ஈரோடு மாவட்டம், ரங்கம்பாளையத்தில் அமைந்துள்ள ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லுரியில், 500-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வர்களை ஒருங்கிணைத்து அவர்களின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக இந்த “எழுத்தாணியின் அரியாசனம் 2025” நிகழ்ச்சி, கடந்த பிப்ரவரி 22, 2026 ஞாயிற்றுக் கிழமை அன்று ஒரு மாபெரும் விழாவாக நடைபெற்றது.
இந்த மாபெரும் விருது வழங்கும் விழாவிற்குத் தமிழ்நாடு முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர், “பைம்பொழில்” அருண்தாஸ் மணி அவர்கள் தலைமைத் தாங்கினார்.
இவ்விழாவானது காலை பத்து மணிக்கு ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர், முனைவர் க.பன்னீர்செல்வம் மற்றும் சிறப்பு விருந்தினரான பாரதியார் பல்கலைக்கழகம், மேனாள் தமிழ்த் துறைத் தலைவர், பேராசிரியர் முனைவர் சி. சித்ரா ஆகியோரின் முன்னிலையில், தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதாகத் துவங்கியது.
“இளம்பாரதி” இராஜதுரை முருகன் வரவேற்புரை வழங்கி விழாவில் வருகை புரிந்த அனைவரையும் வரவேற்றார்.
“பைம்பொழில்” அருண்தாஸ் மணி தலைமையுரை வழங்கினார்.

“கனற்கோவன்” கருப்புச்சாமி ராஜா, “எழுத்தாணியின் அரியாசனம்” நிகழ்ச்சிக்கான நோக்கத்தையும், சங்கத்தின் கொள்கைகள் பற்றியுமாக, நோக்கவுரை ஆற்றினார்.
இதனையடுத்து, விழாவின் சிறப்பு விருந்தினர்கள் முனைவர் க.பன்னீர்செல்வம் மற்றும் பேராசிரியர், முனைவர் சி.சித்ரா இருவரும் தமிழ்நாடு முத்தமிழ்ச் சங்கத்தின் சிறப்பையும், சங்கத்தின் செயல்பாடுகளையும் அத்தோடு சங்கத்தின் நிர்வாகிகளைப் பற்றியும் பாராட்டிச் சிறப்புரை ஆற்றினார்கள்.
சங்கத்தின் நிர்வாக ஆலோசகர், “கவிக்குயில்” செ. பேச்சியம்மாள் சங்கத்தின் வளர்ச்சியைப் பற்றிக் கூறி, சிறப்பான வாழ்த்துரையை வழங்கினார்.
அதையடுத்து இளந்தமிழ் மன்றத்தின் நிறுவனர், “இளந்தமிழன்” க.அபினேஷ், சங்கத்தின் உருவாக்கத்தைப் பற்றிக் கூறி வாழ்த்துரையாக வழங்கினார்.
மேலும், அவரைத் தொடர்ந்து, சங்கத்தின் நிர்வாக ஆலோசகர், கவிஞர் ஆயப்பாடி ஹஜ்ஜி முஹம்மது அவர்கள், தன் கவித்திறனால் பாடல் மூலமாக சங்கத்தின் நலத்திட்டங்களைப் பற்றியும் நோக்கத்தைப் பற்றியும் விளக்கி, வாழ்த்துரை வழங்கி அரங்கத்தை மகிழ்வித்தார்.
