பா! நீங்க யாரைக்காட்டினாலும் எனக்கு சம்மதம் பா. !””
அவள் பதில் அப்படித்தானிருக்கும் என்று தெரியும் அவருக்கு.
அதனாலேயே அச்சமும் கூட! அகலக் கால் வைத்து ஆசைப்பட்டு பெண்ணைத்தந்து விட்டு ஏடாகூடமாகிவிட்டால்…..
“என்னங்க ரோசனை! ராசாவாட்டம் மாப்பிள்ளே! நல்ல குடும்பம். எம் பொண்ணு அதிர்ஷ்டசாலி..ஜோசியர் அன்னிக்கே சொல்லலியா ராசாவீட்டுக்குத்தான் ராணியாப் போவான்னு “
மகளை திருஷ்டி வழித்தார்.
“உனக்கென்னமா தோணுது! சின்னதா உறுத்தலிருந்தா கூட சொல்லுடாம்மா. அப்பாவுக்கு நீதான் முக்யம்! “
“எனக்கென்னப்பா தெரியும்?நீங்க சொன்னா சரி “
“மாப்பிள்ளை அழகுதான் வெளிநாடு போய்வந்தும் பெரியவங்க வீட்ல பார்த்து வைக்கிற பொண்ணைத்தான் கட்டிக்குவேன்னு சொன்னாராம். அந்தப் பொண்ணு வீட்லதா ஏதோ ப்ரச்சனை. பேசியிருக்கேன் மரியாதை தெரிஞ்ச பையன் “
பெண்ணைப் பெற்ற மனது ஊசலாடியது கடிகார பெண்டுலமாய். தன் சகோதரனுக்கு போன் போட்டார்.
நிலாவுக்கு அவன் முகம் நினைவுக்கு வரவில்லை எத்தனை முயன்றும். நிழல் போல புல்லட்டில் ஆரோகணித்து கடக்கும் உருவமே கலங்கலாய் த் தோன்றியது.
நிலவழகிக்கு சிரிப்பு வந்தது.தாலியை கையில் வைத்துக் கொண்டு
“சம்மதமா “என்பது போல புருவம் தூக்கிக் கேட்ட பாவனையும் விழிகளும்.
கண நேரத்தில் முகவடிவு பதியவில்லை …தீர்க்கமான விழிகளே பதிந்தன. முடிச்சிடும் வேளையில் புறங்கழுத்தில் தீண்டிய கைகளின் குறுகுறுப்பு சிலிர்ப்பைத் தந்தது…சுண்டு விரல் இணைத்து அக்கினியை வலம் வருகையில் கையின் வெதுவெதுப்பு குளிராய் இறங்கியது. பாதம் பிடித்து மெட்டி அணிவிக்கையில் ஜிலிர் என்ற உணர்வில் அவள் தடுமாற சட்டென்று கைபிடித்துத் தன்னை சமன் செய்ததில் பாதுகாப்புணர்வு தாக்கியது.
இன்னும் கூட தாலி கட்டியவன் முகம் மனத்துள் வரக் காணோமே ….! எஞ்சிய சடங்குகளில் வெட்கத்தில் தலை குனிந்தே கழித்தாகி விட்டது….
“அண்ணி …அண்ணி! ” என்ற குரல் கேட்க விழி மலர்ந்தாள். எதிரில் நின்றவளை மலங்க மலங்கப் பார்க்க மாமியார் மரகதம் உதவிக்கு வந்தாள்.
“நிலாம்மா! இவ தீபலெஷ்மி! உன் புருஷனோடு ஒட்டிப்பிறந்தாலும் கால்மணி நேரம் என்னைப்படுத்தி வைச்சுட்டு வெளியே வந்தவ உன் நாத்தனார். இப்போ மாசமாயிருக்கா. ஒன்னும் குழம்பாதே! போகப்போக நம்ம உறவுக்காரங்கள் அறிமுகப்படுத்தறேன். இப்போதைக்கு நம்ம குடும்பத்தை மட்டும் தெரிஞ்சுக்க. தீபா நீயும் அண்ணியோடு துணைக்கு உட்காரு. . பேசிட்டிருங்க . யாரும் ஒறமுறை வந்தா …என்னைக் கூப்பிடு. “
தீபலஷ்மி சிநேகமாய் சிரித்தாள்.
