சென்னை: பின்னணி பாடகர்கள் திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரின் பெயர்களை, அவர்கள் வசித்த தெருக்களுக்கு சூட்டி, அதன் பெயர் பலகைகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: பழம்பெரும் பின்னணிப் பாடகரும், தமிழக அரசின் கலைமாமணி விருதும், அண்ணாவால் இசைத்தென்றல் பட்டம் பெற்றவரும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பாடல்களைப் பாடியவருமான திருச்சி லோகநாதனின் கலைச்சேவையை சிறப்பிக்கும் வகையில் அவர் வசித்துவந்த மந்தைவெளிப்பாக்கம் நார்ட்டன் 3-வது தெருவுக்கு ‘திருச்சி லோகநாதன் தெரு’ என்று பெயர் சூட்டப்பட்டு, பெயர்ப் பலகையை முதல்வர் நேற்று திறந்து வைத்தார்.

அதேபோல், வெண்கலக்குரல் வளமிக்க பாடகர், சங்கீத சேவகர் பத்ம சீர்காழி கோவிந்தராஜனின் நினைவாக அவர் வசித்த மந்தைவெளிப்பாக்கம் கிழக்கு வட்டச் சாலைக்கு ‘சீர்காழி கோவிந்தராஜன் சாலை’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 70 ஆண்டுகளாக தனது இன்னிசையால், மெல்லிசையால் மகிழ்வித்து, தமிழ் மக்களின் நினைவில் நீங்கா இடம்பெற்றவரும், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இசையமைத்து, 1970-லிருந்து இன்றும் அரசு மற்றும் கல்விச் சாலைகளில் தமிழ்த்தாய் வாழ்த்தினை முழங்கச் செய்தவரும், 6 முதல்வர்களுடன் பணிபுரிந்த பெருமைக்குரியவருமான மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனை சிறப்பிக்கும் வகையில், அவர் வசித்து வந்த டிமாண்டி சாலைக்கு ‘எம்.எஸ். விஸ்வநாதன் சாலை’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இவற்றின் பெயர்ப்பலகைகளையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்வில், அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணைமேயர் மு.மகேஷ் குமார், தலைமைச் செயலர் நா. முருகானந்தம், நகராட்சி நிர்வாகத் துறை செயலர் தா.கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் மற்றும் திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன், எம்.எஸ். விஸ்வநாதன் ஆகியோரின் குடும்பத்தினரும் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
