என்னை காணவில்லை – 01 | தேவிபாலா

 என்னை காணவில்லை – 01 | தேவிபாலா

அத்தியாயம் – 01

அதிகாலை நேரம், இருட்டு முழமையாக பிரியாத பொழுது. காலை மூன்று முப்பதுக்கு தன் இன்னோவா காரை எடுத்து விட்டான் துவாரகேஷ். அருகில் துளசி.

“இத்தனை சீக்கிரம் காரை எடுக்கணுமா? விடிஞ்ச பிறகு போனா போதாதா? அப்படி என்ன தலை போற அவசரம்?”

“இப்பவே புறப்பட்டா, ரோடு ஃப்ரீயா இருக்கும். நாலரை மணி நேரத்துல திருச்சிக்கு போயிடலாம். ஏழரைக்கு போயிட்டா, எட்டு மணிக்கு சமய புரத்துல தரிசனம். மணச்சநல்லூர் பாலசந்தர் ஏற்பாடு பண்ணியிருப்பார். நாளை ஒரே நாள்ள திருச்சில ஏழு கோயில்களை பாத்துடலாம்.”

கார் வேகம் பிடித்தது.

“இப்படி கண் எரிய, எரிய சாமியை பாக்கலைன்னா என்ன? கோயில்ல போய் நான் தூங்கி விழுவேன்.”

“உன்னை நான் வரவே சொல்லலியே? நான் மட்டும் நிம்மதியா போயிருப்பேனே!”

“எப்படி நான் நம்பறது? நான் வரலைன்னா, புது கார்ல ஒக்காந்து வேற எவளாவது வருவா. எனக்கு தெரியாதா ஒன்னப்பற்றி? அதான் நானும் புறப்பட்டேன்.”

லேசாக சிரித்தான் துவாரகேஷ். அந்த சிரிப்பில் வெறுப்பும், விரக்தியும் கலந்திருந்தது.

“அதாவது நீ சாமி கும்பிட வரலை. புருஷனை சந்தேகப்பட்டு வேவு பார்க்க வந்திருக்கே. நடத்து. கோயில்ல ஆம்பளை, பொம்பளை எல்லாரும் கலந்து நெருக்கமா நிப்பாங்க. அங்கே என்ன செய்யப்போறே?”

“உங்க மேல எவளாவது பட்டா, கோயில்னு கூட பாக்காம அவளை அங்கியே வெட்டுவேன்.”

தாம்பரம் தாண்டியதும், காரின் வேகம் நூறை தொட்டது.

கல்யாணமான நாள் முதலே, துளசி சந்தேக பூச்சி. கொடியில் காயும் சேலைக்கு பக்கத்தில் துவாரகேஷ் நின்றால் கூட சேலையை பெண்ணாக நினைத்து அதை கிழித்து விடுவாள் துளசி. அவளது ஆரம்ப சந்தேகம் முதல், உச்ச கட்ட சந்தேகம் வரை துவாரகா பார்த்து விட்டான். அதை விலா வாரியாக இந்த கதையில் சொல்ல வேண்டும். அவர்கள் கல்யாணம், ஜாதகம் பார்த்து பெரியவர்களால் முடிவு செய்யப்பட்ட கல்யாணம். பெண் பார்த்த போதே துவாரகா அம்மா அவனை தனியாக அழைத்தாள்.

துவாரகேஷ் பேரழகன். நிறம், உயரம், கம்பீரம், குரல் என சகலமும் நிரம்பிய ஆணழகன். துளசி நேர் எதிர். குள்ளம், கறுப்பு, பெண்ணுக்குள்ள எந்த வசீகரமும் இல்லாதவள். படிப்பும் அதிகமில்லை. உத்யோகம் இல்லை.

“உனக்கு எந்த விதத்திலும் பொருந்தாத இவ, வேணுமாடா துவாரகா?”

