வேப்ப மரத்துப் பூக்கள் – 9 | ஜி ஏ பிரபா
அத்தியாயம் – 9
“எல்லா விதைகளும் நல் கனியைத் தருவதில்லை.
விதைக்கும்போது கவனமாக விதையுங்கள்.
மண்ணில் என்றாலும், மனதில் என்றாலும்.”
“இரவில் நான் சரியாத் தூங்கறதில்லை”- பாலு
வண்டியை நிறுத்திவிட்டு வாசல் கதவருகே செருப்பைக் கழற்றிய மௌனிகா நிதானித்தாள். பாலு கதவில் சாய்ந்தபடி நின்றிருந்தான். புன்னகையோடு அவனை ஏறிட்டாள் மௌனிகா.
“என்ன விஷயம்? உடம்புல ஏதேனும் நோய் இருந்தாத்தான் இப்படி இருக்கும்.”
“ஆமாம், நோய்தான்.”
“என்ன நோய்னு சொல்லுங்க. வைத்தியம்
பாத்துடலாம்.”
“நீதான் வைத்தியம் பார்க்க முடியும்.”
“அப்படியா, பாத்துடலாம். சொல்லுங்க.”
“காதல் நோய்.”
“ஆஹா, மிகப் பெரிய நோய்தான். இதுக்கு வைத்தியம் கொஞ்சம் கடினம்தான். செருப்படி கூட வாங்கலாம். யாரு பொண்ணுன்னு சொல்லுங்க.”
“நீ தான்.”
நிதானித்தாள் மௌனிகா. அவள் இதை எதிர்பார்த்தாள். தினசரி தான் வரும் நேரம் பாலு வந்து அருகில் நிற்பான். ஏதானும் பேச்சு கொடுப்பான். தான் வீட்டில் டிராப் செய்கிறேன் என்பான். தன்னிடம் அவன் வழிகிறான் என்பதை அவள் பெண் உள்ளம் உணர்ந்தது.
பாலுவிடம் ஒரு விடலைத்தனம் இருந்தது. காமம். அழகிய பெண்ணைக் கண்டால் உடனே அவளைக் கவர பைத்தியகாரத் தனமாக நடப்பான். அவளின் கவனத்தை ஈர்க்கப் பாடுவான். டி.வியில் ஸ்போர்ட்ஸ், ஆங்கிலச் சேனல்கள் வைப்பான்.
“நான் அதிகம் ஆங்கில நாவல்கள், சேனல்தான் பார்ப்பேன்.” என்றான் ஒருமுறை.
“அப்படியா, நான் அதிகமா தமிழ்ப் படங்கள், புத்தகங்கள் தான் படிப்பேன். நம்ம மொழியில் இல்லாத எது அந்நிய மொழியில் இருக்கு.”
“என்ன இப்படிச் சொல்றீங்க?”
“ஆமாம். தமிழ்ல இல்லாத இலக்கியச் சுவை வேறு எதுல இருக்கு? மற்ற மொழிகள்ல இருக்கற நல்ல சுவையான அம்சங்களை ரசிக்கலாமே தவிர அது மட்டுமே உயர்வுன்னு நினைக்கக் கூடாது. தமிழ் படிக்கறது அசிங்கம்னு நினைச்சா உங்கம்மாவையும் வீட்டை விட்டுத் துரத்திடுவீங்களா?”
அவள் இப்படிப் பேசுவாள் என்று எதிர்பார்க்கவில்லை பாலு. அடுத்தமுறை மௌனிகா வந்த போது அவன் கையில் தமிழ் நாவல் இருந்தது. இதோ பார்த்தீங்களா? நான் தமிழ் நாவல்கள் படிக்க ஆரம்பித்து விட்டேன் என்றான்.
“வெரிகுட். ஆனா எனக்காகப் படிக்காதீங்க. அதுல உள்ள சுவைக்காகப் படிங்க. எதையும் பிறரைக் கவறுவதற்காகச் செய்ய வேண்டாம். போலி வேஷம் என்றைக்கிருந்தாலும் களைந்து விடும்.”
என்றாலும் அவனுக்கு நல்ல நல்ல நாவல்களைக் கொண்டு வந்து தருவாள்.
“உன்கூடப் பழகியபிறகு நான் நிறையத் தமிழ் படிக்கிறேன். நீ என் மனைவியா வரணும்னு விரும்பறேன். தனியா சந்திக்கலாமா?”
