என்னை காணவில்லை – 3 | தேவிபாலா

 என்னை காணவில்லை – 3 | தேவிபாலா

அத்தியாயம் – 03

துவாரகா உள்ளே வந்தான். அம்மா எதையோ எடுக்க உள்ளே வந்தார்.

“அம்மா! தலைவலியா இருக்கு. கொஞ்சம் காபி குடேன்.”

அம்மா காதில் அது விழுந்ததாகவே தெரியவில்லை. திரும்பி நடக்க,

“அம்மா! நான் உன் கிட்ட காபி கேட்டேன். உன் காதுல விழலையா?

மூன்று வயது அஸ்வின் உள்ளே ஓடி வந்தான்.

“ பாட்டி! அப்பா எங்கே? எனக்கு கிண்டர் ஜாய் வாங்கி தர்றதா சொன்னாங்க.”

“எனக்கு அதிர்ச்சியா இருக்கு. நான் எதிர்ல இருக்கேன். என் பையன் என்னை கவனிக்கலையா?”

“அஸ்வின். நான் இங்கே இருக்கேன்டா. வா, கடைக்கு போகலாம். நான் வாங்கி தர்றேன்.”

“அப்பா வந்ததும் வாங்கி தருவான். தொந்தரவு பண்ணாதே அஸ்வின். அவனே நொந்து நடைப்பிணமாயாச்சு. என்னிக்குத்தான் அவனுக்கு விடியுமோ?”

அம்மா புலம்பி கொண்டே வெளியேற, அஸ்வின் பின்னால் ஓட, அறைக்குள் துளசி நுழைந்தாள். முகம் கடுகடுவென இருந்தது. அவளுக்கும் துவாரகாவை கண்களுக்கே தெரியவில்லை. அதற்குள் ஃபோன் வர,

“ சொல்லுடி..அட, ஆம்மா! இன்னிக்கு நம்ம நளினிக்கு பர்த் டே பார்ட்டி இல்லையா? முடிஞ்சா நான் மட்டும் வர்றேன்.”

துளசி கை பட்டு ஸ்பீக்கர் ஆன் ஆக,

“உன் வீட்டுக்காரரையும் கூட்டிட்டு வாயேன்.”

“ஏன், அவரை பார்க்க உனக்கு ஆசையா இருக்கா?”

“ஏன்டி இப்படி அசிங்கமா பேசற? உன் சந்தேக புத்திக்கு ஒரு வரம்பே இல்லையா? நானும் கல்யாணமாகி, ஒரு பொண்ணுக்கு அம்மா. என் புருஷனுக்கு என்ன குறைன்னு, உன் புருஷனை பார்க்க நான் ஏங்கணும்? நீ வந்தா வா! இல்லைன்னா வேண்டாம். துவாரகா மன்மதன் மாதிரி இருக்கார். அவருக்கு எந்த விதத்திலும் நீ தகுதி இல்லை. அந்த காம்ப்ளெக்ஸ் உனக்கு முத்திப்போச்சு. உன் கூட வாழ அவர் என்ன பாவம் செஞ்சாரோ?”

உடனே ஆத்திரம் அதிகமாகி, துளசி வாய்க்கு வந்த படி பேச, சகலமும் அங்கு உட்கார்ந்து கேட்ட துவாரகா எழுந்து வந்து,

“துளசி! ஏன் இப்படி கூச்சல் போடற?”

அது அவள் காதில் விழவில்லை. அவன் அருகில் நின்றும் தெரியவில்லை. துவாரகாவுக்கு தலையே சுற்றியது.

“ என்னை ஏன் யார் கண்ணுக்கும் தெரியவில்லை? நான் உரக்க பேசியும் என் குரல் ஏன் யார் காதிலும் விழவில்லை? எனக்கு என்னாச்சு?”

யோசித்த போது உள்ளே ஒரு கலவரம் இறங்கியது. இது யாருக்கும் ஏற்படாத புது அனுபவம்.

“நான் உயிரோடு தானே இருக்கேன். நான் திடீரென அரூபமாக மாறி விட்டேனா? எப்படி?”

