என் – அவர் என்னவர் – 01 | வேதா கோபாலன்
” என் நினைவுகள் அவரோடு “
(அத்தியாயத் தலைப்பு உபயம் முகநூல் சிநேகிதி பானுமதி கண்ணன்)
2022 டிசம்பர் மாதம் 2 ம் தேதி…
அமைதியாகப் பூஜை செய்து நமஸ்கரித்து.. இறைவனைச் சென்றடைந்த… அவர்… என்னவர்…
என்றைக்குமே எதையுமே படாடோபமாகச் செய்தறியாதவர்.
தான் செய்வதை யாராவது பார்க்கிறார்களா.. பாராட்டுகிறார்களா என்பது பற்றி எப்போதுமே கவலைப்படாதவர்.
அன்றைக்கும் அப்படித்தான் சென்றடைந்துவிட்டார். இந்திய நேரத்தில் ஏகாதசியாம்.
அப்போது நாங்கள் அமெரிக்காவில் மகன் வீட்டில் இருந்தோம். பாஸ்டன். உலகெங்கிலும் அது குளிர்காலம்தான். அமெரிக்காவில் கேட்க வேண்டாம். வடகிழக்கில் கேட்கவே வேண்டாம். சற்று காலை எட்டி வைத்தால் வட துருவம்.
“இந்த முறை போகலாமா.. வேண்டாமா?” என்று கேட்டபோது..
“எது நடந்தாலும் நம் மகன் வீட்டில்தானே நடந்துவிடப்போகிறது? தைரியமாகப் போவோம் வா..” என்றார்.
பத்து வருட விஸா நான்கு மாதங்களுக்கு முன் தன் ஆயுளை முடித்துக்கொண்டதால் புது விசா வாங்கியிருந்தோம். விசாவுக்கு 2032 வரைக்கும் ஆயுளை நீட்டித்திருந்தார்கள். அவருடைய ஆயுளை இறைவன் 2022 வரை நிர்ணயித்திருந்தான்.
நான் அழுது புரளவில்லை. புலம்பவில்லை. ”ஐயோ என்னைவிட்டுப் போயிட்டீங்களே” என்று கதறவில்லை. மனசுக்குள் துக்கமும் அழுகையும் சோகமும் கண்ணீரும் இல்லாமல் இல்லை.
நான் சோகத்திலிருந்து என்னை விரைவில் மீட்டுக்கொண்டுவிட்டதைப் பலரும் பாராட்டினர். சிலர் வியந்தனர். உண்மையில் என் கணவர் என்னைப் பல பகவத்கீதைப் பேருரைகளுக்கு அழைத்துப் போனதுதான் அதற்குக் காரணம்.
பிறந்த எல்லோருமே ஒரு நாள் இந்த மண்ணைவிட்டுப் போய்த்தான் ஆக வேண்டும் என்றும்… ஆன்மா சட்டையைக் கழற்றுவது போல் உடலைக் கழற்றிவிட்டுப் போய்விடுவதுதான் நியதி என்றும்.. தந்தையை.. தாயை.. சகோதர சகோதரிகளை… கணவரை.. மனைவியை.. குழந்தைகளைவிட்டு யாருமே பிரிந்து போகத்தான் வேண்டும் என்றும்.. ரயில் பயணத்தில் அவரவர் ஸ்டேஷன் வந்தால் மற்றவர்களைவிட்டுவிட்டு இறங்கியே தீரவேண்டும் – என்றும் மீண்டும் மீண்டும் கற்றுக் கொடுத்தவர் அவர்தான். விளக்கேற்றினால் எண்ணையும் மிஞ்சலாம் திரியும் மிஞ்சலாம் என்று மனதில் பதித்தவர் அவர்தான்… அவருக்கு என் நன்றி.
கடைசிப் பயணத்துக்குத் தயாராக இருந்த அவரைப் பார்த்தேன். அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
எங்களுடைய முதல் பயணம் நினைவுக்கு வந்தது. அது எங்களின் ஹனி மூன். ஹனி மூன் என்பது எவருக்குமே மறக்க முடியாத பயணம்தான். எங்களுக்கு அது மறக்க முடியாமல் அமைந்ததற்குக் காரணம்….
அந்தப் பயணத்தின்போது ஏற்பட்ட சுவாரஸ்ய சம்பவம்.
அதற்கும் ஒரு சின்ன ஃப்ளாஷ் பேக்.
எங்களுடையது காதல் திருமணம். சுவையான காதல் திருமணம். எனவே அது பற்றிப் பிரபல வார இதழாகிய குமுதத்தில் பிரசுரிக்க விரும்பினார்கள்.
