அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 7 | செல்லம் ஜெரினா

 அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 7 | செல்லம் ஜெரினா

அத்தியாயம் – 7

சின்னுவை அள்ளிக் கொண்டார் செந்தில்வேலன்.

 “மருதாம்மா! என்னாச்சுது? எப்படி உங்க அண்ணி விழுந்து வச்சுது இப்பிடி ரத்தம் வாராப்பல? “

மருதவள்ளி தினமும் ஒருமுறை வீட்டுக்கு வந்து கூடமாட உதவி செய்து விட்டுப் போகும் பெண்.செவத்தையாவின் அண்ணன் மகள்தான்.  அவள் ஒன்பதாம் வகுப்பு மாறும் போது பெரியவளாகிவிட. அவள் அம்மா பள்ளிக்கு அனுப்ப மறுக்கவே படிப்பு நின்றது. இவளும் எல்லோரையும் போலவே காட்டு வேலை அதுஇது என்று செய்வாள். உழைக்க அஞ்சாதவள். துணிவு நிறைந்த பெண்.செந்தில் வேலன் தான் மருதவள்ளியை சின்னு பாப்பாவை பார்த்துக்கொள்ள அமர்த்தியிருந்தார்.

அவரை அண்ணன் என்றும் அவளை அண்ணியென்றும் அழைக்க சின்னு இவளை அத்த்தா என்பாள். செவத்தையா வெளிவேலைக்கும்  காவலுக்குமாக இருப்பார். வெளித்திண்ணையிலேயே படுக்கையும் கூட கல்யாணம் செய்து கொள்ளாத தனிக் கட்டை.

“மதியப் போது கேணியண்டே துணி துவைச்சுட்டு இருந்தேன் ண்ணா..திடிர்ன்னு அண்ணி சத்தம் கேட்டுச்சு. கூப்பிடுறாவளோன்னு போய் பார்க்குமுன்னே அண்ணியே அடுப்பங்கரை தாழ்வாரம் வழியா வேகமா வந்தது…அப்போதான் பாக்கேன் அந்த….”

“ம்மா…ஸ்..ம்மா” முனகலும் அசைவும் படுத்திருந்தவளிடமிருந்து கிளம்ப அனைவரின் கவனமும் அங்கே போனது.

“அம்முலு…ஒன்னுமில்லேடா.. ! இங்கே பாரு… வலிக்குதா என்ன? கையை அசக்காதம்மாடி…”

படுக்கையிலிருந்தவளோ விழி விரித்துப்பார்த்தாள். பார்வையில் விழுந்த கணவனைக் கண்டதுமே முகம் தெளிவானது.

“லேசான அடிதான் தையல் போட்டுருக்கு. நாளைக்கு வீட்டுக்குப் போயிடலாமாம். அப்படியா வேகமா வருவே! கிணத்தடி ஈரம் புழங்குற இடமாச்சே! அதிலும் இந்த மாதிரி சமயத்துலே பார்த்து வரவேணாம். “

“சரி! மருதாம்மா கூட இருந்துக்க டாக்டரைப் பார்த்துட்டு ஆகாரம் விசயம் கேட்டுகிட்டு வாரேன். “

“அண்ணன் போயிட்டாரா “

“ஆமாம் அண்ணி “

“எதுவும் சொல்லி வச்சியா என்ன? “

“எது? “

“அதான்…நான் விழுந்தது அவன் துரத்துனதுன்னு”

“அண்ணன் கேட்கத்தான் செய்தாக சொல்லிப்போடுமுன்னே நீ கண்ணு முழிச்சிடவே சொல்லலை”

“நல்லவேளை…!நான் கும்புடுற கந்தக்கோட்டை காளியாத்தா தான் காப்பாத்திருக்கா. வேணாம்டீ! ஏதும் சொல்லாதே! இவரு கோவத்துலே  அவன்கிட்டே மல்லுக்கு நின்னு ஆம்பளைகளுக்குள்ளே விபரிதமாகிடப் போவுது.”

