வேப்ப மரத்துப் பூக்கள் – 10 | ஜி ஏ பிரபா

 வேப்ப மரத்துப் பூக்கள் – 10 | ஜி ஏ பிரபா

       

அத்தியாயம் – 10

                             பிரார்த்தனை அளவற்ற சக்தி படைத்தது. அந்த

                             சக்தியை அதிகரிப்பது நம்பிக்கை. நம்பிக்கையுடன் கூடிய

                             இடைவிடா பிரார்த்தனை நிச்சயம் வெற்றியைத் தரும்.

                             ஹால் அழகாக அலங்கரிக்கப் பட்டு, காகிதத் தோரணங்கள்

வரிசையாக அலங்காரமாகத் தொங்கியது. செயற்கைப் பூக்களால் கட்டப் பட்ட மாலைகள், நடுநடுவில் ரோஜாப் பூக்கள் வைத்து கட்டியிருந்தது.

          வரிசையாகச் சேர்கள். மேடையில் நாற்காலிகள் போடப் பட்டு எதிரில் சின்ன டேபிள். அதில் தண்ணீர்  பாட்டில்கள். பூக் கிண்ணத்தில் இயற்கையான பூக்களே அழகாகக் கட்டி வைத்திருந்தது.

          ஹால் முழுதும் நறுமணம் பரவி சன்னமாய் இசை ஒலித்துக் கொண்டிருந்தது.

          வீணை இசை. மெல்லிய நாதம் ஹால் முழுதும் நிரம்பி இருந்தது.

          ரகுராமன் ஒரு நிமிஷம் தன்னை மறந்து நின்றார். கல்யாணிக்குப் பிடித்த வீணை இசை. வீட்டில் அவள் தனியாக ஒரு கேசட் வைத்திருந்தாள். மாலை அவர் வந்து விட்டால் ரூமில் வீணை இசைதான் ஒலிக்கும். அவளுக்காகவே நிறைய வீணைக் கலைஞர்களின் கேசட் வாங்கிக் கொண்டு வந்து தருவார்.

          இந்த இசை சற்று வித்தியாசமாக இருந்தது.

          பழைய பாடல்களின் மெலடி, ஹிந்தி மெலடி பாடல்கள் என்று இதமாக வீணையில் இழைந்தது. கண்மூடி ரசித்தபடி நின்றார்.

                   “என்ன ரகுராமன் அப்படியே நின்னுட்டீங்க?”- பலராமன்.

          “இசை ரொம்ப நல்லா இருக்கு பலராமன்.”

                   “இது ஒரு பெண் வாசித்து பதிவு செய்தது. உங்களுக்குத் தெரிந்த பெண்தான். மௌனிகா.”

          “வாவ்.” வியப்புடன் குரல் எழுப்பினார் ரகுராமன். “ வீணை கூட வாசிப்பாளா?”

          “அவ அம்மா சூப்பரா பாடுவா?”

          பலராமன் குரலில் ஒரு மயக்கம் இருந்தது. பொதுவாக அவர் பெண்கள் விஷயத்தில் ஒரு மாதிரி என்றாலும் அவர்களின் அமைப்பில் சிறிது அடக்கியே இருப்பார். ரகுராமன் இன்சார்ஜ் என்பதால் அவர் இந்த மாதிரி விஷயங்களில் சிறிது கண்டிப்பாகத்தான் இருப்பார்.

         மேலும் அவர் முதலீடுதான் அதிகம். சரியாகத் திட்டமிட்டு, தொழில் ஆரம்பித்தால் வெற்றி கிடைக்குமா? எங்கே தொடங்கலாம், எப்படி மார்க்கெட்டிங் என்பதெல்லாம் மிகச் சரியாக திட்டமிடுவார்.

          எனவே எல்லோருக்கும் அவரிடம் சிறிது மதிப்பு அதிகம். அவர் பேச்சுக்கு தலை அசைப்பவர்கள்தான் அதிகம். பலராமனுக்கு அவரிடம் எப்படியாவது நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று ஆசை. இந்த நிகழ்ச்சியின் மூலம் பேர் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து விழா ஏற்பாடுகளை தான் செய்வதாகக் கூறி ஏற்றுக் கொண்டார்.

