அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 5 | செல்லம் ஜெரினா

 அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 5 | செல்லம் ஜெரினா

அத்தியாயம் – 5

டையலும்  பூஜையும் அழகாய் குறையின்றி முடிந்தது. குலதெய்வம் கோயிலுக்கு மிக நெருங்கிய உறவுகளே வந்திருந்தனர்.

பூஜை முடிந்ததுமே..

மண்டபத்தில் எல்லோரும் கூட சிவநேசம் தம்பதிகள் முன்னணியில் அமர்ந்திருக்க நிலவழகியின் பெரியப்பாவும் தந்தையும் ஜமக்காளம்

ஒன்றை விரித்து அதில் சீர்களை அடுக்கினர்.

நிலாவின் பெரியப்பா

“அய்யா! திடிர்னு முடிச்ச கண்ணாலம் ன்னாலும் பேச்சு ஒன்னு புகுந்த வீட்டுலே பொண்ணுக்கு வந்திடக்கூடாதய்யா. பொன்னு வைக்கிற எடத்துலே பூ வைக்கிறாற் போல எங்க பொண்ணுக்காக முடிஞ்சதை உறமுறைக்கு முன்னே செய்ய விரும்புறோம். சாமான்செட்டெல்லாம் வாங்கி சீர் வைக்க நேரமில்லை. தேவைப்பட்டதை வாங்கிக்க வேண்டி ரொக்கமா தந்திடுறோம். மாப்பிள்ளைக்கு செயினு வாட்ச் மோதிரம் பிரேஸ்லெட்டுன்னு பதினைஞ்சு பவுனுக்கும் புதுத்துணிகளும்

பொண்ணுக்கு ஐம்பது பவுனும் அத்தோட பூஜை சாமான் வெள்ளி சாமானுங்க சாஸ்திரத்துக்கு நாலஞ்சு பித்தளை பாத்திரமும்  அஞ்சுவகை இனிப்பும் சீர் வைக்கிறோம். சபையும் பெரியவங்களும் ஆசிர்வதிக்கனும். மேலும் பொண்ணுக்கு அவ பேருமேல இருக்கிற நிலத்தோட பத்திரம் அதையும் சபைக்கு முன்னே தரவே விரும்புறோம்.  ஏதும் குற்றம் குறை பார்க்காம…..”

 என்று கூறி நிறுத்த …. சலசலப்பு எழுந்தது. சிவநேசமோ ஸ்ரீநிவாசனோ கூட இந்தளவுக்கு எதிர்பார்க்கவில்லைதான். ரங்கநாயகிக்கும் திருப்தி தான். எங்கே சின்ன பேரனின் மனைவி வசதி குறைவான வீடாக இருந்து மஞ்சுளாவின் வாயில் அரைபடுவாளோ…என்றிருக்க. நிறக்கவும் ஐம்பது  பவுனுக்கு மேலாக சபையில் வைக்கவும் சம்பந்தி வீட்டினர் மீது மதிப்பு வந்தது. சதாசிவம் பார்க்க இத்தனை பவுசுக்காரரா என்றே தெரியாதபடி அமைதியாக வாழ்ந்திருக்கிறார் என்பது இப்போது புரிந்தது. பெண்ணுமே அடக்கமாகவும் படித்தவளாகவும் அமைந்திருப்பதை உறவே பாராட்டியது. அதன்றி

மச்சான் உறவுகள் வேறு தனிப்பரிசாக  நந்தன் சக்ரவர்த்திக்கு நகைகளை பூட்டி அழகு பார்த்தன. மஞ்சுளா முகத்தில் ஈயாடவில்லை. அவளுடைய வீட்டில் மொத்தமே நாற்பது பவுனும் மாப்பிள்ளைக்கு பத்து பவுனும் தான் போட்டார்கள்.

“என்னடியிது வக்கில்லாதவள்ன்னு சொன்னே ….ஐம்பது பவுனோட நிலம் நீச்சோட வந்திருக்கா உன் கொழுந்தனுக்கு வேற சபையிலே வைச்சதுமில்லாம தனியே நகையா பூட்டறானுங்க மச்சாமாருங்க”

என்று வாய் மேல் விரல் வைத்தார் மஞ்சுளாவின் அம்மா.

