என்னை காணவில்லை – 2 | தேவிபாலா

 என்னை காணவில்லை – 2 | தேவிபாலா

அத்தியாயம் – 02

துளசி தட்டி விட்ட பட்டுச்சேலை, உயரே பறந்து, எரிந்து கொண்டிருந்த குத்து விளக்குக்கு நேராக இறங்க, அதை பாய்ந்து பிடிக்க ஒரே நேரத்தில் துவாரகாவும், சுஷ்மாவும் வர, துவாரகா நெருப்பில் படாமல் சேலையை பிடித்து விட்டான். அவன் மேல் தடுமாறி சுஷ்மா விழ, அவளை துவாரகா தாங்கி பிடிக்க, சுஷ்மாவின் உடல் முழுவதும் துவாரகேஷ் மேல் படர, துளசி கொதி நிலைக்கு வந்து விட்டாள். இருவரும் சமாளித்து எழ,

“ ராக்கி கட்டறேன் பேர் வழின்னு, தங்கச்சின்னு நாடகம் ஆடி,  ….டியாத்தனம் பண்றியாடி?”

சுஷ்மாவை, துளசி பாய்ந்து அடிக்க வர, அவளை மடக்கி பிடித்த துவாரகா, ஓங்கி அறைந்தான். துளசி தூரப்போய் விழுந்தாள். அம்மா பதறி விட்டாள். சுஷ்மா அதை விட பதட்டமாக,

“ என்னப்பா நீ? கை நீட்டி அடிச்சிட்டியே?”

“அம்மா! பேசாம இரு. பொண்டாட்டியை அடிக்கற மிருகம் இல்லை நான். இந்த எட்டு வருஷத்துல என்னிக்காவது என் கை அவ மேல பட்டிருக்கா? இவளால எத்தனை டார்ச்சர்? தினம் தினம் சித்ரவதை படறேன் நான். நான் காமுகனா? பொம்பளைக்கு அலையறேனா? ஆஃபீஸ் போறேன்னு பொய் சொல்லி, ரூம் போட்டு நான் தப்பு பண்ணினா இவளுக்கு தெரியுமா? வீடு தேடி ராக்கி கட்ட ஒருத்தி வந்திருக்கா. அவளை அடிக்கப்போய், கெட்ட வார்த்தைல திட்டி அசிங்கப்படுத்தினா, ஒரு புருஷனா இருந்து நான் சும்மா இருக்க முடியுமா? ஸாரி சுஷ்மா! நீ புறப்படு. இனிமே இந்தப்பக்கம் வராதே.”

தலை விரி கோலமாக எழுந்தாள் துளசி. கண்களில் நெருப்பு பொறி பறந்தது.

“நான் இப்பவே போய் ஊரைக்கூட்டறேன்”

“ஊரைக்கூட்டி பெருக்கி மொழுகி வை. மனசு முழுக்க அழுக்கை, குப்பையை வச்சிட்டு ஊரைக்கூட்டறியா? தாராளமா கூட்டு.”

“துவாரகா, அவளை தடுத்து நிறுத்துடா. தெரு கூடினா நமக்குத்தாண்டா அசிங்கம். நாலு பேர், நாலு விதமா பேசுவாங்க.”

“அம்மா! இது புதுசா? இந்த எட்டு வருஷத்துல தலைவிரி கோலமா இவ வாசலுக்கு ஓடினது அறுபத்தி மூணு தடவை. கெரசின் விட்டு கொளுத்திக்க தெருவுல போய் நின்னது முப்பத்தி ஏழு தடவை. வீட்ல தூக்கு மாட்டிக்க முயற்சி செஞ்சது பதினாலு தடவை. அதனால இது காமடி பீஸ்னு ஊருக்கே தெரிஞ்சு போச்சு. அமேசான் படங்களை விட இவ காட்டற படங்கள் இன்னும் சுவாரசியமா இருக்கும். போகட்டும் விடும்மா. சுஷ்மா,  நீ இன்னும் போகலையா?