அவன் கண்களுக்கு துளசி தப்பாக தெரியவில்லை. அது தான் விதி. மற்ற யாருக்குமே குடும்பத்தில் அவளை ஏற்கவில்லை. அவனுக்கு பிடித்து விட்டது. தனியாக பேச அழைத்த போது,

“இத்தனை அழகா இருக்கீங்களே? உங்களுக்கு நிஜம்மாவே என்னை பிடிச்சிருக்கா”

“நான் பொய் சொல்ல மாட்டேன். அழகு நிரந்தரமில்லை.”

“ஆனா உங்களை நிறைய பெண்கள் விரும்பியிருப்பாங்களே. நீங்க யாரையும் காதலிக்கலையா?”

“எனக்கு காதல்ல நம்பிக்கை இல்லை துளசி..”

“நம்ம கல்யாணம் முடிஞ்ச பிறகு, வேற அழகான பெண்ணை பார்த்தா, என்னை விட்டு போயிட மாட்டீங்களே?”

இந்த அப்பாவித்தனமான கேள்வி, கிராம வாசனை கலந்த பேச்சு, தனக்கு தகுதி இல்லாத காரணத்தால் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மை, பயம் இதெல்லாம் சரியாகி விடும் என்று நம்பித்தான் தாலியை கட்டினான் துவாரகா. ஆனால் குணமும் அழகில்லை, அது படு மோசம் என்பதை முதல் ராத்திரியே புரிந்து கொண்டு விட்டான்.

அவள் தந்த பாலை பருகி, அவளை நெருங்கி அணைக்க வந்த போது,

“ஏன் இத்தனை அவசரப்படறீங்க? இதுல உங்களுக்கு அத்தனை வேகமா? ஏற்கனவே யாரையாவது நீங்க..?”

சரக்கென விலகினான்.

“என்ன பேசற நீ?”

“உங்க வேகம் பார்த்தா, முன் அனுபவம் இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு. நம்ம கல்யாண வரவேற்புல, உங்க ஆஃபீஸ்ல வேலை பாக்கற அந்த வடக்கத்தி காரி, குண்டா, வெள்ளையா, மேலாக்கை சரியா போடாம, பெரிய பரிசு பொருளோட வந்து மேடைல உங்களை கட்டி புடிச்சாளே…அவளை அங்கியே வெட்டி போட தோணிடுச்சு. அவ கூட உங்களுக்கு…?”

நொந்து போனான் துவாரகா. ஆனாலும் அடக்கி கொண்டான்.

‘முதல் ராத்திரி இது. ஆத்திரப்பட்டு, நான் விவேகத்தை இழக்கக்கூடாது.’

“நீ படு. நாளைக்கு பேசிக்கலாம்.”

ஒரு பவுர்ணமியில் தான் அவர்கள் கல்யாணம் நடந்தது. ஆனால் அவனுக்கு அது அமாவாசை தான். சரி செய்து விடலாம் என பார்த்தால், நாளுக்கு நாள் சந்தேகம் அதிகமாகத்தான் செய்தது.

கார் திண்டிவனத்தை கடந்து விட்டது. சர்வ சகஜமாக நூற்றி நாற்பதில் ஓட்டினான்.

“ஏன் இத்தனை வேகமா ஓட்டறீங்க?”

“எந்த பிரச்னையும் இல்லை. எனக்கு கார் ஓட்ட ரொம்ப பிடிக்கும்? எனக்கு எப்பவுமே கன்ட்ரோல் உண்டு. பயப்படாதே.”

“கன்ட்ரோல் எதுல? கார் ஓட்டறதுல மட்டும் தானா?”

“எல்லாத்துலேயும் எனக்கது உண்டு. உனக்கு நம்பிக்கை இல்லைன்னா நான் என்ன செய்ய முடியும்? உன்னை நம்ப வைக்க முயற்சி செஞ்சு, நான் தோத்தாச்சு.”

“நான் நம்பணும். ஏன்னா நான் உங்க மனைவி. என்னை மீறி எது நடந்தாலும், நான் நாறடிச்சிடுவேன்.”

“நிறுத்து துளசி. இப்ப கோயிலுக்கு போறோம். உன் கூட போராடி நிம்மதி இல்லாம தான் இந்த கோயில் பயணம். இங்கேயும் என் நிம்மதியை கெடுக்க நீ கூட வர்றே. நான் வேகமா போகும் போது என்னை டென்ஷன் படுத்தாதே.”

