என்…அவர்.., என்னவர் – 2 | வேதாகோபாலன்
அத்தியாயம் – 02
“நானும் அவரும்”
தலைப்பு உபயம் : கல்யாணி கண்ணன்
குமுதம் பத்திரிகையின் இணை ஆசிரியர் திரு ரா.கி.ரங்கராஜன் சொன்னதுபோலவே இருவரும் ஒருவரை ஒருவர் கேள்வி கேட்பது போல், உரையாடல் பாணியில் பேட்டியை எழுதினார் இவர்.
“சார் கொண்டு வந்து கொடுக்கலாமா?” என்று போன் செய்து கேட்டபோது,
“அப்பிடியே ஒரு போட்டோகிராஃபரை வைச்சு நீங்க ரெண்டு பேரும் உரையாடுவது போல் ஒரு போட்டோ எடுத்து அனுப்பிடுங்க” என்று சொல்லிவிட்டார் ரா.கி.ர சார்.
இப்போது போல் அப்போது மொபைல் போன் கிடையாது. போட்டோ எடுத்து அதை ஸ்டூடியோவில் கொடுத்து வாஷ் செய்து நெகடிவ் எடுத்தால்தான் அது சரியாய் வந்திருக்கிறதா இல்லையா என்று எடுத்தவருக்கே தெரியும். பிறகு பிரின்ட் போட்டு அது காய்ந்தபிறகுதான் அதைக் கொண்டு போய்க் கொடுக்க முடியும். இதெல்லாம் நம்மைவிட இணை ஆசிரியருக்கு நன்றாகவே தெரியும்.
“முதலில் பேட்டியைக் கொண்டு வந்து குடுங்க.. பிறகு நாளைக்கு போட்டோ கொடுங்க” என்றார்.
அதன்படியே செய்தார் என்னவர்.
குமுதத்திற்கு எப்படி எழுதினால் சுவையாக இருக்கும் என்பதையும் யோசிக்க வேண்டும் அதே சமயம் இனிதான் திருமணம் செய்து கொள்ளப்போகும் எங்கள் குடும்பங்களும் உறவினர்களும் கேள்வி கேட்காதபடி இருக்க வேண்டும்.
அப்போது மிக அதிக சர்க்குலேஷனில் குமுதம் இருந்ததால் அந்தப் பேட்டி பலரைச் சென்றடைந்தது. எங்கள் திருமணம் நடைபெற்றது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அப்போது குமுதம் சனிக்கிழமைகளில் கடைக்கு வரும். எனவே தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதற்கும் விஷயம் போய்ச் சேர்ந்தது.
திரு.திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் அம்மா அவரிடம் “பாமா கோபாலன் வேதா கல்யாணத்துக்கு ஆறுலட்சம் கல்யாணப் பத்திரிகைகள் அச்சடிச்சுட்டாங்க” என்றாராம்.
திருமணம் நடந்தது 1980 ஆம் வருடம் அக்டோபர் 27 ஆம் தேதி.
இப்படி விஷயம் பரவியதால்…
இரண்டு சுவையான சம்பவங்கள் நடந்தன.
அப்போதெல்லாம் ஹனிமூன் பழக்கமெல்லாம் கிடையாது. ஆனால் டெல்லியிலிருந்து வந்திருந்த என் மைத்துனர் திரு.ராமன் எங்களுக்கு பெங்களூருக்கு டிக்கெட் புக் செய்வதாகச் சொல்லி ஹனிமூன் செல்ல உத்தரவிட்டுவிட்டார்.
அப்போதென்று பார்த்து விகடன் பென்விழாவுக்கு அற்புதமாய் ஒரு பத்திரிகை அனுப்பியிருந்தார்கள். மூன்று நாட்கள் விழா நடந்ததாக நினைவு.
தங்கத் தகடுபோல் விகடன் சைஸுக்கு இரண்டு பக்கங்களுக்கு விழா அழைப்பிதழ். முதல் பெருமிதம் சில கதைகள் மட்டுமே எழுதியிருந்த என்னையும் நினைவு வைத்துக்கொண்டு விகடன் அனுப்பியதுதான்.
ஹனிமூனாவது இன்னொன்றாவது! விகடன் பொன்விழாவை முடித்துவிட்டுத்தான் எங்கேயும் போவது என்று இருவருமே ஏக மனதாக முடிவெடுத்தோம். நல்ல வேளையாய் இருவருக்கும் ஒரே நோக்கமாக இருந்ததால் பொன்விழாவுக்கு சந்தோஷமாகப் போனோம்.
உங்களுக்கெல்லாம் விகடன் பற்றி நன்றாய்த் தெரியும். எதைச் செய்தாலும் பிரம்மாண்டமாகச் சிறப்பாகச் செய்வார்கள். அருமையாக விளம்பரப்படுத்துவார்கள்.
