மரப்பாச்சி – 1 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

 மரப்பாச்சி – 1 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

அத்தியாயம் – 1

ண்ணாடி முன் நின்று தன்னை முன்னும், பின்னும் பார்த்தாள் பிருந்தா.. இருபுறமும் ஒரே போல்தான் தோன்றியது அவளுக்கு.. படைத்த பிரம்மனை ஒரு வினாடி மனதில் திட்டித் தீர்த்தாள்.. ‘ஏன் என்னை இப்படிப் படைத்தாய்? பெண்மைக்குரிய எந்தலட்சணமும் என் உடம்பில் ஒட்டிக் கொள்ளவில்லையே? செங்குத்தான ஒரு நேர்கோடு போல் இருக்கிறேன், எந்த ஆண் மகனுக்கு என்னைப் பிடிக்கும்? கண்ணாடி முன் கிடந்த பட்டுப்புடவை அவளை கேலியாகப் பார்த்து சிரிப்பதாய் பட்டது அவளுக்கு.. அது கேள்வி கேட்டது.. ‘எத்தனை தடவை உன் மேனியில் ஏறி இறங்கிவிட்டேன், எனக்கே அலுப்பாகிவிட்டது.. எவனாவது உன்னை ஓகே சொன்னானா? பின் மீண்டும் மீண்டும் ஏன் விக்ரமாதித்தன் வேதாளமாய் என்னைச் சுற்றிக் கொண்டு ஆண்கள் முன் நிற்கிறாய்? வந்தவன் பார்த்ததும் உன்னைப் பிடிக்கவில்லை என்று கிளம்பப் போகிறான், பின்னர் எதுக்கு இந்த பிரம்மப்பிரயத்தனம்?’ அதன் கேள்விக்கு வாய்விட்டு பதில் கூறினாள் ‘என் தாய், தந்தை ஆத்ம திருப்திக்கு…’ என்று.

பிருந்தா வயது 28, நல்ல நிறம், திருத்தமான முகம், நல்ல பால்வெள்ளை நிறம், புகைப்படத்தில் பார்ப்பவர், ‘அட அழகாய் இருக்கிறாளே’ என்று எண்ணுவர் ஆனால் நேரில் பார்த்தால் பின்வாங்கிவிடுவார்கள். ஒல்லியாய் நெடு நெடு உயரம்.. உயரம் மட்டுமே, பெண்மைக்குரிய மற்ற எந்த வளைவு நெளிவுகளுமில்லாத ஒரு ‘மரப்பாச்சி’ பிருந்தா.. அவளுக்குக் கீழே இரண்டு பெண்கள். இன்றும் அவளை பெண் பார்க்க வருகிறார்கள்.. கீழே இருக்கும் இரு தங்கைகளுக்கும் வழி அமைக்க அவள் இந்த பெண் பார்க்கும் நாடகத்தில் அரிதாம் பூசி நடிக்க ஆரம்பித்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது.. நாடகம் தொடர்ந்து நடக்கின்றதே தவிர கல்யாணம் என்ற சுபத்திரை இன்னும் விழாமல் அந்தரத்திலே தொங்கிக் கொண்டே இருக்கிறது.

வேண்டா வெறுப்பாய் அந்த அரக்குக் கலர் பட்டுப் புடவையை கையில் எடுத்து தோளில் சாய்த்தாள், அவள் நினைத்தாள் ‘இந்தப் புடவைக்கு போரடித்து அது என்னை எள்ளி நகையாடிக் கொண்டிருக்கிறது அதற்கும் போரடித்து விட்டிருக்கும் அல்லவா?’ எண்ணிக் கொண்டே புடவையை கொசுவம் வைத்து இடுப்பில் சொருகி முந்தானையை போட்டுக் கொண்டாள்.. பவுடர் டப்பாவை கையில் எடுத்தவள் இதைப் பூசினாலும், பூசினாற் போல் இல்லாத என் உடல்வாகைப் பார்க்கிறவன் போய் பதில் சொல்லுகிறோம்’ என்ற வாக்கியத்தை உதிர்த்துவிட்டுப் போகப் போகிறான், ‘பிறகு எதற்குப் பவுடர்?’ எண்ணியவள் பவுடர் டப்பாவை ஓரமாக வைத்துவிட்டு ஸ்டிக்கர் பொட்டை நெற்றியில் ஒட்டிக் கொள்ளவும் அறைக்கதவு தட்டும் சத்தமும் கூடவே அவளின் தாய் தமயந்தியின் குரலும்..

