அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 6 | செல்லம் ஜெரினா

 அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 6 | செல்லம் ஜெரினா

அத்தியாயம் – 6

தாய்மையின் பூரண பொலிவோடு மேடையில் அமர்ந்திருந்தாள் தீபலஷ்மி. லேசாய் மூச்சு வாங்கியது. மென்பட்டுப் புடைவையும் எளிமையான ஒப்பனையும் மேடிட்ட வயிறும் தேவதைப் போல ஜொலிக்க ….கணவன் மணிமாறனோ நொடிக்கொருமுறை மனைவியை காதல் சிந்த பார்த்து வைத்தான்.

வளைகாப்பு விழா!

முதிய சுமங்கலி சந்தனம் பூசி அட்சதையிட்டு காப்பு வளையிட்டு  ஆரம்பித்து வைக்க விழா களைகட்டியது.

நிலவழகி திருமணமாகி வந்தபின்பு புகுந்த வீட்டில் நடக்கிற முதல் விழா. அவளுமே கரும்பச்சை பட்டுப்புடைவையில் ஜரிகைப்பூக்கள் பொன்னாய் ஜ்வலிக்க அதற்கேற்ற ரவிக்கையும் பச்சைக்கற்கள் பதித்த ஆபரணங்களுமாய்  அ ழகின் திருவுருவாய் வளைய வந்தாள். நந்தனின் பார்வை தீவிரமாய் இவளைத்  தொட்டுக் கொண்டேயிருந்தது.

மஞ்சுவையும் துணை மனையில் உட்கார்ந்து வளையடுக்கிக் கொள்ளும் படி வயதான முதியவர்சொல்ல மஞ்சுளா ஆக்ரோஷமாய் சீறினாள்.

இது சம்பிரதாயம் சீமந்தம் நடக்கையிலே துணைமனையிலமர்ந்து வளையடுக்கிக் கொண்டால் மடி கனக்கும் என்று சொல்ல எதையுமே காதில் வாங்கவில்லை அவள்.சட்டென்று மண்டபத்தை விட்டுக் கிளம்பிவிட அபய்யை பின்னாலேயே அனுப்பினார் மரகதம்.

விருந்தினர் கிளம்பிப் போய்விட வீட்டினர் மட்டுமே! மதியம் எல்லா கணக்கு வழக்குகளையும் முடித்துக் கொண்டு ஆதியும் செந்திலும் நந்தனும் மிகுந்த களைப்புடன் இல்லம் வந்து சேர்ந்தனர்.  ஹாலில் அமர்ந்திருந்த நிலா

“வாங்க எல்லாரும்! ஆதி நீயும் தான் கைகால் அலம்பிட்டு வாங்க சாப்பாடு எடுத்து வைக்கிறேன்”

வீட்டு ஆட்கள் மட்டுமே அறைகளில் படுத்திருந்தனர்.வீடே அமைதியாக இருந்தது.

“எனக்கு வேண்டாம் நான் பந்தியிலேயே சாப்பிட்டாச்சு.இவங்க ரெண்டு பேரும் தான் சாப்பிடலை”

“சரி! கொஞ்சம் மோர் தரேனே! ரொம்பவும் களைப்பாத் தெரியறிங்க “

நிலவழகி மடமடவென இலைகளை விரித்து பறிமாறினாள் கூடவே ப்ரிட்ஜில் வைத்திருந்த மோரை கிளாசில் சரித்துக் கொண்டு வந்து நந்தனிடம் நீட்டினாள். பெருங்காய மணம் தூக்கலாய் மணமாயிருந்தது.

நாலு கவளமேயிறங்கியிருக்கும். மஞ்சுவின் கடுகடுத்தக் குரல் கேட்டது.

“ஏ பொன்னி! சில்லுன்னு ஜூஸ் போட்டு எடுத்து வா “

பொன்னி அவளைக் கடந்து அடுத்த அறைக்குப் போக

“ஏய்  என்ன கண்ணு புடரியிலா இருக்கு. இங்கேதானே இருக்கேன் “

“அட! இது மாசமாயிருக்கப் புள்ளைக்கும்மா! பொறுங்க வாரேன் “

“ஏன் எனக்கும் எடுத்து வர வேண்டியது தானே! “

“பெரியம்மா மூணு மணிக்கு புள்ளைத்தாய்ச்சி பொண்ணுக்கு ஜூசு தரச் சொன்னாங்க ரெண்டுபழம் போட்டு பிழிஞ்சு ரெடி பண்ணிட்டேன். அப்பறமாத்தானே நீங்க கேட்டிங்க. பொறுமையாத்தானே செய்யனும். நாலுமணிக்கு எல்லாரும் காபிக்கு வந்திடுவாங்களேன்னு பாலை ஏத்திட்டு வந்தேன்.”