                   ரகுராமன் எல்லாவற்றையும் ரசித்தார்.

          “காலை டிபன், பத்து மணிக்கு ஒரு லெமன் ஜூஸ், மதியம் லஞ்ச், மாலை மூன்று மணிக்கு ஒரு சுண்டல், காபி. போதும்தானே?”

          “எனஃப். யார் சமையல்? நல்லா இருக்குமா?”

          “அருமையா இருக்கும். நான் கேரண்டி. நான் அங்கதான் சாப்பிடறேன்.”

          ரொம்பச் சரி. என்று நகர்ந்தார் ரகுராமன். விழா ஏற்பாடுகள் திருப்தியாக இருந்தது. தொழில் முனைவர்களுக்கு பரிசுகள் வழங்க வேண்டி இருந்தது. அவர் அனைவரையும் தொழிலதிபர் என்றுதான் கூறுவார்.

          பத்து ரூபாய் போட்டாலும் அது அவர் ஆரம்பிக்கும் தொழில் அவரது திறமையை நம்பி தொடங்கிய தொழில் அவரும் தொழில் அதிபர்தான் என்று மதிப்பு தருவார். இன்றைய நிகழ்ச்சியில் அவர்களின் அமைப்பின் மூலம் உதவி பெற்று இன்று வெற்றிகரமான தொழில் அதிபராக இருக்கும் ஐவரிடம் முழுப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு அவர்கள் விலகிக் கொள்ளப் போகிறார்கள். இனி லாபமோ, நஷ்டமோ அது அவரவர்கள் பொறுப்பு.

          ரகுராமன் மண்டபத்தின் வாசலுக்கு வந்தார். உறுப்பினர்கள் வர ஆரம்பித்து விட்டார்கள். அவர் நண்பரின் இரண்டு பெண்கள் வரவேற்பில் நின்றார்கள். ரகுராமன் முன்புறம் நின்று வேடிக்கை பார்த்தார். எந்த நினைப்பும் இன்றி இப்படி நிற்பது நன்றாகத்தான் இருந்தது.

          தொலைவில் கேட், உள்ளே வரும் கார்கள், மண்டப மதிசுவரைச் சுற்றி வளர்ந்திருந்த குரோடன்ஸ் செடிகள் எல்லாமே பார்க்க ரசனையாக இருந்தது. இங்கு வருபவர்கள் இதை எல்லாம் ரசித்திருப்பார்களா? அவசர,உலகத்தில் ரசனைக்கு இடமில்லை. கடமைக்கு என்றுதான் இனி காரியங்கள் நடக்கும்.

          ஆனால் இன்று இந்த விழாவின் அமைப்புகள் நன்றாக இருந்தது. பார்த்துப் பார்த்து ஏற்பாடு செய்திருந்தார்கள். அமைப்பாலரைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் இன்னும் வரவில்லை.

          காலை உணவுக்கான அயிட்டங்கள் எல்லாம் ஆட்டோவில் வந்து இறங்கியது. உடன் அதிலிருந்து மௌனிகா இறங்கினாள்.

          “ஹாய் , என்ன அதிசயம். உணவு ஏற்பாடு நீதானா?”

          “தீர விசாரிக்காம பேசக் கூடாது. இது அங்க அபார்ட்மென்ட்ல இருக்கறவங்க. நான் உதவிக்கு வந்தேன். ஏன்னா இந்த விழா ஏற்பாடுகளைக் கவனிக்கறது எனது தாயார்.”

                   “மெயின் ஆளையே இன்னும் காணோமே?”

                    “வருவாங்க, சரியான சமயத்துல, சரியான நேரத்துல தேவதை மாதிரி வந்து நிற்பாங்க.”

                   “பெரிய இன்ட்ரோ தரியே. பாக்கலாம்.”

          “பாத்தா அப்படியே அசந்து போய் நின்னுடுவீங்க”- மௌனிகா ஒரு மர்மப் புன்னகையோடு எவர்சில்வர் டிரம், தூக்கு, வாளி, கரண்டிகளை எடுத்து வைத்தாள்.

