என்னை காணவில்லை – 5 | தேவிபாலா

 என்னை காணவில்லை – 5 | தேவிபாலா

அத்தியாயம் – 05

ம்மா காலை நாலு மணிக்கே வழக்கம் போல எழுந்து குளித்து விளக்கேற்றி, சமையல் கட்டுக்கு வந்து பாலை அடுப்பில் வைத்தாள். துவாரகா பெட் ரூமுக்கு போகாமல் ஹால் சோபாவில் படுத்து விட்டான். உறங்கவில்லை. அம்மா குளித்து, விளக்கேற்றி சமையல் கட்டுக்கு வந்ததும், துவாரகா எழுந்து வந்தான். படக்கென அம்மா காலில் விழுந்தான். அம்மா பதறி விட்டாள்.

“என்னப்பா இது?”

“உன்னை அவ அடிச்சும், நான் தண்டிக்கலை அவளை. எனக்கு உன் முகத்துல முழிக்கவே  அருகதை இல்லைம்மா.”

“விட்ரா. எனக்கு உன்னைப்பற்றி தெரியாதா?”

“இத்தனை அவமானம் தாங்கியும், ஏன்மா எழுந்து வீட்டு வேலைளை செய்யறே?”

“குழந்தைங்க பசி தாங்காதுடா. அதுங்களை பட்டினி போட்டா கடவுள் கூட மன்னிக்காதுடா.”

“பெத்தவளுக்கு அந்த உணர்வு இல்லையேம்மா. இவளையும் தெய்வம் தாயாக்கி வச்சிருக்கே. சரி விடு. நீ சகோதரிகள் ரெண்டு பேர் வீட்ல யாராவது ஒருத்தி வீட்டுக்கு போயிடு. உன்னை இவ அடிச்சது அவங்களுக்கு தெரிஞ்சா, இவளை உயிரோட விட மாட்டாங்க. இனி இந்த வீட்ல நீ இருக்கக்கூடாது. எனக்காக, குழந்தைகளுக்காக நீ இருக்க வேண்டாம். நானும் அடுத்த அவமானத்துக்கு உன்னை அனுமதிக்க மாட்டேன்.”

“பொண்ணுகள் வீட்ல போய் நிரந்தரமா இருக்கறது எனக்கு கௌரவமில்லை. உனக்கும் அது மரியாதை இல்லை. என்னை ஏதாவதொரு முதியோர் இல்லத்துல சேர்த்துடுப்பா. எனக்கு உன்னையும், குழந்தைகளையும் பிரிய விருப்பமில்லைடா.”

அம்மா விசும்பி அழுதாள்.

“இல்லைம்மா. நீ என்னை விட்டு பிரிஞ்சிருந்தாலும், இன்னும் கொஞ்ச காலம் உயிரோட இருக்கணும்மா. நான் உன்னை வந்து பாத்துக்கறேன்.”

“குழந்தைகளை அவ சரியா பார்த்துக்க மாட்டாப்பா!”

“அவங்க ரெண்டு பேரையும் ஊட்டி, கொடைன்னு ஏதாவதொரு ஊர்ல, போர்டிங் ஸ்கூல்ல சேர்த்துடுவேன். அவ குறுக்கே வர மாட்டா. ஏன்னா, அவ என்னிக்கு பசங்களை பார்த்துக்கிட்டா?”

“நீ தனியா அவ கிட்ட மாட்டினா, டார்ச்சர் அதிகமாகுமேப்பா?”

“இல்லைம்மா. மாட்டப்போறது இனி நானில்லை. அவ தான். அவ ஆட்டம் முடிவுக்கு வருது. வட்டியும், முதலுமா நான் அவளுக்கு திருப்பித்தர வேண்டாமா? அதுக்கு நீயும், பசங்களும் இங்கே இருக்க கூடாது.”

“டேய், என்னடா செய்ய போறே?”

அம்மா குரலில் கலவரம் வெடிக்க,

“ அவளை கொல்ல மாட்டேன். அவ அத்தனை சுலபமா சாக கூடாது. அதுக்கும் மேல ஒரு தண்டனையை அனுபவிக்கணும். சுத்தமான ஒரு புருஷனை அசிங்கப்படுத்தி, அவனை பெத்த தாயை கை நீட்டி அடிச்ச அவ, நரகம்னா என்னான்னு இனி பாக்கப்போறா.”