நிலவழகியின் முகம் சலனமேயில்லாமலிருந்தது. லோகா நினைத்துக் கொண்டாள் நிறைகுடம் நிறைகுடம் தானென்று.

மஞ்சுவின் அலட்டலும் அலப்பறையும் அத்தனை சலிப்பைத் தந்திருந்தன.அவள் தாத்தாவழி நெருங்கிய சொந்தம். சொந்தம் விட்டுப்போகக் கூடாதென எடுத்துக்கட்டியதில் அந்த பெருங்குடி வீட்டுப் பெண்கள் தாம் அலமந்து போனார்கள். வாளின் கூர்மையோடு பாயும் மஞ்சுவின் வார்த்தைகள் எதிராளியின் மனதைக் கிழித்துத் தோரணமாக்கி விடும். திருமணமான புதிதில் அடக்கவொடுக்கமாயிருந்தவள் தான் நாளாக நாளாக அவள் குணம் மாற ஆரம்பித்து விட்டது.

அதன்பின்பு …மறுவீடு ரிசப்ஸன் விருந்து என்று நாட்கள் பறந்தன.

நந்தன் நிலா உறவில் எந்த முன்னேற்றமும் இல்லை நந்தனுக்கு காலை முதல் இரவு வரையும் வேலை இழுத்துக் கொண்டுவிட்டது. ஏதோ ஒரு மாயத்திரை கனமாய்

விழுந்திருந்தது. அதைத் தள்ளிவிட்டு அடுத்த கட்டத்துக்கு முன்னேற இருவருக்குமே எதுவோ தடுத்தது.

ஸ்பேஸ் வேணும்னாரே….அப்போ அவருக்கு அந்தப்பொண்ணு மேலே எதுவும்….. நிலவழகிக்கு அந்த எண்ணம் கசந்தது.

அவனுக்கோ….. நான் தான் டைம் கேட்டேன். இருக்கட்டுமே! அவளா நெருங்கி வரமாட்டாளோ…பொஞ்சாதின்னு உரிமையா நிக்க மாட்டாளோ…

என்று குமைச்சலிருந்தது. அதைத் தள்ளிவிட்டு மனைவியை நெருங்க அவனும் முயலவில்லை.

நிலா தனக்குச் சொந்தமான நிலத்தில். புதிய பரிசோதனைமுறை வேளாண்மைக்காக பாதி நிலத்தை ஒதுக்கி விட்டு இயற்கை உரமிட்ட பயிர்வகைகளை பயிரிட்டிருந்தாள். வேலைகளை கவனிக்க ஆட்களையும் உதவிக்கு அனுப்புவார் சதாசிவம்.

நிலத்தில் மிளகாய் நாற்றுகளை பிரித்து நடவை செய்யும் சமயம்

போன் வரவே கூடவேயிருந்தவர்களிடம் சொல்லிவிட்டு தன்னுடைய ஸ்கூட்டியில் விரைந்தவளை

எதிர் திசையில் வந்து கொண்டிருந்த நந்தன் கவனித்தான்.

“இத்தனை வேகமா அம்மிணி எங்க போகுதாம்? “

அவனும் பின்னாலேயே போனான். அவள் போய் நின்ற இடம் அந்த ஊரின் அரசு மருத்துவ மனை.

‘அடி! ஆருக்கு என்னாச்சுது? ‘

இவனும் வேகஎட்டு வைத்து அவளை நெருங்க அவளை எதிர்கொண்டு அழைத்துப் போனான் ஆதித்யன் ஏதோ பேசிக்கொண்டே போனவள் ஒரு அறைக்குள் நுழைந்து விட நந்தன் தயங்கி நின்றான். என்னவோ ஏதோ ….என்று மனம் கிடந்து அடித்துக் கொண்டது.

சற்றுப் பொறுத்து வெளியே வந்த ஆதித்யனைப்பிடித்து நிறுத்தினான் நந்தன்.

“அண்ணா…நீங்க..?ஓ அண்ணியோடு வந்தீங்களா? அதோ அந்த அறையிலே இருக்கிறாங்க பாருங்க.ஒரே நிமிசம்ண்ணா வந்திடுறேன். “

என்று நகர்ந்தான்.

அவன் காட்டிய அறையில் எட்டிப்பார்க்க அவன் மனைவி கட்டிலில் கண்மூடிப்படுத்திருக்க அவள் கையிலிருந்து  சேகரம் ஆகிக் கொண்டிருந்தது அவளின் செங்குருதி.