“நிலா! நீ சும்மாதானே யிருக்கே ஒரு ஜூஸ் போட்டு எடுத்தார தெரியாதா “

“அவங்களும் அங்கன வேலையாத்தானிருக்கிறாங்க.”

“என்னா வேலை அப்படி வெட்டி முறிக்கிற வேலை “

எட்டி நடைபோட்டு சாப்பாட்டு மேஜையைப் பார்த்தவள்

ஓ…இதானா வெட்டி முறியற வேலை! அடடே! ..ஒரு தண்டச்சோறு இன்னுமிரண்டு தண்டத்துக்கு தண்டச்சோறு போடுதே! …ஹ்ஹாஹா எப்படி என் கவித! “

நிலவழகி திகைத்து விழிக்க ஆண்கள் இருவரும் எடுத்த கவளம் அந்தரத்தில் நிற்க முகம் கசங்கத் தலை குனிந்தனர்

“ஒரு தண்டசோறு பத்தாதுன்னு அடுத்ததா…போடு! போடு!! இந்தவீடு  நாசமாப்போட்டும்.! குந்தித் தின்னே அழிச்சிடுங்க …”

“அக்கா! என்னபேசுறீங்க! யோசிச்சு பேசுங்க “

“நிறுத்துடி! யாருக்கு யார் அக்கா? இன்ஸ்ட்டண்டு காபி மாதிரி திடுக்குன்னு தாலி கட்டிக்கிட்டு உள்ளே வந்தவ நீ. நான் பிறந்தப்பவே இந்த வீட்டு மருமவன்னு சாசனத்தோடு பொறந்தவ.”

“ஆதி…உட்காரு! சித்தப்பா நீங்களும் தான்! அவங்க தான் வாயிருக்குன்னு நினைச்சதை பேசறாங்க போகட்டும் நீங்க சாப்பிடுங்க ப்ளீஸ்.அவங்க பேசினா….அது நிஜமா? நீங்க இல்லைன்னா இந்த வீடு என்னாகும்ன்னு இப்ப வந்த எனக்குத் தெரியுது …அவங்களுக்குத் தெரியலைன்னா ஒன்னும் பண்ண முடியாது.”

“என்னடி! வாய் நீளுது! உன்னைப் பிடிக்காம தானே உன் புருஷன் இப்போ வரைக்கும் ஒதுக்கி வச்சிருக்கான். ரொம்பவேத் துள்ளுறே! “

நிலவழகி நிலைகுலைந்தாள். ஆனாலும் அதை முகத்தில் காட்டடாமல்  உறுத்துப் பார்த்தாள்.

“என்ன முறைக்கிறே! நிஜம் தானே நான் சொன்னது. உங்களுக்குள்ளே ஒன்னும் நடக்கலைதானே “

“ச்சேச்சே! பெரியவங்க சின்னவங்க இருக்கிற இடத்திலே இதென்ன விவஸ்தைகெட்ட பேச்சு? “

“நானா விவஸ்தை கெட்டவ? “

நிலவழகி உனக்கு இதுதான் மரியாதை என்பது போல் நகர்ந்து பறிமாறத் துவங்க

“போதும் அண்ணி”

“உக்கார் ஆதி! “

“உட்காரு..நல்லா கொட்டிக்கோ! வெட்கம் கெட்ட ஜென்மங்கள் “

வள் பேசி முடிக்குமுன்னே பளீர் என்று அறை வாங்கினாள் மஞ்சு. கோபத்தீ கொழுந்து விட்டு எரிய அபய் சக்ரவர்த்தி நின்றான்.

“என்னடி சொன்னே? என் தாய்மாமா உனக்கு …..ச்சீச்சீ…அதைச் சொல்லக்கூட கூசுது. நீ பொண்ணுதானா.? என் தம்பியப் பத்தியே எக்குதப்பா பேசறே?  உன்னோட குடும்பம் நடத்தியிருக்கேனே என்னை செருப்பால அடிச்சுக்கிடனும், அவனைப்பத்தி பேச நீ யாருடி? யாருடி தண்டச்சோறு? நீதான் தண்டச் சோறு. மாமா தான் இங்கே எல்லாமும் இந்த ஆதி …காலேஜ்ஜுக்கும் போயிட்டு நம்ம மில்லுலே மத்ததுலே வேலை செய்றாண்டி! இதோ… இன்ஸ்ட்ண்ட் மருமகள்ன்னியே அவ என்னவெல்லாம் செய்றான்னு தெரியுமா? வீட்டுலே உட்கார்ந்து நீ திங்கிறியே அதான் தண்டச்சோறு. “

என்று பொறிய குடும்பமே சூழ்ந்து  நிற்பதைக் கண்டதும்.

