வேப்ப மரத்துப் பூக்கள் – 11 | ஜி ஏ பிரபா

 வேப்ப மரத்துப் பூக்கள் – 11 | ஜி ஏ பிரபா


அத்தியாயம் – 11

      “நம் சக மனிதர்களுக்கு நாம் எதை எல்லாம் கற்றுத் தருகிறோமோ அதுவே நம்            குணமாகிறது. அன்பையும், மனிதாபிமானத்தையும் தவிர வேறு என்ன தேவை?”
      காலத்தின் செயல்பாடு மிகத் துல்லியமானது. நம் எதிர்பார்ப்பின் படி
செயல்படாது
என்றாலும் நமக்கு நல்லதையே தரும்.”

காலம் மிகச் சிறந்த மருந்து கூட. எல்லா வேதனைகள், கோபம் என்று அனைத்தையும் அழித்து விடும்.

தன் கையில் சரிந்து விழுந்த கல்யாணியைப் பார்த்ததும் “கல்யாணி” என்று அலறினார். படபடப்புடன் அவளை அப்படியே தரையில் கிடத்தி விட்டு அதிர்ந்து நின்ற பலராமனை ஓங்கி கன்னத்தில் அறைந்தார்.அவர் சட்டையைப் பிடித்து உலுக்கி மாறி, மாறி கன்னத்தில் அறைந்தார்.

          படபடப்பும், ஆத்திரமும் சேர்ந்து அவரை நிலைகுலையச் செய்தது. பலராமன் அவரின் தாக்குதலில் நிலை தடுமாறி கீழி விழுந்தார். விழுந்த பிறகும் கோபம் அடங்காமல் அவரை உதைத்தார் ரகுராமன்.

          “மனுஷனாடா நீ. மிருகம். வெட்கமாயில்லை. நம்ப விழாவை ஏற்பாடு செய்ய வந்தவங்க கிட்ட நடந்துக்கற விதமாடா இது. குடி ஒரு மனிதனை எந்த அளவுக்கு கீழ்த்தரமா நடக்க வச்சிருக்கு பாத்தியா? அப்படி என்னடா வெறி உனக்கு? பெரிய மனுஷன்ற போர்வையில் அயோக்கியத் தனம் பண்ற உன்னை விடக் கூடாது. கையைக் காலை உடைச்சு, எறியணும். நீயும் ரெண்டு பொன்னைப் பெத்தவந்தானே. உன் பெண்களுக்கு இப்படி நடந்திருந்தா?”

          அவரின் குரல் கேட்டு மற்றவர்கள் ஓடி வந்தார்கள்.

          “விடுங்க ரகுராமன் என்று அவரை விளக்கினார்கள்.

          “நீங்கெல்லாம் பெரிய மனுஷங்கலாட்டா? உள்ள ஒருவனை கேவலமா நடக்க வச்சுட்டு, நீங்க வெளியில் நின்னு வேடிக்கையாடா பாக்கறீங்க. மாமாப் பசங்களா”

                   “ரகுராமன், வார்த்தைகள் பார்த்து பேசுங்க?”

  “உங்களுக்கு என்னடா மரியாதை? கேவலமான மனுஷங்க. நீங்க எல்லாம் பெண்களோட கூடப் பொறக்கலையா? உன் மனைவிக்கு இப்படி நடந்திருந்தா? நல்லவர். நம்ம வீட்டுக்குப் பக்கத்துல குடி இருக்கார்னு நம்பி வந்த பொண்ணுக்கு நீங்க தர பாதுகாப்பாடா இது. நாய்களா?”

          கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் கத்தினார்.

          அதற்குள் சாப்பாடு எடுத்துப் போக வந்த குடும்பம், மணி எல்லாம் வந்து விட, கழிவறை கூட்டும் அம்மா வெத்தலை போட்ட வாயோடு தூ என்று துப்பினாள். காபி டிரம்மில் இருந்த காபியை அப்படியே அவர் மீது ஊற்றினார் மணி.

          கேடரிங் பெண்மணி “டேய்” நீ இனி அபார்ட்மென்ட் பக்கம் வந்து பாரு, உன் மேல நான் ஆசிட் ஊத்துவேன்” என்று கத்தினார்.

          வெள்ளை சர்ட், பேன்ட் எல்லாம் காபி, வெத்தலைக் கறை வழிய தலை குனிந்து நின்றார் பலராமன். கேடரிங் பெண் கல்யாணியைத் தூக்கினாள். சரிந்தாள் கல்யாணி.

