அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 1 | செல்லம் ஜெரினா

 அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 1 | செல்லம் ஜெரினா

அத்தியாயம் -1

ந்தப் பெரிய திருமண மஹால் முற்றாத விடியல் நேரத்திலேயே களைகட்டிக் கொண்டிருந்தது.

ஆயிரம் பேர் அமரக்கூடிய பெரிய கல்யாணக்கூடம்.

ஸ்ரீநிவாசன் பத்மாவதி சமேதராய் பின்னணியில் கண்கவர் ஓவியமிருக்க. சற்றே உயர்ந்த மணமேடை.

சமையலறை பின்னாலிருக்க காரிடார் போன்ற இடத்தைத் தாண்டினால் சாப்பாட்டுக்கூடம். ஒரே சமயத்தில் முன்னூறு பேர் சௌகரியமாக உணவருந்தலாம்.

அத்துடன் முன்னும் பின்னுமாக இருந்த தோட்டத்தில் பூக்கள் பூத்துக் குலுக்கின. குல்மொஹர் மரமும் மஞ்சள் கொன்றையும் கான்ட்ராஸ்ட்டாக கண்ணைக் கட்டியிழுக்க ஆங்காங்கே ரோஜாக்களும் பெயர் தெரியாத க்ரோட்டன்சுகளும் அழகைச் சிந்தின.

நடுநாயகமாக தண்ணீரில்  பூக்கள் மிதக்க பொன்னாய் மிளிரும் அகலமான பித்தளை பாத்திரம். வலது பக்க வாசலில் வினாயகர் உருவம். புத்தம்புது பூமாலையோடு ஊதுபத்தி மணக்க புன்னகையோடு அமர்ந்திருக்க இடது புற வாசலருகே மருகன் ராதையோடு காதலாகிக் கசிந்துருக நின்றிருக்க … நாயனக்காரர்கள் வாசிப்புக்குத் தயாராகினர்.

செந்தில் சமையலறையில் ஒருமுறை பார்வையை ஓட்டிவிட்டு மணமகன் அறைக்கு போனார்.

அங்கே

லாப்டாப்போடு உட்கார்ந்திருந்த தன் மருமகனைக் கண்டதும் துணுக்குற்றார்.

“என்னடா! மாப்பிள்ளே! நீ டூயட் பாடிட்டிருப்பே கனவுலே! நான் வந்து கலைப்பேன். என் மேலே எகிறி விழுவேன் னு பார்த்தா இந்த மடிக்கணிணியை மடியிலே வச்சு கொஞ்சிக்கிட்டு இருக்கே!ஹும்! உன் மூஞ்சைப் பார்த்தா ராத்திரி முச்சூடும் தூங்கவேயில்லை போலிருக்கு! என்னடா பிரச்சனை?  ஏதானால் என்ன!? லூசுலே விடு. இன்னிக்கு உன்னோட நாளுடா! . வாழ்க்கையிலே ஒரே ஒரு முறை வர்ர திருநாளுடா? எந்திரி…எந்திரி …”

“மாமா! “

“மாப்பிள்ளே என்னடா ஆச்சு ஏண்டா கண்ணு கலங்குது! மாமங்கிட்டே சொல்லுடா “

“எங்க மாமா போனே? “

“தீபாவோட மாப்பிள்ளை கூட்டாளிகளும் பங்காளி குடும்பமும் வருதுன்னாங்க வண்டிய அனுப்பி வச்சேன்.  பூக்கூடையை அக்கா கிட்டே கொடுத்து பொண்ணு வீட்டுக்கும் கொடுக்கச் சொன்னேன்.