“அதெல்லாம் போகட்டும். நீ வீட்ல இருந்தும் யார் கண்களுக்கும் தெரியலை. சொன்னாலே நம்ப முடியலை. ஆனா அது தான் நடந்திருக்கு. நீ நிச்சயமா ஒரு நல்ல டாக்டரை பார்த்து இதை சொல்லணும். அவளை தண்டிக்கறது அப்புறமா. உனக்கு ஏன் இந்த நிலைன்னு புரியணும். எனக்கு ரொம்ப பயம்மா இருக்கு துவாரகா. இது நாலு நாளைக்குள்ளே ரெண்டு தடவை நிகழ்ந்தாச்சு.”

“எனக்கும் புரியலைம்மா. இது தொடர்பா எந்த டாக்டரை பாக்கணும்னு எனக்கே புரியலை. இது ஒரு மாதிரி ஹாலுசினேஷன்.”

“அப்படீன்னா என்னப்பா?”

“எனக்கு தமிழ்ல சொல்லத்தெரியலை. என் தோற்றமோ, குரலோ உங்க யாரையும் எட்டலைன்னா, இதை மாயத்தோற்றம்னு சொல்றதான்னு புரியலை. இத்தனை நாள் நிகழாதது, இப்ப ஏன் எனக்கு வருதுன்னு புரியலை.”

“எனக்கு புரியுதுடா தம்பி.”

“என்னம்மா சொல்ற நீ?”

“எனக்கு விஞ்ஞானம், மருத்துவம், மனோ தத்துவம் இதெல்லாம் தெரியாது. ஆனா நீ உத்தமன். நல்லவன் ஒருத்தன் இந்த அளவுக்கு மனைவி மூலமா கொடுமை அனுபவிக்கறது எந்த வீட்டிலும் நடக்காது. உன் பொறுமை எல்லை மீறி, உன்னை அது பலமா பாதிச்சிருக்கு. அதோட விளைவு தான் இது.”

“இது ஒரு தாயோட புலம்பல். ஆனா இந்த நடப்புக்கு எனக்கு முறையான காரணம் தெரியணும். நான் அதுக்கான நபரை தேடிப்பிடிக்கறேன். இன்னிக்கே உன்னை பேக் பண்றேன்.”

துளசி எழுந்து வந்தாள்.

“ காலைல ஆத்தாளும், மகனும் சதி வேலை தொடங்கியாச்சா?”

“அம்மாவை ஹோம்ல இன்னிக்கே விட்டுர்றேன். ஏன்னா அடிச்ச நீ , அவங்களை கொல்ல மாட்டேன்னு என்ன நிச்சயம்?”

அவன் யாருக்கோ போன் செய்து பேசினான். அரை மணி நேரம் பேச்சு ஓடியது.

“ அம்மா! நீ உன் துணிமணிகளை பேக் பண்ணிக்கோ. அப்பா படம், சீரடி பாபா படம் ரெண்டையும் எடுத்து வச்சுக்கோ. இன்னும் பதினஞ்சு நிமிஷத்துல நாம புறப்படறோம்.”

“பாட்டியை எங்கே கூட்டிட்டு போறேப்பா?”

இரண்டு குழந்தைகளும் ஓடி வந்து கோரஸாக கேட்க,

“அத்தை வீட்ல விடறேன்பா.”

“நாங்களும் வர்றோம். பாட்டியை விட்டு எங்களால இருக்க முடியாது.”

“உங்களுக்கு ஸ்கூல் இருக்கு. வாரக்கடைசில கூட்டிட்டு போறேன்.”

பேரப்பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டுத்தான் அம்மா புறப்பட்டாள்.

“ துவாரகா! சாகற வரைக்கும் உன்னை விட்டு பிரியக்கூடாதுன்னு நினைச்சேனே. அது முடியாம போச்சேப்பா.”

“ உனக்கு இந்த நரகம் வேண்டாம்மா. வா, போகலாம்.”

அம்மா துளசியிடம் சொல்லிக்கொள்ளவும் இல்லை. அவள் அதைப்பற்றி கவலைப்படவும் இல்லை. காரை எடுத்தான். அரை மணி நேர பயணத்தில் போரூர் அருகே ஒரு கண்யமான முதியோர் இல்லம் இருந்தது.  சுஷ்மா தயாராக காத்திருந்தாள். அவள் ஆலோசனையில் கிடைத்த இடம். மாதம் இருபதாயிரம். தனியறை, மூன்று வேளையும் நல்ல உணவு, ஏசி அறை. மருத்துவ வசதி, சுற்றி சுகாதாரம், பாதுகாப்பு, யோகா, ஆன்மீக வகுப்புகள் என சீனியர்கள் அமைதியுடன் வாழ ஏற்ற இடம்.