குனிந்து பார்க்க, கால்கள் தரையில் நன்றாக பதிந்திருந்தது. சுவாசம் சீராக இருந்தது. நிஜம்மாகவே தலைவலி மண்டையை பிளந்தது.  ஒரு மாதிரி பதட்டமாக இருந்தது. வியர்த்து சட்டை நனைய, உடைகளை களைந்தான். ஒட்டுத்துணி உடம்பில் இல்லை. குளியலறைக்கு போய் ஷவரை திருகி அதனடியில் நின்றான். குளிர்ந்த நீர் தலையை நனைக்க, சூடு இறங்கியது. அவன் புத்திக்கு கடந்த இருபது நிமிஷங்களாக நடப்பது எதுவும் எட்டவில்லை. பயம் உடம்பையே உலுக்கியது. ஈரம் சொட்ட சொட்ட வெளியே வந்தான். அந்த நேரம் துளசி உள்ளே வந்தாள். அலறிக்கொண்டு வெளியே ஓடினாள்.

“ ஏன்டி இப்படி கூச்சல் போடற?”

“உங்க பிள்ளைக்கு பைத்தியம் பிடிச்சாச்சு. அவரோட கோலத்தை பாருங்க.”

அம்மா உள்ளே வர, மகன் ஈரம் சொட்ட பிறந்த நாள் கோலத்தில் நின்றதை பார்த்து அதிர்ந்தாள். ஓடிப்போய் ஒரு டவலை எடுத்து வந்து, அவன் இடுப்பில் கட்டினாள். அவனை பிடித்து உட்கார வைத்தாள். இன்னொரு டவலை எடுத்து வந்து அவன் தலையை துவட்டினாள்.

“ நீ எப்ப வீட்டுக்கு வந்தே? என்ன கோலம் இது? உன் குழந்தைங்க கண்ல பட்டிருந்தா, அதுங்க என்ன நினைக்கும்? உன் சுய நினைவே உனக்கு இல்லாம போச்சா? அந்த அளவுக்கு உன் மனசு ரணமாகியிருக்கா? உன்னை பத்து மாசம் சுமந்து பெத்தவடா நான். உன்னை பார்க்க, பார்க்க என் வயிறு பத்திக்கிட்டு எரியுதுடா துவாரகா”

கதறி விட்டாள் அம்மா.

“ முழங்காலுக்கு வேட்டி ஏறக்கூட விட மாட்டியே. தூக்கத்துல கூட ஆடை குலைய அனுமதிக்க மாட்டியே. அத்தனை கூச்ச சுபாவம் உள்ள நீ, ஒடம்புல ஒட்டுத்துணி இல்லாம, ஈரத்தோட நடுக்கூடத்துல வந்து நிக்கறியே! உனக்கு என்னடா ஆச்சு?”

“அம்மா!  நான் வந்து ரொம்ப நேரமாச்சு. என் உருவம் உங்க யார் கண்ணுக்கும் தெரியலை. என் குரலும் உங்க யாருக்கும் கேக்கலை. அதுல மண்டை சூடாகித்தான் ஷவர் அடியில போய் நின்னேன்.”

அம்மா இன்னும் பதட்டமானாள்.

“ என்னடா சொல்ற? யார் கண்ணுக்கும் நீ தெரியலியா? யார் குரலும் உனக்கு கேக்கலியா? ஏதேதோ சொல்றியேடா துவாரகா! எனக்கு பயம்மா இருக்குடா.”

“நான் பொய் சொல்லலைம்மா. இது நிஜம். இப்ப நான் தெரியறேன். என் குரலும் உனக்கு கேக்குது. கொஞ்சம் முன்னால அப்படி இல்லை.”

மெல்ல கதவு திறந்து எட்டிப்பார்த்தாள் துளசி.

“ நான் உள்ளே வரலாமா? கொஞ்சம் முன்னால கண்ட ஆபாச காட்சில நான் பாதி செத்துட்டேன்.”

“நிறுத்துடி. என் பிள்ளை இப்படி ஒரு அவல நிலைக்கு வரக்காரணம் நீதான். ராஜா மாதிரி இருந்த அவன், நீ படுத்தற பாட்டுல மூளை கலங்கி ஏதேதோ பேசறான். அவனை கொல்லாம நீ ஓய மாட்டே. பாவி, சண்டாளி.”

