அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 4 | செல்லம் ஜெரினா
அத்தியாயம் – 4
கார் மிதமான வேகத்திலேயே நகர்ந்தது.ஓட்டுநர் இருக்கையில் நந்தனும் அருகில் ராம்குமாரும்.பின்னிருக்கையில் லோகநாயகியும் நிலவழகியும் இடையே மூன்று வயது குழந்தை ஸ்ரீகரும்.மகள் நிரல்யா தாத்தா பாட்டியுடன் போயாயிற்று. ராம்குமார் மனைவியைப் பார்த்து விழிகளாலேயே அருகிலிருந்த புதுப் பெண்ணான நிலவழகியைக் காட்ட அவளும் பிறகு சொல்வதாகக் கூறினாள். காரில் உட்காரும் போதே நிலவழகியின் முகம் சரியில்லை. ஜன்னலோரம் தலைசாய்த்து கண்ணை மூடிக்கொண்டாள். முகம் சொல்லொண்ணா வேதனையில் வெந்துதணிந்து கொண்டிருந்தது. இமையோரம் உப்பு முத்து சரம் கோர்த்து கீழே உருண்டு விழ சமயம் பார்த்துக் கொண்டிருந்தது.
மனது காலையில் நடந்ததையே அசை போட்டபடியிருந்தது.
நேற்றிரவு …..
சாந்தி முகூர்த்த சம்பிரதாயம்! அம்மா இரவுக்குள் அவளுக்கு அத்யாவசியமானவற்றை சில நகைகளுடனும் எடுத்து வந்து தந்திருந்தார். இரவு உணவை இங்கேயே முடித்துக் கொண்டு கிளம்பி விட்டனர். எதிர்பாராமல் நடந்த திருமணமென்பதால் ….அவர்களுக்கும் தலைக்கு மேலே வேலையிருந்தது. ஐந்தாம் நாள் ரிசப்ஷனுக்கேனும் தங்கள் சுற்றத்தை அழைக்கவிருந்தார் அவளின் தந்தை. உள்ளூரிலேயே இருந்த அவருடைய அண்ணனும் அண்ணியும் கூட பெருந்தனக்காரர் குடும்பக் கல்யாணத்திற்கு அன்று வந்திருந்த படியினால். ….சற்றே ஆசுவாசமாயிருந்தது சதாசிவத்துக்கு…
தம்பிக்கு பெரியவராக ஆலோசனை கூறி திருமணத்துக்கு ஒப்புக் கொள்ள வைத்தார். தன் மகன்களையும் உடனே வரவழைத்தார் ஒத்தாசைக்காக.
வெளிர் மஞ்சள்நிற மென்பட்டில் மெல்லிசு சரிகைக் கரையிட்ட புடைவையும் அதிக ஆபரணமில்லாது பூ சுமந்தவளாய் புதுத்தாலிமின்ன மெட்டியும் கொலுசும் ஜதியிசைக்க அவனுடைய அறைக்குள் நுழைந்தாள்.
மெல்லிய அகர்பத்தி வாசனையும் லேசான பூவாசமும் அறையில் கமழ்ந்தது. எளிமையான அலங்காரம் கண்ணை உறுத்தாமல் கருத்தை நிறைத்தது.
வேஷ்டியும் ஷர்ட்டும் அணிந்து எதையோ யோசித்தபடி அமர்ந்திருந்த கணவனை நெருங்கியவள் கையோடு எடுத்து வந்திருந்த பால்செம்பை அங்கிருந்த டிரஸ்ஸிங் பிள் மீது வைத்துவிட்டுத் திரும்பினாள்.
திரும்பியதுமே
அமர்ந்திருந்த கணவனின் பாதங்களில் பணியப்போக அவன் பதறித் துடித்தெழுந்தான்.
“இதென்னதிது…ப்ச் வேண்டாம்! வேண்டாம் “
“இல்லை …பெரியவங்க சொன்…..சொன்னாங்க..”
“இருக்கட்டும் ஆனா வேண்டாம்
நீ உட்கார் இப்படி !”
கட்டிலின் விளிம்பில் தொற்றினார் போல் அமர்ந்தாள்.
“ச…ச …சரியா உட்கார் விழுந்திடப்போறே! ம்! உன் முழுப்பேரே நிலா தானா?”
“நிலவழகி! எல்லோரும் நிலா இல்லைன்னா நீலான்னு கூப்பிடுவாங்க! “
“ஓ…அழகான பேரு தான்! நிலவழகி…! நாம ரெண்டு பேருக்குமே கொஞ்சம் ஸ்பேஸ் வேணும் …டைம் வேணும்னு நினைக்கிறேன். திடுதிப்புன்னு நினைச்ச நினைப்பில்லாம தாலிகட்டியாச்சு. நீயும் மனதளவில் தயாராகியிருக்க மாட்டே! “
அவள் அமைதியாக இருந்தாள். .
