மரப்பாச்சி – 4 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

 மரப்பாச்சி – 4 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

அத்தியாயம் 4

பிருந்தா கேட்டது மாசிலாமணிக்கு சில வினாடிகள் புத்தியில் உறைக்கவில்லை.. கேட்டார்..

“என்னம்மா கேட்ட?”

“மணிமாறன் சார் என்னை கட்டிக்குவாரான்னு கேட்டுச் சொல்ல முடியுமான்னு கேட்டேன்..”

அவளை ஒரு நம்பமுடியாத பார்வை பார்த்தவர் கேட்டார்.. “சீரியசாத்தான் கேட்கறியாம்மா?”

“இதுல யாராவது விளையாடுவாங்களா சார்?”

“வேற வழியில்லாம கேட்கிறேன்னு நெனைக்கிறேன்..”

“அதான் சார் உண்மை.. எனக்கு வேற வழி தெரியலைங்கறதான் நிதர்சனம்..”

“அப்படியே மணிமாறன் சார் ஒத்துக்கிட்டாலும் உங்க வீட்டுல ஒத்துக்குவாங்களாம்மா?”

“கண்டிப்பா ஒத்துக்கமாட்டாங்க..”

“பின்ன எப்படிம்மா?”

“நீங்க மணிமாறன் சாருக்கு என்னை கட்டிக்க சம்மதமான்னு கேட்டுச் சொல்லுங்க, அப்புறம் நான் அவங்ககிட்ட பேசிக்கறேன்”

“ஒரு தடவைக்கு நூறு தடவை யோசிச்சுக்க..”

“நேத்து விடிய விடிய தூக்கம் வராம யோசிச்சு எடுத்த முடிவு சார் இது..”

“சரிம்மா நீ இவ்வளவு உறுதியா சொல்லுறதால நான் அவர்கிட்ட கேட்கிறேன்..”

“தள்ளிப்போட வேண்டாம் இன்னிக்கே கேட்டுச் சொல்லுங்க”

“சரிம்மா..” என்றவர் கப்பில் மீதமிருந்த ஆறிப் போன டீயை ஒரே மடக்கில் குடித்துவிட்டு கிளம்பினார்..

வேலையில் நாட்டம் செல்லவில்லை பிருந்தாவிற்கு வாழ்வில் ஒரு முக்கியமான காலகட்டத்தில் இருந்தாள் அவள்.. இதுவரை வாழ்ந்த வாழ்க்கை வேறு இனி வாழப் போகும் வாழ்க்கை வேறு.. ஒரு கணம் கூட தங்கைகளின் நல்வாழ்விற்கு குறுக்கே நிற்கக்கூடாது, இந்த எண்ணம் மட்டுமே மீண்டும் மீண்டும் எதிரொலித்தது அவள் எண்ணத்தில், திக் திக் நிமிடங்களாக கழிந்தது அவளுக்கு. மாசிலாமணியிடமிருந்து என்ன தகவல் வரும் என்று மனம் அவளை கேட்டுக் கொண்டே இருந்தது.. மணி ஐந்து ஒவ்வொருவராக கிளம்பிக் கொண்டிருந்தனர், தோழி மலர்வதி அவளிடம் வந்தாள்..

“என்ன கிளம்பலை.. உக்கார்ந்திருக்கற?”

“நீ கிளம்பு மாசிலாமணி சாரை கொஞ்சம் பார்க்கணும்”

“சரி” என்று புறப்பட்டாள் மலர்வதி..

மணிமாறன் அவர்களுக்கு உயர் அதிகாரி, எப்பொழுதும் மணிமாறன் அலுவலகத்திலிருந்து கிளம்ப ஏழு மணி ஆகிவிடும், இப்பொழுது மணிமாறன் அறையிலிருந்து வெளியே வந்தார் மாசிலாமணி. வந்தவர் நேரே அவள் மேஜைக்கு முன் நின்றார்.. எதிர்பார்ப்புடன் கேட்டாள்..

“மணிமாறன் சார்கிட்ட பேசிட்டீங்களா?”

“பேசிட்டேன், அவரு உங்கிட்ட பேசணும்னு சொன்னார்..”

“இப்பவே வா?”

“ஆமாம்.. உனக்காகத்தான் வெயிட் பண்ணுறார் போ..”

“சார் அவர் ஒண்ணும் தப்பா நெனைச்சுடலையே?”

“இல்லைமா.. அப்படியெல்லாம் அவர் நெனைக்கலை, நான் கேட்டதும் ரொம்ப கேஷூவலாத்தான் இருந்தார், தைரியமாப் போ..”

இருக்கையில் இருந்து எழுந்தவள் தயக்க நடை போட்டு மணிமாறன் அறைக்கதவை மெல்ல தட்டினாள்..