அதனால் என்ன ஆச்சு தெரியுமா?
எத்தனை மணிக்கு விழாவோ அத்தனை மணிக்கு அங்கே இருக்கிறமாதிரி இருவரும் போய் நின்றால்…
ரோடில் நுழையக்கூட இடம் இல்லை. எப்படியோ நெரிசலில் நீந்தி உள்ளே போனோம். எல்லோரும் பல மணி நேரத்துக்கு முன்பே வந்து உள்ளே போய்விட்டார்கள். அப்போதெல்லாம் சிசி டிவி இருந்ததா என்பதெல்லாம் நினைவில்லை. நாங்கள் அரங்கத்துக்குள் போய்த்தான் பார்க்க வேண்டுமென்று சிரமப்பட்டு இன்விடேஷனைக் காட்டி உள்ளே போய்விட்டோம். அரங்கத்தின் கொள்ளளவைவிட ஒன்றரைப் பங்கு ஆடியன்ஸ் இருந்தார்கள். வாசகர்கள் பலர் வந்திருந்தார்கள்.
எப்படியோ போய்விட்டோம். முழு விழாவையும் ஓரத்தில் நின்று கொண்டுதான் பார்க்க வேண்டிய நிலை.
அப்படி நின்றுகொண்டிருந்தபோது ஒருவர் பரபரவென்று கண்களை உருட்டிக்கொண்டு வேகமாக வந்தார். (யாரென்று தெரிந்தால் அசந்து போய்விடுவீர்கள்). முக்கிய நபர்களை வரவேற்று நல்லபடியாக உட்கார வைக்கவேண்டிய பொறுப்பில் இருந்தார் என்று புரிந்தது. விகடன் பொன்விழா பேட்ஜ் ஒன்றைத் தங்க நிறத்தில் அணிந்திருந்தார்.
நாங்கள் இருவரும் அன்றும் இன்றும் எப்போதுமே பிரபலம் கிடையாது. வந்தவர் யாரையோ நோக்கி வருகிறார் என்றுதான் நினைத்தோம்.
நேராக இவரிடம் வந்தார். அந்த நபரிடம் பேசுவதற்குப் பலர் அப்பாயின்ட்மென்ட் வாங்கி, கியூவில் காத்திருப்பது வழக்கம். அவர் நம்மிடம் பேசுவதெல்லாம் அபூர்வம்.
“ஆர் யூ மிஸ்டர் பாமா கோபாலன்?” என்று கேட்டார்.
இவர் ஆமாம் என்றவுடன்,
“ரெண்டு பேரும் டக்குன்னு என் பின்னாடி வாங்க” என்றார்.
பெயரைக் கேட்டிருக்காவிட்டால் வேறு யாரோ என்று தவறுதலாக அழைத்துச் செல்வதாய்த்தான் நினைத்திருப்போம்.
ரிசர்வ் செய்த சீட்கள் இரண்டு காலியாக இருந்தன. அதைக் காண்பித்து “ஒக்காருங்க ரெண்டு பேரும்” என்றார்.
“சார்.. நாங்க வி ஐ பி இல்லை.” என்று இவர் பயத்துடன் சொன்னார்.
“இன்னிக்கு நீங்க வி ஐ பிதான். பிகாஸ் நீங்க புதுசாக் கல்யாணம் ஆனவங்க..” என்று தனக்கே உரிய அழகான ஆங்கிலத்தில் சொன்னார்.
உங்களுக்கு எப்படித் தெரிந்தது என்று நாங்கள் அபத்தமாய்க் கேட்கவில்லை. குமுதம் பேட்டிதான் காரணம் என்று தெரியாதா என்ன?
“நன்றி சார்.. ரொம்பவும் நன்றி” என்று இருவரும் மாற்றி மாற்றிச் சொல்ல,
“மொதல்ல உட்காருங்க..எனக்குப் பல வேலை இருக்கு” என்று ஓடி விட்டார். (பக்தி சினிமாக்களில் கடவுள் வந்து உதவுகிற மாதிரி).
விகடன் பத்திரிகையுடன் நெருக்கமான அவர் வேறு யாரும் இல்லை. துக்ளக் ஆசிரியர் சோ சார் தான் !!
டிசம்பர் இரண்டு 2022 அன்று கணவரின் உடலுக்கு எதிரில் அமர்ந்திருந்த எனக்கு இந்த நிகழ்வுகள் பொங்கி எழுந்து கண்ணீரால் மறைத்தபோது.. இதன் தொடர்பாக இன்னொரு நிகழ்வு நினைவுக்கு வந்தது…
(-நினைவுகள் தொடரும்…)
முந்தையபகுதி | அடுத்தபகுதி