“அதுக்காவ அந்த நாயை அப்படியே விடச் சொல்றியா? எத்தனை தைரியமிருந்தா வீடு புகுந்து ஒம்மேல கைய வப்பான்? அவன் போலிசாயிருந்த அவனோடோ. அதுக்காக கண்ட இடத்துலேயும் மேய்வானா?”

“இன்னொருக்கா ஏதும் நடந்தா பார்க்கலாம். இப்பத்திக்கு கமுக்கமாயிரு. இன்னிக்கு அவங்க அக்கா வீட்டுலே விசேசம்.இப்பப் போயி இப்படி வந்து படுத்துட்டேனேன்னு கஷ்டமாயிருக்கு. இந்த சமயம் அதையும் இதையும் சொல்லவேணாம்.”

“சரியண்ணி! ஆனா அவனுக்கு

என்  கையாலதான் சாவு “

அவளுக்கு நினைக்க நினைக்க ஆத்திரம் வந்தது. இவள்

துணி துவைத்துக் கொண்டிருக்க அடுப்பங்கரையில் பாத்திரம் உருட்டும் சத்தமும் அலமேலுவின் கத்தலும் கேட்க என்னவோ ஏதோஎன்று இவள் ஓடிவர அலமேலு வேகமாய் தாழ்வாரையைத் தாண்டி வந்து கிணத்தங்கரையில் கால் வைத்தாள் தண்ணீரும்  சோப்பும் காலை வழுக்கிவிட்டது. துவைக்கிற கல்லில் நெற்றி பலமாய் மோதி  வேகத்தில் சருமம் கிழிந்து ரத்தம் கொப்பளித்தது.

அப்போதுதான் மருதவள்ளி நிமிர்ந்து பார்த்தாள்.

பலராமன் நின்று கொண்டிருந்தான்.”ச்சே! “என்று கையை ஓங்கிக் குத்திக் கொண்டவன்  தாழ்வாரத்தூணோரமிருந்த பித்தளை அண்டாவை எட்டி உதைத்து விட்டுப் போனான். அலமேலு மயங்கத் துவங்கினாள். சின்னு அழ ஆரம்பித்தது.

சட்டென்று கைத்தாங்கலாய் பிடித்து தாழ்வாரத் தூணில் சாய்வாய் அமர வைத்து விட்டு செவத்தையாவைத் தேடினாள்.

அப்புறம் சின்னுவையும் தூக்கிக் கொண்டு வண்டியை பிடித்து வந்து….மருதவள்ளி தவித்துத் தான் போனாள்.

செந்திலிடம் சொல்லி அவன் கொட்டத்தை அடக்கனும் என்றிருந்தவளை பூவிலங்கு போல வார்த்தைகளால் கட்டிப் போட்டு விட்டாள் அலமேலு அண்ணி.

‘இருக்கட்டும் ஒரு சான்ஸ் கிடைக்காமலா போயிடும் அன்னிக்கு இருக்குடி உனக்கு. உன்னை நார்நாரா என் கையாலேயே கிழிச்சுத் தோரணம் கட்டித் தொங்கவுடலே …எம்பேரு மருதவள்ளி இல்லை ‘

என்று சூளுரைத்துக் கொண்டாள்.

“பொறுக்கிப்பய….ரத்தம்

சிந்த பெண்ணொருத்தி கிடக்குறாளேன்னு கூட நினைக்காம அவம்பாட்டுக்கு போயிட்டான் இவனை கட்டி வச்சு தோலை உரிச்சு உப்பு காரம் பூச வேணாம். அடேய் பலராமா ….நான் துடிக்க துடிக்க ஒன்னை மிதிக்காம விடமாட்டேன்டா. பொம்பளைன்னா அவ்ளோ சலிசா போச்சா? “

மனசு கறுவிக் கொண்டே தானிருந்தது.

காலமும் வாழ்த்து சொன்னது….

பெண்ணின் கண்ணீருக்கு யாரானாலும் பதில் சொல்லித்தானே தீரணும் இது காலமும் தர்மமும் தரும் தீர்ப்பு. காலம் நின்று நிதானைமாய் மிக கோரமாய் தனக்கானத் தீர்ப்பை தானே வழங்கிக் கொள்ளும்.

