வேப்ப மரத்துப் பூக்கள் – 12 | ஜி ஏ பிரபா

 வேப்ப மரத்துப் பூக்கள் – 12 | ஜி ஏ பிரபா

 

அத்தியாயம் – 12

                                                உன் நினைவுகளை உன் பின்னால் அனுப்பு.

                                                உன் கனவுகள் முன்நோக்கிச் செல்லட்டும்.

                                                உன்னால் முடியும் என்ற எண்ணம் மட்டுமே

                                                உனக்குள்  இருந்து உன்னை வழி நடத்தட்டும்.

                        வாசல் கேட்டில் அமர்ந்து ஒரு காகம் கரைந்தது.

            வைத்திருந்த சாத உருண்டையை பார்த்து விட்டு கா,கா என்று தன் சுற்றத்தைக் கூவி அழைத்தது. எங்கியோ பறந்து போய் தன் இனத்துப் பறவைகள் இரண்டுடன் மீண்டும் வந்தது. மதில் சுவரில் அமர்ந்து சாத உருண்டையைக் கொத்தியது. ரகுராமனைப் பார்த்து ஏன் நீ எங்களைக் கவனிக்கிறே என்று கரைந்தது.

“ஆகாரம் உண்ணவே எல்லோரும் அன்போடு ஓடி வாங்க.”

ரகுராமன் சன்னமாகப் பாடினார். காக்கா ஒன்று கழுத்தைத் திருப்பி அவரைப் பார்த்தது. ரகுராமன் அருகில் நெருங்கியதும் சடாரென்று பறந்து போனது.

                        “அடடா.” ரகுராமன் வருத்தப் பட்டார்.

            மீண்டும் வந்து தன் சேரில் அமர்ந்தார். இரண்டு பக்கம் திண்ணை வைத்த பழைய கால வீடு. வாசல் திண்ணையில் கம்பி கேட் போட்டு, சுற்றி மதில் சுவர். அதன் மேல் காகிதப் பூ செடி படர்ந்திருந்தது. சிவப்பு, மஞ்சள், வெண்ணிற பூக்கள்.

            தெரு முழுதும் ஓட்டு வீடுதான். எல்லோருக்கும் வயல் வேலை என்பதால் தெரு முழுக்க நெல் மூட்டையின் புழுக்கை வாட்டம். எதிர் வீட்டில் நெல் புழுங்கும் வாசனை.

            ரகுராமனுக்கு இந்த வாசனை பிடிக்கும். அத்துடன் மஞ்சள் காய வைக்கும் வாசனையும். கிராமத்திற்கு அடிக்கடி ஓடி வந்து விடுவார். திருச்சிக்கு அருகில் கல்லணை போகும் வழியில் சிறிய கிராமம். அவர் அப்பாவுக்கு பூர்வீக வீடு அங்கு இருந்தது. அவரின் சித்தப்பா பையன் ஒருவன் அவரின் வயலையும் பார்த்துக் கொண்டு அந்த வீட்டில் இருந்தான்.

            திருமணம் செய்து கொள்ளவில்லை. குலதெய்வம் கோவிலில் பூஜை செய்து கொண்டு அங்கு இருந்தான். மனசு சலிக்கும் போதெல்லாம் அவர் அங்கு வந்து விடுவார். இந்த முறையும் கல்யாணி, மௌனிகாவைச் சந்திப்பதை தவிர்க்க இங்கு வந்து விட்டார்.

            அவர் மனதில் ஒரு திட்டம் இருந்தது. அதைப் பற்றி யோசிக்க, செயல் படுத்த அவகாசம் வேண்டி இருந்தது. பிரேமா, பாலுவின் நச்சரிப்பு தாங்க முடியவில்லை. அந்த இடத்திலிருந்து வெளியேறினால் போதும் என்று நினைத்தார். மணியின் உறவினர் ஒருவர் பலராமனை கவனித்துக் கொள்கிறேன் என்றிருந்தார்.