“நிறுத்துங்க. உங்க பையன் அடிக்கற கூத்துல நான் தான் நாசமாயிட்டேன்.”

“இப்ப அவன் என்ன சொன்னான் தெரியுமா?”

“அம்மா, உன்னாலயே நான் சொன்னதை முழுசா நம்ப முடியலை. எதுக்குமே என்னை நம்பாத இவ, இதை நம்ப போறாளா? விடும்மா. என் தலையெழுத்து என்னவோ, அது நடக்கட்டும்.”

“இந்த ஆளை நம்பி என் குழந்தைகளை கூட பக்கத்துல விட முடியலியே? இன்னும் என்னல்லாம் நடக்கப்போகுதோ இந்த வீட்ல?”

“அப்ப போடி! நம்பிக்கை இல்லைன்னா, உன் பசங்களையும் கூட்டிட்டு தாராளமா வெளில போ. என் மகன் நிம்மதியா இருக்கட்டும். நீ கூட இருக்கற வரைக்கும் அவனுக்கு நிம்மதி இல்லை.”

“நான் எதுக்கு போகணும்? நான் நகர்ந்தா கண்டவளுங்க உள்ளே புகுந்து இந்த வீடு உல்லாச புரியா மாறணுமா? நீ அம்மாவா? வேற ஏதாவதா?”

“என் பிள்ளையோட பணம் மட்டும் வேணும். நல்ல சோறு, துணி, ஏசின்னு குளுகுளுன்னு இருடி. அவன் மட்டும் நெருப்புல நிக்கணுமா?”

“அம்மா! பேசாம இரேன். நீ எதுக்கும்மா அவமானப்படறே? விட்ரு. குழந்தைங்க பாவம். அவங்களை நினைச்சு மௌனமா இரம்மா.”

துளசி கூச்சல் போட்டபடி வெளியேற, அம்மா இன்னும் நெருங்கி வந்து,

“கொஞ்சம் முன்னால சொன்னியே, உன் உருவம் எங்களுக்கு தெரியலை. உன் குரல் எங்க யாருக்கும் கேக்கலைன்னு…அது நிஜமா துவாரகா?”

“உன் மேல ஆணைம்மா. நான் காபி கேட்டேன். குழந்தை கிண்டர் ஜாய் கேட்டப்ப, நீ அவன் கூடத்தானே இருந்தே?”

“யார் கிட்ட சொன்னாலும், இதை நம்ப மாட்டாங்களேப்பா?”

“எனக்கும் புரியலைம்மா. சரி விடு. அவ வெளில போய் கூச்சல் போடப்போறா. நீ போம்மா.”

அம்மா மிரட்சியுடன் பார்த்து,

“டாக்டர் கிட்ட போகலாமா துவாரகா?”

“வேண்டாம்மா. எனக்கு இப்ப தேவை தனிமை. விடும்மா”

துவாரகா படுத்து விட்டான். தலை முழுவதும் ஒரு மாதிரி முள், முள்ளாக குத்துவதை போல இருந்தது. உடம்பில் சொல்லத்தெரியாத பல சங்கடங்கள் இருந்தது. எதற்கும் கலங்காமல், எதையும் சுலபமாக எடுத்துக்கொள்ளும் துவாரகா, கனமான பயத்துடன் கண்களை மூடிக்கொண்டான்.

மாலை ஆறு மணிக்கு துளசி, தன்னை லேசாக அலங்கரித்து கொண்டாள். பிள்ளைகள் இருவரையும் தயார் செய்தாள்.

“எங்கேம்மா போறோம்?”

ஆறு வயது தீபா கேட்க,

“ஏன்? சொன்னாத்தான் வருவீங்களா?”

“அப்பா கூட கார்ல தானே போறோம்மா?”

“இல்லை, நாம மூணு பேரும் ஆட்டோல போறோம். உங்கப்பா கூட போய், மத்தவங்க அவரோட அழகை புகழ்ந்து, என்னை மட்டம் தட்டறது இனி நடக்கக்கூடாது. இந்த ஆளும் அதை ரசிச்சு, அழகான பொட்டச்சிகளை ஆனந்தமா ரசிப்பான். சீக்கிரம் புறப்படுங்க.”