“பிருந்தா.. பிருந்தா எவ்வளவு நேரம் ஆச்சு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்ற நேரமாச்சு, சீக்கிரம் வெளியே வா?” உள்ளிருந்தே குரல் கொடுத்தாள்..

“சீக்கிரம் வந்து?” கேலியான கேள்வி தமயந்தியை தாக்கியது. மகள் என்ன அர்த்தத்தில் கேட்கிறாள் என்பது அந்தத் தாயுள்ளத்திற்குத் தெரிந்தே இருந்தது.. அவளால் பிருந்தாவின் கேள்விக்கு பதில் கூற முடியவில்லை, அவள் வந்து விழுந்து நமஷ்கரிக்கப் போகும் எத்தனாவது வரன் இது என்பது அவளுக்கும் மறந்துவிட்டது அத்தனை நீளமான எண்ணிக்கை அது.. மகளின் மனநிலை அறிந்து மேற்கொண்டு அறையைத் தட்டாமல் திரும்பினாள் தமயந்தி.. நிமிடங்கள் கரைந்திருக்க அறையிலிருந்து வெளியே வந்தாள் பிருந்தா.. தங்கைகள் அபிநயா, கார்த்திகா இருவர் முகத்திலும் சந்தோஷத்தின் சாயை கொஞ்சமும் இல்லை, அவநம்பிக்கை மட்டும் நிரம்பி வழிந்தது.. முறையே அவர்களுக்கு வயது 26, 24.. அக்கா தங்கள் திருமண வாழ்க்கைக்கு ஒரு தடை கல்லாய் மாறி நிற்பதால் கொஞ்சம் கொஞ்சமாய் பிருந்தா அவர்களுக்கு எதிரியாக மாறிக் கொண்டிருந்தாள்.. இத்தனைக்கும் பிருந்தாவின் உழைப்பில்தான் அந்தக் குடும்பமே உக்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது.. படிப்பில் பிருந்தா கெட்டி.. டிகிரி முடிந்ததும், பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் முதல் முயற்சியிலேயே அரசு வேலையைப் பெற்றுவிட்டாள் அவள், தாசில்தார் அலுவலகத்தில் அப்பர் டிவிஷன் கிளர்க் இப்பொழுது அவள்.. தந்தை தாய், இரு தங்கைகள். தங்கைகள் டிகிரி முடித்து விட்டார்கள்.. படிப்பில் இருவரும் தர்த்திகள்.. தத்தித் தத்தியே இருவரும் டிகிரி பாஸ் செய்திருந்தனர்.. அவர்கள் வேலைக்குச் செல்லும் முடிவில் எல்லாம் இல்லை, கல்யாணம் முடித்து செட்டிலாக வேண்டும், அதற்கு மூத்தவள் திருமணமாகி வழிவிட வேண்டும்.. அது நடப்பனா எங்கிறது! அவள் ராஜகுமாரனை கேட்கவில்லை, ஒரு சாதாரண சிப்பாயையே கேட்கிறாள், அவர்கள் கூட அவள் அங்க லாவண்யத்தைப் பார்த்து நிராகரித்து விடுகிறார்கள்.. நாளுக்கு நாள் தங்கைகளுக்குப் பாரமாக இருக்கிறோமே என்ற கவலை அவளை வாட்டத் தொடங்கியிருந்தது.. தரகர் இந்தச் சம்பந்தம் கண்டிப்பாக தகையும் என்று கூறியிருந்தார்.. அதனால் தாய் தமயந்தியும், தந்தை ராகவனும் நம்பிக்கையாய் காத்திருந்தனர் வரும் ராஜகுமாரனுக்காக..