“அதனாலே நிதானமாக வாழ்க்கையை ஆரம்பிக்கலாம். என்னைப்பற்றி உன்னைப்பற்றி பேசுவோமே! “
அதற்கும் வாயைத் திறக்கவில்லை அவள் .
“சொல்லு நிலவழகி என்ன படிச்சிருக்கே”
“பிஎஸ்ஸி அக்ரி முடிச்சிருக்கேன். டிகிரி முடிச்சு ஒரு வருசமாச்சு. மேல படிக்கனும் னு ஆச தான் அம்மா வேணாமுன்னு சொல்லிட்டுது. “
“ம்! நானும் மேற்படிப்புக்கு வெளிநாடு போயிட்டேன். வந்ததுமே வீட்டுலே தான் பொண்ணு பார்த்தாங்க. ஆனா…”
அவளின் பார்வை அனுசரணையாக அவன் மீது தவழ்ந்தது. அவன் மனதை மாற்றுவது போல…
“அச்சோ! அம்மா பால் கொடுக்கனும்னு சொன்னாங்க. ஸாரி!”
என்றபடியே சொம்பிலிருந்து தம்ளரில் சரித்து நீட்டினாள். அதை வாங்கிக் கொண்டவன்….
“அழகி! உனக்கே தெரிஞ்சுருக்கும் அக்கா தங்கைக்கு கல்யாணம் ஆயாச்சு. அண்ணி கொஞ்சம் சுணக்கம். நீதான் வீட்டை……. பெரியவங்களை அணைப்பா பார்த்துக் கிடனும். அதுவும் அம்மா தீபா பிறந்ததிலிருந்தே கொஞ்சம் உடம்பு முடியாமப் போனவங்க! “”
அவள் சம்மதம் என்பது போலவே தலையாட்டினாள். அழகி என்ற அவனின் விளிப்பு புதுமையாயிருந்தது. இதுவரை எல்லோருக்குமே அவள் நிலா அல்லது நீலா தான். இந்த அழைப்பு அழகாய் இதயத்தைத் தொட்டது.
“சரி!தூங்கலாம்! வெள்ளன எந்திரிக்கனும். குலதெய்வக் கோயிலுக்குப் போவனும் “
அந்தப் பெரிய கட்டிலில் இருவருமே இடைவெளிவிட்டுப் படுத்துக் கொண்டனர்.
சட்டென்று எழுந்து உட்கார்ந்தான் அவன்.அவளும் என்னவோ ஏதோ என்று எழுந்தாள்.
“அழகி! மறந்தே போயிட்டேனே! இன்னிக்கு உனக்கு ப் பிறந்த நாளாச்சுதே! மெனிமோர் ஹாப்பி ரிட்டன்ஸ் ஆஃப் தி டே
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!”
அவள் கையை பிடித்துக் குலுக்கினான்.
அவளுக்கு உள்ளுக்குள்ளே சாரலும் கணப்புமாய் குபீரென ஓர் உணர்வு பொங்கியது.
எதுவுமே தோன்றாமல் அவனையே பார்த்து விழித்தாள்.
அவனுக்குமே அப்படித்தானோ? பூவிதழ்களைத்தொட்டது போன்ற மென்மையில் கிறங்கினான்.
பெண்மையின் முதல் தொடுகை! உள்வரை சென்று கிளர்ந்தெழ வைத்தது.
தன்னவளின் முதல் ஸ்பரிசம்! காலைமுதல் அவளை சிற்சில முறைத் தீண்டியிருந்தாலும் ஒருவிதமான மன இறுக்கத்தில் எதுவுமே கருத்தை எட்டவில்லை ஏதோ இயந்திரம் போலவே சொன்னதை செய்தான்..
இப்போது தொட்டதும் உள்ளாழம் வரை சிலிர்ப்பு ஓடியது.
இருவரும் சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருந்து விட்டு பிறகு அவள்தான் இதழ் பிரித்தாள்
“தேங்க் யூ….தேங்க் யூ ஸோ மச்! குட் நைட்! “
புன்னகையோடு பதில் தந்து விட்டு படுத்துக் கண்ணை மூடிக் கொண்டாள்.கொண்டவனின் முதல் வாழ்த்து அல்லவா? தித்திப்பாய் இறங்கியது. துளித்துளியாய் ரசித்தாள்.
ஜன்னல் வழி பாய்ந்த நிலவொளியில் அவளை முழுமையாகப்பார்த்தான் நந்தன் சக்ரவர்த்தி.