          “விடும்மா” ரகுராமன் அவளை விளக்கினார். கல்யாணியை அப்படியே தோளில் சாய்த்துக் கொண்டார். இரண்டு பேராக அவளை காரில் கொண்டு வந்து படுக்க வைத்தார்கள். கேட்ரிங் பெண் அவருடன் எறிக் கொண்டார்கள். மணியைக் கூப்பிட்டு பலராமன் மேல் போலீஸ் கேஸ் தரச் சொல்லி விட்டு ரகுராமன் கிளம்பினார்.

          ஒரு பக்கம் ஆத்திரம் கொந்தளித்தாலும், மறுபக்கம் கல்யாணி கிடைத்த பூரிப்பு.

          ஆனாலும் பதறியது உடம்பு. கடவுளே தான் வர சிறிது தாமதமாகியிருந்தாலும் எத்தனை விபரீதம் நடந்திருக்கும்.

          ஒரு பெண் தன் குடும்பத்தைக் காப்பாற்ற வெளியில் வந்தால் அவளைக் குத்திக் குதற எத்தனை கழுகுகள் காத்திருக்கிறது? காமம்தான் இந்த உலகை வழி நடத்துகிறதா? பெண்ணைத் தாயாக, தெய்வமாக வழிபடும் பூமியில்தான் அவளுக்கு பாதுகாப்பும் இல்லை.

          ரகுராமன் மௌனிகாவுக்குப் போன் செய்தார்.  “எங்க இருக்கே?”

                             “வீட்டுக்கு கிளம்பிட்டு இருக்கேன்.”

                             “உடனே, கிளம்பி வா.”

                             “என்ன விஷயம்?”

                             “கிளம்பி வா” என்றவர் செல்லை அனைத்து வைத்தார்.

கல்யாணியை அவர் முதலில் டாக்டரிடம்தான் அழைத்துச் சென்றார். அவளுக்கு என்ன மயக்க மருந்து கொடுத்திருக்கிறான் என்று தெரியவில்லை. நினைவு இல்லாமல் கிடந்தாள். முகத்தில் தண்ணீர் தெளித்தும் அசைத்தும் எழவில்லை. கேசவ்விடம்தான் அழைத்து வந்தார்.

                   “என்னாச்சு சார்.” விஷயம் கேட்டு பதறினான் கேசவ்.

                             “அந்த ஆளை சும்மாவா விட்டு வச்சீங்க?”

          ரகுராமன் விஷயம் சொன்னார். கேசவ் உடனே அவளை அட்மிட் செய்து விட்டான். பழச் சாறில் மயக்க மருந்து கலந்து தந்திருந்தான் பலராமன்..

          நல்ல ஹெவியான் ஸ்ட்ராங் டோஸ் சார். சில சமயம் உயிருக்குக் கூட ஆபத்தாகி விடும். ஜூஸில் கலந்து கொடுத்திருக்கான். ராஸ்கல்.”

          நடுங்கியது உடல். கடவுளே நன்றி.

                   எல்லாமே ஒரு காலக் கணக்குதான். இந்த நேரத்தில் இது நடக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்து அதன்படிதான் நடக்கிறது. யார்தான் இதை மாற்ற முடியும்? கல்யாணியைச் சந்திக்க வேண்டும் என்றுதான் இத்தனை நாட்கள் உயிர் சுமந்து வாழ்ந்தது. அவளை இப்படியா சந்திக்க வேண்டும்? விழித்து எழுந்து விஷயம் தெரிந்தால் அவள் மனம் எவ்வளவு கூசிப் போகும்?

          ஏன் சில ஆண்கள் பெண்களின் நிலையைப் புரிந்து கொள்ளாமல் உடலாகவே அவளைப் பார்க்கிறார்கள்? தங்கள் வீட்டிலும் தங்கை, அம்மா, மனைவி என்று இருக்கிறார்கள் என்று ஏன் உணர்வதில்லை. அவனின் சபலம் ஒரு நிமிஷத்தில் தீர்ந்து விடும். ஆனால் அந்தப் பெண்ணுக்கு காலம் முழுதும் நரகம்தானே.

          ஒரு பெண்ணைத் தீரா வேதனையில் தள்ளுவதற்கு அவனுக்கு என்ன உரிமை இருக்கிறது? அவளுக்கு என்றும் ஆபத்துதானா? ஆண்களைப் போலவே உரிமையுடன் வாழ அவளுக்கும் உரிமையில்லையா?

          மயங்கிக் கிடந்த கல்யாணியின் முகத்தையே பார்த்தபடி நின்றார்.

