மரப்பாச்சி – 3 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

 மரப்பாச்சி – 3 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

அத்தியாயம் – 3

ம்மா என்ன பேச்சு பேசுற?”

“உண்மையைத்தான் சொல்லுறேண் வீட்டுல மூத்தவளை வச்சுட்டு இளையவளுக்கு கல்யாணம் பண்ணுனா ஊருல நான் தலை நிமிர்ந்து நடக்க முடியுமா? ஒரு நல்லது கெட்டதுக்கு போய்த் தான் வர முடியுமா?”

“அம்மா என்னை ஏத்துக்கற மாப்பிள்ளை அமைய வேண்டாமா?”

“அமையும் உனக்கு கல்யாணம் நடக்கும், அப்புறம் அவளுங்களுக்கும் கல்யாணத்தை முடிக்கலாம். இப்ப இந்தப் பேச்சுக்கு முடிவு கட்டு” என்றவள் மகளின் அறையிலிருந்து கிளம்பினாள்.

அலுவலகத்தில் வேலை ஓடாமல் சிந்தனை வயப்பட்டு அமர்ந்திருந்தவள் முன் சொடக்குப் போடும் சத்தம் கேட்கவும் கலைந்தாள் பிருந்தா..

“என்ன பகல் கனவு எந்தக் கோட்டையைப் பிடிக்க இந்த சிந்தனை?”

குரல் கேட்கவும் நிமிர்ந்தாள் பிருந்தா. எதிரே தோழி மலர்வதி..

“என்ன கேட்ட?”

“இல்ல எந்தக் கோட்டையைப் பிடிக்க இந்த யோசனைனு கேட்டேன்?”

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை தூக்கம் கண்ணைச் சொக்குது”

“வா ஒரு டீ அடிச்சிட்டு வரலாம்”

தோழியுடன் புறப்பட்டாள் கேன்டீன் நோக்கி.மலர்வதி கேட்டாள்..

                   “ராத்திரி தூங்கலையா?”

“தூக்கம் தொலைய ஆரம்பிக்குதுடி..” கூறி முடிக்கவும் கேன்டீன் வந்திருந்தது.டீ மாஸ்டரிடம் இரண்டு டீ சொல்லி விட்டு தோழியர் இருக்கையில் அமர்ந்தனர்.

“என்னாச்சுடி? நேத்து பொண்ணு பார்க்க வந்தவனும் வேணாம்னுட்டானா?”

 கரிசனமாய்க் கேட்டாள் மலர்வதி.

அழுகையை அடக்கப் பிரயத்தனப் பட்டாள் பிருந்தா.

“எல்லாப் பயலுகளும் சமந்தா நயன்தாரக்களுக்கு அலையறானுங்க, நல்ல மனசும் குணமும் இங்க ஒருத்தனுக்கும் தேவை இல்லை” மலர்வதி தோழியை சமாதானப் படுத்தக் கூறினாள்.

“இல்லை மலர் எனக்கு கல்யாணம் பண்ணிக்கணுங்கற ஆசையே போயிடிச்சு.. எங்க அம்மாவோட பிடிவாதம் எனக்கு கல்யாணம் ஆனாத்தான் தங்கைகளுக்கு கல்யாணம் நடத்தணும்னு. நான் ஒதுங்கிக்கறேன் தங்கச்சிங்களுக்கு வரன் பாருங்கன்னு அம்மாக்கிட்டச் சொன்னேன்,அப்படி எதாவது நடந்தா செத்துப் போயிடுவேன்னு மிரட்டறா. நான் என்ன பாவம்டி செஞ்ச்சேன்” கூறியவள் கண்கள் பனித்தது.

தோழிக்கு ஆறுதல் கூற முடியாமல் தவித்து நின்றாள் மலர்வதி. ஒவ்வொரு முறையும் தோழியை பெண் பார்க்க வரும்போதெல்லாம் கோவிலுக்குச் சென்று வருவாள் மலர்வதி. இறைவா என் தோழிக்கு ஒரு மண வாழ்க்கையை அமைத்துக் கொடு என்பது தான் அவள் கோரிக்கையாக இருக்கும். ஆனால் அந்த இறைவன் அவளுக்கு இன்னும் ஒரு வழியை காட்டாமல் சங்கடத்தையே கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதற்குமேல் அவளால் தோழியை தேற்ற முடியவில்லை. இருவரும் அமைதியாக டீயை பருகி விட்டு தங்கள் இருக்கைக்கு திரும்பினர்.