          “நான் போய் காபி, ஜூஸ் அயிட்டம்களை தூக்கிட்டு வரேன்”

                   “மதியம் சாப்பாடு? அதை உங்கம்மா எடுத்துட்டு வருவாங்களா?”

                   “இல்லை. அதுவும் நானே. எல்லாம் நானே”

          சிறிது ஏமாற்றமாக உணர்ந்தார் ரகுராமன். மௌனிகாவின் தாயாரைச் சந்திக்க வேண்டும் என்று ரகசியமாக ஆசைப் பட்டது மனது. இன்று அதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தார்.

சிறிது அலுப்புடன் உள்ளே வந்தார். எல்லோரும் வந்து விட்டார்கள். காலை உணவு முடிந்ததும், மேடையில் தொழில்  முனைவோர்களை அறிமுகப் படுத்தி, தொழில் முழு உரிமையையும் அவர்களிடம் ஒப்படைத்து விட்டு, மணியையும் பத்மாவையும் மேடைக்கு அழைத்து அனைவரின் முன்னிலையிலும் இருவருக்கும் மாலை மாற்றி திருமணம் நடந்தது.

          தன்னுடைய மிகப் பெரிய வெற்றியாக மணி-பிரேமா திருமணத்தைத்தான் நினைத்தார் ரகுராமன். மணி  அவளுக்காக காத்திருந்தார். பிரேமா இளமை மோகத்தில் ஓடியிருந்தாலும், அவளுக்குத் தேவை வசதியான ஆடம்பரமான வாழ்வு.

          அவளைக் கூப்பிட்டுப் பேசினார்.

          “பிரேமா, ஒரு தவறு செஞ்சிட்டே. அதை திருத்திக்கப் பாரு. என்னை கல்யாணம் செஞ்சிக்கலாம்னு கனவு காணாதே. கல்யாணியைத் தவிர வேறு யாரையும் என்னால் மனதால் கூட நினைக்க முடியாது. நீ ஒரு பெண் குழந்தைக்குத் தாய். அதுக்கும் ஒன்பது வயது ஆறது. மணி இன்னொரு கல்யாணத்தைப் பற்றி நினைக்கவில்லை. ஆனா நீ அவனையும் பெத்த குழந்தையையும் உதறிட்டு வந்துட்டு இன்னைக்கு வேற கல்யாணத்துக்கு ரெடியாகற. இது உனக்கே கேவலமா இல்லையா?”

                                      “- – – – – – – – – – – – -“

                   “அறிவுரைகள் சொல்றதுக்கு அர்த்தமே இல்லை. உனக்கும் நாப்பது வயசாகப் போகுது. மணி நல்லவன். அவனுடைய மனைவியா, உன் குழந்தைக்குத் தாயா ஒரு கௌரவமான வாழ்வை வாழப் பாரு.”

          பத்மா இரண்டு நாள் யோசித்தாள். ரகுராமனைப் பொறுத்தவரை தன் ஆசைகள் நிறைவேற வாய்ப்பில்லை என்று உணர்ந்தாள். மணியுடன் சேர சம்மதித்தாள்.

          இங்கு இந்த விழாவிற்கு வந்து மணி, தன் குழந்தையின் அம்மா என்ற அழைப்பு, தொழில் மணியின் முன்னேற்றம் எல்லாம் பார்த்து அவள் மனம் பிரமிப்பில் மூழ்கியது. மதியம் உணவுக்கு எல்லோருடனும் கலந்து பழக ஆரம்பித்து விட்டாள்.

          “கிரேட் எஸ்கேப்”- மௌனிகா அருகில் வந்து கை குலுக்கினாள்.

                                      “கடவுளுக்கு நன்றி.”

                   “இனி அடுத்து கல்யாணியைச் சந்திப்பதா?”

          “அதுவும் இறைவன் சித்தம்.” ரகுராமன் சிரித்தார். “அது காலத்தின் திட்டமல்லவா?”

