என்னை காணவில்லை – 4 | தேவிபாலா
அத்தியாயம் – 04
அம்மா பரபரப்பாகி விட்டார். துளசி பூட்டி, சாவியை எடுத்து போய் விட்டாள். வேறு சாவியும் இல்லை. நான் பூஜையில் இருந்த ஒரு மணி நேரத்தில் என்ன நடந்திருக்கும்? திரும்பத்திரும்ப வீடு முழுக்க தேடினாள். வீட்டுக்குள்ளே மேல் தளத்துக்கு படிகள் போகும். அதில் ஏறிப்போய் பார்த்தால் இல்லை. அங்கிருந்து மொட்டை மாடி. இருட்டாக இருந்தது. அங்கும் இல்லை. மயக்கமே வந்தது. கலவரம் பந்தாக உருண்டு தொண்டை குழியில் வந்து நின்றது.
“ எங்கே போனான்? எப்படி போயிருக்க முடியும்? துளசி வருவதற்குள் துவாரகா வராவிட்டால், ஆயிரம் கேள்வி கேட்பாளே? இன்னொரு புயல் வெடிக்குமே.”
படக்கென ஞாபகம் வர, அவனது செல்ஃபோனை தேட, அது துவாரகா படுத்திருந்த கட்டில் தலை மாட்டில் இருந்தது. எடுத்து போகவில்லை. அவன் பர்ஸ், கார் சாவி எல்லாம் இருந்தது. ஹேங்கரில் ட்ரஸ் தொங்கியது. ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தால் வாசலில் செருப்பு, ஷூக்கள் இருந்தன. போக வழியும் இல்லை. செருப்பும், உடைகளும், மொபைலும் இல்லாமல் பூட்டை கடந்து எப்படி ஒருவன் வெளியே போக முடியும்?
ஏதோ ஒரு மோசமான விபரீதம் தொடங்கி விட்டது மட்டும் புரிந்தது அம்மாவுக்கு. ஆனால் என்னவென்று அறிவுக்கு எட்டவில்லை. நேற்று துவாரகா சொன்னது பளிச்சென உள்ளே இறங்கியது.
“என் உருவம் யாருக்கும் தெரியலை. என் குரல் உங்க யாருக்கும் கேக்கலை.!”
இப்போது அவனை காணாததும் அந்த வகையில் சேர்த்தியா? வீட்டுக்குள் அவன் இருக்கானா? எனக்கு கண்களுக்கு தெரியலியா? ஒரு வேளை அம்மா அம்மான்னு அவன் கூப்பிடறானா? என் காதுல அது விழலையா? யாராவது இதை நம்ப முடியுமா? யதார்த்த வாழ்க்கையில் இதெல்லாம் நடக்க முடியுமா?
அம்மாவுக்கு நினைக்க, நினைக்க ஒரு மாதிரி மூச்சு விட முடியாமல் நெஞ்சை அடைத்தது. கண்கள் இருள அப்படியே சாய்ந்தாள். எத்தனை நேரம் அப்படி கிடந்தாளோ தெரியவில்லை. படக்கென ஒரு ஓசை வர, கண் விழித்தாள். கதவை திறந்து கொண்டு துளசியும், குழந்தைகளும் உள்ளே வர, நேரம் இரவு பத்து மணி.
“பாட்டி! என்ன இங்கே படுத்து தூங்கறே? அப்பா எங்கே?”
துளசி சேலை மாற்ற உள்ளே போனாள். மாற்றி நைட்டியோடு வெளியே வந்தாள்.
“ அவர் எங்கே? மொட்டை மாடிக்கு தூங்க போயிட்டாரா?”
அம்மா உஷாரானாள். அவனை காணலைன்னு சொன்னா, பிரச்னை பெரிசாகும். துளசி நம்ப மாட்டா. அதை சொல்லக்கூடாது.
“ உங்களைத்தான் கேக்கறேன். அவர் எங்கே?”