வேலையில் கவனம் செலுத்த முயற்சித்த வேளையில் அவள் முன் நிழலாட்டம் தலையை உயர்த்தினாள் அவர் முன் ஹெட்கிளார்க் மாசிலாமணி நின்றிருந்தார்..

“வாங்க சார் என்ன விஷயம்? என்றாள்..

ஒடிசலான தேகம் தலை  முழுதும் வெண்பனியை தூவியிருந்தார் மாசிலாமணி. ரிட்டையர்ட் ஆக இன்னும் ஆறு மாசத்தைப் பாக்கி வைத்திருந்தார். பிருந்தா மேல் ஒரு மகளைப் போல் பாசம் வைத்திருக்கும் ஒரு நல்ல ஜீவன் மாசிலாமணி.

“ஏம்மா பிருந்தா நேத்து உன்னைப் பொண்ணு பார்த்திட்டுப் போனாங்களே என்ன பதில் சொன்னாங்க?”

“இன்னும் பதில் வரலை பதிலும் வராது” விரக்தியாய் வந்தது அவளிடமிருந்து வார்த்தைகள்.

“கவலைப் படாதேம்மா கடவுள் உன்னை இவ்ளவு நாள் காக்க வைக்கிறாருன்னா எதோ ஒரு வொண்டர் உன் வாழ்க்கையில ஏற்படுத்தப் போறாருன்னு அர்த்தம்”

“போங்க சார் அதிசமாவது என் வாழ்வுலையாவது..உங்க நல்ல மனசு அப்படி சொல்லுது”

“இல்லைமா கூடிய சீக்கிரம் உனக்கு கல்யாணம் ஜாம் ஜாம்னு நடக்கும்” என்றவர் அங்கிருந்து புறப்பட்டார் தன் இருக்கைக்கு.

நடக்க ஆரம்பித்தவர் கால்கள் “சார் ஒரு நிமிஷம்” என்ற பிருந்தாவின் குரல் தேக்கியது..

                   “என்ன பிருந்தா?”

“சார் உங்க கூட கொஞ்சம் பேசணும்?”  அவள் கூறவும் அவள் எதிரே ஒரு ஸ்டூலை இழுத்துப் போட்டு அமர்ந்தார்..

“சொல்லும்மா..”

“சார் கொஞ்சம் பர்சனல் கேன்டீனுக்குப் போகலாமா?”

“ஓக்கேம்மா” என்றவர் இருக்கையிலிருந்து எழுந்து கேன்டீனை நோக்கி நடந்தார். பின்னே அவளும்.

கேன்டீனில் “இரண்டு டீ” என்றார் மாசிலாமணி..

“சார் நானும் மலரும் இப்பத்தான் டீ குடிச்சோம் ஒண்ணு மட்டும் சொல்லுங்க”

“டீ தானே பரவாயில்லை இன்னும் ஒண்ணு சாப்பிட்டா ஒன்ணும் ஆகாது” என்றவர் இரண்டு டீயே சொன்னார்.

கேண்டீலில் கூட்டம் இல்லை திருப்தியானாள் பிருந்தா..

“சரி பிருந்தா என்ன பேசணும்?”

“சார் என்னோட கல்யாண விஷயம் உங்க கூட கொஞ்சம் பேசணும்”

“சொல்லும்மா உனக்கு என்ன உதவின்னாலும் நான் செய்யுறேன்.எனக்கு ஒரு பையன் இருந்தா கட்டுடா பிருந்தா கழுத்துலன்னு சொல்லியிருப்பேன்”

“நீங்க சொல்லுவீங்க சார் அது உங்க நல்ல மனம்,ஆனா எந்த ஆணும் என்னை கட்டிக்க சம்மதிக்க மாட்டேங்கறானே?”

“ஒனக்கு என்னம்மா கொற?”