“எனக்கொரு சந்தேகம்?”

“உனக்கு எப்பவுமே சந்தேகம் தான். நீ சந்தேகப்படாத நொடிகள் உண்டா?”

“இத்தனை வேகமா போய் காரை எங்கியாவது மோத போறீங்களா? நான் செத்துட்டா, நீங்க சந்தோஷமா மனம் போல வாழலாமே? அதுக்குத்தான் என்னை வர சம்மதிச்சீங்களா?”

“இது நல்ல யோசனையா இருக்கே. எனக்கிது தோணலையே?”

“அடப்பாவி, என்னை கொல்லத்தான் கூட்டிட்டு வந்திருக்கியா?”

“கார் மோதினா, நானும் போயிடுவேனே! நான் செத்தாலும், நீ செத்தாலும் எனக்குத்தான் விடுதலை. மோதிடுவோம்.”

“இன்னும் வேகத்தை அவன் கூட்ட,

“அய்யோ வேண்டாம். குறைங்க, வேகத்தை குறைங்க. நான் வாழ ஆசைப்படறேன். நான் சாக மாட்டேன்.”

அவன் கேட்காமல் வேகத்தை இன்னும் கூட்டி, எதிரே ஒரு டேங்கர் லாரி வர, பாலத்துக்குள் கார் நுழைந்து விட, எதிரே அந்த பெரிய வண்டியும் வேகமாக வர, கார் கட்டுப்பாட்டை இழந்து, லாரி மிக நெருங்கி விட,

“த்த்த்..தட்டார்..”

குபீரென எழுந்தாள் துளசி.

“ம்ம்மா..பாவி காரை மோதி என்னை சாகடிச்சிட்டானே!”

தலையை இரு கைகளால் கெட்டியாக பிடித்து கொண்டு, கண்களை மூடிய படி கூச்சலிட்டாள்.

மாமியார் ஓடி வந்தார்.

“துளசி! என்னாச்சு உனக்கு? ஏன் கூச்சல் போடற? கண்ணை திறடி.”

“காரை மோதி என்னை கொன்னுட்டான் பாவி.!”

“என்னடீ உளர்ற? யார் காரை மோதினது? நீ உயிரோட தானே இருக்கே?”

உள்ளே வந்தான் துவாரகேஷ்.

“அம்மா! அவ கனவு கண்டிருக்கா. நேத்திக்கு திருச்சி கோயில்களுக்கு கார்ல போகணும்னு உங்கிட்ட பேசிக்கிட்டிருந்தேன் இல்லையா?அப்ப முதல் கார்ல நான் பல பெண்களோட போற மாதிரி விதம் விதமா கற்பனை செஞ்சிருப்பா. கடைசியா இவளே என் கூட வந்து, நான் காரை மோதி இவளை கொல்ற மாதிரி கனவு வந்திருக்கும். நிஜத்துல சந்தேகப்படற மனுஷங்க உலகத்துல உண்டு. கனவுல கூட சந்தேகப்படற ஒரே ஒருத்தி இவ மட்டும் தான்மா.”

துளசி கண்களை திறந்து விட்டாள். அவன் பேசுவது அத்தனையும் காதில் விழுந்தது.

போர்வையை உதறிய படி எழுந்தாள்.

“இன்னிக்கு இது கனவா இருக்கலாம். ஆனா ஒரு நாளைக்கு நிஜமாகும். என் கதையை இவர் முடிப்பார்.”

“நிறுத்து துளசி. என் பிள்ளை, பொண்டாட்டியை கொல்ற அளவுக்கு பாதகன் இல்லை. நீதான் சந்தேகப்பட்டு தினம், தினம் அவனை சாகடிக்கறே. எப்பவும் சிரிச்சுகிட்டு சந்தோஷமா இருக்கற என் பிள்ளை சந்தோஷம் தொலைஞ்சு நடைப்பிணம் ஆயாச்சு. ரெண்டு குழந்தைகளை பெற்ற காரணமா எல்லாத்தையும் தாங்கிட்டிருக்கான். உன் ஆட்டத்தை நிறுத்து. உன் காரணமா குடும்பத்துல யாருக்கும் நிம்மதி இல்லை.”