படுத்திருந்த நேர்த்தியில் அழகு சிந்தியது.இடையைத் தாண்டி வளர்ந்திருந்த கூந்தல் புறங்கழுத்தின் பூனை முடிகள் காற்றில் சிலிர்த்தாடி அவனை அழைத்தன. சங்கிலியும் சரடும் பிணைந்திருந்தன..முல்லைப்பூவின் வாசம் வேறு மயக்கியது. ஆழ்ந்த மூச்செடுத்தான். சற்றே மேலேறியிருந்தது புடைவை.
வெள்ளிக்கொலுசு பாதங்களில் நெகிழ்வாய் மருதாணிப்பூச்சோடு போட்டியிட்டது.கல்யாணப்பெண்ணைப்போலவே கைகளிலும் காலிலும் மருதாணி வைத்திருந்தது அவனுக்கு ஆச்சர்யமாயிருந்தது. இலைகளை அரைத்து வைத்திருந்தாளோ. பாதத்தில் கொலுசு போல வரைந்திருந்தாள். முதுகு திருப்பிப் படுத்திருந்தாள். அந்தத் தோற்றமே அத்தனை அழகாய்த் தெரிந்தது அவனுக்கு.
அனாவஸ்யமாக. ஸ்பேசு ….டைம்முன்னு இழுத்து விட்டுக் கொண்டோமோ! ..ச்சே…! ஏழரையை குடி வச்சுட்டோமோ நாக்குலே! தன்னையே நொந்து கொண்டான்.
எப்போது தூங்கினானோ….
யாரோ கதவை தட்டும் சப்தம்
சப்தம் கேட்டது. நல்ல தூக்கத்திலிருந்தவனுக்கு விடாமல் கேட்ட கதவிடிப்பு நாராசமாயிருந்தது. யார் இப்படி இடிப்பது? யாருக்கும் ஏதும் முடியலையா…?என்று எழுந்தவனை
“ஸ்….ஆ…ஆ..”- என்ற வலிமிகும் முனகல் கேட்கவே நிதானித்து அமர…. நிலவழகியின் முகமும் அவன் நெஞ்சோடு இணைந்தே எழுந்தது. முகத்தில் வலிச் சுருக்கமிட்டது அப்போதுதான் சரியாகப் பார்த்தான்.
அவனுடைய ஷர்ட் பட்டனில் அவளின் கேச இழை சுற்றிக் கொண்டிருக்க இவன் எழுந்த வேகத்தில் அவள் முகம் வலியைக் காட்டியது. கதவிடித்தலோ விடாமல் கேட்க இருவரின் உடலும் பதறியது.
“இரு! இரு ஒரு நிமிஷம்” என்றவன் கையை நீட்டி கட்டிலின் பின்னிருந்த ஸ்விட்ச்சை அழுத்தினான். விளக்கொளியில் மெதுவே முடிக்கற்றையை நிதானமாகப்பிரித்துவிட்டான்.
“ஸாரி…ஸாரி…வலிக்குதா “
“பரவாயில்லைங்க… “முகம் சிவந்து கண்ணீர் தளும்பி நின்றது.
கேசத்தை ஒதுக்கியவன் விழிநீரைத்துடைத்து விட்டு…
“இரு யாருண்ணு பார்க்கேன் “
நெகிழ்ந்த வேட்டியை கையில் பிடித்தபடியே கதவைத் திறந்தான்.
வெளியே மஞ்சுளா நின்றிருந்தாள். கதவையடைத்தாற் போல் நின்றவனை ஏறஇறங்கப்பார்த்தவள்
“என்ன நந்தா! நல்ல உறக்கமோ? உன் புதுப்பெண்டாட்டி என்ன விடிஞ்சது தெரியாமத் தூங்கறா…? பெரிய வீட்டு மருமக வெள்ளனே எந்திரிச்சுக்கனும்னு தெரியாதோ …இன்னிக்கு கோயிலுக்கு வேற போகனும். “
என்றபடியே எட்டிப்பார்க்க அவனுடைய இடையிடுக்கில் தெரிந்த காட்சி அத்தனை உவப்பாக இல்லை அவளுக்கு. கலைந்த தலையும் காய்ந்த பூவும் புரண்டுகிடந்த தலையணையும் சிவந்திருந்த விழிகளும் மஞ்சுளாவுக்கு காரணமேயில்லாமல் எரிச்சலை மூட்டியது.
“அது சரி அண்ணி! இப்போ எதுக்கு அப்படி இடிச்சிட்டு நிக்கறீங்க. என்னதான் வேணும் உங்களுக்கு. “
“கல்யாணமான பொண்ணு இப்படியா தூங்குவா? இன்னும் சாந்திமுகூர்த்த மயக்கம் போகலையாமா? “
நந்தனுக்கு முகம் இறுகியது.உள்ளேயிருந்தவளுக்கோ அவமானமாக இருந்தது. திருமணமாகி ராத்திரி கழிந்து வெளியே வருபவளை இப்படியா கொச்சைப் படுத்தி பேசுவார்கள்.?