“நீ வெளியே பூட்டிட்டு போனதும், எனக்கு ஒரு மாதிரி மயக்கமா இருந்தது. இப்படியே சாஞ்சிட்டேன். இப்பத்தான் கண் முழிக்கறேன்.”
துளசி கண்களில் வழக்கமான சந்தேகம் இருந்தது. படியேறி மேலே போனாள். பத்து நிமிடங்களில் திரும்பி வந்தாள். வீடு முழுக்க, பின் கட்டு என தேடினாள். திரும்பி வந்தாள்.
“ அவர் எங்கேயும் இல்லை.”
“ வீட்டை பூட்டிட்டு நீ போயிருக்கே. அவன் எங்கே போயிருக்க முடியும்?”
“அதை நீங்க தான் சொல்லணும். நாங்க வரும் போது சோபால படுத்து மயக்க நாடகம் நீங்க ஆடினப்பவே எனக்கு சந்தேகம் வந்தது. இப்ப சரியா போச்சு. அம்மாவும், பிள்ளையும் சேர்ந்து நாடகம் ஆடறீங்களா?”
“வாயை மூட்றி. இந்த வீட்டுக்கு ஒரு சாவி தான். முன்னும், பின்னும் பூட்டி, சாவியை கையில எடுத்துட்டு நீ போயாச்சு. அவன் எப்படி வெளில போக முடியும்? நீ வரும் போது பூட்டை திறந்துட்டுத்தானே வந்தே?”
“ஏன்? மொட்டை மாடிக்கு போய் பைப் லைனை புடிச்சு இறங்கி வெளில போக முடியாதா அவரால?”
“அபாண்டம் சொல்லவும், பழி சுமத்தவும் ஒரு அளவு இருக்குடி. அப்படி குழாயை புடிச்சு இறங்கி வெளில போற அளவுக்கு அவனுக்கு என்ன அவசியம்?”
“அந்த சுஷ்மா மாதிரி வெள்ளை தோல் காரி, பெரிசு பெரிசா வச்சிருக்காளே…கண்களை..அவ ஏணியை கொண்டு வந்து இறக்கி கூட்டிட்டு போயிருப்பா இவரை. நீங்களே வழியனுப்பி வச்சிருப்பீங்க.”
“இதுக்கு மேல நீ பேசாதேடீ. அவன் செருப்பு, பர்ஸ் செல்ஃபோன் எல்லாம் இங்கே தாண்டீ இருக்கு. அவன் ட்ரஸ் கூட ஹேங்கர்ல தொங்குது.”
“எப்படியெப்படீ? நான் பூட்டிட்டு போனதும் மயங்கி சோபால சாஞ்ச நீங்க, நாங்க வந்ததும் கண் முழிச்சதா சொல்றீங்க. ஆனா உங்க பிள்ளையோட பொருட்கள் எல்லாம் இங்கே இருக்குன்னு எப்ப பார்த்தீங்க? தடயங்களை உருவாக்கற ஐடியாவை யார் தந்தது? பாத்ரூம்லேருந்து ட்ரஸ்ஸே போடாம வெளில வந்தாரே! அதே மாதிரி வெளில போயிருக்கலாம் இல்லையா?”
அம்மா அவளை நெருங்கினாள். ஓங்கி அறைந்தாள்.
“ இதுக்கு மேல என் பிள்ளையை நீ கேவலப்படுத்தினா, நான் பொறுத்துக்க மாட்டேன்.”
துளசி மாமியாரை நெருங்கினாள். திருப்பி அறைய, அம்மா தூரப்போய் விழுந்தாள். அதிர்ச்சி தாளவில்லை.
“ என்ன பாக்கற? கூறு கெட்ட ஒருத்தனை பெத்தவ நீ. அவனோட தப்பான நடத்தைக்கு, கட்டினவளை ஏமாத்தற மொள்ளமாரி தனத்துக்கு, துணையா நிக்கற உன்னை, நான் மாமியாரா ஏன் மதிக்கணும்? அதான் அறைஞ்சேன். இனிமே சும்மா விட மாட்டேன். உங்க ரெண்டு பேரையும் விடவே மாட்டேன்.”
