கொன்று விடு விசாலாட்சி – 10 | ஆர்னிகா நாசர்

 கொன்று விடு விசாலாட்சி – 10 | ஆர்னிகா நாசர்

அத்தியாயம் – 10

சாட்சிக்கூண்டில் ஏறி நின்றான் விசாலாட்சியின் கடைக்குட்டி பிரசாந்த்.

“நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறில்லை!”

திருப்பிச் சொன்னான்.

ஹேமந்த்குமார் எழுந்து அருகில் போனான்.

“நீங்க சீனிவாசன்-விசாலாட்சி தம்பதியரின் மூன்றாவது மகன் பிரசாந்த்தானே?”

”ஆமா…”

“ஜீவிதாவும் கீர்த்தியும் உங்க மூத்த சகோதரிகள்?”

”ஆமா…”

“வழக்கு 11மாசமா நடக்குது. உங்க சகோதரிகள் உங்க தாயாருக்கு எதிரா சாட்சி சொல்லிருக்காங்க. இதுவரைக்கும் நீங்க எந்த பக்கமும் சாயாம இருந்தீங்க. இப்ப திடீர்னு குற்றஞ்சாட்டப்பட்டுள்ள விசாலாட்சியம்மாவுக்கு ஆதரவா சாட்சி சொல்ல கிளம்பியிருக்கீங்களே… எப்டி?”

“எனது தந்தையார் தாயாரை அடித்தது உண்மை ஆனா அதுக்காக என் தாயார் தந்தையாரை சுட்டுக்கொன்றது டூ மச்னு நினைச்சேன். ஆனா இந்த 11மாசமும் ஆக்கப்பூர்வமா யோசிச்சேன். சினிமா நண்பர்க்ளும் தகுந்த அறிவுரை கூறுனாங்க. கண்மூடித்தனமான கோபத்லயிருந்து விடுபட்டேன். என் தாயாருக்கு ஆதரவா உண்மையை போட்டு உடைக்க கிளம்பிட்டேன்…”

“உங்க தந்தை சீனிவாசன் உங்க தாயை அடிச்சார்னு உங்களுக்கு யார் சொன்னாங்க?”

“யாரும் சொல்லல என் கண்ணால பாத்தேன்!”

“எப்ப?”

“என்னுடைய 8வயசிலயிருந்த பத்து வயசுக்குள்ள பலமுறை…”

“இந்த வாய்ப்பு உங்களை விட வயதான உங்கக்காமார்களுக்கு கிடைக்கல…”

“ஆமா!”

“என்ன பாத்தீங்க?”

கோர்ட் உன்னிப்பானது.

“சின்ன வயசிலயிருந்தே எங்க வீட்ல மூணு பெட்ரூம். ஒண்ணு எங்கம்மாப்பா படுக்க இன்னொன்று அக்காகளுக்கு மூணாவது எனக்கு சின்ன வயசில எனக்கு இருட்டைக் கண்டா பயம் அதனால யார் கூடயாவது சேந்து படுத்துக்கிரேன்னுவேன். அம்மா மறுத்திருவாங்க. ஒரு நா அசந்து தூங்கிட்டுருந்தேன். யூரின் பாஸ் பண்ண எழுந்தேன். பாத்ரூமுக்கு எங்கம்மா பெட்ரூமைத்தாண்டித்தான் போவனும். இருட்டுக்கு பயந்து பயந்து போனேன். எப்பவும் இறுக்கமா பூட்டிருக்ற ஜன்னல் லேசா திறந்திருந்துச்சு. அது வழியா ஏதோ சத்தம்!”

“என்ன பண்ணீங்க?”

“எட்டிப் பாத்தேன். எட்டல!”

“அப்றம்?”

“ஸ்டூலைப் போட்டு ஏறி பார்த்தேன். அங்க…”

“அங்க?”