உ ன்னோட ப்ரெண்ட்சுக்கும் ஹோட்டலிலிருந்து இங்கே வர வண்டி ஏற்பாடு பண்ணிட்டேன். சரி! காபி குடிக்கிறியா? சூடா??  எடுத்துட்டு வரவா? “

“நடக்காத கல்யாணத்துக்கு இத்தனை அலப்பறை! அட! ஏன் மாமா நீ வேற? “

“மாப்பிள்ளே! என்ன நீ அச்சானியமாப்  பேசுறே! போ!  போ! ரெடியாகிற வழியப்பாரு.  எனக்குத் தலைக்கு மேல வேலை கிடக்கு “

என்றபடியே நகர முயன்ற மாமனை கைகளில் பிடித்துக் கொண்டான்.

“என்னடாம்மா “

‘மாமா! விஷயம் வெளியே வந்தா குடும்பத்துக்கே அசிங்கம் மாமா’ நந்தன் உள்ளுக்குள்ளே குமைந்தான்.

செந்தில் தாய்மாமனாய் தாங்கினான். பின்னே…மாரிலும் தோளிலும் போட்டு வளர்த்தது மட்டுமா? ரெண்டு பேருமே கூட்டுக் களவாணிகளாய் திரிபவர்கள் ஆச்சுதே. எட்டு  வயசு வித்தியாசம் இருந்தாலும் செந்திலுக்கு தன் அக்காவின் கடைசி மகன் நந்தன் சக்ரவர்த்தி யென்றால் தனிதான்.

பெருந்தனக்காரக் குடும்பம் அது.அழிந்து போய்விட்ட ஜமின் ஒன்றின் கடைசிக் கிளையும் கூட….காலத்துக்கேற்றார் போல வாழ்க்கை முறை மாறிவிட்டது.  சிவநேசம் சக்ரவர்த்தியின் ஒரே வாரிசு ஸ்ரீநிவாசச் சக்ரவர்த்தி அவருக்கும் தகுந்த வயதில் ஜமின் வாரிசாகவே பெண்ணைத் தேர்வு செய்தனர் சிவநேசம் தம்பதிகள்.

ஆழியூர் வம்சத்தின் மகள் வழி வாரிசாக வந்தவர்தான் மரகதம்.

மரகதத்தின் பெரியப்பா மகன் தான் செந்தில் வேலன்.

மரகதத்தைக் காப்பாற்றப் போய் செந்தில் வேலனின் தந்தை விபத்தில் சிக்கி உயிர் துறக்க மரகதத்தின் செல்லக் குழந்தையானான் .

தந்தையிறந்த வருடாந்திரமே பெரியம்மாவான செந்திலின் தாயும் கணவனைத்தேடிப் போய்விட இரண்டு வயது முதலே அக்கா மரகதமே செந்திலின் அம்மையப்பன் ஆனாள்.

ஸ்ரீநிவாசனுக்கும் மரகதத்திற்கும் திருமணமாகி அன்றிரவு மணமகன் வீடு போய்விட ..செந்திலுக்கு இரவே காய்ச்சல் வந்து விட்டது. மறுவீடு வந்த தம்பதிக்கு செந்திலின் உடல் நிலை கவலையைத்தர புது மனைவியின் விழிமொழியையும் பாசத்தையும் உணர்ந்த ஸ்ரீநிவாசன் மனைவியின் ஆசைக்கு அணையிடாமல் குழந்தை செந்திலோடு மனைவி தன் வீடு வர அனுமதித்தார்.

செந்திலின் துறுதுறுப்பும் அவன் அத்தான், அத்தான்  என்று காட்டிய அன்பும் அந்தப்புதுக் கணவனை தன் தலைமகன் இவனே யென்ற பெருமிதத்தைத் தந்தது.

அக்கா அத்தான்  என்பது செந்திலைப் பொறுத்து மட்டும் அம்மா அப்பாவாக உணரப்படவில்லை….. புதுத் தம்பதியருமே அப்படித்தான் உணர்ந்தனர்.

ஐந்து வயதில் அக்காவின் கைப்பிடித்து வந்தவன் அங்கேயே ஐக்கியமாகி விட்டான்..