“எத்தனாவது மாசம் தீபா “
“நாலு முடியப் போகுது அண்ணி! “என்றவள் தன் போனை உயிர்ப்பித்து காலரியைக் காட்டினாள்….ஒவ்வொருவராய் சொல்லிக்கொண்டே வந்தாளே தவிர அவள் புருஷனின் போட்டோவை மட்டும் காட்டவேயில்லை…
‘அட! நிறுத்தும்மா! என் புருஷனைக் கண்ணுல காட்டுமா ‘என்று கத்திவிடலாமா என்ற நிலையின் விளிம்பில் நிற்கையில் வந்து சேர்ந்தாள் அபயின் மனைவி பெரிய வீட்டின் மூத்த மருமகள் மஞ்சுளா.
“ரெண்டு பேரும் என்ன பண்றீங்க! சாப்பிட வரச் சொன்னாங்க! ம்…ஏ புதுப் பொண்ணு ….உம் பேரென்ன… ஆ…ங். நிலா..நிலா தானே! எனக்கு ஞாபகத்திலேயே நிக்கலை. முறையா பொண்ணு பார்த்து …பூ வச்சு நிச்சயம் பண்ணி பத்திரிகை வச்சு மண்டப வாசல் வழியா வந்திருந்தா எல்லாமும் ஞாபகம் இருக்கும் ….நீ திடுதிப்புன்னு சைக்கிள் கேப்புல உள்ளே நுழைஞ்சவ தானே….!”
நிலவழகி உடல் நடுங்கியது. இதழ்கள் துடித்தன. தீபலஷ்மி கூட திகைத்துப்போய் விழித்தாள். நிலாவின் நிலைமையைக் கண்டதும் மனம் வருந்தியது. நடந்து முடிந்த அனர்த்தத்தில் நிலாவும் அவள் குடும்பமும் சற்றே முகம் சுருக்கியிருந்தாலும் திருமணம் நடந்திருக்குமா? இந்த விஷயம் நந்தனுக்கும் நம்ம குடும்பத்துக்குமே எத்தனை பெரிய இழுக்கு! இந்தப் பெரியண்ணி புரிந்து பேசுகிறாளா …இப்படியா…பேசுவது?
பின்னாலிருந்து அதட்டல் கேட்டது.
“மஞ்சுளா..!”
ரங்கநாயகியின் வெங்கலக் குரல்!
“என்னம்மா! மூத்த மருமகளே! சைக்கிளோட்டக் கத்துக் போறியா என்ன? ஆனா என் சின்னப் பேத்திக்கு ஸ்கூட்டி ஓட்டிதான் பழக்கமாம் …எப்படி வசதி நீ சைக்கிளோட்டப்பழகிறியா? ஸ்கூட்டி ஓட்டப்பழகுறியா? “
“எனக்கெதுக்கு அதெல்லாம்? நான் காருல போறவ “
“ஏம்மா நிலா நீ கார் ஓட்டுவியா? “
அவள் பதில் சொல்லுமுன்னே
மஞ்சுளா பதில் தந்தாள்…
“அவ முன்னேபின்னே காரைப்பார்த்திருக்காளான்னு கேளுங்க “
மீண்டும் நிலா வாய் திறக்குமுன்னே வேறொரு உறவுக் காரப் பெண் அனைவரையும் அழைத்துவிட்டுப் போனாள்.
அன்று மாலையே தீபலஷ்மி தன்தாயிடமும் தமக்கையிடமும் நடந்ததை அஞ்சல் செய்தாள். மரகதம் கையை பிசைந்தாள்.
“இந்தத் தேள் கொடுக்கு வாய் என்னிக்கு தான் நிக்குமோ …சரி!சரி!நான் பார்த்துக்கிடுறேன் “
அதன் பிறகு அவர் புது மருமகளைக் காவல் காத்தார் எனலாம்.
காலையில் குலதெய்வம் கோயிலுக்கே நேரே வந்து விடுவதாகக் கூறி விடை பெற்றனர் நிலாவின் பெற்றோர். மகளுக்கு அப்போதைய தேவைக்கானதை கொண்டு வந்தவர் கோயிலுக்கு நேராக வந்துவிட்டு கோயிலில் வைத்துப் பேசலாம் என்று விடை பெற… பெண்ணவளுக்கோ பயம் எழுந்தது.
அன்றிரவு …..
அவளும் அவனும் சந்திக்க ப் போகும் ராத்திரி.
நிலவழகி தன்னந்தனியே நிற்பது போல உணர்ந்தாள்.
கண் கலங்க விடை கொடுத்தாள்.
இரவு அவளுக்காக என்ன வைத்திருக்கிறதோ?
(சஞ்சாரம் தொடரும்)
முந்தையபகுதி – 2 | அடுத்தபகுதி – 4