“ஆடையில்லாம எங்கம்மாவை நிறுத்தி அடிச்சிக்கிட்டுருந்தார் எங்கப்பா… ஐஸ்கட்டி பொட்டலத்தால அடி…. சப்தம் குறைவான வசவு..ரொம்ப காதத்தீட்டி கேட்டேன் சார்… (அழுதான்) கெட்ட கெட்ட வார்த்தைகள் சார் இவர் அடிக்கு கத்தாம இருக்க எங்கம்மா புடவை நுனியை சுருட்டி தனது வாய்க்குள்ளேயே திணிச்சிருந்தாங்க. மொதல்ல எனக்கு ஒண்ணும் புரியல. ஏதோ தப்புத்தண்டா நடக்குது. ‘பள்ளித் தோழர்கள் சொல்ற அம்மா-அப்பா விளையாட்டு இதுதானே?’ அப்டின்னு குழம்பினேன். அப்றம் ஒருஅய்டியா பண்ணினேன்!”

“என்ன ஐடியா?”

“அம்மாப்பா பெட்ரூம் ஜன்னல்ல யாருக்கும் தெரியாம ஒரு ஓட்டை போட்டு வச்சேன்… வயிறு மூட்ட தண்ணி குடிச்சிட்டு படுப்பேன்… அப்பத்தானே நடுராத்திரில யூரின் பாஸ் பண்ண எழலாம். எழுந்து தினம் தினம் அந்த கொடூரமான காட்சிகளை பார்த்தேன்…”

“அப்றம்?”

“ரெண்டு மூணுதரம் பாத்தவுடனேயே அப்பா அம்மாவை கொடுமைப் படுத்துவது எனக்குத் தெரிஞ்சு போச்சு!”

“யார்கிட்டயும் சொன்னீங்களா?”

“சொல்லல..”

“ஏன்?”

“பயம் நம்ப மாட்டாங்கன்னு பயம்.”

“அட்லீஸ்ட் உங்கம்மாவிடம்  கேட்டிருக்கலாமே?”

“கேட்டேனே…”

“நீங்க கேட்டதை உங்கம்மா தனது வாக்குமூலத்தில் சொல்லலையே… ஏன்?”

“ தெரியல சார்!”

“சரி… நீங்க கேட்டதுக்கு உங்கம்மா என்ன சொன்னாங்க?”

“இது குடும்ப ரகசியம்டா பிரசாந்த் யார்கிட்டயும் சொல்லிக்க கூடாதுன்னு தன் தலைமேல கை அடிக்கச் சொல்லி சத்தியம் வாங்கிக்கிட்டாங்க!”

“உங்கப்பாவின் அடிக்ற பழக்கம் தொடர்ந்தது அறுபதாம் கல்யாணம் வரைக்கும்னு  உங்களுக்குத் தெரியுமா?”

“தெரியும்?”

“எப்டி?”

“அதன்பின்னாடி 14வருடங்களில் மும்முறை எங்கப்பா எங்கம்மாவ அடிப்பதை பாத்ருக்கேன்…”

“உங்கம்மா நிலைல நீங்க இருந்திருந்தா என்ன பண்ணுவீங்க?”

“அப்ஜக் ஷன் ஓவர் ரூல்டு!”

“கல்யாணத்து ஆரம்பத்லன்னா புருஷனை விட்டு ஓடிப் போயிருப்பேன். பத்து வருஷம் கழிஞ்சப்பிறகுன்னா டைவர்ஸ் வாங்கி பிரிஞ்சிருப்பேன். முப்பது வருஷத்துக்கு பிறகுன்னா பிள்ளைகளோட சேந்து தங்கியிருப்பேன். ஆனா எந்த சூழ்நிலைலயும் கொலை செய்ய மாட்டேன். செஞ்சு… கைகளையும் ஆன்மாவையும் கறைப்படுத்திக்க மாட்டேன். மரணத்துக்குப் பிறகு எல்லாரும் அவங்கவங்க பாவங்களுக்கு இறைவனிடம் பதில் சொல்லி ஆவணும். யாரும் அதிலயிருந்து தப்பிக்க முடியாது…”

பப்ளிக் பிராஸிக்யூட்டர் எழுந்தார்.

“நீங்க சினிமா நடிகர் தானே?”

“ஆமா… வளரும் நடிகன்!”

“எத்னை பக்கம் டயலாக் குடுத்தாலும் மனப்பாடம் பண்ணி குரல் ஏற்ற இறக்கத்தோட ஒப்பிச்சிருவீங்கள்ல….”