“என்ன சீனி! இலவச இணைப்பா? எடுபிடி வேலைக்கு சீதனமா பொடியனையே தயார் பண்ணிட்டியா “

என்று ஏகடியம் பேசுபவர்களிடம் மல்லுக்கு நிற்காமல் அவனை சிறந்த பள்ளியில் சேர்த்தார். அறிமுகப்படுத்துகிற வேளைகளிலும்

“என் மச்சினன் ஆனா எனக்கு மகன்  “

என்று வாயை அடைத்து விடுவார்.

திருமணமான மறு வருடமே அபய் சக்ரவர்த்தியும்  லோக நாயகியும் பிறக்க. செந்திலுக்கு பெருமை! போதாதற்கு மரகதம் வேறு நீதான் தாய் ஸ்தானத்தில் நிற்கனும் தாய்மாமன் என்ற அந்தஸ்த்தைத்  தந்துவிட ஆறு வயதுச் சிறுவனுக்கு  கிரிடம் வைத்தாற் போலாகி விட்டது.

செந்திலுக்கு எட்டு வயது முடியுமுன்னே மீண்டும் கருவுற்றார் மகரதம். இம்முறையும் இரட்டையரே!

நந்தன் சக்ரவர்த்தியும் தீபலஷ்மியும் …

இம்முறை

நந்தன் பிறந்து பதினைந்து நிமிடம் கழித்து தீபலஷ்மி தாயைப்படுத்தி வைத்து விட்டு பிறந்தாள் கொஞ்சம் நோஞ்சானாகவே.

மரகதத்திற்கும் உடல் நிலை சிக்கலாகியிருக்க நந்தனுக்கு தாய்மாமனே அம்மையப்பன் ஆகிப்போனான்.

நால்வரிலும் நந்தன் எப்போதுமே ஸ்பெஷல்தான் மாமனுக்கு.

அபய் அமைதிப்பூங்கா லோகநாயகி பெண் குழந்தைக்கேயுரிய பொறுப்பும் பொறுமையும் குடும்ப கௌரவத்துக்கேற்ற கம்பீரமுமாய் இருப்பாள்.

வயது வித்யாசமிருப்பினும் நந்தனும் செந்திலும் தான் ஜோடி. தீபலஷ்மி அம்மாவின் கைக்குள்ளேயே வளர்ந்தாள்.

பிள்ளைகள் படித்து குடும்பத்தொழில் விவசாயம் வேலை கல்யாணம்  என்று செட்டிலாகி விட்டனர். ஆனாலும் வயல்வரப்பு தோட்டம் துரவு வரை எல்லாமே செந்தில் வேலன்தான். இரண்டு வருடமுன்னே தீபாவும்

மாமியார் வீடு போய்விட வெளிநாட்டில் படிப்பை முடித்து விட்டு வந்த நந்தனுக்கு பெண் இப்போதுதான் குதிர்ந்தது. தான் தூக்கிச் சுமந்தவனின் கலக்கம் கண்டு நெஞ்சு வெடித்தது. செந்திலுக்கு

“ஐய்யா  சொல்லுய்யா? முகமெல்லாம் வாடிக்கிடக்கு “

மாமாவைக் கட்டிக் கொண்டான் நந்தன்.

“என்னடாம்மா “

“இந்தக் கல்யாணம் நடக்காது மாமா! “

“….”

“நீங்க போயி அப்பா அம்மா எல்லோரையும் அழைச்சிட்டு வாங்க! “

எல்லோருமே குழுமி நிற்க எல்லோர் முகத்திலும் கவலையும் பதட்டமும் …

“என்னடா! ரெண்டு மணி நேரத்துலே முகூர்த்தம் வச்சுகிட்டு மாமனும் மருமகனும் மீட்டிங் போடறிங்க “

லோகநாயகியின் கணவர் ராம்குமார் அங்கலாய்க்க ஸ்ரீநிவாசன் கோபமாய் பார்த்தார்.  தாத்தா சிவநேசமும் பாட்டி ரங்கநாயகியும் கூட ஆஜர். குழந்தைகளையும் தீபலஷ்மியையும் தவிர்த்து!