“என் மேலே கைய நீட்டியாச்சுல்லே! இனிமே இங்கே இருக்கமாட்டேன். நான் போறேன்”

 “என்று தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்

“ஸாரிடா ஆதி! ஸாரி மாமா!ஸாரி  நிலா “

“அய்யோ அண்ணா “

“என்ன மாமா இது? “

அபய்…ஆனாலும் பொம்பளைப்புள்ளை மேலே கைய நீட்டலாமா? “

“செந்திலு இருக்கட்டும் அவளுக்கு வாய் நீளமாத்தானிருக்கு. என் தம்பியையே   பேசுவாளோ? நிலாவப் பத்தி தப்புதப்பா பேசுறா “

மோரைக் குடித்துவிட்டு போன் பேசிவிட்டு உள்ளே வந்தவனை மஞ்சுவின் குரல் கோபப் படுத்தியது. வேகமாய் எட்டு வைத்து வருமுன்…அபய் கையை நீட்டியிருந்தான்.

“மாமா”….

“ப்ளிஸ் சாப்பிடு மாமா…ஆதிக்கு ரசம் விடு நிலா “

என்றவன் மாமன் அருகிலேயே அமர்ந்தான்.

ஆனாலும் நல்ல சாப்பாட்டின் போது கடுக் கென கல்லைக் கடித்தாற் போல இருவருக்குமே சுவைக்கவில்லை.

நிலவழகியின் முகமும் வாடிப் போயிருந்தது.குறைவற விழா முடிந்தது என்ற நிம்மதியை அடியோடு குலைத்து விட்டாள் மஞ்சு. நல்ல இசையின் போது திடிரென அபஸ்வரம்விழுந்தாற்போல் அவரவர் மௌனமாய் கலையத் துவங்கினர்.

செந்தில் விடைபெறும் சமயம் போன் வந்தது

” செவத்தைய்யா! என்ன சொல்றே? ஆஸ்பத்திரி போயிட்டீங்களா..?”

விவரம் ஏதுமே சொல்லாமல் வேகமாய் அவர் நகர,

“என்ன மாமா? யாருக்கு என்னாச்சு “

என்று கேட்டபடியே வந்த நந்தனைக் கண்டதும். தன் உணர்வுகளை மறைத்துக் கொண்டார் செந்தில் வேலன்

“வா! மாமா வண்டியெடுக்கிறேன்.”

“வேண்டாம் …நந்தா…நான் பார்த்துக்கிடுறேன் நீ போய் எம்மவளை சமாதானம் பண்ணு. மூஞ்சியெல்லாம் செத்துப்போச்சி! அந்த மஞ்சுளா பேசுனதுலே! அத்தோடு அபய் வேற அடிச்சுட்டான். இந்த மஞ்சு வேற அம்மாவீட்டுக்குக் கிளம்பிட்டா ரசாபாசமாயிடும். இன்னிக்குத்தான் நம்ம வூட்டுப் பொண்ணு நிறை மாசமா வீட்டுக்கு வந்திருக்கு. இப்போப் போயி வீட்டுக்கு மூத்த மருமக வெளியேறக் கூடாதுடா! நீயிருந்து பார்த்துக்க. நா போயிட்டு தகவல் சொல்றேன். செவத்தையா யாரு என்னன்னு சொல்லல்லே “

நந்தன் யோசித்தான் அவர் சொல்வதும் சரியே மாமாவை அப்படியே அனுப்பவும் மனசில்லை.

“சரி! ஆதி நீ டூவீலர்ல கிளம்பு.மாமா இந்தா வண்டி சாவி. காரை எடுத்துட்டுப் போ. பணமிருக்கா பாரு.? .”

என்று அனுப்பி வைத்து விட்டு உள்ளே நுழைந்தான்

கிச்சனிலோ டைனிங்கிலோ நிலாவைக் காணோம். .மாடியில் தன் அறைக்கு ஓடினான்.

அங்கும் அவளின் சுவட்டைக் காணோம். மொட்டை மாடிக்குப் போனான். நினைத்தாற் போல அங்குதானிருந்தாள் மனையாள். தண்ணீர்த் தொட்டிக்குக் கீழே சாய்ந்தாற்போலமர்ந்து விழி மூடி அமர்ந்திருந்தாள்.அவளிருந்த நிலை பார்க்கவே அத்தனை கஷ்டமாக இருந்தது. போனசுவடு தெரியாமல் அறைக்குத் திரும்பி விட்டான் கணவன்.

மூன்றுமாதங்களுக்கு மேல்  கடந்து விட்டிருந்தாலும் கணவனும் மனைவியும் இன்னும் வாழ்க்கையைத் துவங்கவில்லை. யார் முதலடி வைப்பதென்பதில் சின்னத் தயக்கம்.