          மௌனிகா சிரித்தபடி கிளம்பினாள். அவளுக்கு மதியத்திற்கு மேல் வேறு ஒரு பேஷன்ட்டைச் சந்திக்க வேண்டியிருந்தது. கல்யாணி இரண்டு மணிக்குமேல் வருவதாகச் சொல்லியிருந்தாள். அவளுக்கு இன்னும் இந்த விழாக் குழுவில் ரகுராமன் இருப்பது தெரியாது. மௌனிகாவும் சொல்லவில்லை. இப்படியே எத்தனை நாள் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுவார்கள் இருவரும்?

          மதியம் அமைப்பின் நிதி நிலை அறிக்கை வாசித்து விட்டு, புதிதாக நான்கு பேருக்கு புதிய தொழில் ஆரம்பிக்க உதவி செய்ய ஆடிட்டர் மூலம் ஒப்பந்தம் போட்டு முடிய மூன்று மணி ஆகி விட்டது. ரகுராமன் கிளம்பி விட்டார்.

          அதற்கு மேல் அங்கு மது விருந்து ஏற்பாடு செய்திருந்தார் பலராமன்.

                   “ நீயும் இரேன். எத்தனை நாள்தான் இப்படி குடிக்காம இருப்பே?”

          “குடிக்காம இருக்கறதால நான் எதையும் இழக்கலை. சொல்லப் போனா என்னை நானே கம்பீரமா உணர்றேன். உனக்குத் தேவைன்னா நீ குடி. என்னை எதுக்கு வற்புறுத்தரே?”- சற்று சினத்துடன் கேட்டார்.

          “ஒகே.” தோள் குலுக்கினார் பலராமன்.

படி இரங்கி காரை நோக்கி நடக்கும்போது ஒரு ஆட்டோ வந்து இறங்கியது. அதிலிருந்து இறங்கிய பெண்மணி ஒரு அசைப்பில் கல்யாணி போல் தோற்றமளித்தாள். எல்லாமே கல்யாணி என்று தனக்குள் சிரித்தபடி காரைக் கிளப்பினார் ரகுராமன்.

          சிறிது தூரம் வந்ததும் தன் மொபைலைத் தேடினார் ரகுராமன். இல்லை.

          அடடா, என்று யோசித்தவருக்கு செல்லை பலராமனுடன் பேசியபடி அலுவலக அறையில் வைத்து விட்டு வந்தது ஞாபகம் வந்தது. மீண்டும் காரை மண்டபம் நோக்கித் திருப்பினார்.

          மண்டபத்தில் அதிகம் கூட்டம் இல்லை. உறுப்பினர்கள் மட்டும் பேசிச் சிரித்தபடி வெளியில் நின்றிருந்தார்கள்.

          “என்ன ரகுராமன், திரும்பிட்டீங்க? மதுவை ருசிக்கலாம்னு ஆசையா? இல்லை மாதுவா?”

          “ரெண்டும் இல்லை. என் மொபைலை வச்சுட்டுப் போயிட்டேன்.”

                   “அடடா, அது இல்லைன்னா உயிரே இல்லாத மாதிரி.”

                   “ உசிரை காப்பாத்திக் வேணாமா?”- சிரித்தபடி ரகுராமன் உள்ளே வந்தார். மண்டபத்தின் அலுவலக அறை கிச்சனுக்குப் பின் புறம் இருந்தது. அங்கே வேகமாகச் சென்றவர் சிறிது நிதானித்தார்.

          பலராமன் ஒரு பெண்ணை தோளைப் பிடித்தபடி அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அந்தப் பெண் லேசாய் மயங்கிய நிலையில் இருந்தாலும் அவரிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயன்று கொண்டிருந்தாள்.

          “விடுங்க சார் என்ற அவளின் குரலின் பலவீனமாக ஒலித்தது.

          ரகுராமன் வேகமாக அவரை நெருங்கினார்.

          “பலராமன் என்னதிது. “- என்று கோபத்துடன் கேட்டபடி அந்தப் பெண்ணை இழுத்தார்.

          அரைகுறை மயக்கத்துடன் அவர்மேல் விழுந்தாள் கல்யாணி.

-(ஏக்கங்கள் அகலும்…)

முந்தையபகுதி | அடுத்தபகுதி

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...