பாட்டியை அம்மா அறைந்ததை, குழந்தைகள் இருவரும் அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். ஓடி வந்து தூக்கி பிடித்தார்கள். ஒரு மாமியாரை மருமகள் அறைவது எங்காவது நடக்குமா? அம்மா பாதிக்கு மேல் மரித்திருந்தாள்.
“ துவாரகா! நீ எங்கேடா போனே? இதுக்கு மேல உன்னை பெத்த நான் அவமானப்பட முடியாதுடா. நாளைக்கு எனக்கு விடியக்கூடாதுடா.”
கதறி விட்டாள். குழந்தைகள் கண்ணீருடன்,
“ அழாதே பாட்டி, ப்ளீஸ்”
அம்மாவை வெறுப்புடன் பார்த்தார்கள். ஏற்கனவே அம்மாவின் போக்கும், அப்பாவின் வேதனையும், பாட்டியின் தினசரி கண்ணீரும் பார்த்து, குழந்தைகள் இருவருக்கும் அம்மாவின் மேல் வெறுப்பு மண்டி கிடந்தது. பாட்டியை அடித்ததில் அது அதிகமாக, பாட்டியை பிடித்து உட்கார வைக்க, மூன்று வயது அஸ்வின் திடீரென கத்தினான்.
“ தீபா! அப்பா இங்கே இருக்காரு.”
அனைவரும் திரும்ப, பெட்ரூமை விட்டு கொட்டாவியுடன் எழுந்து வெளியே வந்தான் துவாரகா. பர்முடாஸ், கட் பனியன் அணிந்திருந்தான். துளசி கதவை பூட்டிக்கொண்டு போகும் போது என்ன அணிந்திருந்தானோ அதே உடை.
“ அப்பா நீ எங்கே போயிருந்தே?”
மகள் கேட்க,
“ எங்கேயும் போகலைம்மா. நீங்க பூட்டிட்டு போனதும் உள்ளே போய் படுத்தேன். கொஞ்ச நேரம் முழிச்சிருந்தேன். தண்ணி குடிக்க வந்தேன். பாட்டி பூஜைல இருந்தாங்க. நான் போய் படுத்து தூங்கிட்டேன். இப்பத்தான் முழிக்கறேன்.”
“நான் உள்ளே வந்து பார்த்தப்ப நீ இல்லையேடா.”
“நான் எங்கேம்மா போவேன்? எப்படி போக முடியும்? துளசி வெளில பூட்டிட்டு போயிருக்காளே?”
“துளசி வந்தப்ப ட்ரஸ் மாற்ற உள்ளே வந்தாளே! அப்பவும் நீ உள்ளே இல்லையே?”
“நான் படுத்தவன், இப்பத்தானேம்மா முழிச்சு வெளில வர்றேன்!”
“ஆனா நீ நிர்வாணமா, மாடிலேருந்து பைப் வழியால வெளில இறங்கி, எவ கூடவோ போயிட்டேன்னும், அதுக்கு நான் உடந்தைன்னும் இவ பழி சுமத்தினா. பொறுத்துக்க முடியாம, நான் இவளை அறைஞ்சேன். இவளும் என்னை திருப்பி அறைஞ்சா. இதுக்கும் மேல என்னால அவமானம் தாங்க முடியாது. நான் வீட்டை விட்டு போறேன். உன் குழந்தைகளுக்காக நீ இருக்கே. உனக்காக நான் இருக்கேன்.”
“மாமியார்ங்கறது அம்மா ஸ்தானம். கை நீட்டி அடிக்கற அளவுக்கு நீ வந்துட்டியா?”
துளசி படபடவென கைகளை தட்டினாள்.
“பிரமாதம். அம்மா கண்களுக்கு இவர் தெரியலையாம். பொண்டாட்டி கண்களுக்கும் தெரியலியாம். கேட்டா தூங்கிட்டாராம். நாங்க காதுல பூவா வச்சிருக்கோம்.? இதென்ன மாயா ஜால சினிமாவா?”
