என்…அவர்., என்னவர் – 4 |வேதாகோபாலன்
அத்தியாயத் தலைப்பு : பாமா விஜயம் வேதா மனதில்
(தலைப்பு உபயம் : ராதிகா சந்திரன்)
2022, டிசம்பர் இரண்டாம்தேதி..
சற்று முன் அமரராகிப்போனார் என் கணவர் என்பதையே நம்ப முடியாமல்… தனது 79 வயதுக்குரிய பக்குவத்துடன் அந்த முகம் பொலிந்ததைப் பார்க்க.. எங்களின் முதல் சந்திப்பு நினைவுக்கு வந்தது.
நான் பிறந்தது முதலே குரோம்பேட்டைவாசி.
எங்கள் குடும்பத்தில் கலைத்திறமைகள் அதிகம். ஒவ்வொருவருக்கு இறைவன் ஒவ்வொரு திறமையைப் பகிர்ந்தளித்திருந்தான். என் அண்ணாதான் எங்க வீட்டின் முதல் எழுத்தாளர். எஸ். கோபால் என்ற பெயரில் கதைகள் எழுதிப்போடுவார். கவிதைகள் எழுதுவார். கண்ணன்.. கோகுலம் போன்ற பத்திரிகைகளில் பிரசுரமாகிக்கொண்டிருந்தன. 1979 ல் என் அண்ணனின் முதல் கதை கல்கி பத்திரிகையில் வெளியாயிற்று.
ஓரிரண்டு நாட்களில் வீட்டு வாசலில் அவர் வந்து நின்றார். உள்ளூரில் இருக்கிறார் என்று தெரியும். பாமா கோபாலன் என்ற புனை பெயரில் கதைகள் எழுதுகிறார் என்பது பிரபலம்.
இவர் நம் வீட்டு வாசலிலா?
வியப்பாக இருந்தது.
முதலில் சுதாரித்துக்கொண்டவர் என் அம்மா.
“வாங்க வாங்க. நீங்க எழுத்தாளர் பாமா கோபாலன்தானே?” என்று வரவேற்றார்.
வந்தவருக்கு சந்தோஷமாய் இருந்திருக்க வேண்டும். முகம் மலர ஆமாம் என்றார்.
“இந்த வீட்டில் எஸ் கோபாலன்னு .. நேத்தி கல்கியில் கதை வந்திருக்கே?”
“அட. ஆமாம். என் பிள்ளைதான்” என்று புன்னகைத்தார் அம்மா.
இயல்பிலேயே கம்பீரமும் அழகுமாய் இருக்கும் என் அம்மா புன்னகைத்தால் மேலும் அழகாய் இருப்பார். சிவந்த நிறம் எப்போதும் ஒன்பது கஜ சேலையில் கைகூப்பத் தோன்றும் தோற்றத்துடன் இருப்பார்.
அதனால்தானோ என்னவோ.. பாமா கோபாலன் என் அம்மாவைப் பார்த்துக் கைகூப்பினார்.
“நானும் எஸ் கோபாலன். அவரும் எஸ் கோபால். அதனால்தான் பார்த்துட்டுப் போகலாம்னு. உள்ளூர் ஹிந்து ஏஜென்ட் ஆறுமுகம்தான் சொன்னார்.. எஸ் கோபால் என்பவர் குரோம்பேட்டை வாசின்னு..”
“ரொம்ப சந்தோஷம். என் பிள்ளை இதோ வந்துடுவான்.. உங்க கதைகள் நிறையப் படிச்சிருக்கேன்..”
“இவங்க?” என்னைக் கை காண்பித்துக் கேட்டார்.
“இவள் என் பொண்ணு. வேதா. பி ஏ ஃபைனல் படிக்கறா..”
அப்போதெல்லாம் பி ஏ என்பது பெரிய படிப்பு. அதிலும் பெண்கள் கல்லூரி வாசனை மிதிப்பதே அபூர்வம். என் அம்மா அப்பா இருவர் வழியிலும் நான்தான் முதல் முதலாய் டிகிரி படித்தவள் என்பது அந்தக் காலப் பெருமிதம். இப்போதெல்லாம் நான் பி ஏ கிராஜுவேட் என்று வெளியில் கூடச் சொல்லிக்கொள்வதில்லை.
அம்மா வழக்கம்போல் காபி போட்டுக்கொண்டு வந்து கொடுக்க, அவர் மறுக்க, அம்மா கம்பல் செய்ய அவர் வாங்கிக்குடித்துவிட்டுப் பாராட்டினார்.
பாராட்டும் குணத்தையும் நன்றி சொல்லும் குணத்தையும் அவரிடமிருந்துதான் கற்க வேண்டும். யார் எதை நன்றாய்ச் செய்தாலும் பாராட்டுவார். நன்றாய் இல்லை என்றால் குறை சொல்ல மாட்டார். எதுவுமே சொல்லாமல் இருந்துவிடுவார். அவரிடமிருந்து கற்க வேண்டிய பல நல்ல பழக்கங்களில் அதுவும் ஒன்று.
இதோ.. இந்த முதல் சந்திப்புமே அவர் என் சகோதரரைப் பாராட்டுவதற்காக வந்ததால்தானே நிகழ்ந்தது.
