வேப்ப மரத்துப் பூக்கள் – 13 | ஜி ஏ பிரபா

 வேப்ப மரத்துப் பூக்கள் – 13 | ஜி ஏ பிரபா

அத்தியாயம் – 13

                             “பொறுமை என்பது மிகச் சிறந்த மந்திரம்.

                             அதை இடைவிடாமல் கடைப் பிடித்தால்

                             வெற்றி என்பது மிக அருகில் வரும்.

                              காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி

                             ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது

                             வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது

                             நாதன் நாமம் நமச்சிவாயவே.”

பாடப் பாட நிஜமாகவே கண்ணீர் வழிந்தது.

நமச்சிவாயா, என்று மனம் அலறியது. ரகுராமனைச் சந்திக்க வேண்டும் என்று இத்தனை நாள் காத்திருந்து கடைசியில் இப்படி ஒரு சூழ்நிலையிலா சந்திக்க வேண்டும்? என்ன ஒரு கேவலமான சூழ்நிலையில் அவரைச் சந்தித்து விட்டோம்.

மொழி புரியாத ஊரில், இள வயது காலத்தில், ஒரு பெண் குழந்தையுடன், பத்திரமாக வாழ்ந்து விட்டு, இன்று சொந்த ஊரில், சொந்த மொழி பேசும் மனிதர்கள் மத்தியில் ஏமாந்து போக இருந்தோமே என்று மனம் துடித்தது.

கடவுளே ரகுராமன் மட்டும் வரவில்லை என்றால் தன் நிலைமை என்ன?”

கல்யாணிக்கு நினைவு வரும்போது மௌனிகா மட்டும்தான் அருகில் இருந்தாள். கண்ணீர் வழிய அவளின் கை பிடித்து அமர்ந்திருந்த மௌனிகாவை வியப்போடு பார்த்தாள்.

“நா ….. நான் எப்படி இங்க?”- பேச முடியாமல் தலை வலித்தது.

“சினிமா ஹீரோயின் மாதிரி யுஷுவல் கேள்வி.”

என்னவோ நடந்திருக்கிறது என்று புரிந்தது.

மதியம் மூன்று மணிப்போல் அவள் மண்டபத்துக்கு வந்தாள். பலராமன் வாசலில் நின்றார்.

“என்ன இது ஈவென்ட் மேனேஜர் லேட்டா வரீங்க?”

“காலையில் வந்தேனே. நீங்க மீட்டிங்ல  மும்முரமா இருந்தீங்க. சாப்பாடு எல்லாம் சரியா இருக்குன்னு பாத்துட்டுப் போனேன். என் சார்பா மௌனிகா வந்தாளே.”

“மதியம் ஒரு ஜூஸ் தந்தீங்களே. அது எக்ஸலண்ட். எப்படி செஞ்சீங்க?”

“அது இளநீர், மற்ற பழங்கள் எல்லாம் சேர்த்து செஞ்சது.”

“நீங்க டேஸ்ட் பாருங்களேன்.”

 “நான் குடிச்சு பார்த்துட்டுதான் அனுப்பினேன்.”

கல்யாணி பேசியபடி உள்ளே வந்தாள். கணக்குகள் பார்க்கவேண்டி இருந்தது.

மேலே அலுவக அறை. அங்க போயிடலாம் அங்கு ரசீதுகளைப் பார்த்தபடியே டீ குடித்தது மட்டும்தான் தெரியும்.என்று பலராமன் அவளை மேலே அழைத்து வந்தார். நிறைய உறுப்பினர்கள் இருந்ததால் தைரியமாக உள்ளே வந்தாள் கல்யாணி. கணக்கு பார்க்கும்போது டீ வந்தது. பலராமன் குடிங்க என்று அவளிடம் நகர்த்தினார்.

ஒரு வாய் குடித்தது மட்டும்தான் நினைவு இருந்தது.