கீழே விழுந்து காயம் பட்டவளைக் கண்டு கொள்ளாமலே வந்து விட்ட பலராமனுக்கு எரிச்சல் மண்டியது.

பழைய கணக்கு இது …தீர்க்காமலே இருக்கிறது. முதன் முதலில் அலமேலு  இவனிடம் தான் சிக்கியிருந்தாள். ஊரை விட்டு ஊர்வந்து கட்டிட வேலை செய்து கொண்டிருக்கிற பலரில் ஒருத்தியாக அலமேலு  ஜீவனத்தைப்பார்த்துக் கொண்டிருக்க அந்தக் கட்டிட உரிமையாளனோடு பேச வந்தவன் கண்ணில் விழுந்தாள் அலமேலு. மண்ணும் தூசியும் அப்பியிருந்தாலும் அதையும் மீறி பளிச்சிட்டது அவள் அழகு. பலராமனுக்கு அப்போதே நாடி நரம்பெல்லாம் நிகுநிகுத்துப்போக வலையைத் தயாரித்தான். யாருமறியாமலே பின்னாலேயே போய் அவளின் இருப்பிடத்தைக் கண்டு கொண்டான்.

பத்துப்பதினைந்து குடும்பங்கள் வசிக்கிற புறாக்கூண்டு மாதிரியான ஸ்டோர் அது. இவளும் ஒரு கிழவியும் மட்டுமே

இரவு ஏறிய ஒருநாளில் கதவைத் தட்டி உள்ளே வந்து சட்டமாய் நுழைந்தவன் அவள் மீது பாய கிழவியோ தன் பிடிமானத்துக்காக எப்போதும் கையில் வைத்திருக்கும் குச்சியினால் ஓங்கி அவன் மீது போட அவன் வெறிபிடித்தவன் போல கிழவியைத் தள்ளிவிட அக்கம் பக்கம் கூடிவிட்டது.

“இவள்தான் கூப்பிட்டாள் “

என்று அவன் சொன்னதை நம்பாமல் ஒருவர் எதிர் கேள்வி கேட்டார்.

 “அந்தப் பொண்ணு வரச்சொன்னா கிழவியேன் ஊடாலே வரப்போகுது. நீ அத்து மீறி நுழைஞ்சதுனாலே தானே இத்தனை களேபரமும் “

என்று யோசனையோடு கேட்டு வைக்க அவன் தன் தொழில் அதிகாரத்தை காட்ட நினைக்க அதற்குள் அவனுக்கு போன் வர கோபத்தோடு போனான்.

மறுநாளே கிழவியும் அவளும் ஊரைவிட்டுப் போய் விட்டார்கள்.சொந்த ஊருக்கே வந்த கிழவி தன் சொந்தத்திலேயே ஒருவனைப்பார்த்து கல்யாணத்தை செய்து வைத்து கண் குளிரப் பார்த்ததும் மறுவருடமே இறந்து போனாள். கணவனும் மனைவியுமே ஒருவருக்கொருவர் என்றாகிப்போக அலமேலுவும் குழந்தையுண்டாக தம்பதிகளுக்கு சந்தோஷம். தன் பாட்டியே தான் மறுபிறவியெடுத்துப் பிறக்கப்போகிறாள் என்று!

அந்த சந்தோஷத்தைக் குலைக்கவென்றே பலராமன் வந்து சேர்ந்தான் அந்த ஊருக்கு.

யாரோ அக்யூஸ்ட்டைத்தேடி விசாரணைக்கு வந்தவன் கண்ணில் அலமேலு விழுந்தாள். மோப்பம் பிடித்துக் கொண்டே வந்தவன் அன்றிரவு கதவைத்தட்டி வம்பிழுத்தான். அதிர்ந்து போன அலமேலு திகைத்து நிற்க அவள் கணவனிடம்

“தோபாரு! கொஞ்சம் காத்தாட வெளியே நில்லு பத்தே நிமிசம் வேலை முடிஞ்சிடும். உன் பொஞ்சாதிகிட்டே பழைய கணக்கு ஒன்னு பாக்கியிருக்கு அதை தீர்த்துக்கிடறேன். அவ்ளோதான். “