          அவளுக்குள்தான் எத்தனை மனப் போடாட்டங்கள் இருக்கும். நாத்தனார், மாமியார் பழி சுமத்தி,கணவரைப் பிரிந்து ஒரு பெண் குழந்தையுடன், அவளை வளர்க்க எத்தனை கடினமான நாட்களைத் தாண்டி இருப்பாள்? அவளைச் சீரழிக்க எப்படி மனம் வந்தது?

          இன்னும் மறக்க முடியாமல் குமுறியது அவர் நெஞ்சம்.

          விழித்த கல்யாணி தன்னைப் பார்க்க கூசுவாள் என்று தெரியும் அவருக்கு.

          அத்துடன் அவளை வேறு ஒரு நல்ல சூழ்நிலையில் சந்திக்க விரும்பினார் ரகுராமன்.

          “ஒகே, கேசவ், நான் கிளம்பறேன். மௌனிகா இப்போ வந்துடுவா.”

          “ஏன் அங்கிள். அவங்க விழிப்பு வந்ததும் பாத்துட்டு கிளம்புங்களேன்.’

          “ இல்லை கேசவ். அவளை இந்தச் சூழ்நிலைல சந்திக்க விரும்பலை.”

                             ‘ஏன் அங்கிள் ? நீங்கதானே காப்பாத்தி இருக்கீங்க?”

          “ஒரு புருஷனா என் கடமை இது. ஆனா அவளை நான் சந்திக்க வேற நேரம் இருக்கு. என் மனைவியையும், மகளையையும் நான் ஒரு நல்ல சூழ்நிலையில சந்திக்கணும். இதுவல்ல அந்த நேரம். உறவுகளை கூட்டி, அவ மேல சுமத்தின பழியை அழிச்சு அவளை நிமிர்ந்து நிக்க வைக்கணும். நான் கிளம்பறேன்.”

          கேசவ் அவர வியப்போடு பார்த்தான். அவனுடன் வெளியில் வந்தார். நீள  வராண்டாவில் இருவரும் பேசியபடி வந்தார்கள் கேசவ் அவர் சொல்வதை வியப்புடன் கேட்டபடி வந்தார். தன் முழுக் கதையையும் சொன்னார் ரகுராமன். கேசவுக்கு அவரிடம் சொல்ல சில விஷயங்கள் இருந்தது. மனம் விட்டுப் பேசியபடி அவரின் கார் வரை வந்தான் கேசவ்.

          தன் காரை எடுத்துக் கொண்டு வெளியில் வரும்போது மௌனிகா தன் டூ வீலரில் உள்ளே நுழைந்தாள்.

          இன்று அவளைப் பார்க்கும்போது புதிதாகத் தெரிந்தாள். மகள் என்ற பிரியமும், பெருமிதமும் கிளம்ப அவளைப் பார்த்தபடி சிறிது நேரம் இருந்து விட்டு கிளம்பினார்.

          வீட்டுக்குள் நுழைந்தவரை பாலு எதிர் கொண்டான்.

          “மாமா உங்களுக்காகத்தான் வெயிடிங்.”

          “என்ன விஷயம் ஏதாவது பணம் வேணுமா?”

          அவருக்கு பாலுவைக் கண்டால் ஒரு வெறுப்புதான் உண்டு. எல்லாவித கெட்ட பழக்க வழக்கங்களும் உண்டு. வீட்டிலேயே ஃப்ரிஜ்ஜில் மது பாட்டில் வைத்திருப்பான். பிரேமா புகார் சொல்லி அவனைக் கண்டித்த போது அது என் இஷ்டம். உயர்வகை மதுதான் அது என்று பேசினான்.

          இது என் வீடு. இங்க இப்படித்தான் இருக்கணும். இல்லைன்னா நீ வேற இடம் போய்க்கோ” தா மேனா என்றதும் பிரேமா மகனிடம் என்ன சொன்னாளோ பாலு அவரிடம் சொல்லி விட்டு மது பாட்டில்களை எடுத்துச் சென்று விட்டான். அதை வேறு எங்கோ கொண்டு போய் வைத்திருக்கிறான் என்று தெரியும் அவருக்கு. இப்போதும் எதோ காரியத்துக்காகத்தான் வந்து நிற்கிறான் என்று தெரிந்தது.

                   “என்ன விஷயம்? சொல்லு”

          “என்னத்தைச் சொல்ல. அவனுக்காக ராஜகுமாரிகள் எல்லாம் காத்துட்டு இருக்கறப்போ, இவன் ஒரு கழிசடையை விரும்பறான்.”-பிரேமா.