“ஆமா…. அதானே என் தொழில்!”

“ஸோ…. உங்க வாக்குமூலமும் டிபென்ஸ் லாயர் எழுதிக்கொடுத்த டயலாக்னு வச்சுக்கலாமா?”

“இல்ல… நீங்க சொல்றது தப்பு!”

“விசாலாட்சி சொல்ற கதைக்கு கடவுள்கிட்டக் கூட ஆதாரம் இல்லை உங்ககிட்ட 11மாசத்துக்கு முன்னாடியே இருந்திருக்கு. அப்ப வந்து சொல்லாம முந்நூத்தி சொச்ச நாள் தூங்னிங்களா?”

“மேல்ஸாவினிஸ மாயை என்னை கட்டி போட்டு விட்டது. அறுத்தெறிந்து விட்டு வந்தேன்!”

“ரொம்ப சினிமாட்டிக்கா பேசுரீங்க…”

“இது உங்கள் பார்வை!”
“உங்கள் சாட்சியம் பொய்… டிபன்ஸ் லாயர் சொல்லிக் குடுத்ததை வந்து ஒப்பிக்கிறீர்கள் என கூறுகிறேன்…”

“அப்படியல்ல…”

“உங்கள் தாயாரை உங்கள் தந்தையார் அடித்தததை நீங்கள் பார்க்கவில்லை. இந்த வழக்கிலிருந்து உங்கள் தாயாரைக் காப்பாற்ற பொய் சாட்சி கூறுகிறீர்கள் என குற்றஞ்சாட்டுகிறேன்!”

“அப்படியல்ல…”

“தட்ஸ் ஆல் யுவர் ஆனர்!” தளர்வாய் நடந்து இருக்கையில் அமர்ந்தார் பி.பி.

“ஜட்ஜ்மென்ட் ரிஸர்வ்டு!” எழுந்தார் நீதிபதி.

பத்து நாட்கள் கழித்து-

கோர்ட்

அனைவரும் பரபரப்பாய் கூடியிருந்தனர்.

நீதிபதி தனது தீர்ப்பை வாசித்தார்.

“இவ்வழக்கின் அனைத்து அம்சங்களும் குற்றம் சாட்டப்பட்டுள்ள விசாலாட்சிக்கு பாதகமாய் இருந்தாலும் விசாலாட்சியின் ஒப்புதல் வாக்குமூலமும் மகன் பிரசாந்த்தின் அதிரடி சாட்சியமும் வழக்கை திசை திருப்பிவிட்டன. விசாலாட்சியின் தற்காப்புக்காகவே இக்கொலை நடந்தது என இக்கோர்ட் தீர்மானிக்கிறது. வழக்கு  நடந்த காலத்தை அடையாளத் தண்டனையாய் அறிவித்து விசாலாட்சியை விடுதலை செய்கிறேன்!”

பப்ளிக் பிராஸிக்யூட்டர் நெற்றியை மேஜையில் முட்டிக் கொண்டார்.

ஹேமந்த்குமார் சீனியர் சந்தானத்தின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றான்.

கோர்ட் சம்பிரதாயங்களை முடித்து புதிய பறவையாய் வெளி வந்தாள் விசாலாட்சி.

இருமகள்களும் அழுதபடி நின்றிருந்தனர்

“எங்களை மன்னிச்சிரும்மா. உண்மை தெரியாம உனக்கு எதிரா சாட்சி சொல்லிட்டம். மொத்ல்லயே  பிரசாந்த் விஷயத்தை எங்ககிட்ட சொல்லிருக்கலாம் வாம்மா… எங்க ரெண்டு பேர் வீட்ல யார் கூடயாவது தங்கிக்க!”

“மருமகன்கள், குழந்தைகள் எப்டி இருக்காங்க?”

“நல்லா இருக்காங்கம்மா… நீங்க?”

“வேண்டாம்மா. தனியாவே இருந்துக்கிரேன்…”

வக்கீல் ஹேமந்த்குமாருடன் நடந்தாள் விசாலாட்சி.

தூரத்தில் மரத்தடியில் பிரசாந்த்.