“இருக்குதே சார் இப்படி ஒல்லிப் பிச்சானா ஒரு மரப்பாச்சி பொம்மை மாதிரி இல்ல இருக்கறேன்”

“அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் சதை போட்டுடும்”

“இப்படியெல்லாம் யாரும் யோசிக்கறதில்லை சார். வீட்டுல பிரச்சனை”.

“நான் வீட்டுல வந்து அப்பா அம்மாவை பார்த்து பேசட்டுமா?”

“பிரச்சனையே எங்க அம்மா தான் சார்”

“என்ன்னம்மா சொல்லுற?”

“சார் ஒரு வீட்டுல மூணு பொண்ணுங்க கல்யாண வயசு தாண்டி இருந்தா ஒரு தாய் என்ன பாடு படுவா?”

“கஷ்டம் தாம்மா?”

“எனக்கு வரன் தகைய மாட்டேங்குது அதனால எனக்கு அப்புறம் மாபிள்ளை பார்க்கலாம் தங்கைகளுக்கு வரன் பார்க்கச் சொன்னேன்”

“அது  முறையில்லையேம்மா?”

“வேற வழியில்லை சார்.. என் தங்கச்சிங்க என் மேல வன்மன் ஆகறாங்க அதனால அம்மாகிட்ட அப்படி சொன்னேன் அதுக்கு.. மூத்தவ இருக்கும் போது இளையவளுக்கு கல்யாணம் செஞ்சா சூசைட் பன்ணிக்குவேன்னு மிரட்டறா”

“ஒரு நல்ல தாய் வேற எப்படிம்மா நடந்துக்குவாங்க?”

“இதுக்கு ஒரு முடிவு தேடித்தான் நான் உங்ககிட்ட வந்திருக்கறேன்”

“சரிம்மா இப்ப நான் உனக்கு என்ன உதவி செய்யணும்?”

“சார் என் பிரச்சனை முழுவதையும் நான் உங்க கிட்டச் சொல்லிட்டேன். இதுக்கு ஒரு சொல்யூஷன் நான் தேர்ந்தெடுத்திருக்கறேன்”

“என்னம்மா அது?”

“உடனடியாய் என் கல்யாணம் நடக்கணும்”

“அது எப்படிம்மா நடக்கும்? மாப்பிள்ளை வேணுமே?”

“நான் ஒரு மாப்பிள்ளை சொல்லுறேன் அவர்கிட்ட என்னைக் கட்டிக்கச் சம்மதாமான்னு கேட்டுச் சொல்லணும்”

“யாரும்மா அந்த மாப்பிள்ளை?’

“சார் நம்ம தாசில்தார் மணிமாறன் சாருக்கு நீங்கதான் அலையன்ஸ் பார்க்கதா கேள்விப்பட்டேன்”

அவரது புருவங்கள் நெரிந்தது.. “ஆமாம் அவருக்கு ஏத்த ஒரு பொன்ணை நான் பார்த்திட்டிருக்கறேன் அதை ஏன் நீ கேட்கற?”

“அவரு ஜாதி மதம் பார்க்கறவரா?”

“ஜாதி மதம் தடையில்லைனுதான் அவர் பொண்ணு பார்க்கச் சொல்லியிருக்கறார்”

“அப்ப அவருக்கு ஏன் இன்னும் பொண்ணு அமையலை?”

“அவரைப் பற்றி நல்லா தெரிஞ்சுமா இப்படி ஒரு கேள்வி?”

“தெரியும் சார் அவருக்கு கல்யாணம் ஆகி அவரு சம்சாரம் இறந்து போச்சு ,இப்ப ரெண்டாம் தாரமா ஒரு பொண்ணு பார்க்கறீங்க”

“எல்லம் தெரியுமில்ல அப்புறம் ஏன் இப்படி ஒரு கேள்வி?”

“அந்த ரெண்டாம் தாரமா வர எனக்கு விருப்பம் அவருக்கு விருப்பமான்னு கேட்டுச் சொல்ல முடியுமா சார்?!”

(-தொடரும்…)

முந்தையபகுதி – 2 | அடுத்தபகுதி – 4

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...