          “காதலா?”- ரகுராமன் சிரித்தார்.” உனக்கு அப்பப்போ காதல் வரும். இப்போ யார் மேல?”

          ‘எல்லாம் அவதான்.”- பிரேமா முகத்தைச் சுழித்தாள்.

                                      “எவன்னு சொன்னாதானே தெரியும்?”

          “மௌனிகா” பாலு பதில் சொன்னான். ஆவலுடன் அவர் முகத்தைப் பார்த்தான்.

          ரகுராமனுக்கு இது ஒரு ஆச்சர்யம்தான். அதிர்ச்சியும் கூட. மௌனிகாவும் இவனை விரும்புகிறாளா என்று தெரியவில்லை. ஆனால் அவள் அத்தனை ரசனை இல்லாதவள் அல்ல.  சிந்தித்து ஆழ்ந்து யோசித்து செயல் புரிகிறவள். இவனை அவள் விரும்புவாள் என்று நிச்சயம் இல்லை.

          அவர் யோசனையுடம் பாலுவைக் கேட்டார்.” அவளும் உன்னை விரும்புகிறாளா?”

          “ நான் என் விருப்பத்தைச் சொன்னேன். வீட்டுக்கு வந்து என் அம்மாகிட்டப் பேசுங்கன்னு சொன்னா”

          ‘பேச வேண்டியதுதானே?”- அவர் பாலுவை உற்று நோக்கினார்.

          “அதான் அவ அப்பாகிட்டப் பேசறேன்.”- பாலு கூறியதும் அதிர்ந்தார் ரகுராமன்.

          மௌனிகா கல்யாணியின் மகள் என்று தெரிந்து விட்டதா?

          அவர் அதிர்ச்சியை பிரேமா தவறாகப் புரிந்து கொண்டாள். கல்யாணியை அவர் வெறுக்கிறார் என்று புரிந்து சந்தோசம் அடைந்தாள்.

          “எனக்குத் தெரியும். நீ அவள் பேரைச் சொல்றதைக் கூட விரும்ப மாட்டேன்னு. போயும்,போயும் அந்தக் கழிசடையின் பொண்ணுதான் உனக்குக் கிடைச்சதான்னு. அப்பா யாரு என்னன்னு தெரியாது. உங்க மாமாவோட வாழ்க்கையையே அழிச்சவன்னு சொன்னா கேட்க மாட்டேங்கிறான்.”

          ரகுராமன் யோசனையுடன் நின்றார். இப்போது என்ன சொல்வது என்று புரியவில்லை. சட்டென்று யோசிக்காமல் எதையும் சொல்ல விரும்பவில்லை. இவர்கள் எவ்வளவு தூரம் போவார்கள் என்று பார்க்க நினைத்தார்.

          ‘அம்மா எல்லாம் சொல்லியிருப்பாங்க. தெரியும்ல உனக்கு?”

          “அவ எப்படி இருந்தாலும் கவலை இல்லை. எனக்கு அவ வேணும்.”

          அவன்  குரலில் பிடிவாதம் இருந்தது.

                   “அவ என்ன விளையாட்டுப் பொம்மையா?”

          ஆத்திரத்துடன் கேட்டார் ரகுராமன். “அவளுக்கு என்ன விருப்பம்னு கேட்க வேண்டாமா? ஒருவேளை அவ அம்மாவுக்கு  உனக்குத் தர விருப்பமில்லைன்னா?”

          ‘அவ தகுதிக்கு இவன் கோடிஸ்வரண்டா. அவ ஏழு ஜென்மம் எடுத்தாலும் இவனைப் போல ஒருத்தன் கிடைக்காது. ஆனா ஒரு கழிசடையின் பொண்ணு எனக்கு மருமகளா வர வேண்டாம்.”- பிரேமா ஆத்திரத்துடன் கத்தினாள்.

          “அவ கிடைக்கலைன்னா நான் செத்துடுவேன் “- பாலு.

          “அதைப் பண்ணு முதல்ல. உருப்படியான காரியம்”- ரகுராமன் வெறுப்போடு பேசினார். மேற் கொண்டு அவன் பதிலை எதிர்பாராமல் வேகமாக உள்ளே சென்றார்.

          அதிர்ந்து நின்றார்கள் பிரேமா, பாலுவும்.

-(ஏக்கங்கள் அகலும்…)

முந்தையபகுதி | அடுத்தபகுதி

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...