இன்னுமே அவர் மனதில் நான் வரவில்லையோ என்ற குழப்பம் அவளுக்கு! பெண்மையின் கணிப்பில்….அவனே முன்னெடுப்பைத் தொடுக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் தவறென்ன இருக்கிறது.?இயல்பு தானே!

‘அவளுக்கு என் மீது காதல் இல்லையோ அப்பா அம்மாவின் பேச்சுக்காக கட்டிக் கொண்டாளோ? அவளுக்கென்று இருந்த கல்யாணக் கனவுகளைத் துடைத்து விட்டு அண்ணி சொல்வது போல இன்ஸ்டண்ட் மனைவியாகி விட்டாளோ? ‘என்று மறுகி நிற்க. அவன் அவளை அணுகவேத் தயங்கினான்.

இருவருக்குமே ஒருவர் மனதில் ஒருவர் புகுந்து அரசோச்சுகிறோம் என்ற விஷயம் புரிபடாத அல்ஜீப்ராக் கணிதத்தின் ஃபார்முலாவாக வெருட்டியது.

எந்தக் கணத்தில் வேண்டுமானாலும் இந்த காதல் மொட்டு வெடித்து விடலாம்…உள்ளுக்குள்ளே இதமான வெப்பச் சலனம் பதத்தோடு காத்திருந்தது.

            ******************

“வந்திட்டேயிருக்கேன் செவத்தைய்யா! டாக்டர் என்ன சொல்றாங்க? “

“உள்ளார கூட்டிட்டு ப் போனாங்கய்யா! ஒன்னுந் தெரியலை. மருதுப்புள்ளே இங்கனத்தான் இருக்கு. அதுதேங் …சின்னு பாப்பாவை வச்சு வெள்ளாட்டுக் காட்டிட்டு இருக்கு “

“வந்திட்டேன் பத்து நிமிசத்துலே வந்திடுவேன் “

கார் செந்திலின் கையில் அடங்கா குதிரையாய் வேகமெடுத்து சீறிப்பாய்ந்து டயரைத் தேய்த்துக் கொண்டு நின்றது.

புயலாய் நுழைந்தவர் எதிர்வந்த செவத்தைய்யாவிடம் பேசிக் கொண்டே டாக்டரிடம் போனார்.

“பயப்பட வேண்டாம் செந்தில் வேலன். கூரான கல்லோ ஆயுதமோ சதையைக் கிழிச்சிருச்சு. தையல் போட்டுருக்கு. ரெண்டு நாளில் வீட்டுக்குப் போயிடலாம். இப்போ மயக்க மருந்து காரணமாத் தூங்கறாங்க. விழிச்சதுமே பேசுங்க ஒன்ஹவர் ஆகும்…ம்

அப்புறம்  நல்லவேளை…அவங்க வயிற்றில் அடிபடலை.  ஆனாலும் ஒரு ஸ்கேன் எடுத்துடலாம். வழுக்கிடுச்சு எக்குதப்பா விழுந்திட்டேன்னு சொன்னாங்க! கவனமா பார்த்துக்கிடுங்க”

நன்றி கூறி வெளியேறியவர்

செவத்தைய்யாவையும் மருதவள்ளியிடமும் பணம் தந்து ஏதேனும் சாப்பிட்டு வரும் படி அனுப்பினார். சின்னுவும் கூடவே போக…இவர் அறைக்குப்போனார். கண்மூடிப் படுத்திருந்த உருவத்தைப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது. மஞ்சளைப் பாலில் குழைத்த நிறம் ஒல்லியான தேகம் மூன்று வயது குழந்தைக்குத் தாய் என்றே சொல்ல முடியாது. அத்தனை அம்சமாயிருந்தாள். நீளமுமின்றி குட்டையுமின்றி ஒரு தினுசான அடர்த்தியான கூந்தல் திருத்திவைத்தாற் போன்ற முகத்தில் சதைப்பற்றான உதடுகள். வலது பக்க மூக்கில் மின்னும் ஒற்றைக்கல் மூக்குத்தி.முன்கை முழங்கை என்று சிராய்ப்புகள். எங்கே போய் இப்படி விழுந்து வைத்தாள்? மருதவள்ளி வந்ததுமே கேட்கனும் என்று எண்ணிக் கொண்டார். ஒரு கையில் சலைன் ஏறிக் கொண்டிருந்தது.

கையில் முகத்தைத் தாங்கிய படி அங்கிருந்த சின்ன மேஜையின் மீது கவிழ்ந்திருக்க

சின்னுபாப்பா அவர் காலடியை கட்டிக் கொண்டு

 “ப்பா “என்றது.

(சஞ்சாரம் தொடரும்)

முந்தையபகுதி – 5 | அடுத்தபகுதி – 7

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...