அவள் வேதனையும், கண்ணீரும் கலந்து வாசலை நோக்கி நடந்தாள். குழந்தைகள் இருவரும் ஒரு மாதிரி கலவரம் கலந்து பார்க்க,

“அம்மா! நீ போய் குழந்தைகளை சமாதானப்படுத்து. எனக்கு இவங்க ரெண்டு பேரையும் நினைச்சா கஷ்டமா இருக்கும்மா. நானும் புறப்படறேன். பசங்களை ஸ்கூலுக்கு தயார் பண்ணும்மா. நான் போற வழில விட்டுட்டு போறேன்”

இது தான் துவாரகேஷின் நிலை. ஆரம்ப நாட்களில் ஆத்திரப்பட்டான். அமைதியாகி, அவளிடம் அழகாக பேசி பார்த்தான். கெஞ்சி, கொஞ்சி எல்லா வழிகளையும் முயற்சி செய்தான். அம்மாவும் பல முறை சொல்லி அவமானப்பட்டாள். எதுவும் பலிக்கவில்லை. உறவுக்காரர்களுக்கு இது தெரியக்கூடாது என முடிந்த வரை அம்மாவும், பிள்ளையும் மூடி வைத்தும் முடியவில்லை. வெடித்து சிதறி வெளியே வந்து விட்டது. வெளியூரில் இருந்த துவாரகாவின் இரு சகோதரிகளும் இங்கு வந்து பல முறை அசிங்கப்பட்டு,

“ அம்மா! இந்த பேய் கூட வாழற தலையெழுத்து உனக்கில்லை. எங்க கூட வந்துடும்மா நீ.”

“நான் வரலாம். ரெண்டு குழந்தைகளை விட்டு அவன் எங்கேடி போவான்? பெத்த குழந்தைங்க மேல கூட அவ அக்கறை காட்டறதில்லை. அந்த அளவுக்கு சந்தேக வெறி முத்திப்போயிருக்கு. நான் என் பிள்ளைக்கு ஆறுதலா இருக்கணும்டி. எத்தனை கஷ்டப்பட்டாலும், நான் அவன் கூடத்தான் இருப்பேன்.”

“ஒரு நல்ல சைக்யாட்ரிஸ்ட் கிட்ட கூட்டிட்டு போ துவாரகா.”

“அவ மன நோயாளி இல்லைம்மா. திடமாத்தான் இருக்கா.”

“சந்தேகம் ஒரு மாதிரி நோய் தான். பொசசிவ்நெஸ் இருக்கலாம். அதோட அட்வான்ஸ் ஸ்டேஜ் தான் இது.”

ஏதோ சொல்லி ஏமாற்றி ஒரு மன நல மருத்துவரிடம் அழைத்து போனான். அவர் நாசூக்காக பேசியும் விளைவு மோசமானது.

“ என்னை பைத்தியமாக்கி, எங்கேயாவது அடைச்சிட்டு, நீ பல பெண்கள் கூட உல்லாசமா இருக்க ஆசையா? இவன் டாக்டரா? உனக்கு மாமாவா?”

டாக்டர் கடுப்பாகி,

“வெளில போங்க துவாரகேஷ். இது பொம்பளையே இல்லை. நீங்க வர வேண்டிய இடம் என் க்ளீனிக் இல்லை. கோர்ட். சீக்கிரம் விவாகரத்து வாங்குங்க. அப்பத்தான் உங்களுக்கு விடுதலை.”

“அதை சொல்ல நீ யாருடா? நீயும் ஆம்பளை தானே? பொண்டாட்டிக்கு துரோகம் பண்ற ஜாதி தானே?”

அவளை பலவந்தமாக இழுத்து, வீடு கொண்டு வந்து சேர்ப்பதற்குள் துவாரகாவுக்கு நாக்கு தள்ளி விட்டது.

இது தான் துளசி. துவாரகாவின் இடத்தில் யார் இருந்தாலும், இந்த எட்டு வருஷங்களில் ஒன்று மூளை கலங்கியிருக்கும். அல்லது கொலைகாரனாக மாறியிருப்பார்கள். அவன் இன்னமும் சகலமும் தாங்கி நிற்பது அவன் பெற்ற குழந்தைகளுக்காக. வாழ்க்கையில் விரக்தியின் உச்சிக்கே போய் விட்டான். இப்படி ஒரு நிம்மதியில்லாத வாழ்க்கை தேவை தானா என பல முறை யோசிக்கும் நிலைக்கு வந்து விட்டான். அம்மா அவனிடம்,

“ஒரு தாய் நான் சொல்லக்கூடாது. ஆனா நீ படற சங்கடங்களை என்னால சகிச்சுக்க முடியலைடா. குழந்தைகளை நான் உயிரோட இருக்கற வரைக்கும் பாத்துக்கறேன். ஏன்னா, அவளுக்கு குழந்தைகள் மேல அக்கறை இல்லை. விடிஞ்செழுந்தா உன்னை எப்படி புண்படுத்தலாம்னு அவ விடிய விடிய யோசிக்கறா. அப்படிப்பட்ட ஒருத்தி கூட தினசரி போராடினா, நீயும் எங்களுக்கு இல்லாம போயிடுவே. அதனால அவளை விவாகரத்து பண்ணிடு.”