நிகழ்ச்சிக்கு வருகை புரிந்து சிறப்பித்த சிறப்பு விருந்தினர்களுக்கு, தமிழ்நாடு முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர், “பைம்பொழில்” அருண்தாஸ் மணி, விருதுகள் வழங்கிச் சிறப்பித்தார். பாரதியார் பல்கலைக்கழக மேனாள் தமிழ்த்துறைத் தலைவர், பேராசிரியர் முனைவர் சி. சித்ரா அவர்கள் இன்றளவிலும் தமிழுக்கு ஆற்றிவரும் ஆகச் சிறந்தத் தமிழ்ப் பணிகளைப் பாராட்டி “பாரதித் தமிழ் விருது” வழங்கப்பட்டது. ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் திருமிகு முனைவர் க. பன்னீர்செல்வம் அவர்கள், தமிழுக்கு ஆற்றிவரும் ஆகச் சிறந்த, தமிழ்ப் பணிகளைப் பாராட்டி “தமிழ்ச் செம்மல் விருது” வழங்கப்பட்டது. தமிழ்நாடு முத்தமிழ்ச் சங்கத்தின் நிர்வாக ஆலோசர், கவிக்குயில் செ.பேச்சியம்மாள் அவர்கள் சீரிய முறையில் செய்து வரும் கல்விப் பணிகளைப் பாராட்டி “கல்விச் செம்மல் விருது” வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, திருமதி ஆடற்கலைமணி ஜெ. ஜெகதீஸ்வரி அவர்களின் தலைமையில், நந்தா நாட்டியாலயா குழுவைச் சேர்ந்த இளம் நாட்டியத் தாரகைகள், மேடையில் ஒரு கலை விருந்தையே படைத்தனர். தங்களின் நளினமான அபிநயங்களாலும், துடிப்பான அசைவுகளாலும் வரவேற்பு நடனம் நிகழ்த்தி, ஒட்டுமொத்த அரங்கத்தையும் புத்துணர்ச்சியால் நிரப்பினர்.

வரவேற்பு நடனம் முடிந்ததும், திருமதி ஆடற்கலைமணி ஜெ.ஜெகதீஸ்வரி அவர்களுக்கு தமிழ்நாடு முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் “பைம்பொழில்” அருண்தாஸ் மணி, தலைமை நிர்வாக அதிகாரி “கனற்கோவன்” கருப்பசாமி மற்றும் நிர்வாக இயக்குநர் “இளம்பாரதி” இராஜதுரை முருகன் ஆகியோர் இணைந்து நந்தா நாட்டியாலயாவின் “ஆடற்கலைமணி” ஜெ.ஜெகதீஸ்வரி அவர்களுக்கு “கலைச் செம்மல் விருது” வழங்கி கௌரவித்தனர்.
சிறப்பாக அபிநயம் பிடித்து நடனம் ஆடி விழாவைச் சிறப்பித்த நாட்டியத் தாரகைகளுக்கு “ஆடல் கலை விருது” வழங்கி தமிழ்நாடு முத்தமிழ்ச் சங்கம் கௌரவித்தது.
அடுத்ததாக, நிகழ்ச்சியின் முக்கியத் தருணமாக மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் புதிய ஆத்திசூடியில் உள்ள 110 வரிகளைத் தொகுப்புப் பனுவலாக சங்கத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் ஆத்திசூடியும் அறக்கதைகளும் எனும் பனுவலின் தொகுப்பாசிரியர் “இளம்பாரதி” இராஜதுரை முருகன் தலைமையில் திறமையான 110 எழுத்தாளர்களைக் கொண்டு 110 அறக்கதைகளை எழுதி அதை சங்கத்தின் தலைவர் “பைம்பொழில்” அருண்தாஸ் மணி அவர்கள் வெளியிட, “கவித்தேடல்” பதிப்பகத்தின் நிறுவனர் கோகுல் காளியப்பன், பாரதியார் பல்கலைக்கழக மேனாள் தமிழத்துறைத் தலைவர், பேராசிரியர் முனைவர் சி. சித்ரா மற்றும் ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் திருமிகு. முனைவர் க.பன்னீர்செல்வம் அவர்கள் பெற்றுக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, “பசியாற்றிய உழவன்” மற்றும் “அத்தை மக(ன்) ரத்தினமே” என்ற இரு தலைப்பைக் கொண்டு சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் மற்றும் “கிராமத்துக் கீதங்கள்” பனுவலின் தொகுப்பாசிரியர் சுரேஷ் மித்ரன் தலைமையில் 100 சிறந்த கவிஞர்களைக் கொண்டு நாட்டுப்புற நடையில் அற்புதமாக 200 கவிதைகளின் தொகுப்புப் பனுவலான “கிராமத்து கீதங்கள்” என்ற நூலைச் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, “கனற்கோவன்” கருப்பசாமி, வெளியிட, “கவித்தேடல்” பதிப்பகத்தின் நிறுவனர் கோகுல் காளியப்பன், சங்கத்தின் நிர்வாக ஆலோசகர் ஹஜ்ஜி முகமது, சங்கத்தின் மாணவரணி அமைப்பாளர் தரணிஷ் மற்றும் சங்கத்தின் தொழில்நுட்ப மேலாளர் சோ.சாருலதா ஆகியோர் சேர்ந்து பெற்றுக் கொண்டனர்.