“நீங்க கதையெல்லாம் எழுதலையா?”
“நிறையப் படிப்பேன் சார்.” மடமடவென்று தமிழ் எழுத்தாளர்கள் அத்தனை பேரின் பெயர்களையும் சொன்னேன்.
“நிறையப் படிக்கறவங்களால எழுதவும் முடியுமே?” என்றார்.
“வாசகர் கடிதங்கள்.. துணுக்குகள் ஜோக்குகள் எழுதுவேன் சார்” என்றன்.
பேசிக்கொண்டிருந்தபோது அண்ணா வந்துவிட, அறிமுகப்படுத்திக்கொண்டு அண்ணா கோபாலின் கதையைப் பாராட்டினார்.
பாராட்டு என்பது எப்படி அமைய வேண்டும் என்பதற்கு உதாரணம் அது என்பேன். திகட்டும்படி பாராட்டவில்லை. அளவோடு சந்தோஷம் தரும் வகையில் பாராட்டினார்.
“எந்த எழுத்தாளரின் கதையைப் படிச்சாலும் அவரை நேரிலோ, போனிலோ, கடிதத்திலோ பாராட்டிடுவேன்” என்றார்.
“அவர் முகவரி எப்படிக் கிடைக்கும்?” என்றேன்.
“சிம்ப்பிள்.. அவர் பெயரைப் போட்டு கேர் ஆஃப்னு அந்தப் பத்திரிகையின் பெயர் போட்டு பத்திரிகை அட்ரஸ்க்கே அனுப்பிடுவேன்” என்றார்.
அந்தக் குணம் வியக்க வைத்தது.
ஆனால் ஒன்றைச் சொல்லியே ஆக வேண்டும். கண்டவுடன் காதல் என்றெல்லாம் எதுவும் பிறந்துவிடவில்லை இருவருக்குமே. நாங்கள் பாட்டுக்கு சாதாரணமாகக் கதைகள்.. எழுத்தாளர்கள் என்று பேசினோம். நாங்கள் என்றால்.. நான் என் அம்மா, அண்ணா, தம்பி, திரு கோபாலன் என்ற நாங்கள்!
எனக்கிருந்த பெரிய சந்தேகம் ஒன்றை அவரிடம் கேட்டேன். “உங்க ஒய்ப் பேரு பாமாவா சார்? அதனாலதான் பாமா கோபாலன்னு புனைபெயரா?”
கடகடவென்று சிரித்தார். “என் வீட்டின் பெயர் பாமா. பிகாஸ் என் பாட்டி பெயர் பாமா. அதையே புனைபெயரா வெச்சுண்டேன்” என்றார்.
“சார்.. பத்திரிகையில் கதை எழுதினால் நாமே படமும் போட்டு அனுப்பணுமா?”
சிரித்தார். “நீங்க படம் வரைவீங்களா? போட்டு அனுப்பலாம்தான். ஆனால் நானெல்லாம் கதாநாயகனை வரைஞ்சா கொரில்லா வந்துடும்.. அதனால் அந்த ரிஸ்க்கெல்லாம் எடுக்கறதில்லை. மாருதி, ஜெயராஜ், ராமுன்னு நல்ல ஓவியர்கள் இருக்காங்க. அவங்ககிட்ட கதைகளைக் குடுத்துப் படம் வரையச்சொல்லுவாங்க. நீங்க கதை எழுத ஆரம்பிங்க.. உங்களுக்கே புரியும்.” என்றார்.
நானாவது, கதையாவது, எழுதுவதாவது என்று மனசுக்குள் சிரித்துக் கொண்டேன். சான்ஸே இல்லை.
“என் அண்ணா சூப்பராய் வரைவாரு. அவர் கதையுடன் படம் வரைஞ்சு அனுப்பினாரு. ஆனால் அவங்க வேறு ஆர்ட்டிஸ்ட் படத்தைப் போட்டுட்டாங்க” என்றேன் ஆதங்கத்துடன்.
“பத்திரிகை ஆசிரியர்கள் எதையாவது தீர்மானிச்சால் அதில் நியாயம் இருக்கும்..” என்றார் விட்டுக்கொடுக்காமல்.
“அடிக்கடி வாங்க சார்..” என்றோம் அன்றைய மாலையில் உரையாடலில் சுவாரஸ்யமும் பிரமிப்பும் அடங்காமல்.
“உங்க கதை பிரசுரமானால் பாராட்றதுக்குக் கட்டாயம் வரேன்” என்றாரே பார்க்கணும்.
அந்த மந்திர வார்த்தையின் பலனாகத்தான் நாங்கள் நாற்பத்தி இரண்டு வருடம் ஒன்றாய் வாழ்ந்தோம் என்று நினைவு வந்தது நிஜ உலகுக்கு மீண்டேன்.
என்னை அறியாமல் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. மகன் தயக்கத்துடன் ஏதோ சொல்வதற்காக என்னை மெல்ல நெருங்கினான்…
(-நினைவுகள் தொடரும்…)
முந்தையபகுதி – 3 | அடுத்தபகுதி – 5