மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 7 | பெ. கருணாகரன்

 மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 7 | பெ. கருணாகரன்

 ‘ரோம’ ராஜ்யத்தில் கலவரம்!

முடி இழத்தல், சாம்ராஜ்யச் சக்ரவர்த்தியாக இருந்தாலும் சாலையோர சாமானியனாய் இருந்தாலும் வலி தரும் விஷயம். இளநீரில் வழுக்கையை விரும்பும் சமூகம் மனிதர்களின் வழுக்கையை விரும்புவதில்லை. முன்பெல்லாம் பெரும்பாலும் ஐம்பது வயதுக்கு மேல் நிகழ்ந்த முடி கொட்டும் ‘வைபவம்’  இப்போதெல்லாம்  இருபது வயதிலேயே நிகழத் தொடங்கி விட்டது. இளவயது வழுக்கையர்களை சகஜமாகச் சாலைகளில் சந்திக்க முடிகிறது. முதுமை மற்றும் பரம்பரைக் குறைபாடான இது, இன்று மன அழுத்தம், கொழுப்பு, இருப்புச் சத்து குறைபாடு, உணவுப் பழக்கம், மதுப்பழக்கம், மாறிவிட்ட தண்ணீரின் தன்மை என்று பல்வேறு காரணங்களால் இளைய தலைமுறையையும் பதம் பார்க்க ஆரம்பித்து விட்டது.

‘முடியைக் கட்டி மலையை இழுப்போம். வந்தால் மலை. போனால் முடி…என்று தன்னம்பிக்கை வசனம் பேசுபவர்கள் கூட, நிஜத்தில் தன் தலையிலிருந்து முடி உதிர்ந்தால்,  தலைசுற்றி விடுகிறார்கள். அடுத்தவர்களை அலட்சியப்படுத்தும்போது, சிலர், தன் தலைமுடியைப் பிடுங்குவதுபோல் பாவனை செய்து, ‘ப்பூ.. என் முடிக்குச் சமானம்…என்று டயலாக் அடித்தாலும் முடி அவ்வளவு சாதாரணமல்ல. தேள் கொட்டும் வலி கூட சிலமணி நேரங்களில் சரியாகிவிடும். முடிகொட்டினால் அந்த வலி தொடர்ந்து கொண்டே இருக்கும். இயற்கை நம் உடலின் பாதுகாப்புக்காகக் கொடுத்த கவசம், அழகுடன் தொடர்புபடுத்தப்பட்டு டூ இன் ஒன் ஆகிவிட்ட நிலையில், முடி என்பது உருவத் தோற்றத்துடன் இணைத்துப் பார்க்கப்பட்டது. அதற்காகப் பல கோடி ரூபாய்கள் மதிப்பு கொண்ட ஒரு பெரிய சந்தையே உருவாகி விட்டது.

பல வருடங்களுக்கு முன் பட்டிமன்றப் பேச்சாளர் ஒருவர், ‘திருப்பதிக்குப் போய் மொட்டை போட்டுக்கிட்டு வர்றாங்க. ஏன்யா, வெங்கடாஜலபதிக்குக் கொடுக்க உங்கக்கிட்டே கொடுக்க ஒண்ணுமே இல்லையா? போயும் போயும் தலைமுடியை அவருக்குக் காணிக்கையா கொடுத்துட்டு வர்றீங்க?’ என்று கிண்டலாக ஒரு மேடையில்  பேசியிருந்தார். இதனை ஒரு பத்திரிகையில் வாசகர் ஒருவர் கேள்வியாகக் கேட்க, அந்தப் பத்திரிகை ஆசிரியர், ‘முடி என்பது ஒரு மனிதனின் அழகு சார்ந்த விஷயம். இறைவனுக்குத் தங்கள் அழகையே அவர்கள் காணிக்கையாகச் செலுத்துகிறார்கள். அந்தப் பேச்சாளருக்குத் தைரியம் இருந்தால் மொட்டையடித்துக் கொண்டு, வெளியில் வருவாரா? மொட்டையடித்துக் கொள்ளவும் ஒரு துணிச்சல் வேண்டும்… மொட்டையடித்துக் கொண்டால் அவர் முகத்தைக் காணச் சகிக்குமா?என்று சவாலாகப் பதிலளித்தார். அந்தப் பேச்சாளர் அந்தச் சவாலை ஏற்கவில்லை. ஆனால், இப்போது, இயற்கையே அவருக்கு மொட்டையடித்து விட்டது. வழுக்கைத் தலையுடன் உலா வருகிறார் அந்தப் பேச்சாளர்.