மெல்ல நினைவு நழுவுவது புரிந்து சட்டென்று எழுந்தாள். ரிலாக்ஸ் என்று பலராமன் அவள் தோளைப் பிடிப்பது தெரிந்தது. விடுங்க சார் என்று அவர் கையைத் தட்டிவிட மனம் நினைத்தாலும் கைகளை உயர்த்த முடியவில்லை. கால்கள் நழுவியது.

என்னவோ என்று மனம் பதறினாலும் இறைவா என்று அலறியது மனம். யாரோ தன்னை பலராமனிடமிருந்து இழுத்ததும் தான் மயங்கி விழுந்ததும் மட்டுமே நினைவில் இருந்தது. விழித்தபோது ஹாஸ்பிடலில்.

சட்டென்று மனதில் ஒரு கலவரம் வெடித்தது. கண்களில் பீதியுடன் தன்னை ஏறிட்ட அம்மாவை தட்டிக் கொடுத்தாள் மௌனிகா.

“நீ பயப்படற மாதிரி எதுவும் நடக்கலை. கவலைப்படாதே. அதற்குள் அப்பா வந்து உன்னை காப்பாத்திட்டார்.”

“அப்பா?”- கேள்வியோடு பார்த்தாள்.

 “ஆமாம், ரகுராமன் சார்தான்.” கேசவ் அருகில் வந்தான்.

 “சரியான நேரத்தில் அவர் வந்ததால உங்களைக் காப்பாற்ற முடிந்தது.”

சிலிர்த்தது உடல். கடவுளே நன்றி. எனை எந்தச் சேதமும் இல்லாமல் காப்பாற்றி விட்டாய். என்றாலும்  ரகுராமன் தன்னைப் பற்றி என்ன நினைத்திருப்பார் என்று எண்ணுகையில் கூசியது உடல்.

அடி மனது அவருக்காக ஏங்கியது. அவள்  முகத்தில் அவர் வரலையா? என்று கேள்வி கேட்டது.

 “இல்லைம்மா. நான் வரதுக்கு முன்னாடியே அவர் கிளம்பிப் போயிட்டார்.”

“முழிச்சிட்டீங்களா?”-உள்ளே வந்த கேசவ் அருகில் வந்தான். சின்னப் புன்னகையோடு அவரை பரிசோதித்து விட்டு “ ஆல்ரைட்.” என்றான்.

“ஒன் அவர் ரெஸ்ட் எடுத்துட்டு கிளம்பிடலாம்.” என்றவன்

“ரகுராமன் ஒரு அற்புதமான மனிதர். அவர் இல்லைன்னா நீங்க இல்லை. நன்றி சொல்ல வேண்டியது அவருக்குத்தான். அவர் என்கிட்டே எல்லாமே சொல்லிட்டார்.” என்றவன் அருகில் அமர்ந்து அவள் கையைத் தடவிக் கொடுத்தான்.

“மனசு விட்டுப் பேசிக் கொள்ளாததுதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் ஆகிறது. ஒரு நாள் இருவரும் சந்தித்து எல்லாப் பிரச்சினைகளையும் மனசு விட்டுப் பேசியிருந்தா இவ்வளவு நீண்ட நாள் வாழ்க்கை வெறுமையாக் கழிஞ்சிருக்காது. நீங்க ரெண்டு பேரும் உங்களுக்குள்ளேயே உணர்வுகளை மறைச்சு வச்சுகிட்டு வாழ்ந்துட்டீங்க வெறுமையா.

ஒரு பெண்ணுக்கு தகுந்த பாதுகாப்பு, துணை என்பது அவசியம். நான் சுதந்திரமானவள், முற்போக்கானவள், யார் தயவும் எனக்குத் தேவையில்லை என்று சொல்லலாம். ஆனால் இந்தக் கொடிய உலகம் ஆயிரம் விஷக் கொடுக்குகளுடன், அவளைக் குத்திக் குதறக் காத்திருக்கிறது. நல்லவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை எப்படி அடையாளம் காண முடியும்?

