என்…அவர்., என்னவர் – 3/ வேதாகோபாலன்
அத்தியாயம் – 3
டிசம்பர் இரண்டு 2022 அன்று கணவரின் உடலுக்கு எதிரில் அமர்ந்திருந்த எனக்கு இந்த நிகழ்வுகள் பொங்கி எழுந்து கண்ணீரால் மறைத்தபோது.. இதன் தொடர்பாக இன்னொரு நிகழ்வு நினைவுக்கு வந்தது என்றேனல்லவா?
அந்த டிசம்பர் இரண்டாம் தேதி அவர் ஒரு பிரவுன் நிறத்தில் கட்டம் போட்ட ஷர்ட் அணிந்திருந்தார். கிட்டத்தட்ட அதே மாதிரி நிறமும் அதே மாதிரி டிசைனும் உள்ள ஷர்ட் ஒன்றைத்தான் அவர் எங்கள் பெங்களூர் பயணத்தின்போது அணிந்திருந்தார். அதாவது எங்களின் தேன்நிலவுப் பணத்தின்போது…
திருமணம் ஆன புதிதில் அவருக்கு மிகப்பிடித்த ஷர்ட் அது. அவருடைய நண்பர் ஜி. பி எனப்படும் ஜி பார்த்தசாரதி, எங்கள் திருமண ரிஸப்ஷனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்த ஷர்ட் அது. அவர் ஷர்ட் துணியாகக் கொடுத்தார். என் மாமனார் “உடனே போய் டெய்லரிடம் கொடுத்துத் தைச்சுடு” என்று சொன்னதால் தைத்துவிட்டார்.
சிவப்பு பிரவுன் காம்பினேஷன். பாமாஜியின் சிவந்த கலருக்கு அது நன்றாய்ப் பொருந்தும். அதை எல்லோரும் சொல்லிவிட அடிக்கடி பயன்படுத்தினார்.
ஹனிமூன்.
ரயிலில் பெங்களூர்ப் பயணம்.
விமானத்தில் போகச் சொல்லி மைத்துனர் சொல்லியும், அவசரப் பயணம் இல்லை என்பதால் எல்லோரும் பேசி முடிவெடுத்து ரயிலில் போகச் சொன்னார்கள்.
நாங்கள் மிடில் கிளாஸ் என்பதால் தேவையற்ற செலவுகளைத் தவிர்த்துவிடுவோம்.
எனக்கு அதிகமாய்ப் பயணங்கள் செய்து பழக்கம் இல்லை. எந்தப் பெட்டியில் எந்த சீட் என்று பார்த்து “இங்கே உட்காரு. இதோ வந்துவிடுகிறேன்” என்று சொல்லிவிட்டு என் கணவர் தண்ணீர் பிடித்து வருவதற்காக நகர்ந்தார். கையில் என் டிக்கெட்டைக் கொடுத்துவிட்டுத்தான் போனார்.
ஹனிமூன் என்றில்லை.. எந்தப் பயணமானாலும் குழந்தைபோல் ரசிக்க ஆரம்பித்துவிடுவேன் நான். ரயிலோ, பஸ்ஸோ, காரோ ஓரசீட் பிடித்து வேடிக்கை பார்ப்பது எனக்கு மிகவும் பிடித்த விஷயம்.
எங்கள் இரண்டு சீட்களில் ஒன்று ஓர சீட். விடுவேனா? “நான் ஜன்னல் பக்கம் உட்காரட்டுமா?” என்றேன்.
சிரித்தார். “உட்காரேன்” என்ற சொல்லிவிட்டுத் தண்ணீர் பிடிக்க நகர்ந்தபோது ஒரு இளைஞர் வந்தார்.
“மேம். இது என் சீட்” என்றார்.
மறுத்தேன். என் டிக்கெட்டைக் காண்பித்தேன். பயமும் டென்ஷனும் பிடித்துக்கொண்டது. தேதியைப் பார்த்தார். அன்றைய தேதிதான். கம்பார்ட்மென்ட்டும் கரெக்ட். சீட் நம்பரும் மிகச் சரியாக இருந்ததால் எனக்கு மூச்சு வந்தது.
ஆனால்… அந்த இளைஞனும் தன் டிக்கெட்டைக் காண்பித்தார். டிட்டோ.
ஒரு வேளை தேதி மாறி வந்துவிட்டோமோ என்ற இருவருமே பார்க்க..
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.