“பொண்டாட்டி என்னை சந்தேப்படறா. அதனால என் வாழ்க்கைல நிம்மதி இல்லை. எனக்கு விவாகரத்து குடுங்கன்னு நான் கேட்டா, சட்டம் அதை ஏற்குமான்னு எனக்கு தெரியலை. இவளை கவுன்சிலிங்ல கேட்டா, என்னை ஸ்த்ரீ லோலன்னு சொல்லி, சுஷ்மா மாதிரி பல நல்ல பெண்களை என்னோட சம்பந்தப்படுத்தி, அசிங்கப்படுத்துவா. நம்மால யாரும் அவமானப்படக்கூடாதும்மா. வேண்டாம் விவாகரத்து.”

ஆரம்பத்தில் பல விதமாக யோசித்து, போராடி, இப்போது தெளிந்து விட்டான். நண்பர் ஒருவர் சொன்னதால், ஒரு சித்தரிடம் போனான். இவன் எதுவும் சொல்லவில்லை. எதிரே உட்கார்ந்தவர், இவன் முகத்தை பார்த்தார். இவன் கைகளை பற்றி அதில் உள்ள ரேகைகளை தடவினார். இவனது உச்சந்தலையில் கை வைத்தார். உள்ளே அழைத்துப்போய், அவனுக்கு சில அந்தரங்க பரிசோதனைகளை செய்தார்.  அவன் கூச்சப்பட்டான். வெளியே வந்தார்கள்.

சித்தர் மெல்ல வாய் திறந்தார்.

“ உன்னோட இந்த இளம் வயசுக்கு, உனக்குள்ள உணர்வு கேந்திரங்கள் அத்தனையும் மரத்து போயாச்சு. காரணம் உன் மனசு செத்தாச்சு. அதை நான் தெரிஞ்சுகத்தான் மேற் படி பரிசோதனைகள். ஒரு நம்பகமான நல்ல மனைவி, ஒரு ஆணுக்கு அமைஞ்சா, அவனுக்கு எண்பது வயசானாலும் உடம்பு எல்லாத்துக்கும் தயாரா இருக்கும். காரணம் அவன் மனசுல உள்ள இளமையும், புத்துணர்ச்சியும் தான். ஆனா முப்பதுகளோட மத்தில இருக்கற நீ ஜடமாயாச்சு. காரணம் உன் மனைவி.”

ஆச்சர்யமாக அவரை பார்த்தான்.

“கண்களை வச்சு, கையில ஓடற ரேகைகளை வருடி, உன் உறுப்புகள் மூலம் உன் மனசை நான் படிச்சாச்சு. கோர்ட், டாக்டர் எதுவும் உனக்கு துணை வராது. உன் பிரச்னைகளை தீர்க்காது.”

“சித்தர் சாமி! கணவனை சந்தேகப்படற மனைவியும், மனைவியை கொடுமைப்படுத்தற கணவனும் இந்த பூமிக்கு புதிசில்லை. ஆனா என் சங்கதில இது உச்ச கட்டம். சாம,தான, பேத, தண்டம்னு எல்லாத்தையும் நான் பயன் படுத்தி பார்த்தாச்சு. எதுவும் அவ கிட்ட எடுபடலை. காரணம் அழகுல, படிப்புல, அறிவுல, இப்படி எதுல பார்த்தாலும் எனக்கு பாதி கூட அவ இல்லை.”

“அப்புறமா ஏன் அவளை கல்யாணம் செஞ்சுகிட்டே? நீ எடுத்தது தப்பான முடிவு. அதுக்கான தண்டனை தான் இது!”

“ அதுக்காக ஆயுள் தண்டனையா எனக்கு?”

