தொடரும் ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளைகள்! | தனுஜா ஜெயராமன்
தமிழ்நாட்டில் விடுமுறை நாட்களில் தனியார் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணங்கள் தாறுமாறாக உயர்த்தப்படுவதாக பயணிகள் பலரும் புகார்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
கடந்த வாரம் கல்வி நிறுவனங்களுக்கு தொடர் விடுமுறையாக இருந்ததால் வெளியூருக்கு பயணிப்பவர்கள் அதிகரித்தனர். அதனை பயன்படுத்தி தனது கட்டண கொள்ளைகளை கட்டவிழ்த்து விட்டது ஆம்னி பேருந்து தனியார் நிறுவனங்கள்.
மிலாடி நபி, வார இறுதி நாட்கள் மற்றும் காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை காரணமாக என சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தளங்களுக்கும் சென்ற பொதுமக்கள் மீண்டும் சென்னை திரும்பிய போது தனியார் பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் பல மடங்கு வசூலிக்கப்பட்டதால் கடும் அவதியடைந்தனர்.
விடுமுறை நாட்களில் அரசு சார்பில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் தனியார் பேருந்துகள் கட்டண கொள்ளையில் ஈடுபடுகின்றன எனவும் இதனைபயன்படுத்தி விமான கட்டணத்திற்கு இணையாக ஆம்னி பேருந்துகளில் கட்டணங்கள் அதிக அளவில் வசூலிக்கப்படுகின்றன எனவும் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.
பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கட்டண கொள்ளையில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் அரசு பலவேறு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் கட்டண கொள்ளையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியிறுத்தி உள்ளனர்.