ஆசுவாசமாய் உணர்ந்தவன் அவளை இடையூறு செய்ய விரும்பாமல் வெளியில் கிடந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

‘இதற்குத்தான் இப்படி ஓடி வந்தாளா? ‘

அருகில் ஆதியின் குரல் கேட்டது. போனில் யாரிடமோ….

“இல்லையில்லே! மச்சக்காளையண்ணன் வேண்டாம் அவரு மூணு நாளைக்கு முன்னே தான் கர்ப்பிணி பெண்ணொருத்தவங்களுக்கு ரத்தம் கொடுத்திருக்கார். இங்கே இப்போதைக்கு அக்கா….ஸாரி அண்ணி வந்திட்டாங்க. ஆனா இன்னும் ஒரு யூனிட் கிடைச்சா ஸேஃப் ன்னு டாக்டர் சொல்றாங்க !மெசேஜ் போட்டாச்சு! இருங்க வேற ஒரு போன் வருது. பேசிட்டு வரேன். “

ந்தன் வியப்பு கலந்த அமைதியோடு நடப்பதை கவனித்தான். ஆதித்யன் நந்தனுக்கு தம்பி முறை. அப்பாயில்லை அம்மா மட்டுமே அம்மா  வசிப்பது பின்தங்கிய கிராமம் இவன் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு பொறியியல் படிப்புக்காக இங்கே வர ஹாஸ்டல் செலவு கட்டணம் என்று விழி பிதுங்கியது .அப்போதுதான் செந்திலை சந்தித்து ஆதியின் தாய் உதவி கேட்க அவர் அக்கா வீட்டிலேயே தங்கிப் படிக்க பெரியவர்களிடம் அனுமதி வாங்கி பெரிய வீட்டிலேயே தங்க வைத்துக்கொண்டார். படிப்புச் செலவையும் அந்தக் குடும்பமே சந்தோஷமாய் ஏற்றுக் கொண்டது. எல்லாமும் மஞ்சு அந்த வீட்டிற்கு வரும் வரை சுமுகமாகவேத் தான் போயிற்று. மஞ்சு திருமணமாகி வரும்போது அவன் கல்லூரி படிப்பின் இரண்டாம் வருடத்திலிருந்தான். கலகலப்பான இளைஞன். அபய்க்கும் நந்தனுக்கும் ரொம்பவே பிடிக்கும். அண்ணா அண்ணா என்று காலைச் சுற்றியே வருபவன்.  படிப்பு நேரம் போக இவர்களுக்கு ஒத்தாசையாக  வேலை செய்வான். எதுவானாலும் இழுத்துப்போட்டுக்கொண்டு நேர்த்தியாகவும் நேர்மையாகவும் செய்து முடிக்கிற துடிப்பானவனிடம் மாமா செந்தில்வேலனின் சாயலையே கண்டனர் அனைவரும்.

மஞ்சுளாவுக்கு ஏனோ தன் கணவன் அபய் சக்ரவர்த்தியை பிடித்த அளவு மற்றவர்களைப்பிடிக்க வில்லை.இன்னுமே பெரியவர் என்று தலையில் வைத்துக் கொண்டாடும் அந்த கூட்டுக் குடும்பத்தின் கட்டுக் கோப்பு அசலே பிடிக்க வில்லை. தான் தன்கணவன்  தன்குழந்தை தன் வீடு என்ற கனவு அவளுக்கு அதிகம்.எல்லாவற்றிலும் தலையிட்டு தீர்ப்பெழுதும் ரங்க நாயகியை பிடிக்கவே பிடிக்காது. ஆனாலும் சமயத்துக்காகவே காத்திருந்தவள் கண்ணில் ஆதி விழுந்தான்.

ஏற்கெனவே ஒரு தண்டச்சோறு மாமியாருக்குத் தம்பிங்கிற பேருல….இப்போது இது வேறவா பிச்சைக்காரன் நம்பர் ட்டூ வா?

சுறுசுறுவென்று கோபம் வந்தது.

‘தின்னே தீர்த்து விடுவாங்க போல ‘

என்ற கோபத்தில் ஆதியை படிக்க வொட்டாமல்

வேலை ஏவுவாள்.