அடுத்த நிகழ்வாக, “இளந்தென்றல்” சி.சரவணன் அவர்கள் தலைமையில் “மகாபாரதப் போரிற்குக் காரணம் யார்?” என்ற தலைப்பில், நகைச்சுவையான இலக்கியப் பட்டிமன்றம் தொடங்கியது.

“மகாபாரதப் போரிற்குக் காரணம் கண்ணனே!” என்று, தமிழ்நாடு முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் “பைம்பொழில்” அருண்தாஸ் மணி அவர்கள் நகைச்சுவையோடு ஆரம்பித்து கண்ணன் தான் போரிற்குக் காரணம் என்று தன் கருத்துக்களை எடுத்துக் கூறி முன் வைத்தார்.
“சகுனியே மகாபாரதப் போரிற்குக் காரணம்!”, என்று கவிஞர் செல்லப்பா அவரின் கவித்திறனால் தன் கருத்துக்களை முன் வைத்தார்.
“துரியோதனனே மகாபாரதப் போரிற்கு காரணம்!” என்று இளம் பேச்சாளர் தமிழ்ச்செல்வன் அவர்கள் அருமையாகத் தமிழில் பேசி தன் சிந்தனைக் கருத்துக்களை முன்வைத்து அரங்கம் நிறைந்த கைத்தட்டலைப் பெற்றார்.
“திரௌபதியே மகாபாரதப் போரிற்கு காரணம்!’ என்று சரவெடி சூரியகுமார் அவர்கள், சரவெடியாய் தன் கருத்துக்களை முன்வைத்து அரங்கத்தையே நகைச்சுவையால் சிரிக்க வைத்தார்.
இறுதியில் நம் இலக்கியப் பட்டிமன்றத்தின் தலைவர், “இளந்தென்றல்” சி.சரவணன் அவர்கள் “மகாபாரதப் போரிற்குக் காரணம் கண்ணனே!” என்று தீர்ப்பை வழங்கி அதற்கானச் சரியானக் காரணத்தையும் கூறி அந்த பட்டிமன்றத்தை முடித்து வைத்தார்.
“மகாபாரதப் போரிற்கு காரணம் யார்?” என்ற இலக்கியப் பட்டிமன்றத்தை வழிநடத்தி, இலக்கியத்தில் இனிமை புகுத்தி, சீரிய முறையில் நடுவர் பணி செய்ததைப் பாராட்டி, தமிழ்நாடு முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர், “பைம்பொழில்” அருண்தாஸ் மணி அவர்கள், இலக்கியப் பட்டிமன்றத்தின் தலைவர் “இளந்தென்றல்” சி.சரவணன் அவர்களுக்கு “இலக்கியத் தூண் விருது” வழங்கி கௌரவித்தார்.