தீபாவுக்கு மசக்கை யுடன் மார்னிங் சிக்னசும் இருக்க அவள் உறங்கிக் கொண்டிருந்தாள்.

 அறையில் கூடியிருந்தவர்களைப் பார்த்தான் நந்தன்.

“அப்பா! இன்னிக்கு இந்த கல்யாணம் நடக்காதுப்பா “

“வாயை மூடுடா! “

“அபசகுனமா என்ன வார்த்தையிது “

“தம்பி “

“மச்சான்”

நந்து கண்ணா! “

“உன்னைக் கேட்டுதானே எல்லாமும் செய்தோம் “

“என்னடா பிரச்னை உனக்கு “

“”என்னைக் கேட்டீங்க சரிப்பா! பொண்ணைக் கேட்டீங்களா “

“என்னடா உளறல்? பொண்ணைக் கேட்டுத்தானே நாள் குறிச்சோம். “

“பொண்ணு சம்மதம் சொல்லுச்சாப்பா “

”பொண்ணு சம்மதம் சொல்லித்தானே இத்தனை தூரம் வந்திருக்கோம். “

“இல்லப்பா! இல்லை! பொண்ணு வீட்டுலே பெரிய தப்பையே மறைச்சுட்டாங்க! “

“கண்ணா! என்னடா சொல்றே “

“ஆமாம் பாட்டி!  பொண்ணு சம்மதமில்லாமலே கல்யாணம் வரைக்கும் ஒரு விஷயத்தை மறைச்சு செஞ்சுருக்காங்க

நிஜமாதான் தாத்தா!

ஆமாம்ப்பா! பொண்ணுக்கு ஏற்கெனவே வேறொருத்தர் கூட கல்யாணமாகிருக்கு . மறைச்சுட்டாங்கப்பா.  “

“என்னது “

“ஆமாம்டா …இதோ பார்! நேத்து ராத்திரி எனக்கு ஒரு மெயில் வந்தது. ஒரு வாரமாகவே கல்யாண வேலைன்னு ஆபிஸ் போகிறதில்லையா. நேத்து தூக்கம் வராம மெயிலை செக் பண்ணிக்கிட்டிருந்தேன். அப்போதான் பார்த்தேன்.நீயே பாரு.”

அபய் கண்களை ஓட்ட அதில் கண்டிருந்த விஷயம் அவனைக் கொதிக்க வைத்தது.

ஆண்கள் எல்லோருமே பார்வையிட பெண்களுக்கு லோகநாயகி விஷயத்தைச் சொல்ல மரகதத்திற்கோ மயக்கம் வரும் போலிருந்தது.

“என்னங்க! பெண்பிள்ளை விசயம். சட்டுன்னு  . சொல்லிடக் கூடாதுங்க  “

பெண்வீட்டாரை அழைக்க அபய் ஓடினான் அடக்கப்பட்ட கோபத்துடன்.

“அபய் ஒன்னும் சொல்லாதே! பொண்ணையும் பெத்தவங்களையும் மட்டும் கூப்பிட்டுக்கிட்டு வா “

“சரிப்பா “

பெண்ணின் தகப்பனாரோடு பேசிக் கொண்டிருந்த பெண்ணின் தாய்மாமனும் அபய்யின் முகமே சரியில்லையே என்று கூடவே கிளம்பி வந்தார்.

பெண்ணின் முகம் இருளடித்துக் கிடந்தது.கண்களில் அலைப்புறுதலும் சஞ்சலமும் கலக்கமும் அப்பியிருந்தது.

“என்னங்க இது! நாங்க கேள்வி பட்டது உண்மையா “

“நீங்க என்ன கேள்விபட்டீங்கன்னு புரியலையே சம்பந்தி. “

“உங்களுக்குப் புரியாமலோ தெரியாமலோ இருக்க வாய்ப்பே

இல்லீங்களே “

வாக்கு வாய் பேச்சுக்கு பேச்சு சம்பந்தி  சம்பந்தி என்று அழைக்கிற சிவநேசம் அமைதியாக நிற்க பெண்ணின் தகப்பனாருக்கு திகில் அடித்தது.