“ஏன்யா? நீயெல்லாம் போலிசுதானா? உன்கிட்டே என் பொஞ்சாதிய விட்டுட்டு நானு காவல் காத்துகிட்டு நிக்கனுமா? என்னா ஒரு திண்ணக்கம்? நா என்ன கேணையன்னா நினைச்சே”

என்றவன் ஆவேசமாய் எரவாணத்திலிருந்த கதிர் அரிவாளை உருவி பலராமன் மீது இறக்க இவள் அலற கழுத்தருகே வெட்டு விழுந்தது. குபுகுபுவென ரத்தம் வர எரிச்சலோடு அவன் மீது பலராமன் பாய இவளின் புருஷனோ இவளைத் தன் பின்னால் கொண்டு வந்தவன்

“அலமு நீ போயிடு …போ போ! நான் இவனை வகுந்திட்டு வரேன் “

“மச்சான்! வேணாம் வந்திடு நீயும் வா மச்சான் “

“நீ போடி! இவனையெல்லாம் உயிரோட விடவேக் கூடாது . நீ போ! நான் பின்னாலேயே வரேன். “

“போடீ! என் மேல ஆணை போ! “

அவளை வெளியே தள்ளினான்.

பலராமனுக்கு வெறி ஏறியது. ஒரு வெறும் பயல் என்னை ரத்தகாயம் படுத்துவதா.?

துப்பாக்கியைத்திருப்பி இவன் தலையில் ஓங்கி அடிக்க. அலமேலுவின் புருஷன் தடுமாறினான். அந்த நொடியில் எரிந்து கொண்டிருந்த காடா விளக்கை அவன் மீது விசிறினான் பலராமன். குபுக் கென தீப்பற்றிக் கொள்ள வேகமாக வெளியே வந்து கதவைத் தாழ் போட்டு விட்டுத் தெருவிலிறங்கினான்.

ஒரு கையால் காயத்தை அழுத்திக் கொண்டே கண்ணை சுழல விட சற்று தூரத்தில் அலமேலு ஓடுவது புலப்பட இவனும் ஓட முயன்றான். ஆனால் கால் தடுமாறியது. நினைவு தடுமாறுமுன்னே கான்ஸ்டபிளுக்கு போன் செய்து வரச் சொன்னான்.

‘இன்னிக்கும் தப்பிச்சுட்டே இல்லை! உன்னை விடமாட்டேன்டீ! “

சூளுரைத்துக் கொண்டே கீழே உட்கார்ந்தான். நெருப்பும் உள்ளிருந்து வந்த ஓலமும் அவனை கொஞ்சமும் அசைக்கவேயில்லை. வன்மத்துடன் பார்த்தவனின் முகம் நெருப்புத் தழலில் சிவப்பாய்த் தெரிந்தது.

அலமேலு திரும்பிப்பார்க்காமல் ஓடினாள்.

மயக்கம் வருவது போலிருந்தது. கால் மடங்கி கீழே விழுந்து விடுவோமோ என்ற அச்சத்தில் வயிற்றைப் பிடித்துக் கொண்டாள். கொள்ளிவாய்ப் பிசாசு போல நெருங்கிய வெளிச்சத்தில் கண் கூச கீழே விழுந்தாள். கிரிச்சிட்டு நின்ற காரிலிருந்து படபடப்புடன் இறங்கினார் அந்த மனிதர்.

குனிந்து பார்த்தவர்

“அடடா… எந்திரிங்கம்மா! கையைப் பிடிங்க! அடி பட்டுடுச்சா? “

“அய்யா! உங்களுக்குப்புண்ணியமாப் போவும். என்னை உங்க வண்டிலே ஏத்திட்டு போங்க ஸார். பஸ் ஸ்டாண்டு கிட்டே விடுங்க போதும். என்னை ஒருத்தன் துரத்திட்டு வர என் புருசன் அவனை சமாளிச்சிட்டு வரேன்னார். தயவு பண்ணுங்கய்யா “

காரிலிருந்து இறங்கியவர்

“சரி ஏறும்மா ” என்று வண்டியையெடுத்துக்கொண்டு  உயிர்ப்பிக்க அவள் கண்ணீரோடு கண்ணாடி வழியே பார்க்க… சற்று தொலைவில் அவள் வீடு எரிவதைக் கண்டாள்.