“ பாரும்மா சுஷ்மா! இவனை பிரிய வேண்டியிருக்கே?”

“அந்த பேய் கூட இருந்தா, உங்களை துவாரகா நிரந்தரமா இழக்க நேரும்மா. அது எதுக்கு? இவர் தினமும் வந்து பார்த்துப்பார். நானும் வருவேன்.”

“குழந்தைங்க பாவம்”

“அவங்களையும் வீக் எண்ட்ல கூட்டிட்டு வருவார். அவங்களுக்கும் நிரந்தர ஏற்பாடு செய்யறோம்.”

“ஆனா என் பிள்ளைக்கு விடுதலையே இல்லையேம்மா”

“எல்லா கேள்விகளுக்கும் பதில் உண்டும்மா. ஆனா எப்ப கிடைக்கும்னு தெரியாது.”

நிர்வாகியிடம் அம்மாவை ஒப்படைத்தான் துவாரகா. மகனின் தலை கோதி, கண்ணீருடன் முத்தமிட்டு உள்ளே போனாள் அம்மா. துவாரகேஷ் கண்களை துடைத்த படி வெளியே வந்தான்.

“ குழந்தைகளுக்கு கொடைக்கானல் ஸ்கூல்ல இடம் உடனே வாங்கிடலாம். ரெசிடென்ஷியல் பள்ளிக்கூடம். நிறைய செலவாகும்.”

“பணத்துக்கு பிரச்னை இல்லை. உடனே ஏற்பாடு செய் சுஷ்மா.”

“துளசி சம்மதிப்பாளா?”

“அவளுக்கு ஒரு நல்ல தாயா இருக்கற தகுதியே இல்லை. புள்ளைங்களை வளர்க்க நேரம் செலவானா, என்னை கண்காணிக்க முடியாதில்லையா? அதனால தடுக்க மாட்டா. நீ ஏற்பாடு செய்.”

“அம்மா, பசங்களை அவசரமா டிஸ்போஸ் பண்ண என்ன காரணம் துவாரகா?”

“இருக்கு. சொல்றேன். ஆஃபீஸ் போன பிறகு உணவு இடை வேளைல சொல்றேன் சுஷ்மா. உன் உதவி நிறைய தேவைப்படுது எனக்கு.”

இங்கே வீட்டில் துளசி தனியாக இருந்தாள். எதையுமே சந்தேக கண் கொண்டு பார்க்கும் துளசிக்கு, நேற்று முதல் ஒரு கேள்வி இருந்தது. இரு பக்கமும் பூட்டிக்கொண்டு போன பிறகு, வந்து திறந்ததும், அவன் மேல் பழிகள் சுமத்தியதும் ஒரு விதம். அவன் பெட்ரூம் வாசலில் நின்றது. குழந்தைகள், அப்பா வெளியிலிருந்து வரவில்லை என்று சொன்னது. தீபா பொய் சொல்ல மாட்டாள்.

“ நான் நைட்டி மாற்றும் போது, கட்டிலில் துவாரகா இல்லை. பாத்ரூமுக்கு போக, அங்கும் துவாரகேஷ் இல்லை.   எப்படி என் கண்களுக்கு தெரியவில்லை? சரி, வெளில போகாம, உள்ளே இருந்தா, யார் கண்ணுக்கும் தெரியாம இருப்பாரா?”

காலிங் பெல் அடிக்க, துளசி போய் கதவை திறந்தாள். அவள் அம்மா, அப்பா பெட்டி சகிதம். துளசிக்கு எரிச்சலாக இருந்தது.

“ அப்பாவோட பென்ஷன்ல பிரச்னை. ஹெட் ஆஃபீஸ் சென்னைல தானே? அதான் வந்தோம். மாப்ளை ஆஃபீஸ் போயாச்சா?”

“நீங்க வர்றீங்கன்னு எல்லாரும் வீட்ல இருப்பாங்களா?”

