குழந்தைகளின் கருணை உலகம் – சாட் பூட் த்ரி….!திரை விமர்சனம் – தனுஜா ஜெயராமன்
குழந்தைகள் , அவர்களின் தனிப்பட்ட உலகம் , பெட் அனிமல்ஸ் இது குறித்து விரிவாக பேசும் படம் தான் சினேகா, வெங்கட் ப்ரபு , கைலாஷ் , ப்ரினிதி, வேதாந்த் வசந்த், பூவையார் இவர்களின் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ” சாட் பூட் த்ரி” திரைப்படம்.
பிரசன்னா, சினேகா நடித்த ‘அச்சமுண்டு அச்சமுண்டு’, மோகன்லால் நடித்த ‘பெருச்சாழி’ , அர்ஜுன் நடித்த ‘நிபுணன்’ போன்ற படங்களை இயக்கிய அருண் வைத்தியநாதன், இம்முறை ‘சாட் பூட் த்ரி’ என்ற குழந்தைகளுக்கானப் படத்தை இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படம் அக்டோபர் 6-ம் தேதி வெளியாகி உள்ளது.
சினேகா , வெங்கட் ப்ரபு தம்பதிகளின் மகன் கைலாஷ். இருவரும் தங்கள் வேலைகளில் பிஸியாக இருக்க மகன் கைலாஷிற்கு போரடிக்கிறது. முதலில் தம்பி பாப்பாவிற்கு ஆசைப்படும் கைலாஷ், அது முடியாத பட்சத்தில் பின்னர் நாய் வளர்க்க ஆசைப்படுகிறான். மிக ஸ்ட்ரிட்டான அம்மாவான ஸ்நேகா தம்பி பாப்பாவிற்கும் “நோ” சொல்கிறார், நாய் குட்டிக்கும் “நோ” சொல்கிறார். ஜாலியான அப்பாவாக வெங்கட் ப்ரபு ஸ்நேகாவையும் , மகனையும் ஒரு சேர சமாளிக்கிறார்.
கைலாஷின் நண்பர்களான ப்ரனிதி , வேதாந்த் வசந்த் இருவரும் வாட்ச்மேன் மகன் பூவையார் உதவியுடன் நாய்குட்டி ஒன்றை வாங்கி பரிசளிக்கிறார்கள்.
அதை “மேக்ஸ்”என பெயரிட்டு ஆசையுடன் வளர்த்து வருகிறார்கள். திடீரென மேக்ஸ் தொலைந்து விடுகிறது. அதை தேடியலைகிறார்கள் இந்த நான்கு குட்டீஸ்களும்.
“மேக்ஸ்” கிடைத்ததா? என்பதே மீதிக் கதை.
தெருநாய் தொல்லையென பொதுமக்கள் கம்ப்ளைண்ட் செய்வது , விலங்குகள் ஆர்வலராக பெட் ரேவதி ப்ரச்சனை செய்வது.. இந்த ப்ரச்சனையை அவசரடியாக தீர்க்க நாய்களை கொல்ல முயல்வது என விலங்குகள் நலன் மற்றும் ஜிவகாருண்யம் குறித்தும் படம் பேசுகிறது.
பெட் ரேவதியாக அலப்பறை செய்கிறார் ஷிவாங்கி.
ஆட்டோ ட்ரைவராக கிச்சு கிச்சு மூட்டுகிறார் யோகிபாபு.
இவர்களை விட சிறப்பாக நகைச்சுவை செய்பவர்கள் இந்த ப்ரனிதி , வேதாந்த் குட்டி பசங்க குரூப் தான் என்பதில் சந்தேகமில்லை… மொபைல் நம்பர்களை மாற்றி தருவதில் கில்லாடிகள்.
பூவையார் வழக்கமாக பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்து சிறுவர்களை அப்படியே ப்ரதிபலிக்கிறார். நன்றாக நடிக்கவும் செய்கிறார்.
படத்தில் குழந்தைகள், அவர்களது உலகம், அவர்களின் சின்ன சின்ன அபிலாசைகள், விலங்குகள் மீதான அவர்களது எதிர்பார்ப்பற்ற அன்பு என்கிற கதைக்களத்தினை தேர்வு செயத்தற்காகவே இயக்குனர் அருண் வைத்தியநாதனை பெரிதும் பாராட்டலாம்.
வன்முறையற்ற ஒரு திரைப்படமா? அதுவும் குழந்தைகளுக்கான படமா? விலங்குகள் குறித்த ஜீவகாருண்யத்தை பேசுகிறதா? என வியந்து தான் போகிறோம் படம் பார்த்த பிறகு.
இது போன்ற புதிய முயற்சிகளை பாராட்டுவதோடு, பலமாக வரவேற்கவும் செய்ய வேண்டும். நெடுநாட்களுக்கு பிறகு தியேட்டருக்கு வந்துள்ள குழந்தைகள் பட்டாளத்தை கண்டு மனம் மகிழ்கிறது.
இனி இதுபோல் குழந்தைகளுக்கான படங்கள் நிறைய வரவேண்டும்.. அதற்கான முன்னெடுப்பாக இந்த படம் உள்ளது.