எனக்கு டென்ஷனில் உடம்பு நடுங்கியது. ஓர சீட் இல்லாவிட்டால் போகிறது. பயணமே இல்லை என்றாகிவிடுமோ?
என் கணவர் சற்று தூரத்தில் வருவது தெரிந்து ‘அப்பாடா’ என்றாகியது.
இத்தனைக்கும் அவர் முரட்டு சிங்கமெல்லாம் கிடையாது. வேறு வழியில்லை என்றால் என்னையும் கூட்டிக்கொண்டு இறங்கிவிடத் திட்டமிடுமளவு அப்பாவி.. பயந்தாங்கொள்ளி.
ஆனாலும் அவர் ஏதாவது செய்வார் என்று நம்பிக்கைதான்.
அப்போது அவர் நீண்ட தலைமுடி வைத்திருந்தார். அவர் நா பார்த்தசாரதியின் ரசிகர். எனவே நா பா- மாதிரியே முடி வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார். நான் அவரை முதலில் சந்தித்தபோது நீள முடியுடன்தான் இருந்தார். மற்றவர்களிலிருந்து அவரை அது வித்தியாசப்படுத்திக் காட்டியதால் நானும் அதை ஆதரித்தேன்.
இப்போது அவர் வருவதைப் பார்த்து அந்த இளைஞன் டக்கென்று ஒரு கேள்வி கேட்டார். “சார் .. அட.. நீங்க எழுத்தாளர் பாமா கோபாலனா?”
‘ஆமாம்”
“போன வாரக் குமுதத்தில் உங்க ரெண்டு பேர் பேட்டி வந்திருந்தது. நீங்க புதுசாக்கல்யாணம் ஆனவங்கதானே? அப்பிடின்னா இது ஹனிமூன் ட்ரிப்பா” என்றார்.
என் கணவர் உற்சாகத் தலையாட்டினார்.
அவ்வளவுதான்.
“ஸாரி சார்.. ஸாரி மேடம். தேவையில்லாத சிரமம் கொடுத்துட்டேன். இது ரயில்வேக்காரர்கள் செய்துவிட்ட அபூர்வமான தவறு. டி டி ஆர் வந்தவுடன் வேறு சீட் கொடுக்கும்படி கேட்டு நான் போய்விடுகிறேன். அது வரை இதோ.. இப்டி ஓரமாய் உட்கார்ந்துக்கறேன்..” என்றார்.
குமுதத்தில் போட்டோவும் பேட்டியும் வந்தால் அது எவ்வளவு பெரிய அலையை ஏற்படுத்துகிறது என்பது அப்போதுதான் புரிந்தது.
டி டி ஆர் வந்தார். டிக்கெட்களைப் பார்த்து வியந்தார். “வேற சீட் தரேன். அபூர்வமாய் இப்படி நடக்கறது உண்டு. உங்களில் யாரு வேற சீட் போறீங்க?” என்று கேட்டபோது அந்த இளைஞர் வேகமாய் இடை மறித்துச் சொன்னார்.
“நான் போறேன் சார். அவங்க புதுசாக் கல்யாணம் ஆனவங்க” என்றார்.
டி டி ஆர் எது பற்றியும் கவலைப்படாமல் வேறு சீட் அலாட் செய்துவிட்டுப் போய்விட்டார்.
“வெற்றிகரமான ட்ரிப்புக்கு வாழ்த்துகள் சார்.. மேடம்..” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.
நிம்மதியும் சந்தோஷம் எழுந்தன. “ஓர சீட்..’ என்றேன்.
“உனக்குத்தான்” என்று சிரித்தார் என்னவர்.
“பாரு என் ஜில்பா முடி எவ்ளோ பெரிய நன்மையைச் செய்திருக்கு..” என்றார்.
பெருமையுடன் பார்த்தேன்.
“யாரு என்ன சொன்னாலும் இதை மாத்திக்காதீங்க. உங்களுக்கு நல்லாயிருக்கு” என்றேன்.
என் நினைவுகளிலிருந்து என்னைக் கலைத்தார் அமெரிக்க மருத்துவர்.
“மிஸஸ் கோபாலன்… இறந்தவர்களை வீட்டில் வைத்திருக்கக்கூடாது. ஃப்யூனரல் ஹோம் கொண்டு போகணும்..” என்றார்.
மனம் கனத்தது.
அவரை முதல் முதலாக சந்தித்த தினம் நினைவுக்கு வந்தது.
( -நினைவுகள் தொடரும்…)
முந்தையபகுதி – 2 | அடுத்தபகுதி – 4
வேதாகோபாலன்