“எஸ் கமின்..” என்ற குரல் அவள் காதில் விழுந்தது.. அந்தப் பழங்காலக் கட்டிடத்தின் தனியறை.. மேஜை முழுவதும் சிகப்பு நாடா பைல்கள், சுற்றிலும் செல்ஃப்கள், அதிலும் பைல் கூட்டம்.. நடுவில் அமர்ந்திருந்தார் மணிமாறன், வயது 45, எழுந்தால் ஆறடியை நெருங்கிய உயரம் இருக்கலாம், சற்றே மலையாள நடிகர் மம்மூட்டியை நினைவுபடுத்தும் முகம், கதவைத் திறந்து உள்ளே வரும் பிருந்தாவை அழைத்தார் மணிமாறன்..

“வாம்மா உக்காரு..”

“இல்லை சார் நிற்கறேன்..”

“ஒன்னோட ஆபீஸ் டைம் முடிஞ்சுது, அதுலயும் நீ ஆபீஸ் விஷயம் பேச வரலை, பர்சனல் விஷயம் பேச வந்திருக்கற, அதனால உக்காரு..”

அதற்கு மேல் நிற்க விரும்பாதவள் நாற்காலியில் அமர்ந்தாள்.. சில வினாடி மௌனம்.. மணிமாறனே ஆரம்பித்தார்..

“மாசிலாமணி சொன்னார், என்னால நம்ப முடியலை.. அவர் எதாவது உன்னை வர்புறுத்தினாரா?”

“ஐயய்யோ இல்லை சார்.. அவர் இதைப் பற்றி எதுவும் கேட்கலை, நான்தான் அவர்கிட்டச் சொல்லி உங்ககிட்ட கேட்கச் சொன்னேன்..”

“எதுக்கு இந்த முடிவுன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”

“சார் நான் எதுவும் உங்ககிட்ட மறைக்கப் போறதில்லை வீட்டுல எனக்குக் கீழே ரெண்டு தங்கச்சிங்க, எனக்கு வயசாகிக்கிட்டே போகுதே தவிர கல்யாணம் நடக்கிற மாதிரி இல்லை, எங்க நாமளும் நம்ம அக்கா மாதிரி மூத்து நரைச்சுப் போயிடுவோமேன்னு தங்கைகளுக்கு பயம் வந்திடிச்சு, இனியும் அவங்களுக்கு தடையா இருக்கக் கூடாதுன்னு முடிவெடுத்துட்டேன்..”

“அதுக்காக இப்படிப்பட்ட முடிவையா எடுப்பாங்க?”

“இதுல அப்படி என்ன சார் தவறு இருக்குது?”

“என்னோட வயசு தெரியுமா உனக்கு?”

“தெரியாது, அது தெரிஞ்சுக்கவும் நான் விரும்பலை..”

“நீ விரும்பலைனாலும் நான் சொல்லித்தான் ஆகணும், எனக்கு வயசு 45..”

“இருக்கட்டுமே அதனால என்ன?”

“பார்க்கிறவங்க என்ன நெனைப்பாங்க?”

“அவங்களுக்காக நாம வாழப் போறதில்லை, நம்ம வாழ்க்கை நாம வாழுறதுக்கு..”

“பேச நல்லா இருக்கும் ஆனா சில விஷயங்கள், நடைமுறைக்குச் சாத்தியப்படாது.. நான் கல்யாணம் பண்ணிக்க நெனைக்கிறது என்னைவிட ஒரு சில வயசு கொறஞ்ச பொம்பளையை, உன்னை மாதிரி சின்ன வயசு பொண்ணைக் கிடையாது..”

“சார் நான் ஒண்ணும் சின்னப் பொண்ணு கிடையாது, எனக்கு இருப்பத்தேழு வயசாகுது..”

“இருக்கட்டும், இருந்தாலும் பதிமூணு வயது வித்தியாசம்..”

“ஓகே.. சார் நான் கிளம்புறேன்..”

“என்ன பேச்சை முறிச்சிட்டு கிளம்புற?”

“இல்லை சார் நீங்களும் சராசரி ஆம்பளைதான், என்னோட உருவத்தை பார்த்து எல்லா ஆம்பளைங்களும் தட்டிக் கழிச்சாங்க, வயசுக்கு மூத்த ஆள் நீங்க அப்படி உருவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டீங்கன்னு நெனைச்சுத்தான் மாசிலாமணி சார்கிட்ட சொல்லி அனுப்புனேன், நீங்களும் அப்படித்தான் புரிஞ்சுக்கிட்டேன்.. சாரி சார் நான் கிளம்புறேன்..” என்றவளை திகைப்புடன் பார்த்தார் மணிமாறன்!

(-தொடரும்…)

முந்தையபகுதி – 3 | அடுத்தபகுதி – 5

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...