அந்தப் பேச்சாளர் ‘ஜஸ்ட் லைக் தட்’ அப்படிப் பேசிவிட்டார். ஆனால், முடியின் வேல்யூ என்ன தெரியுமா? திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  பக்தர்கள் அளிக்கும் முடி காணிக்கை ஆண்டுதோறும் ஏலம் விடப்படுகிறது. ஆண்டாண்டுக்கும் 100 கோடிகளுக்கு அதிகமாகவே ஏலம் போகிறது.  கோயிலுக்கு நீளமான முடியைக் காணிக்கை செலுத்துபவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் திருப்பதி நிர்வாகம் இப்போது நீளமான முடியைக் காணிக்கையாகச் செலுத்தும் பக்தர்களுக்கு விலையில்லா லட்டுகளை ஊக்கப்பரிசாக அளித்து வருகிறது.

அமெரிக்காவின் நியூயார்க்கைச் சேர்ந்த பிரான்டன் சிக்கோட் என்ற 27 வயது இளைஞருக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழுந்து முடியெல்லாம் கொட்டி விட்டது. முடி வளர என்னென்னவோ மருந்து போட்டும் பயனில்லை. அதற்காக அவர் நொந்து போகவில்லை. மாற்றி யோசித்தார். தன் தலையை விளம்பர பேனர் மாதிரி பயன்படுத்த முடிவெடுத்தார். தன் வழுக்கைத் தலையை விளம்பரம் செய்து கொள்ள வாடகைக்கு விடுவதாக  இணையத்தில் அழைப்பு விடுத்தார். ஒரு நாளைக்கு வாடகை 45 ஆயிரம் ரூபாய் என்று கட்டணம் நிர்ணயித்தார். இப்போது, அவரது தலையில் பணமழை பொழிகிறது. நம்மூரிலும் வழுக்கை மன்னர்கள் இத்தகைய வழியைப் பின்பற்றலாம். மாற்றி யோசித்தால் பாலைவனத்திலும் தேனீர்க்கடை வைத்து லாபம் ஈட்டலாம் போலும்.

என் நண்பர் ஒருவருக்குத் தலையில் முடி குறைவு. பாதி வழுக்கை. அவர் ஒருநாள் சலூன்காரரிடம், என் தலையில் முடி குறைவாகத் தானே இருக்கு. அப்புறம் ஏன் எனக்கும் மற்றவங்களுக்கு வாங்கும் கட்டணமே வாங்கறீங்க?’ என்று கேட்டிருக்கிறார் புத்திசாலித்தனமாக.

அதற்கு அந்தக் கடைக்காரர், ‘மற்றவங்க தலையில் முடி அதிகமா இருக்கு. ஈஸியா வெட்ட முடியுது. உங்க தலையில் முடி குறைவாத்தானே இருக்கு. தேடித் தேடிப் பார்த்துதான் வெட்ட வேண்டியிருக்கு. அதுக்குக் கூடுதலா நீங்க ‘தேடு கூலி’ கொடுக்கணும் சார். உங்களுக்கு நாங்க சலுகைக்கட்டணத்தில் வெட்டுறோம்…என்று கூறி பல்பு கொடுத்திருக்கிறார்.