“அய்யோ மச்சான் “என்றபடியே மயங்கி விழ அவர் வண்டியோட்டியபடியே

திரும்பிப் பார்த்தவர் என்ன செய்வதென்று புரியாமல் வேகமாகச் செலுத்தினார். அந்த வீட்டைத் தாண்டும் போது எரிகிற நெருப்பருகில்  பலராமன் நிற்பது கண்ணில் பட்டது.

‘இவனென்ன நெருப்பு கொழுந்து விட்டெரியுது அப்படி வேடிக்கை பார்த்துட்டு நிக்கிறான். ‘என்றெண்ணியபடியே கடந்தார்.

சற்று தூரம் போயும் அந்தப் பெண்ணிடம் அசைவைக் காணோமே என்று வீதியோரம் நிறுத்தியவர் தண்ணீர் பாட்டிலில் இருந்து தண்ணீரைத் தெளித்தார். அதற்கும் அவள் கண் விழிக்காமல் போக பக்கத்தில் மருத்துவமனையில் சேர்த்து விட்டு போய் விடலாமா என்றெண்ணியவருக்கு அப்படி போனாலும் இந்தப்பெண் விழிக்கும் வரை காத்திருந்து பிறகல்லவா போக வேண்டியிருக்கும். அவருக்கு அவசரமாக ஒரு வழக்கு விஷயமாய் அவருடைய வக்கீலைப்பார்க்க வேண்டியிருந்தது. சில தஸ்தாவேஜுகளை அவரிடம் சேர்ப்பித்தாக வேண்டும் அவர் நாளை விடியலில் வெளியூர் போக இருப்பதால் இரவு எந்நேரமானாலும் வந்து விடுவதாகக் கூறியிருந்தார்.

குழப்பத்துடனே வண்டியை ஓட்டியவருக்கு சாலையோரப் பெயர்பலகை கண்ணில் பட்டதுமே முடிவுக்கு வந்தவராய் நேராக கீழப்பூங்குடி ஊருக்குள் நுழைந்தார்.

காந்தி கிளினிக் என்ற பலகையின் மேலாக குண்டு பல்பு ஒன்று எரிந்து கொண்டிருக்க வாசலில் காரை நிறுத்திவிட்டு வீட்டுக்கதவைத் தட்டினார்.

“அய்யா! அய்யா! “

“வரேன் வரேன் “

வாசல்புற விளக்கு பளிச்சென எரிந்தது கூடவே  வயதானவர் ஒருவரும் கதவைத் திறந்தார்.

“செந்திலு! நீயாப்பா! என்ன இந்த நேரத்துலே? வாய்யா! வா! “

“அய்யா! சுகமா? “

“டாக்டரையே சுகமான்னு கேட்கறியா “

“டாக்டர்னாலும் மனுஷன் தானேய்யா?  அய்யா ஒரு உதவி கேட்டு வந்திருக்கேன். “

விஷயத்தை சொல்ல செந்தில் அந்தப்பெண்ணை தூக்கி வந்து பெஞ்சில் கிடத்த டாக்டர் முதலுதவி செய்தார்.

“அதிர்ச்சி மயக்கந்தாய்யா! பயமில்லே ஆனா ரெட்டநாடி ஓடுது கர்ப்பிணி பொண்ணு “

“அய்யா!  நான் அவசரமா போறேன். காலையிலே திரும்பி வரும் போது பார்க்கிறேன். பேரு கூடத் தெரியாது எனக்கு. நீங்க பார்த்துக்கிடுங்க! “

“நீ ஜோலி முடிச்சுட்டு வாய்யா! நான் பார்த்துக்கிடுறேன். இது என் கடமை. கவலைப் படாம போயிட்டு வா “

என்று விடை கொடுக்க கிளம்பினார் செந்தில் வேலன்

(சஞ்சாரம் தொடரும்)

முந்தையபகுதி – 6 | அடுத்தபகுதி – 8

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...