நேரம் மாலை மணி ஆறு முப்பது, அந்த ஓலா அவர்கள் வீட்டின் முன்நின்றது.. அந்தக் குடும்பம் பிருந்தாவின் வீட்டிற்குள் பிரவேசித்தது.. தாய், தந்தை, மணமகன் மாதவன், அவன் தமக்கை,அவளுடைய கணவன் ஐந்து பேர்.. சம்பிரதாயங்கள் இனிதே நடந்தேறியது, ஸ்வீட், காரம், காஃபி என்று..  வந்தவர்கள் கண்கள் பிருந்தாவை அளந்தது.. அவர்கள் முகங்களில் சோபை  இல்லாமல் இருந்ததை பிருந்தா படித்துவிட்டாள்.. இந்தப் பெண் பார்க்கும் படலமும் தோல்விதான், அவள் முடிவெடுத்துவிட்டாள்.. பையன் மாதவன் மட்டும் அவளை நீண்ட நேரமாய் பார்த்துக் கொண்டே இருந்தான்.. வழக்கமான போய் பதில் கூறுகிறோம் என்று கிளம்பியது அந்தக் கோஸ்டி..

காஃபி பலகாரத் தட்டுகளை எந்திரத்தனமாய் எடுத்துக் கொண்டு கிளம்பினாள் தமயந்தி.. அபிநயா, கார்த்திகா இருவரும் விரக்தியில் எதோ பேசிக் கொண்டார்கள்.. பிருந்தா தன் அறைக்கட்டிலில் அமர்ந்தாள்.. வெளியே தாயிடம் அபிநயா கூறினாள்..

“ஏம்மா வீட்டுல எத்தனை ஒளவையார்களை வச்சிருக்கப் போற?”

தமயந்தி கிசுகிசுத்தாள்..

“ஏண்டி பெரியவ காதுல விழப் போகுது சும்மா இருடி”

“விழட்டும்.. விழட்டும் இப்படியே இருந்தா எல்லாரும் ஔவையார் தான் யாருக்கும் கல்யாணம் காட்சி ஆகாது”

“நடக்கும்டி.. என் பொண்ணுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கும்.. அந்த பழனி முருகன் அவளுக்கு ஒரு நல்ல சேதி சீக்கிரம் சொல்லுவார்”

“ஆமா.. சொல்லிடக் கில்லிடப் போறார்.இந்த சந்தானம் காமெடி நடிகர் ஒரு காட்சியில மனோபாலவை பார்த்துச் சொல்லுவார் ‘பொண்ணாய்யா பெத்து வச்சிருக்கற, தாய பாக்சுக்கு தாவணி கட்டி வச்சிருக்கறன்னு..இங்க நீ தாய பாக்சுக்கு பட்டு கட்டி வச்சிருக்கற அவ்ளவுதான்”

“அடிப் பாவி என்ன பேசுறேன்னு புரிஞ்சு தான் பேசுறியா? அவ உன் அக்கா..அவ உழைப்புல தான் எல்லாரும் உக்கார்ந்து சாப்பிடுறோம் அதை மறந்திட்டுப் பேசாத தெய்வத்துக்கே அடுக்காது. இப்படிப் பேசினா உன் நாக்கு அழுகிப் போயிடும்”

“சோறு மட்டுமே வாழ்க்கை ஆயிடாதும்மா உலகத்துல வேற விஷயங்களும் இருக்குது அது காலா காலத்துல நடக்கணும்.இப்படி நந்தி மாதிரி குறுக்கே நின்னா எங்க நாக்கு இல்ல உடம்பு சீக்கிரம் கொஞ்சம் கொஞ்சமா அழுகி ஆகாமப் போயிடும்..”

வார்த்தைகளில் தீயைத் தடவி தங்கை பேசியது பிருந்தாவின் காதுகளில் துல்லியமாக விழுந்தது. சிலையாய் அமர்ந்திருந்தவள் கண்களில் நீர் பொத்துக்கொண்டு உடைப்பெடுக்க ஆரம்பித்திருந்தது!
(தொடரும்…)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...