குராமன் சார் என்னிடம் எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறார். தகுந்த நேரத்தில் பேசாமல் இருந்தது எத்தனை தவறு என்று வருந்துகிறார். தகுந்த நேரத்தில் சரியான ஏற்பாடுகளுடன் வந்து உங்களை ஏளனம் செய்த உறவுகள் மத்தியில் உண்மைகளை வெளிப்படுத்தி விட்டுத்தான் சந்திப்பேன்னு சொல்லிட்டுப் போயிருக்கார்.

என் தவறுகளுக்கெல்லாம் பிராயசித்தம் செஞ்சுட்டு ஒரு அற்புதமான வாழ்க்கையை அவர்களுக்குத் தருவேன்னு சொல்லிட்டுப் போனார். நிச்சயம் வருவார். தைரியமாக இருங்கள். உங்க வாழ்வில் கஷ்டங்கள் எல்லாம் போயிருச்சி. இனி சந்தோஷத்தை அனுபவிக்க உடலாலும், மனதாலும் தயாராகுங்கள்”

கனிவோடு மயிலிறகால் வருடுவது போல் இருந்தது.

பிரிவு என்பது கூட முன்பை விட இதயத்தால் நெருங்கத்தானா?

மீண்டும் அவரைச் சந்தித்தால் என்ன செய்வோம்.?

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி— பழைய பாடல் ஒன்று மனதில் ஒலித்தது.

இப்போது பதிகம் பாடும்போது கூட ரகுராமா, ரகுராமா என்று உருகியது.

ரகுராமா சீக்கிரமா வாடா. உனக்காக நான் காத்திருக்கிறேன். என்னை முழுதுமாக உன் கையில் ஒப்படைத்து, உன் தோளில் சாய்ந்து அமைதி காண விரும்புகிறேன். ஒரு மழையைப் போல் உன் மேல் அன்பைப் பொழிந்து பூமி போல் அதை ஈர்க்க விரும்புகிறேன். உன் கை அணைப்பும், பார்வையும் நூறு ஆயிரம் கரங்கள் கொண்டு என்னைக் காக்கும். வந்துடு ரகுராமா, சீக்கிரம் வா.

மனம் உருக அமர்ந்திருந்தாள் கல்யாணி.

மௌனிகா அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தாள். என்ன காதல் இது? ஒருவன் நினைவையே மனதில் சுமந்து அவன் நினைவாகவே வாழ்வதுதானா இது. இப்படி ஒரு அற்புதமான இணைப்பு எப்போ தனக்கு கிடைக்கும்?

காசு, பணம் மட்டும்தான் வாழ்க்கையா? அன்பும், பிரியமும், விட்டுக் கொடுத்தலுமே வாழ்வின் சுகம் என்பதை எப்போது மனிதர்கள் புரிந்து கொள்வார்கள்?

“உள்ளே வரலாமா?”

குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள் மௌனிகா. பாலு நின்றான்.

அவனைப் பார்க்கும் போதெல்லாம் மனசுக்குள் ஒரு மண் புழுதி நாற்றத்துடன் எழும்பும். ஒரு அசட்டுத் தனத்துடன் முகம் முழுதும் ஒரு சிரிப்பாய் நின்றவனை இவன் எங்கு வந்தான் என்று கேள்வியோடு பார்த்தாள்.

யார் மௌனிகா என்று கல்யாணி வெளியில் வந்தாள்.

என்ன அத்தை என்னைத் தெரியலையா?” உரிமையோடு கேட்ட பாலுவை உடனே புரிந்து போயிற்று.

பிரேமாவின் மகன் பாலுவா என்று கேட்ட நொடியில் அவளுக்குள் பழைய நினைவுகள் வந்து போனது. தான் வளர்த்த பையன். தன் மடியில் போட்டு, சாதம் ஊட்டி, தூங்க வைத்து வளர்த்த பையன்.

“பாலு எப்படி இருக்கே? எவ்வளவு உசரம் வளர்ந்துட்டே”-அருகில் வந்தாள்.

“நல்லா இருக்கேன் அத்தை. உங்களை எல்லாம் எங்க வீட்டுக்கு அழைக்கத்தான் வந்தேன்.”