“விடும்மா. இதை நான் பாத்துக்கறேன். நீ குழந்தைகளை ரெடி பண்ணு. நானும் ஆஃபீசுக்கு போகணும்!”

அவன் குளித்து விட்டு வர, அவனது ஆறு வயசு மகள் தீபா, மூன்று வயது மகன் அஸ்வின் இருவரையும் அம்மா தயார் செய்து கொண்டு வந்தாள். துளசி வீட்டில் ஒரு துரும்பைக்கூட கிள்ளி போட மாட்டாள். அத்தனையும் அறுபது கடந்த மாமியார். மகன் மேல் உள்ள பாசத்தால் சகலமும் பொறுத்துக்கொண்டு உழைக்கும் தாய். பிள்ளைகளை தயார் செய்து பள்ளிக்கூட வேனில் ஏற்றினாள். துவாரகேஷ் குளித்து சாமி கும்பிட்டு வந்தான்.

“துவாரகா! முதல்ல இந்த பால் பாயசத்தை குடி. இன்னிக்கு ஆவணி பவுர்ணமி. ரட்சா பந்தன் நாள்.”

“பவுர்ணமி எனக்கு மோசமான நாளாச்சேம்மா.உனக்கு தெரியாதா?

“விடுப்பா. எல்லாம் சரியாகும். வா, ஒக்காரு, டிபன் ரெடி.”

வாசலில் கார் வந்து நின்றது. அந்த வடக்கத்தி சுஷ்மா, துவாரகேஷூடன் வேலை பார்க்கும் பெண், கைகளை ஆட்டிய படி உள்ளே வந்தாள்.

“ஹாய் துவாரா!”

ஓடி வந்து அவனை கட்டிப்பிடித்தாள். வேகமாக துளசி வெளியே வந்தாள். அம்மா கலவரத்துடன் பார்க்க,

“தள்ளுடி. அடுத்தவ புருஷனை அதெப்படி கொஞ்சம் கூட கூச்சமில்லாம கட்டிப்பிடிக்கறே? வீடு தேடி வந்து வில்லங்கம் பண்றியா?”

“துளசி, நீ மாறவே மாட்டியா? இன்னிக்கு ரக்ஷா பந்தன். எனக்கு பிரதர்ஸ் இல்லை. துவாரகா தான் என் பிரதர். நான் அவனுக்கு ராக்கி கட்ட வந்திருக்கேன். எட்டு வருஷமா அவனுக்கு கட்டறேன்.”

“அவர் இடுப்புல உள்ள அர்ணாக்கயிறு அறுந்திருக்கு. அதையும் நீயே கட்டி விட்ரு.”

“ஏன் கூடாது? தாராளமா கட்டுவேன். மனசுல விகல்பம் இல்லைன்னா எதையும் செய்யலாம். நீ இந்த உலகமே இடுப்புக்கு கீழே இருக்குன்னு ஆபாசமா பாக்கற. நாங்க பவித்ரமான இதயத்தை பாக்கறோம். தள்ளி நில்லு.”

அவள் கொண்டு வந்த அலங்கார கயிறான ராக்கியை, துவாரகாவின் கைகளை பிடித்து, அவனது வலது மணிக்கட்டில் இதமாக முடிச்சு போட்டு, அந்த கைகளை எடுத்து முத்தமிட்டாள். துவாரகா தயாராக வைத்திருந்த பட்டுச்சேலையை அவளுக்கு பரிசாக நீட்ட, குறுக்கே ஆவேசமாக புகுந்த துளசி, அதை தட்டி விட, உயரே பறந்த பட்டுச்சேலை, எரிந்து கொண்டிருந்த குத்து விளக்கை நோக்கி இறங்கியது.

(தொடரும்)

கமலகண்ணன்

1 Comment

  • ஆரம்பமே டாப் கியரில்!!!
    சூப்பர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...