            பலராமனை கைது செய்ய உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தார்கள்.

            “நம்ம அமைப்புக்கு கெட்ட பெயர். அதுதான் கல்யாணியைக் காப்பாத்தியாச்சு, விட்ருங்க “ என்றார்கள். ஆனால் ரகுராமனும், கேசவும் விட விரும்பவில்லை. அப்போ ஆபத்து ஏற்பட்டாதான் ஒருவனுக்குத் தண்டனை கிடைக்கணுமா? அவன் செஞ்சது தப்பு. அதுக்கு அவனை போலீசில் ஒப்படைத்தே ஆகணும் என்றவர் பலராமனின் மனைவி, பெண்ணுக்குத் தகவல் சொல்லி விட்டார்.

            மணியின் உறவினர் காவல் துறையில் இருந்தார். இதைப் பற்றி தான் கவனித்து மேல் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதால் அவர் நிம்மதியாகக் கிளம்பி வந்தார்.

            மழை பெய்து ஆற்றில் தண்ணீர் இருந்தது. காவிரியின் கிளை வாய்க்கால் வீட்டின் பின்பக்கம் ஓடியது. அறுவடை முடிந்து அடுத்த போக விளைச்சலுக்கு, வயலை உழுவதற்கு கிராமம் தயாராக இருந்தது.

            அறுவடை செய்த நெல்லை வியாபாரிகளுக்குத் தந்து விட்டு, தங்களுக்கு என்று அவர் தம்பி வைத்திருந்தான். அதை புழுக்கி மில்லில் அரைத்து உமி நீக்கி அவருக்கு இரண்டு மூட்டை தனக்கு ஒரு மூட்டை வைத்துக் கொள்வான். அதை வேக வைக்கும்போது அவருக்கு என்று வெல்லத் தேங்காய் செய்து தருவான். கல்யானிக்கும் அவருக்கும் மிகவும் பிடித்த பலகாரம் அது.

            மட்டைத் தேங்காயில் மேலே ஓட்டை போட்டு அதற்குள் ஏலக்காய், முந்திரி, வெல்லச் சர்க்கரை போட்டு இறுக்க மூடி நெல் புழுங்கும்போது போட்டு விடுவது. நன்றாக நெல் வெந்து இரக்கும்போது தேங்காயும் வெந்து உள்ளிருக்கும் தேங்காய் அப்படியே முழுதாக பந்துபோல் வரும். அதன் ருசிக்கு ஈடு இல்லை.

            இப்போதும் தம்பி அதைச் செய்தான். நெல் வாசனையுடன் தேங்காய், ஏலக்காய் மண்மும் நாசியை நிறைத்தது.

“நீ சென்னை போரபோது எடுத்துட்டுப் போ என்றிருந்தான்.

            அவருக்கு சில உண்மைகள் தெரிய வேண்டியிருந்தது. அதற்கு ஆதாரங்கள் தம்பி மூலம்தான் தேட வேண்டும். இரண்டு நாளாக அவனிடம் தன் இருபது வருஷ காலத்துக்கும் மேலான ரகசியங்களைச் சொன்னதும் அவன் வாய் பிளந்தான்.

            “அண்ணா நம்ம சொந்தமெல்லாம் கல்யானியைத்தான் தப்பா நினைக்குது. யாரோட குழந்தைதான் அவ வயித்துல வளருது. அதனால்தான் அவ ஓடிப் போயிட்டான்னு பேசுது. நீ அமெரிக்கால இருந்த போது பிரேமாதான் இங்க வரும். அவன் என்னை நம்பி பணம் அனுப்பறான்.இதை எல்லாம் சொத்தா மாத்தித் தரணும்னு வயல் வாங்கிச்சு. இங்க திருச்சில காவேரி பூங்காவில் ஒரு வீடு வாங்கிச்சு. எல்லாம் அது பெயரில்தான் இருக்கு.”