இவர்களும் அதை தாண்டி வந்தவர் தானே… என்ன மாதிரியான பேச்சு? அவள் குன்றிப் போனாள்.
வெளியே யாருடைய குரலோ கேட்டது. நிலவழகிக்கு வெட்கம் பிடுங்கியது.
‘அய்யோ வேறு யாரோ கூட வந்து விட்டார்களே! என்ன நினைப்பார்கள்? “
நிலவழகிக்கு கண் கலங்கியது. மஞ்சுவுக்கோ நந்தனின் சட்டையில் தீற்றியிருந்த குங்குமமும் கேச இழையும் ஏதேதோ கற்பனைகளைத் தந்து எரிச்சலைத் தந்தது. எதனாலோ அவளுக்கு யாரையுமே பிடிக்காது. கணவன் அபய் சக்ரவர்த்தியைத் தவிர…ஒரு மாதிரியான பொருமலுடனே இருப்பாள் எந்நேரமும்.
“ரங்கநாயகி! மஞ்சுவை விட்டு எதுக்கு சடங்கு முடிஞ்ச அறைக்கதவைத் தட்டச் சொன்னே! வருசம் நாலாகப்போவுது இன்னும் வவுறு தொறந்தபாடில்லை. புது மாப்பிள்ளை பொண்ணும் இவ முகத்துலே விழிச்சு….ஹ்ம் போ வெளங்கிடும் “
மஞ்சுளாவுக்கு விளக்கெண்ணை குடித்தாற் போலாகி விட்டது. குரல் தந்தது ரங்கநாயகியின் அக்கா. பேசுகிற விஷயம் முகத்தில் அடிக்கும் குரலும் அடிக்கும்.
“லோகா! அடி லோகா! உன்னைத்தானே சடங்கு கதவைத் தட்டி காபி கலந்து உன் தம்பிக்கு தரச் சொன்னேன். “
“இல்லே பாட்டி! கலந்து வைச்சதை மஞ்சு எடுத்துட்டு வந்திருச்சு”
மஞ்சுளா கோபத்தோடு முறைத்தாள். முதலிரு வருடங்கள் பிள்ளைபேற்றை அவளே தள்ளிப்போட்டாள். அடுத்து எல்லோருமே கேட்க ஆரம்பிக்க தடைமுயற்சிகளை நிறுத்தி விட்டாலும் இன்றுவரை எதுவும் இல்லை.மருத்துவரோ எந்தக் குறையுமேயில்லை. காத்திருக்கலாம் என்று கூறிவிட்டார்.
“க்கும் புறவாசல் வழியா வந்த. வக்கத்தவளுக்கெல்லாம் வந்த பவுஷைப் பாரேன் “
என்று முணுமுணுத்துக் கொண்டே
எதிரில் வந்த
லோகநாயகியிடமே காபியைத் தந்து விட்டு முகத்தை திருப்பியபடி அகன்றாள்.
அதற்குள்ளாக நிலவழகி குளியறைக்குள் ஓடிப்போய்விட்டாள். குளித்து வந்து பூஜையறை விளக்கேற்றிய பின்னும் கூட முகம் தெளிவாகவில்லை. நந்தனுக்கு அவளின் முகச் சுருக்கம் ஏற்புடையதாக இல்லை ‘இப்போ என்ன ஆகிட்டுது அதான் பெரிய பாட்டி கேட்டுட்டாங்க தானே இதற்கென்ன இத்தனை விசாரம் ‘என்று கோபம் கொண்டான்.
அவனுக்குப் புரியத்தானில்லை புதுமணப் பெண்ணின் மனம்.
மணமகளாய் புதிய சூழலில் கணவனோடு இரவைக்கழித்து விட்டு வரும் ஒரு புதுப் பெண்ணின் மனது ஒன்றுமே நடைபெறவில்லைதானென்றாலும் லாலிதமான எதிர்பார்ப்புகளும் நாணத்தின் வண்ணம்பூசிய படபடப்பான கனவுகளும் நிறைந்திருக்கும் என்பதை! தன் அந்தரங்கம் பகிரங்கமாகி பங்கப்பட்டாற் போலே சிணுங்கியது மனசு.
சதிபதியின் முதல் மன வேற்றுமைக்கு மஞ்சுளா காரணமானாள்.
(-சஞ்சாரம் தொடரும்…)
முந்தையபகுதி – 3 | அடுத்தபகுதி – 5