அதனைத் தொடர்ந்து, இலக்கியப் பட்டிமன்றத்தில் சிறப்பாகப் பேசி அரங்கத்தையே மகிழ்வித்தவர்களைப் பாராட்டி, தமிழ்நாடு முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் “பைம்பொழில்” அருண்தாஸ் மணி அவர்கள், கவிஞர் செல்லப்பா, இளம் பேச்சாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் சரவெடி சூரியகுமார் ஆகியோருக்கு “இலக்கியப் பற்றாளர் விருது” வழங்கி சிறப்பு செய்தார்.
இதனையடுத்து, இலக்கியப் பட்டிமன்றத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர், பைம்பொழில் அருண்தாஸ் மணி, கவிஞர் செல்லப்பா, இளம் பேச்சாளர் தமிழ்ச்செல்வன், சரவெடி சூரியகுமார் மற்றும் இலக்கிய பட்டிமன்றத்தின் தலைவர் இளந்தென்றல் சி.சரவணன் ஆகியோருக்கு, எழுத்தாளர் மரு .பா.சேஷசாலம், தான் எழுதிய பனுவலைச் சிறப்புப் பரிசாக வழங்கினார்.
இலக்கியப் பட்டிமன்றம் முடிந்ததும், விழாவிற்கு வந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கு விருந்து உபசரிப்பு நடந்தது. அறுசுவை உணவோடு கூட்டுப் பொறியல், தேம்பாகு (பாயாசம்) ஆகியவையோடு அனைவருக்கும் விருந்து உபசரிக்கப்பட்டது.
மதிய உணவிற்குப் பின், “கவித்தேடல்” பதிப்பகத்தின் 18 நூல் வெளியீடுகள் ஆரம்பித்தது.
தமிழ்நாடு முத்தமிழ்ச் சங்கம் மற்றும் “கவித்தேடல்” பதிப்பகம் இணைந்து கீழ்க்கண்ட நூல்களை வெளியீடு செய்தனர்:

- மரகதப் பேச்சுகள் – பாவலர் ஆர். மாரியப்பன்
- இகல் (சிறுகதைகள்) – விறகு பழனியப்பன்
- தியாகச் சுவடுகள் – கவிஞர் சூர்ய பிரகாஷ்
- நீ தொட நினைத்தபோது என் தோளில் – ந. சி. மோ. சிவசுப்ரமணியன்
- அவன் எழுதி விட்டுச் சென்ற கவிதை – கவிஞர் அ. மல்லிகா
- உணர்வொன்றின் உருவம் – கவிஞர் அ. மல்லிகா
- இரவின் பார்வையில் பிரபஞ்சம் – கவிஞர் பாரதி பிரியன்
- காற்றில் கரைந்தவை – இராணி கபிலன்
- மௌனத்தின் மத்தாப்பூ – கவிஞர் முனைவர் அடல்ஸ்
- நிலையின் அழகு – தீபா முகையூர்
- இருவிழி நினைவுகள் – கவிதா வே
- குயிலின் குறிப்பு – வேலன் சீமான்
- நீ தேடிய திறவுகோல் – முனைவர் ம. மணிகண்டன்
- மழலை முதல் காளை – முனைவர் ப. மணிமாறன்
- இருளில் தொடங்கும் வளர்பிறை – கவிஞர் நா. கவிச்செல்வன்
- உணர்வுகளின் பாலம் – சித்ரஞ்சினி பா
- வாசிக்கப்படுமென்று… – கவிஞர் சகுந்தலா சு
- நீண்ட நாள் கனவு – கவிஞர் சந்திரா முனிராஜ்
அடுத்ததாக, நிகழ்ச்சியின் மிகவும் முக்கியமான நிகழ்வான விருது வழங்கும் விழா சிறப்பாகத் துவங்கியது.