அம்மா பூஜை கூடையோடு கோயிலுக்கு தயாராக,

“ நீங்க கோயிலுக்கு போயிட்டு எப்ப வருவீங்க?”

“எட்டு மணிக்கு மேல. கோயில் சாத்தற வரைக்கும் அங்கே தான் இருப்பேன். என் பிள்ளைக்கு நிம்மதியான வாழ்க்கையை குடுன்னு வேண்டிக்க போறேன்.”

“ஓ..அப்படியா? எனக்கு அப்படி தோணலியே? எவளாவது மேனா மினுக்கி இங்கே வர்றாளா? பையன் ஆனந்தமா அவ கூட இருக்கட்டும்னு அம்மாக்காரி வழி விட்டு கோயிலுக்கு போறீங்களாக்கும்?”

“உன் நாக்கு அழுகி போகும்டி. ஒரு உத்தமனை இத்தனை மோசமா பேசற உனக்கு நரகத்துல கூட இடம் கிடைக்காதுடி. நீ நாசமா போவே.”

“அம்மா! நீ புறப்படு. அவளுக்கு அந்த அளவுக்கு சந்தேகம் இருந்தா வாசலை, பின் கட்டை பூட்டி சாவியை கையில எடுத்துட்டு போகட்டும்.”

“இது ஜெயில் இல்லைப்பா. உன் வீடு.”

“இல்லைம்மா. காராக்ரகம்னு சொல்லுவாங்க இல்லையா? அதை விட இது மோசம். நான் வாழ்க்கையோட விளிம்புக்கு வந்தாச்சு. எல்லாரும் சொல்லியும், முகம் சுருக்கியும், விமர்சனம் செஞ்சும், இவளை நான் கல்யாணம் செஞ்சுகிட்டேன். அதுக்கான தண்டனை இது. நீ எந்த கோயிலுக்கு போனாலும், எந்த தெய்வத்து கிட்டே முறையிட்டாலும் எனக்கு பலன் கிடைக்கப்போறதில்லை. உன்னால ஆன முயற்சியை செய்மா. அவளையும் வெளில பூட்டிட்டு புறப்பட சொல்லு.”

“கண்டிப்பா பூட்டிட்டுத்தான் போடுவேன். அதுக்காக நான் கவலைப்படலை.”

“நான் போகலை துவாரகா. என்னையும் உள்ளே வச்சு அவ பூட்டட்டும். உனக்கு பேச்சு துணைக்காவது நான் இருக்கேன்”

“அம்மா..பிள்ளையை எப்படி அவ நம்பி விட்டுட்டு போறான்னு கேட்டுக்கோம்மா”

அம்மா முகம், கோபத்தில் சிவந்தது.

துளசி, சொன்னபடி வீட்டின் முன், பின் பக்கங்களை பூட்டி சாவியை கையில் எடுத்துக்கொண்டு குழந்தைகளுடன் ஆட்டோவில் ஏறினாள்.

“துவாரகா! ஒரு புருஷனை இதை விட மோசமா எந்த மனைவியாலும் அசிங்கப்படுத்த முடியாது. எல்லா தகுதிகளும் இருந்தும், இன்னமும் நீ அவமானம் தாங்கினா, உன்னை பெத்த அம்மா நானே, உன்னை மன்னிக்க மாட்டேன். இன்னிக்கு இதுக்கு நீ ஒரு முடிவை கட்டியே ஆகணும்.”

அம்மாவின் குரலில் அனல் வீசியது. உள்ளே போய் பூஜை அறையில் அம்மா உட்கார்ந்தாள். மகனுக்காக மனம் உருகி ஒரு மணி நேரம் அழுதாள். எழுந்து வந்து மகனை கூப்பிட்டாள். துவாரகா இல்லை. வீடு முழுக்க தேடினாள், துவாரகாவை காணவில்லை.

வீட்டின் முன், பின் பூட்டு. சாவி துளசி கையில். கதவோ, ஜன்னல்களோ உடை படவில்லை.  வேறு சாவியும் இல்லை. ஆனால் துவாரகேஷை காணவில்லை.

(-தொடரும்…)

முந்தையபகுதி – 2 | அடுத்தபகுதி – 4 

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...