“ஏன் சினிமாவுக்குக் கூப்பிடலையா?. காதலர்கள்னா பீச், சினிமா, பார்க்குன்னு சுத்தணும். அதானே காதலுக்கு அடையாளம்.”-மௌனிகா சிரித்தபடி கேட்டாள். அவள் தன்னைக் கிண்டல் செய்கிறாள் என்று புரியவில்லை அவனுக்கு.
உற்சாகத்துடன் கேட்டான். “எங்கேன்னு சொல்லு. சந்திக்கலாம்.”
“உங்க மாமாகிட்ட கேட்டுச் சொல்றேன்.”
‘வேண்டாம், வேண்டாம்.” பதறினான் பாலு. “அடி கொன்னுடுவார்.”
“அப்போ உங்க அம்மா?”
“வேற வினையே வேண்டாம்.”
“ இப்படி பயந்தா எப்படி எதிர்ப்புகளை சமாளிக்கப் போறீங்க?”
“அது பின்னாடி பார்த்துக்கலாம். இப்போ முதல்ல நாம ஒருவரை ஒருவர் புரிஞ்சுக்கணும். தனியா சந்திச்சுப் பேசனும்”
“அங்க என்னடா தனியா பேச்சு?”- பிரேமா சந்தேகத்துடன் எட்டிப் பார்த்தாள். தன் பையனின் லீலா வினோதங்கள் அவளுக்குத் தெரியும். அவனை அதிகம் பெண்கள் இருக்கும் பக்கம் விட மாட்டாள். வீட்டுக்கு யாரானும் வந்தால் தானும் கூடவே இருப்பாள்.
அவன் மௌனிகாவிடம் வழிகிறான் என்று மோப்பம் பிடித்திருந்தாள். இப்போது அவளிடம் தனியாக வாசலில் நின்று பேசுவதைப் பார்த்ததும் சந்தேகம் அதிகரித்தது. கோபத்துடன் வெளியில் வந்தாள்.
“ஒண்ணும் இல்லம்மா. தமிழ் நாவல் கொண்டு வரேன்னு சொன்னாங்க. அதான் கேட்டுட்டு இருந்தேன்.”
“ஏன் பயப்படறீங்க பாலு?” –மௌனிகா குறுக்கிட்டாள். “என்னை விரும்பறீங்கன்னு சொல்லிட வேண்டியதுதானே. எங்க சந்திக்கலாம்னு கேட்டார்?”
“என்னடா இது?” பிரேமா அதிர்ந்தாள்.
“ஆ,ஆ… இல்லம்மா. அதெல்லாம் இல்லை.”-பாலு திணறினான்.
“என்ன பாலு இது? இப்பத்தான் என்னை விரும்பறீங்கன்னு சொன்னீங்க. அதுக்குள்ளே மாறிட்டீங்க? இவ்வளவுதானா உங்க வேகம். நல்லவேளை நான் தப்பிச்சேன்.”- மௌனிகா சிரிப்புடன் உள்ளே போக பிரேமா ஆத்திரத்துடன் அவன் கையை இழுத்துப் பிடித்துக் கொண்டு உள்ளே வந்தாள்.
“ஏண்டா, உனக்கு அறிவில்லையா? அவ என்ன, யாரு எதுன்னு எதுவும் தெரியாது. அதுக்குள்ளே காதல். ஏண்டா இப்படி பொண்ணுகளைப் பார்த்தா வழியரே. அவ உன்னை கேவலமா கிண்டல் செஞ்சுட்டுப் போறா? வெட்கமாயில்லையா உனக்கு.”
“இல்லம்மா நான் அவளை உண்மையா விரும்பறேன். அவளுக்கு என்ன குறை. நல்லா படிச்சு நல்ல வேலை. அழகு, அறிவு. பிளீஸ்மா “ கெஞ்சும் மகனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.
ஆனால் அவளின் கற்பனை வேறு விதம். அவள் கணவரின் வழியில் நிறைய சொத்து, நகையுடன் ஒரு பெண் இருந்தாள். அவளை திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தாள். மௌனிகாவிடம் அழகு மட்டும்தான். அது போதுமா?
பிரேமா மகனை முறைத்தாள். “உனக்கு அறிவுங்கறதே கிடையாது. தகுதி அறிஞ்சு காதலிக்கணும். நீ சொன்னதும், அவளும் ஈன்னு பல்லைக் காட்டறா. உன்னை மாதிரி ஒருத்தன் அவளுக்குக் கிடைப்பானா? வீடு, காசு பணம்னு இருக்கே. உன்னை மாதிரி வசதியானவனை வலை போட்டுப் பிடிச்சிட்டா”
“இல்லைம்மா. நான் அவளை ரொம்ப விரும்பறேன்.”
“போதும் வாயை மூடு.”- பிரேமா சீறினாள். “நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்.”
“அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை.”
பிரேமா அதிர்ந்து போனாள். “என்னடா இப்படிப் பேசறே?”
“ஏம்மா எப்பவும் உன் இஷ்டம்தானா? என் இஷ்டம்னு எதுவும் இல்லையா? எனக்கு மௌனிகாவை ரொம்பப் பிடிச்சிருக்கு. அவதான் எனக்கு வேணும். நீ சம்மதிக்கலைன்னா நான் செத்துருவேன்.”
“டேய், டேய், “பதறினாள் பிரேமா? “என்னடா பேசறே?”
“எனக்கு அவ வேணும்மா. மாமாகிட்ட சொல்லி ரெடி பண்ணு.”
“சரிடா, அவளுக்கு உன்னைப் பிடிக்க வேண்டாமா?”
“என்னை ஏன் பிடிக்கலைன்னு சொல்லப் போறா? நாளைக்கு இந்த வீடு, மாமாவோட பணம் காசு எல்லாம் எனக்குத்தானே.”
“சத்தமா பேசாதே” என்றாலும் அதுதானே அவள் எண்ணமும். ரகுராமன் காலத்துக்குப் பிறகு அவர் சொத்துக்கள் எல்லாம் அவனுக்குத்தானே. வீடு அம்மா பெயரில் வாங்கியிருந்தார். அம்மா காலம் முடிந்ததும் அம்மா சொத்து பெண்களுக்குத்தான் என்று வாங்கி விடலாம்.
என்றாலும் யார், என்ன என்று தெரியாத ஒருத்தியை எப்படி மகனுக்குக் கட்டி வைப்பது? என்றுதான் யோசித்தாள்.
பாலு கீழே இறங்கிப் போய் விட்டான். மௌனிகா கிளம்பியதும் அவள் பின்னாடியே போவான் என்று தெரியும். அவள் தன் கணவரைத் தேடினாள். அவர் நிம்மதியாக டி.வி. சீரியலில் மூழ்கி இருந்தார்.
“எப்பப் பாரு அந்தச் சீரியல்ல என்னதான் இருக்கோ?”
“என்ன இருக்குன்னுதான் பாத்துட்டு இருக்கேன்.”
“போதும்.” பிரேமா சீறினாள். “உங்க பையன் பேசினதைக் கேட்டீங்கல்ல?”
“பேஷா கேட்டேன். நீ சொன்னதையும் கேட்டேன்.”
“கேட்டுட்டு சும்மாவா இருந்தீங்க?”
“என்ன செய்யனும்னு சொல்றே? என்னைக்கானும் நீயோ, அவனோ என் பேச்சைக் கேட்டிருக்கீங்களா? இப்போ நான் சொன்னா கேட்கவா போறீங்க?”
“சரி. இப்போ கேட்கறேன். சொல்லுங்க.”
“உன் பையன் லட்சணத்திற்கு நல்ல குடும்பத்தில் பெண் கிடைக்காது. இந்த மௌனிகா நல்ல பொண்ணு. சாதாரண மிடில் கிளாஸ்தான். கட்டி வை.”
“அவ யாரு, என்னன்னு எதுவும் தெரியாம எப்படி கட்டி வைக்கிறது?”
“விசாரிச்சா போறது”
“அதையானும் உருப்படியா செய்யறீங்களா”
“செய்யறேன்” மாமா எழுந்தார். அவருக்குள் ஒரு சலிப்பு எழுந்தது. விரக்தியும்,வெறுப்புமாக இரங்கி வந்தார். ஆரம்ப நாளிலிருந்தே அவருக்கு பிரேமா மேல் ஒரு பிடித்தம் இல்லை. ஆணவம், கெட்ட எண்ணம், கல்யாணியின் மேல் பழி சுமத்தி விரட்டி விட்டது என்று வரிசையாக காரணங்கள் இருந்தது. ஆனால் ஒரு தர்மம், கட்டிய மனைவியை உதறக் கூடாது என்று அடங்கி, மௌனமாக இருந்தார்.
மௌனிகாவைப் பார்த்ததுமே இவள் கல்யாணியின் மகள் என்று யூகித்து விட்டார். அதை உறுதி செய்து கொள்ள நினைத்த போதுதான் பிரேமா விசாரிக்கச் சொல்லி வேலை கொடுத்தாள்.
இரண்டு நாள் கழித்து மாமா உண்மை தெரிந்து வந்தார்.
அதற்குள் ரகுராமன் கல்யாணியைச் சந்தித்து விட்டார்.
-(ஏக்கங்கள் அகலும்…)