முதலாவதாக “கிராமத்துக் கீதங்கள்” தொகுப்புப் பனுவலில் “உழவும் காதலும்” என்னும் பொருண்மையில் கவிஞர்கள், கவிதை எழுதியதைப் பாராட்டி, தமிழ்நாடு முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் “பைம்பொழில்” அருண்தாஸ் மணி மற்றும் ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர், முனைவர் க.பன்னீர்செல்வம் இணைந்து 100 கவிஞர்களுக்கு “கிராமத்துக் கவி விருது” வழங்கி கௌரவித்தார்கள்.
இதனைத் தொடர்ந்து, “ஆத்திசூடியும் அறக்கதைகளும்” பனுவலில் சிறந்த முறையில் தங்களுக்குக் கொடுக்கப்பட்டத் தலைப்பின் பொருண்மையைக் கொண்டு சிறுகதை எழுதியதைப் பாராட்டி, பாரதியார் பல்கலைக்கழகம் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர், பேராசிரியர் முனைவர் சி. சித்ரா, தமிழ்நாடு முத்தமிழ்ச் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி “கனற்கோவன்” கருப்பசாமி மற்றும் நிர்வாக இயக்குநர் “இளம்பாரதி” இராஜதுரை முருகன் ஆகியோர் இணைந்து 110 எழுத்தாளர்களுக்கும் “எழுத்துக் கலை விருது” வழங்கி கௌரவித்தனர்.
அதன்பின், நிகழ்வின் முக்கிய அம்சமான “எழுத்தாணியின் அரியாசனம் 2025” -க்கான விருது வழங்கும் நிகழ்வு சிறப்பாக ஆரம்பித்தது.
தமிழ்நாடு முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர், “பைம்பொழில்” அருண் தாஸ் மணி, சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, “கனற்கோவன்” கருப்பசாமி ராஜா, சங்கத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் இளம்பாரதி இராஜதுரை முருகன் ஆகிய மூவரும் இணைந்து, இயல், இசை, நாடகம் என முத்தமிழையும் சொல்லில் அடக்கி தன் கற்பனை நயத்தைக் காவியம் ஆக்கும் திறன் படைத்த ஆகச்சிறந்த எழுத்தாளர்களை அங்கீகரிக்கும் விதமாக விருது வழங்கினார்கள்.

எழுத்தாணி விருதுகளின் பட்டியல்:
- இலக்கணப் பொருண்மை
- வரலாற்றுப் பொருண்மை
- ஆன்மிகப் பொருண்மை
- ஆய்வுப் பொருண்மை
- அறிவுப் பொருண்மை
- மருத்துவப் பொருண்மை
- கவிதைப் பொருண்மை
- கதைக்களப் பொருண்மை
- வரிகளின் பொருண்மை
மேற்கண்ட பொருண்மையின் அடிப்படையில் தங்களின் சிறந்தப் படைப்புகளை விருதுக்காக அனுப்பி, தேர்வான 200-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களுக்கு “எழுத்தாணி விருது” வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.
தமிழ்நாடு முத்தமிழ்ச் சங்கத்தின் “எழுத்தாணியின் அரியாசனம் 2025” எனும் இவ்விழாவில் சங்க நிர்வாகிகளோடு இணைந்து சீரிய முறையில் தன்னார்வலர்ப் பணி செய்த மாணவர்களைப் பாராட்டி, தமிழ்நாடு முத்தமிழ்ச் சங்கத்தின் நிர்வாக அதிகாரி, “கனற்கோவன்” கருப்பசாமி ராஜா மற்றும் நிர்வாக இயக்குநர் “இளம்பாரதி” இராஜதுரை முருகன் இணைந்து மாணவர்களுக்குத் “தமிழ்த் தொண்டர் விருது” வழங்கி கௌரவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் சீரிய முறையில் தொகுப்பாக்கம் செய்து களப்பணி ஆற்றியதைப் பாராட்டி தமிழ்நாடு முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் “பைம்பொழில்” அருண்தாஸ் மணி அவர்கள், “மகரந்தன்” மா.வசந்தகுமார் மற்றும் பேச்சாளர் இராஜி ஐஸ்வர்யா ஆகியோருக்கு “தமிழ்த் தொண்டர் விருது” வழங்கி கௌரவித்தார்.