            அவன் சொல்லச் சொல்ல அதிர்ச்சியாக இருந்தது. பணம் அனுப்பும் போதேல்லாம்  இன்னும் கொஞ்சம் தேவை, பத்தலை என்பாள். அம்மாவுக்கு அந்தச் செலவு, உனக்கு இடம் வாங்கினேன் என்பாள். இப்போது இருக்கும் வீட்டை அவள்தான் நின்று கட்டினாள். எதற்கெடுத்தாலும் காரணம் சொல்லி பணம் வாங்குவாள்.

            அவரும் அக்காதானே என்று கேட்ட போதெல்லாம் கொடுத்தார்.

            ஆனால் அவள் ரகசியமாக தன் பணத்தில் சொத்து சேர்த்திருக்கிறாள் என்பதோடு கல்யாணியைப் பற்றி அவதூறு பரப்பி இருக்கிறாள் என்று தெரிய வருத்தமாகத்தான் இருந்தது.

            உடன் பிறப்பு. பணம் தேவை என்றால் கேட்டிருக்கலாம். இப்படியா அவன் குடும்பத்தைக் கலைத்து, ஒரு பெண் மேல் அவதூறு பரப்பி கேவலமாக நடப்பாள்?

                        நினைக்க, நினைக்கத் தாங்கவில்லை.

            “நீ கவலைப் படாதே அண்ணா, பிரேமாவோட ரகசியமெல்லாம் எனக்குத் தெரியும். அவ ரகசியத்தை வெளியில் சொல்லக் கூடாதுன்னு எனக்கு நிறைய ஆசை காட்டினா. பத்மாவை எனக்குக் கட்டி வைக்கிறேன்னா. அதுக்கு நான் காவேரி வெள்ளத்துல வீழ்ந்துடலாம்.”

            சிரித்தார்.”ஏன்டா கல்யாணம் பண்ணிக்கலாமே?”

            “போதும்,போதும் நீங்கெல்லாம் கல்யாணம் செஞ்சுண்டு வாழ்ந்த லட்சணம்.”

            தம்பி சிரித்தான்.”இப்ப நான் நிம்மதியா இருக்கேன். வேணும்கறதை செஞ்சு சாப்பிடறேன். இஷ்டப் பட்ட இடத்துக்கு போயிட்டு வரேன்.”

            “ஏன்டா ஏதானும் நோய், காய்ச்சல் வந்தா என்ன செய்வே? ஒரு தலைவலி, கால்வலின்னு வந்தா மருந்து தடவ யாரானும் வேண்டாமா?”

            “அது வராம பாத்துக்கலாம். துணைங்கறது எதுவும் நிரந்தரம் இல்லை. உனக்குத் துணைன்னு நீ கல்யாணியைக் கல்யாணம் செஞ்சிண்டே. என்ன ஆச்சு?”

            “ஏன் வயசுக் காலத்துல ஒண்ணா சேர்ந்துட்டோம் இல்லையா?”

            “எனக்கும் வயசாகட்டும். அப்ப பாக்கலாம்.”- தம்பி பேச்சை கத்தரித்து விட்டு தூங்கி விட்டான். ரகுராமன்தான் வெகு நேரம் விழித்திருந்தார்.

            ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையைப் பற்றி வெவ்வேறு கோணம் இருக்கிறது. அதற்கு ஏற்றார்ப் போல் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். எதோ ஒரு லட்சியம். குறிக்கோளை வைத்துக் கொண்டு தங்கள் ஓட்டத்தைத் தொடர்கிறார்கள்.

            கல்யாணியைக் கண்டு பிடிப்பது மட்டுமே தன் லட்சியமாக இருந்தது. கிடைத்து விட்டாள். அடுத்து மௌனிகாவின் திருமணம். அதை அடுத்து தானும் கல்யாணியும் ஒரு அமைதியான வாழ்வைத் தொடங்க வேண்டும். அவளுக்கு நேர்ந்த அநீதிகளை எல்லாம் நிவர்த்தி செய்து தன் கைக்குள் பொத்திப் பாதுகாக்க வேண்டும்.