“அப்படியா? என்ன விஷயம்?”

“உங்ககிட்ட சொல்லலாம்னுதான் வந்தேன். அதுக்குள்ளே என்னென்னமோ நடந்துருச்சி. நான் மௌனிகாவை விரும்பறேன். இப்போதான் அவ உங்க மகள்னு தெரிஞ்சது.நான் இதை வீட்டுல சொல்லிட்டேன்.”

“சரி, அம்மாவுக்கு இதில சம்மதமா?”

“அவங்க சம்மதம் எதற்கு. மாமாவுக்குச் சம்மதம். வர வெள்ளிக் கிழமை நிச்சயம். மாமா உங்ககிட்ட இந்த லெட்டரைக் கொடுத்துட்டு வரச் சொன்னார்.”

பாலு நீட்டிய கடித்தத்தைப் படிக்கும் முன்பே அந்த கையெழுத்து கண்ணில் பதிந்து மனதில் ஒரு அலையை எழுப்பியது.

ரகுராமன் கையெழுத்து முத்து, முத்தாக இருக்கும்.தட்டச்சு செய்வது போல் அழகாக இடைவெளி விட்டு, கமா, புள்ளி எல்லாம் வைத்து அழகாக எழுதுவார்.

          “அன்புள்ள கல்யாணி,

                             நேரில் பார்ப்பதற்கு முன் கடிதம் மூலம் சந்திக்கிறேன்.

                             உன்மேல்படிந்துள்ளகறையைநீக்கிஉன்னைகம்பீரமாக

                             நிமிர்ந்து நிற்க வைத்து அதன் பின்னே உன்னைச் சந்திக்க

                             வேண்டும் என்று விரும்பினேன். நடந்தவை அனைத்தும்

                             மாற்றப்படும். நடப்பவை அனைத்தும் நல்லதாக நடக்கும்

                             என்ற நம்பிக்கையுடன் வெள்ளிக்கிழமை நம் இல்லத்திற்கு

                             நீ மௌனிகாவுடன் வர வேண்டும்.

                             அன்புடன்,

                             என்றும் உன்

                             ரகுராமன்.

அதற்கு மேல் பார்வை ஓடவில்லை. கண்ணீர் கடிதத்தை மறைத்தது. மௌனிகா அம்மாவை நெருங்கி கடிதத்தை வாங்கிப் படித்தாள். அதிர்ச்சியாக இருந்தது. அசட்டுத்தனம் வழிய நின்றவனை ஒருபக்கம் பார்க்கையில் பரிதாபமாக இருந்தது கல்யாணிக்கு. மௌனிகாவின் கம்பீரத்தையும், புத்திசாலித்தனத்தையும் இவனால் வைத்து கட்டி ஆள முடியுமா?

பாலு சென்றதுமே மௌனிகா கேட்டாள்.

 “ஏம்மா இந்த அசட்டு அம்மாஞ்சிதான் என் புருஷனா?’

“தெரியலை மௌனிகா. ஆன இவனுக்கு உன்னை கட்டி வைக்கறதுன்னா நான் அவரையும் விளக்கத் தயாரா இருக்கேன்.”

“இல்லைம்மா, நீங்க ரெண்டு பெரும் மீண்டும் ஒண்ணா சேர இது ஒரு வழின்னா நான் பாலுவை கட்டிக்க சம்மதிக்கிறேன்.”

 கல்யாணி நெகிழ்வோடு மௌனிகாவைக் கட்டிக் கொண்டாள்.

“உனக்கு உங்கப்பாவைப் பற்றித் தெரியலை மௌனிகா. பிறர் மனதுக்கு மதிப்பு தருபவர் அவர். நல்லது நடக்கும். நல்லதே நடக்கும்.”

நம்பிக்கையோடு உறுதியாகக் கூறினாள் கல்யாணி.

-(ஏக்கங்கள் அகலும்…)

முந்தையபகுதி – 12 | அடுத்தபகுதி – 14

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...