நெருங்கினாள்.

“வாம்மா. இனி நீ என் கூட தங்கிக்கலாம்!”

“அதெல்லாம் இருக்கட்டும் ஏண்டா பொய் சொன்ன?”

“என்ன பொய்ம்மா?”

“அப்பா என்னை அடிச்சத நீ பாத்தத சொன்னது பச்சைப்பொய்!”

“அப்டின்னா அப்பா உன்னை அடிச்சதே இல்லல்ல?”

“அடிச்சார்டா உலகத்தோட எந்த ஜீவராசியும் பாத்திராத மேனிக்கு அடிச்சார். ஏண்டா பொய் சொன்ன?”

“எனக்கு அப்பாவும் உசுருதான். அம்மாவும் உசுருதான் அப்பாவ நீ சுட்டவுடனே நான் கோபமா இருந்தேன். ஆனாலும் சாதகமாகவோ பாதகமாகவோ சாட்சி சொல்ல நா வரல. நாளாக நாளாக எனக்குள்ளார ஒரு ஞானோதயம். ரெண்டுல ஒரு கண்ணு போயிருச்சு. இன்னொரு கண்ணும் போகவிடலாமா? தந்தைக்கு தோட்டா தாய்க்கு தூக்குக்கயிறா? தோட்டாவைத்தான் தடுக்க முடியவில்லை. தூக்குக்கயிற்றையாவது குறுக்கே விழுந்து தடுப்போமே? முடிவெடுத்தேன், தடுத்தேன், இன்னமுமே என் தந்தை 32வருஷம் உன்னை விடாம அடிச்சார்ன்றத என்னால ஜீரணிக்க நம்ப முடியல… அப்டி அவர் அடிச்சருந்தார்னா அவர் சார்புல நான் உன்கிட்ட மன்னிப்பு கேக்றேன்…. நீ பொய் சொல்லிருந்தன்னா அந்த பாவத்தின் சம்பளத்தை க்டவுள் எனக்குத் தரட்டும்! வாம்மா என்னோட…”

“என் மகள்களை விட  நீ மோசம். அவங்க நேரடியா தாக்னாங்க. நீ மறைஞ்சு தாக்ர. உன்னுடைய வார்த்தைகளும் என் மீதான அடிதான். உன்னுடைய கருணைக்கு நன்றி. வருகிறேன்!”

கும்பிட்டபடி பிரசாந்த் விலக-

விசாலாட்சி ஹேமந்த்குமாரிடம், “எனக்காக நீ துடியா வாதிட்ட? உனக்கு ஃபீஸ் தரணுமில்ல? புருஷன் வழி சொத்தெல்லாம் மூணு பிள்ளைகளுக்கும் தானமா தந்திரப் போறேன். இப்ப என் கை வெறுங்கை. என் காது தோடும் கழுத்து செயினும் பத்தாயிரம் பெறும். எடுத்துக்க. ‘ஆனா எனக்கும் உங்க மேல நம்பிக்கையில்லை இது என் மொத கேஸ் ஜெயிச்சாத்தான் எனக்கு எதிர்காலமே அதான் உயிர குடுத்து வாதம் பண்ணினேன்’னு சொல்லிராதப்பா!”

அழுதான்.

அவளின் கைகளை பற்றிக் கொண்டான் ஹேமந்த்

‘நான் நம்புரேன்ம்மா. இந்த உலகத்ல இருக்ற அய்நூத்தி சொச்சம் கோடி மக்களும் நம்பாட்டியும் நான் நம்புரேன்ம்மா. நம்பாதவங்களுக்கு நீங்க தாயா போய் சேர விரும்பல. உங்களையே நம்புர எனக்கு தாயா வந்து எங்க குடும்பத்த வழி நடத்துவங்கம்மா…”

சில நொடிகள் யோசித்து புன்னகைத்தாள்.

“உன் கூட வரேன் மகனே. எனக்கு மருமகளையும் பேரனையும் பாக்க ஆசை!”

விசாலாட்சியம்மா ஹேமந்த்துடன் புறப்பட்டாள்.

கோர்ட் வளாகம் உறைந்து நின்றது.

(முற்றும்)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...