            அவர் கவனமின்றி தன் மனதுக்குள் ஆழ்ந்து விட்டார்.

            “தூங்கிட்டியா?” தம்பி எட்டிப் பார்த்தான்.

                        “ஏன்டா?”- சட்டென்று கண் திறந்து பார்த்தார்.

            “வெல்லத் தேங்காய் ரெடி ஆயிருச்சு. திங்கறியா?”

            கொடேன்.” எழுந்து வாங்கிக் கொண்டார்.

            சூடாக இருந்ததை விரித்ததும் அல்வா போல் வந்தது. வாயில் போட்டதும் நன்றாக வெந்த தேங்காய் மிருதுவாக இருந்தது.

            “இந்த டேஸ்ட் வேற எந்த இடத்திலும் இல்லைடா?’”

                        “நெல் புழுங்கற எல்லா இடத்துலேயும் இது கிடைக்கும்.”

            “அடுத்த வாரம் சென்னை வரப்போ இதுமாதிரி செஞ்சு எடுத்துட்டு வரியா? மௌனிகா இதெல்லாம் சாப்பிட்டதில்லை.”

            “தாராளமா. அடுத்தவாரம் எல்லோருடைய வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறப் போகுதா?”- தம்பி சிரித்தபடி நகர்ந்தான்.

            தெரியவில்லை. ஆனால் எல்லா உறவுகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார். இங்கு உள்ள உறவுகளை தம்பி வண்டி வைத்து அழைத்து வருகிறான். அவரின் சித்தப்பா, மாமா, அத்தை என்று எல்லோரையும். பிரேமாவின் புகுந்த வீட்டினர் சென்னைதான். கல்யாணியின் மாமா இறந்து விட்டார். அவளின் அண்ணா மட்டும் காஞ்சிபுரத்தில் இருக்கிறான். ஆனால் யாருடனும் தொடர்பு இல்லை. நான் சென்னை வந்துட்டு அவங்களை எல்லாம் கூட்டிட்டு வந்துடறேன் என்றிருக்கிறான் தம்பி.

            அந்த நாளை நினைக்கிறப்போ மனசு குளிர்கிறது.

            தன்னைக் காணும்போது அவள் கண்ணில் தெரியும் மின்னல், மௌனிகாவின் அப்பா என்ற அழைப்பு என்று அந்த நினைவுகளே மனசில் நிறைந்து இருக்கிறது. வேறு எதைப் பற்றியும் நினைக்கவில்லை.

            “பாலு விஷயம் என்ன செய்யப் போறே”- தம்பி கையில் காபியுடன் வந்தான்.

            அதுதான் என்ன என்று தெரியவில்லை அவருக்கு. மௌனிகாவின் எண்ணம் என்ன என்று தெரியவில்லை. அவளின் ஆசை, எதிர்காலம் பற்றிய விஷயம் எதுவும் தெரியாமல் அவராக எந்த முடிவும் எடுக்க விரும்பவில்லை.

            “ஆனா பாலு நம்ம அக்கா பையன். மௌனிகாவை விரும்பறான். அவனுக்கு கட்டி வச்சா குழந்தை சந்தோஷமா இருப்பா. நம்ம கண் எதிர்க்க வச்சுக்கலாம்.. பாலுவையும் ஏதானும் தப்பு செஞ்சா நாலு அதட்டல் போடலாம்.”-தம்பி ஐடியா போட்டான்.

            எதுவும் பேசாமல் அவனை மௌனமாகப் பார்த்தார் ரகுராமன்.

-(ஏக்கங்கள் அகலும்…)

முந்தையபகுதி – 11 | அடுத்தபகுதி – 13

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...