“தம்பி! இது வாழ்க்கை. இது தொடர்பா முடிவெடுக்கும் போது எல்லாத்தையும் அலசித்தான் முடிவெடுக்கணும். நான் அப்பட்டமா சொல்றேன். ஒரு பெண் உடம்புக்குள்ள ஆண் உடம்பு நுழையறது மட்டுமே வாழ்க்கை இல்லை. மனசுக்குள்ள, மனசு நுழையறது தான் வாழ்க்கை. ஆரம்ப காலத்துல அது நிகழாது. ஆனா படிப்படியா நடக்கும். மனசு தான் காலத்துக்கும் நிற்கும். உங்களுக்கு நான் தகுதியானவளான்னு அவ கேட்டப்ப நீ முழிச்சிருக்கணும். அங்கே தொலைஞ்சவன் தான் நீ.”

அவன் பேசவில்லை. அம்மா பல முறை சொன்னது.

“ துவாரகா! நான் துளசியை தப்பா பேசலை. ஆனா உனக்கு அத்தனை தகுதிகளும் இருக்கு. அதற்கேற்ற பெண்கள் உன்னை கல்யாணம் செஞ்சுக வரிசைல வந்து நிப்பாங்க. அப்படியிருக்க, துளசியை எதை வச்சு நீ தேர்ந்தெடுத்தே? நானும் பணத்தை, அழகை பெரிசா நினைக்கலை. கண்ணதாசன் பாட்டு ஒண்ணு உண்டு,

“பொருத்தம் உடலிலும் வேண்டும்..
புரிந்தவன் துணையாக வேண்டும்.
கணவனின் துணையோடு தானே
காமனை வென்றாக வேண்டும்.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.”

“ எங்கம்மா பல நாள் இதை சொல்லி அழுதிருக்காங்க சித்தர் சாமி. வயசான காலத்துல அவங்க நிம்மதியும் என்னால கெட்டு போச்சு.”

“இழந்த உன் நிம்மதி, சந்தோஷம் நிச்சயமா உனக்கு திரும்ப கிடைக்கும்”

“எப்ப சாமி?”

“நீ கூடின சீக்கிரம் என்னை சந்திக்க திரும்பவும் வருவே. இப்ப நீ போகலாம். நான் தர்ற ஒரு தாயத்தை உன் இடுப்பு கயிறுல கட்டிக்கோ.”

அவர் கண்களை மூடி ஜபம் செய்து அதை தந்தார்.

“ நீ வீட்டுக்குள்ளே நுழைஞ்சதும் ஒரு புது மாற்றம் தெரியும். உன் பொறுமைக்கு நல்லதே நடக்கும். அடுத்த நம்மோட சந்திப்பு வினோதமா இருக்கும்.”

வெளியே வந்தான். அவர் புதிதாக எதையும் சொல்லி விடவில்லை. ஆனால் ஞானஸ்தர். எதையும் சொல்லாமல் அவரே கண்டு பிடித்து விட்டார். கொஞ்சம் மனசு லேசாக இருந்ததை போலிருந்தது.

வீட்டுக்குள் நுழைந்தான். துளசியின் குரல் ஓங்கி ஒலித்து கொண்டிருந்தது. அம்மாவிடம் சண்டை போட்டு கொண்டிருந்தாள் உரக்க. அம்மா பதிலே சொல்லாமல் சமையல் கட்டில் இருக்க, துவாரகா உள்ளே வந்தான். எதிரே துளசி. இவனை பார்த்தாலே சண்டை வலிக்கும் துளசி, பாராமல் கடக்க, அம்மா பின்னால் வந்தாள். அம்மாவும் கண்டு கொள்ளவில்லை.

“ காலைல வெளில போன துவாரகா இன்னும் வரலியே?”

“யாருக்கு தெரியும்? எவ கூட  இருக்காரோ?”

என்னை எதிரில் வைத்துக்கொண்டே அவர்கள் இருவரும் இப்படி பேசியது ஆச்சர்யமாக இருந்தது.

“ நான் இங்கே தான் இருக்கேன்!”

அதற்கும் பதில் இல்லை.

“ நான் எதிரில் இருந்தும் என்னை தெரியவில்லை. நான் பேசியும் என் குரல் இவர்கள் காதில் விழவில்லையா? என்ன இது மாயம்?”

கலவரத்துடன் நின்றான் துவாரகா.

(-தொடரும்….)

முந்தையபகுதி – 01 | அடுத்தபகுதி – 03

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...