சோற்றில் கை வைக்கப் போகும் நேரம் ஏதாவது உப்புசப்பில்லா வேலை வைப்பாள். அற்ப விஷயத்தை வைத்து கல்லூரிக்கு போவதைத் தாமதமப் படுத்தி அவன் படுகிற அவஸ்தையை ரசிப்பாள்.

ஒரு சிலநாட்களாகவே இதை கவனித்த செந்தில் தன் தோட்ட வீட்டுக்கு அழைத்துப் போய்விட்டார். மரகதமும் மற்றவர்களும் கேட்டதற்கு தனக்குத் தனியாக இருக்க போரடிக்கிறது என்று காரணம் கூறிவிட்டார்.

இவருமே மஞ்சுளா வந்த பிறகு தோட்ட வீட்டிலேயே ஐக்கியமாகி விட்டதை யாரும் கவனத்திலெடுக்கத்தான்   இல்லை. பெரிய வீட்டிலிருந்து சாப்பாடு வந்து விடும். அதுவுமே சிலசமயம் மஞ்சுவின் தலையீட்டால் தாமதமாக அவரே அதை நிறுத்தியும் விட்டார்.   அவரே சமைப்பதை பழக்கமாக்கிக் கொள்ள இப்போது ஆதியையும் தன்னுடன் இணைத்துக் கொண்டார். பிறகு ஒரு பெண்மணியை சமைக்க கொள்ளவென உதவிக்கு வைத்துக் கொண்டார். ஆதிக்கும் இங்கே இயல்பாக இருக்க முடிந்தது. அவனுமே வழக்கம்போலவே கல்லூரிக்கும் ஆபிசுக்குமாக தன் நேரத்தைப் பிரித்துக் கொண்டான்.

தலை குனிந்து உட்கார்ந்திருந்தவள் முன் ஒரு கை பழச்சாறை நீட்டவே நிமிர்ந்து பார்த்து திகைத்தாள்.புன்னகையோடு நின்ற கணவனை அவள் அங்கே எதிர்பார்க்க வில்லையென்பது விழிகளின் இமைக்குடை  விரிப்பிலேயே புரிந்தது.

“ம்! குடி”

வள் அதை வாங்கி அருந்தும் போதே அருகில் உட்கார்ந்தவன்.

“ரத்ததானம் செய்றது நல்ல விஷயம் தான்! அதுக்காக தானம் செய்ய வந்த நமக்கே வேறு யாரும் தானம் செய்ற நிலைமையை உருவாக்கிடக் கூடாது. “

அவள் புரியாமல் ஏறிட..

“அம்மிணி ஸ்கூட்டியிலே ப்ளைட் வேகத்துலேயில்லே வந்தீங்க “

அவள் முகம் சிவந்து போனாள்.ரசனையோடு பார்த்து வைத்தான் அவன்.

“அண்ணி! “என்று வந்தவன் கையிலும் பழச்சாறு இருந்தது.

“ஓ அண்ணன் வாங்கி வந்திட்டாங்களா….சரி பரவாயில்லை இதையும் குடியுங்க “

என்றதும்

அவள் “இல்லே ஆதி! இது போதும். இதை நீ குடி! நீயும் டென்ஷன்ல சாப்பிடாமத்தான் இருப்பே “

ஆதிக்கு கண்கலங்கியது. அம்மா

செந்தில் மாமாவுக்குப்பிறகு இவளிடம் இந்த அக்கறை எப்போதும் த்வனிக்கும்.

“அண்ணா! நீங்க குடிங்க! “

“வேண்டாம் ஆதி! அவருக்கு சாப்பாட்டு நேரம் இதைக்குடிச்சா கஷ்டம் நீ குடிச்சு வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடு. “

னைவியின் தன் மேலான அக்கறையும் ஆதியிடமான கனிவும்  “அழகி…அழகி “தான் என்று கிறங்க வைத்தது.

“ஆதி நான் உங்கண்ணியை கூட்டிக்கிட்டு கிளம்பறேன். அண்ணியோட ஸ்கூட்டியை எடுத்துட்டு அப்புறமா வீட்டுலே விட்டுடு ” என்ற படி கிளம்பினான்.

மனதில் ஒரு விதமான இதம் விரவி நின்றது.

இந்த இதம்  அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துமா?

(சஞ்சாரம் தொடரும் )

முந்தையபகுதி – 4 | அடுத்தபகுதி – 6

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...