நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழங்கும் ‘கூழாங்கல்'(Pebbles) திரைப்படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியானது..!
நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழங்கும் ‘கூழாங்கல்'(Pebbles) திரைப்படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரடியாக அக்டோபர் 27 அன்று வெளியானது..!
அறிமுக இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜா இயக்கி இருக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விக்னேஷ் குமுளை மற்றும் ஜெய பார்த்தி இருவரும் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்க, ஞான் ஊட் மற்றும் சிஞ்சு கலை இயக்குநராகவும், கணேஷ் சிவா படத் தொகுப்பும் செய்திருக்கிறார். ஒலி வடிவமைப்பை எம்.ஏ. ஹரிபிரசாத் கவனித்து இருக்கிறார்.
படத்தின் கதை தந்த அற்புதமான உணர்வை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு இந்தத் திரைப்படத்தை பல திரைப்பட விழாக்களுக்கு அனுப்பியது ‘ரெளடி பிக்சர்ஸ்’ நிறுவனம்.ரோட்டர்டாம் 50-வது சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று மிக உயரிய விருதான டைகர் விருதை ’கூழாங்கல்’ வென்றது. இதுமட்டுமல்லாது, கடந்த 2022-ம் ஆண்டு 94-வது ஆஸ்கர விருதுகளுக்கு இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவாக இந்தப் படம் இருந்தது. மற்றும் அதே வருடம் இண்டிபெண்டண்ட் ஸ்பிரிட் அவார்டில் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் சிறந்த ஐந்து திரைப்படங்களில் ஒன்றாக பரிந்துரைக்கப்பட்டது.
கடந்த இரண்டு வருடங்களில் அறுபதிற்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்களில் தேர்வாகி முப்பதுக்கும் மேற்பட்ட விருதுகளை வென்ற ‘கூழாங்கல்’ திரைப்படம் தற்போது சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி இருக்கிறது.
இயக்குனர் வினோத்ராஜ் பேசியதாவது, ‘கூழாங்கல்’ படத்தை முடித்து விட்டு அடுத்து இதை எப்படி எடுத்து செல்லலாம் என பார்த்துக் கொண்டிருந்தபோது, ராம் அண்ணன் கோவா திரைப்பட விழாவில் படத்தைப் பார்த்துவிட்டு ஊக்கப்படுத்தி எங்களை நயன் மேம் விக்னேஷ் சிவன் சாரிடம் அறிமுகப்படுத்தினார். அவர்களுக்கும் படம் பிடித்துப் போய் பல உயரங்களுக்கு ‘கூழாங்கல்’லை எடுத்துச் சென்றார்கள். அவர்களுக்கும் என் படக்குழுவினருக்கும் நன்றி. படம் பார்த்துவிட்டு நீங்கள் என்ன கருத்து சொன்னாலும் ஏற்றுக்கொள்கிறோம் என்று பேசினார்.