“ஏண்டீ? உன்னை பெத்தவங்க ஒரு வருஷம் கழிச்சு இங்கே வந்திருக்கோம். எரிஞ்சு விழறே? உன் மாமியார் எங்கே?”

“நாத்தனார் வீட்ல இருக்காங்க.”

“காஃபி குடு அலமு.”

அம்மா சமையல் கட்டுக்கு வந்தாள். சாப்பாடு தயாராக இருந்தது.

“ ஓ..சமையல் பண்ணிட்டியா? நாங்களும் பசியாத்தான் இருக்கோம். என்னங்க, கை கழுவிட்டு சாப்பிட வாங்க.”

“உங்களுக்காக சமைச்சு வைக்கலை. இது என் சாப்பாடு. உங்களுக்கு நீ சமைச்சுக்கோ. நான் வெளில போகணும்.”

“அலமு! நாம இங்கே வந்ததே தப்போ?”

“ விடுங்க, அவ போன பிறகு பேசலாம். இவ மாமியார் நல்லவங்க. கண்டபடி பேசி அவங்களை விரட்டி விட்டிருப்பா.”

“மாப்ளையை எப்பவும் சந்தேகப்படுவா. அந்த குணம் மாறிடுச்சான்னு தெரியலை. மாப்ளை வந்த பிறகு கேட்டுக்கலாம். நீ சமையலை கவனி.”

அங்கே மதிய உணவு இடைவேளை வர, தன் உணவுடன் சுஷ்மா அவன் அறைக்குள் வந்தாள்.

“ அம்மா, இன்னிக்கு காலைல கூட சமைச்சு, எனக்கும் பசங்களுக்கும் பேக் பண்ணிட்டுத்தான் புறப்பட்டாங்க சுஷ்மா.”

இருவரும் ஷேர் செய்து கொண்டு சாப்பிட்டார்கள்.

“ அம்மாவை ஹோம்ல விடற அளவுக்கு என்ன அவசரம் துவாரகா?

“அம்மா இவளை அடிக்கற அளவுக்கு இவ என்னை பேசியிருக்கா. இவளும் பதிலுக்கு அம்மாவை அடிச்சிட்டா.”

“அம்மாவை துளசி அடிச்சாளா?”

விசுக்கென எழுந்து விட்டாள் சுஷ்மா.

“ அம்மாவை, குழந்தைகளை அந்த வீட்டை விட்டு உடனே அப்புறப்படுத்த வேண்டிய அவசியம் வந்தாச்சு சுஷ்மா”

இரண்டு நாட்கள் முன்பு தன் உருவம் தெரியாமை, குரல் கேட்காமையிலிருந்து தொடங்கி, நேற்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்னான் துவாரகேஷ். சுஷ்மா ஆடாமல், அசையாமல் உட்கார்ந்திருந்தாள்.

“ உன்னால இதை நம்ப முடியலை இல்லையா? என்னாலயே நம்ப முடியலை. யாராலும் நம்ப முடியாது. எனக்கு என்ன நடக்குதுன்னு எனக்கே புரியலை. ஆனா நான் பொய் சொல்லலை சுஷ்மா. அம்மா, என்னை துளசி டார்ச்சர் பண்றது தான் காரணம்னு சொல்றாங்க.”

“அது எமோஷனல் காரணம் துவாரகா. ஆனா இதுக்கொரு மருத்துவ காரணம் நிச்சயமா இருக்கும் துவாரகா.”

“நானும் அதைத்தான் சொல்றேன். நான் அனுபவிக்கற இந்த சித்ரவதை, என் மனசை ரணமாக்கி, மூளை, மற்றும் நரம்பு மண்டலத்தை என்னவோ செஞ்சிருக்கு.  இது ஒரு மாதிரி ஹாலுசினேஷன் அல்லது இல்யூஷன். எனக்குள்ளே இன்னொரு மனுஷன் இருக்கான்.”

“அப்படி இருந்தா, இந்த அம்பி, அந்நியனா மாறியிருக்கணுமே!  அது நடக்கலையே? உன்னை மத்தவங்க பார்க்க முடியலை. உன் குரலை கேக்க முடியலைன்னா, இது என்னது துவாரகா?”

கேள்விக்கான பதில்கள், அடுத்து வரப்போகும் நாட்ளில் பயங்கரமாக இருக்கும் என இருவருக்குமே தெரியாது.

(-தொடரும்…)

முந்தையபகுதி – 4 | அடுத்தபகுதி – 6

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...