அவரைப் பத்திரிகை உலகம் பாமாஜி என்றுதான் அழைத்தது. கோபாலன் என்பது இயற்பெயர் என்றாலும் வீட்டின் பெயர் பாமா என்பதால் (பாட்டியின் பெயர்தான வீட்டின் பெயர்) இவர் பாமா கோபாலன் என்று புனை பெயர் வைத்திருந்தார். பாமா என்பது அழைக்க சுலபமான, சுருக்கமான பெயர் என்பதால் எல்லோரும் அவரை அப்படித்தான் கூப்பிடுவார்கள்.
1980 செப்டம்பர்…
குமுதத்தின் தூண்களில் ஒருவராகிய இணை ஆசிரியர் ரா. கி. ரங்கராஜன் என் கணவருக்கு போன் செய்தார்.
“பாமாஜி.. உங்கள் கல்யாணத்தைப் பற்றி ஒரு மூன்று பக்கங்களுக்க வர்ற மாதிரி ஒரு பேட்டி போட இருக்கோம்..”
“ரொம்ப சந்தோஷம் சார். யாரு வந்தாலும் பேட்டி கொடுக்கத் தயார். இரண்டு பேரும் பேட்டி தரணுமா.. நான் மட்டும் கொடுத்தால் போதுமா?”
அந்தப் பக்கம் கடகடவென்று சிரிப்பு. “நல்ல கதையா இருக்கே.. இரண்டு பேரும்தான் பேட்டி தரணும்..”
“கதையா இல்லை சார்… கட்டுரையா இருக்கு…” என்று சிரித்தார் பாமாஜி.
“கதை எழுதறவங்களாச்சே. கதை மாதிரிதான் சுவாரஸ்யமா வரணும். பை த வே. ரெண்டு பேரும் எழுத்தாளர்களாச்சே… உங்களை ஒருத்தர் வந்து பேட்டி வேற காணணுமாக்கும்? நீங்களேதான் எழுதணும்…”
“ கட்டாயம் செய்துடறோம் சார்.“
“ஒரு புது யுக்தியா.. ஒருத்தரை ஒருத்தர் பேட்டி காணணும். ஓகேயா? அவங்க உங்களையும் நீங்க அவங்களையும் கேள்வி கேட்டு பதில் வாங்கணும்.. ”
“அருமையான ஐடியா சார். அப்பிடியே செய்துடறோம். ஒரு உரையாடலாவே எழுதித் தந்துடறோம்.”
“அதுதான் பெட்டர். அதைத் தவிரவும் ‘பாமா கோபாலன் சொல்கிறார்’.. ‘வேதா கோபாலன் சொல்கிறார்’…னு இரண்டு பேரும் உங்கள் காதல் அனுபவத்தைச் சொல்லணும்”
“ சார்..”
“என்ன தயக்கம்? வெட்கமா?”
“எனக்கில்லை. ஆனா.. வேதா வெக்கப்படுவாங்க சார்..”
அவர் ஊகம் உண்மைதான். பேட்டி வரவிருக்கும் குமுதத்தின் சர்க்குலேஷன் அப்போது ஆறு லட்சம் பிரதிகள். அதாவது குறைந்தது பத்துப் பன்னிரண்டு லட்சம் பேர் அந்தப் பேட்டியைப் படிப்பார்கள்.
“அதெல்லாம் ஒரு வெக்கமும் வேண்டாம். தைரியமாய் எழுதிக் குடுங்கோ. ஓகே?”
“எப்போ சார் குடுக்கணும்?”
“நேத்திக்கு” டொக்கென்று லாண்ட் லைன் ரிசீவர் வைக்கப்பட்டது.
அரை நாள் ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு நேராக என் வீட்டுக்கு வந்துவிட்டார் அவர்.
குடும்பத்தோடு டிஸ்கர் செய்தோம். முதல் சந்திப்பு பற்றி ஆரம்பித்து எழுதலாம் என்று திட்டமிட்டோம்.
அவரே மடமடவென்று எழுத ஆரம்பித்தார். எண்பதுகளில் மொபைல் போன், டைப்பிங் கணினி என்று எதுவும் கிடையாதே!
பரீட்சை எழுதும் மாணவர் மாதிரி அவர் எழுத.. அம்மா சூடாக, சுவையாக காபி போட்டுக் கொடுக்க.. நான் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.
(தொடரும்)
2 Comments
பார்த்தேன் படித்தேன் கேட்டேன் ரசித்தேன். அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் பலரில் நானும் ஒருவன்
இன்னும் சில பக்கங்கள் வேண்டும்