இறுதியாக, “எழுத்தாணியின் அறியாசனம் 2025” விழாவை ஆரம்பம் முதல் இறுதி வரை சீரிய முறையில் களப்பணி ஆற்றியதைப் பாராட்டி தமிழ்நாடு முத்தமிழ் சங்கத்தின் தலைவர் “பைம்பொழில்” அருண்தாஸ் மணி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி “கனற்கோவன்” கருப்பசாமி ராஜா இணைந்து, தமிழ்த்திரு சுரேஷ் மித்ரன், தமிழ்த்திரு ஆ.தரணீஷ், தமிழ்த்திரு கு.பூங்கொடி, தமிழ்த்திரு சு.சிவனேஸ்வரன், தமிழ்த்திரு அ.ஹஜ்ஜிமுஹம்மது, “கவித்தேடல்” கோகுல்காளியப்பன், தமிழ்த்திரு வீ. கதிர்வேல், “கவிக்குயில்” செ.பேச்சியம்மாள், தமிழ்த்திரு பாரதி முருகன், “இளந்தமிழன்” க. அபினேஷ், “பாரதிமைந்தன்” இரா.மகாகிருஷ்ணன், “கிறுக்குக்கவிஞன்” பாலாஜி தெட்சிணாமூர்த்தி, திருச்சி நா.ஹரிகிருஷ்ணன், “புதுமைப்பெண்” கலைமதி முருகன், சின்னப்பொண்ணு சரவணன், தமிழ்த்திரு லயன்ஸ் விஸ்வநாதன் ஆகியோருக்கு “தமிழ்த் தொண்டர் விருது” வழங்கி சிறப்பு செய்தனர்.
மேலும், “ஆத்திசூடியும் அறக்கதைகளும்” என்னும் தொகுப்புப் பனுவலில் 110 சிறுகதைகளைத் தொகுத்து நூலிக்கம் செய்து சீரிய முறையில் எழுத்துப்பணி ஆற்றியதைப் பாராட்டி, தமிழ்நாடு முத்தமிழ் சங்கத்தின் தலைவர், “பைம்பொழில்” அருண்தாஸ் மணி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி “கனற்கோவன்” கருப்பசாமி ராஜா இணைந்து, சங்கத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் “ஆத்திசூடியும் அறக்கதைகளும்” எனும் பனுவலின் தொகுப்பாசிரியர் “இளம்பாரதி” இராஜதுரை முருகன் அவர்களுக்கு “ஒளவைத் தமிழ் விருது” வழங்கி சிறப்பு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஆத்திசூடியும் அறக்கதைகளும் என்றத் தொகுப்புப் பனுவலுக்கு ஒருங்கிணைப்புப் பணிகள் செய்து சீரிய முறையில் எழுத்துப்பணி ஆற்றியதைப்
பாராட்டி, தமிழ்நாடு முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் “பைம்பொழில்” அருண்தாஸ் மணி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி “கனற்கோவன்” கருப்பசாமி ராஜா இணைந்து, சங்கத்தின் தொழில்நுட்ப மேலாளர் சோ.சாருலதா அவர்களுக்கு “இளவெயினி விருது” வழங்கி சிறப்பு செய்தனர்.
அடுத்து, தமிழ்நாடு முத்தமிழ் சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் பூங்கொடி அவர்கள் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியின் இறுதியாக நாட்டுப்பண் பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.
தமிழ்நாடு முத்தமிழ் சங்கத்தின் “எழுத்தாணியின் அரியாசனம் 2025” நிகழ்ச்சி மாபெரும் வெற்றியோடு முடிந்தது.
நெஞ்சார்ந்த வணக்கங்களுடன்,
கவிஞர் மாலதி இராமலிங்கம், புதுச்சேரி.
நாள்: 27-02-2026