“நிறுத்துடி. நீ பார்த்துட்டு இருக்கும் போது, நான் உள்ளேயிருந்து தானே வந்தேன்? வெளில பைப் வழியால இறங்கி போனவன், எப்படீடி பெட்ரூமுக்குள்ளேயிருந்து வர முடியும்?”
“ஏன் முடியாது? நான் உன்னை தேடி மாடிக்கு போனப்ப, நீ வெளிலேருந்து உள்ளே வந்து பெட்ரூம்ல படுக்க முடியாதா?”
“அம்மா! நானும், தம்பியும் இங்கே தான் இருந்தோம். அப்பா அப்படி வரலை. பின் கட்டு பூட்டை நீ இன்னும் திறக்கலை.”
“ நீ வாயை மூட்றி. என்னையே ஏமாத்தற உன் அப்பாவால, உன்னை ஏமாத்த முடியாதா? எங்கிட்ட கண்ணாமூச்சி ஆட்டமா? இன்னும் மோசமான துளசியை பாக்கணுமா?”
“இதப்பாரு! நான் பொய் சொல்லலை. நான் வீட்டை விட்டு வெளில எங்கேயும் போகலை.”
அம்மா அவனை நெருங்கினாள்.
“ என்னப்பா? அன்னிக்கு நீ சொன்ன மாதிரியே இன்னிக்கும் நடந்திருக்கா. உன் உருவம் எங்க யார் கண்களுக்கும் தெரியலியா? நீ இன்னிக்கு தூங்கி போனதால நாங்க வந்தது உனக்கு தெரியலியா?”
அம்மா சின்னக்குரலில் கேட்க,
“ அப்படித்தான்மா எனக்கும் தோணுது.”
“அன்னிக்கு நடந்ததையும் துளசி கிட்ட சொல்லணும்டா.”
“எதை சொன்னாலும் அவ நம்ப போறதில்லைம்மா.”
“என்னாலயே இதை நம்ப முடியலையேடா. அவ எப்படி நம்புவா. ஆனா நீ பொய் சொல்ல மாட்டேன்னு எனக்கு தெரியும்பா”
“என்ன ரகசியம்? ரெண்டு பேருமா சேர்ந்து புதுசா என்ன நாடகம் ஆடலாம்னு திட்டமா? இதுக்கு மேல என்னால பொறுத்துக்க முடியாது. நான் போலீஸ்ல புகார் பண்ணப்போறேன். கட்டின மனைவியை சக்கையா ஏமாத்திட்டு கண்டவளுங்க கூட ஊர் மேயற புருஷன், அந்த ஆபாச கூத்துக்கு துணை போற ஆத்தா! இந்த மாதிரி அம்மாக்களை அடிச்சா போதாது. கழுத்தை நெரிச்சு கொல்லணும்.”
துவாரகா நெருங்கினான்.
“ இதப்பாரு நிறுத்திக்கோ. நானே தப்பானவன் இல்லை. உன்னை கட்டிக்கிட்ட பாவத்துக்கு நான் படணும். அது என் விதி. ஆனா என் அம்மா அப்பாவி. அவங்களை தண்டிக்க உனக்கு எந்த உரிமையும் இல்லை. அவங்களை கை நீட்டி அடிச்ச உன் கையை, நான் உடைக்காம விடறதே, நான் செய்யற பாவம். என் கோழைத்தனம். நீ போலீஸ்ல புகார் செய். என்ன நடவடிக்கை வேணும்னாலும் எடு. இத்தனை நாள் என் குழந்தைகளுக்காக பொறுமையா இருந்தேன் நான். எங்கம்மா மேல நீ கை வச்சிட்டே. நான் யாருன்னு உனக்கு காட்டறேண்டி.”
துவாரகா குரலில் என்றைக்கும் இல்லாத வெறி இருந்தது.
( -தொடரும்…)
முந்தையபகுதி – 3 | அடுத்தபகுதி – 5