“நேராவே விஷயத்திற்கு வரேன்! உங்க பொண்ணோட சம்மதத்தைக் கேட்டுதான் கல்யாண ஏற்பாடெல்லாம் நடக்குதா? “

“அதிலென்னங்க சந்தேகம்? “

“ஏம்மா? நீ சொல்லு! இந்தக் கல்யாணத்திலே உனக்கு இஷ்டமா? “

“அவள் குனிந்த தலை நிமிரவில்லை.

ரங்கநாயகி முன்னே வந்தார்.

“தோ பாரும்மா! எம் பேரன் நந்தனைக் கட்டிக்க இஷ்டம் தானான்னு இப்ப எங்க முன்னே உன் வாயைத்திறந்து பதிலைச் சொல்லணும். “

“என்னங்க இது! சின்னப்பொண்ணு! நிக்கவச்சு கேட்டா என்னத்தை சொல்லும்! “

“பேசவேண்டிய நேரத்துலே பேசித்தானுங்க ஆகனும். பேச வேண்டிய நேரத்திலே மௌனமாயிருக்கிறதும் தப்பு, மௌனமா கடந்து போக வேண்டிய சமயத்திலே பேசுறதும் தப்பு.  இப்ப

உங்க பொண்ணு பேசியே ஆக வேண்டிய  கட்டாய சூழல்  எங்களுக்கு உங்கப் பொண்ணு வாயைத் திறந்து பதில் சொல்லியே ஆகனும். சொல்லும்மா! இது உன் வாழ்க்கைப் பிரச்சனை மட்டுமல்ல. என் மாப்பிள்ளையின் கௌரவமும் இருக்கு. பச்சையாகவே கேக்கேன் உன்னை மிரட்டி சம்மதம் வாங்கினாங்களா? பயப்படாம சொல்லு.எங்களுக்கும் விசயம் தெரிஞ்சுதான் கேட்கிறோம்.  “

அவள் சடாரென்று நிமிர்ந்தாள்.

எல்லோரையுமே ஒருமுறை பார்வையால் துழாவியவள் இரு கைகளையும் கூப்பினாள். வாயைத்திறக்க பேச்சு வராமல் தடுமாறிய கணம்……

மண்டப வாசலில் குழப்பமும் கூச்சலும் களேபரமானது.அந்த சூழலுக்குப் பொருந்தாமல்  போலிஸ் ஜீப் ஒன்று சர்ரென்று டயரைத் தேய்த்தபடி நிற்க அதிலிருந்து குதித்தான் பலராமன். இதழ்கள் இறுகி மடிந்திருக்க முகமெங்கிலும் வன்மம் வழிந்தது.

‘வச்சு செய்றேன்டா உன்னை’ மனம் குத்தாட்டம் போட்டது.மீசையைத் திருகியபடியே சுழன்ற பார்வை யாரையோ தேடியது…

யாரோ காக்கிச் சட்டையைப் பார்த்து விட்டு திருமணத்துக்கு வந்திருக்கிறார் போலும் என்றெண்ணி “வாங்க ,வாங்க ஸார் ” என்று முகமன் கூற..

“ஏய்! கல்யாண சாப்பாடு சாப்பிட வந்தேன்னு நினைச்சியா? பெரிய வீட்டுக் கல்யாணத்தை நிறுத்தப் போறேன்யா! “

என்று உறுமியவன் எட்டி உதைத்ததில் நாற்காலிகள் கவிழ்ந்து உருண்டன.

(சஞ்சாரம் தொடரும்)

சதீஸ்

1 Comment

  • ஆரம்பமே விறுவிறுப்பு.
    சஞ்சாரம் தொடரட்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...