வழுக்கை திடீரென்று ஏற்பட்டு விடுவதில்லை. அது படிப்படியாக முடி, முடியாகத்தான் ஏற்படுகிறது. ஆனால், அதிரடி வழுக்கை ஒன்றும் உண்டு. அதை வழுக்கை என்று கூடச் சொல்ல முடியாது. ஒரு வகையில் மொட்டை. நாம் என்ன நடக்கிறது என்று நிதானிப்பதற்குள் இருபதே நாட்களுக்குள் முழு வேகத்தில் முடி கொட்டி தலை கிரவுண்ட் ஆகிவிடும். அது நோய் அல்ல. உடலில் நிகழும் குழப்பக் குளறுபடி.  அந்த டேஞ்சர் ஃபெல்லோவின் பெயர் ‘அலோபேசியா ஏரியாட்டா’ (ஜப்பானிலிருந்து வந்திருக்குமோ?).

இது யாருக்கு வேண்டுமானாலும் உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வரலாம். உலுக்கிய மரத்தில் காய்கள் உதிர்வதுபோல் சடசட என்று வேகமாக முடி கொட்ட ஆரம்பிக்கும். அதற்குக் காரணம் நமது  பாதுகாவலன் குழம்பிப்போய்ச் செய்யும் துரோகம்தான். நமது உடலில் கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி, ஏதோ ஒரு சூழ்நிலையில் நம் உடலில் உள்ள முடியும் நமக்கு ஆபத்தானவை, அழிக்கப்பட வேண்டியவை என்று தவறாக முடிவெடுத்து விடும் நிலையில், இந்தக் குழப்படி நிகழ்கிறது.

சிறுவயதில் சலூன்தான் என் காராக்கிரகம். அங்கு நுழைவதென்றாலே அலறுவேன். ஸ்டைலாய் நெற்றியில் விழுந்து என் கண்களை மறைக்கும் தலைமுடியை அங்கு சென்று  ‘சட்டிகிராப்’ வெட்டிக் கொண்ட பிறகு,  என் முகத்தைப் பார்க்க எனக்கே சகிக்காது. அதிலும் தலைக்கு மெஷின் போட்டுக் கொள்வது, கிட்டத்தட்ட கொல்வது போன்ற அவஸ்தையான அனுபவம். அது வெடுக் வெடுக் என்று முடியைப் பிடித்து இழுப்பதுடன், கூச்சமாகவும் இருக்கும். கடக் கடக் என்று அதன் சத்தம் காதுக்குள் நாராசமாய் ஒலிக்கும். ‘நான் முடி வெட்டிக்க மாட்டேன்’ என்று அடம் பிடித்தாலும் என் ஜம்பம் பலிக்காது. பின்பக்கம் ரெண்டு தட்டு தட்டி சலூனுக்குச் சலோ சலோ என்று விரட்டுவார்கள். சட்டி கிராப்பைக் கண்டுபிடித்த கிராதகன் நரகத்துள் உழல்வதாக.

என் ஓவிய நண்பர் ஒருவர் ஒரு சலூனில் பார்த்த காட்சி இது. அந்த சலூனில் அறுபது வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர். அவரது தலையில் ‘கொஞ்சூண்டு’தான் முடி இருந்திருக்கிறது. ஆனால், அந்த சலூன்காரர் அந்த முடியையும் ஒட்ட வெட்டிவிட்டாராம். அந்த முதியவர் அந்த சலூன்காரரை கடுப்புடன் வார்த்தைகளால் சுட்டெரித்திருக்கிறார். இந்தக் காட்சியையெல்லாம் அங்கு உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்த ஓர் இளைஞன் வாய்விட்டுச் சிரித்தானாம். சலூனிலிருந்து வெளியேறியபோது, அந்த முதியவர் அந்த இளைஞனிடம் ‘நீ உருப்படவே மாட்டே… அது என்ன கெக்கேபிக்கே சிரிப்பு…’ என்று கடுப்படித்துவிட்டுப் போயிருக்கிறார்.

நம் ஓவியர் அந்த இளைஞனிடம், ‘அவர் பெரியவர். அவர் ஏற்கெனவே மனவருத்தத்தில் இருக்கார். அவரைப் பார்த்து கேலியாய் சிரிக்கிறியேப்பா…’ என்று ஆதங்கத்துடன் கேட்டிருக்கிறார். அதற்கு அந்த இளைஞன் ‘அவர் என் அப்பாதான். சின்ன வயசில நான் கதறிக் கதறி வேணாம்னு சொன்னாலும் சம்மர் கிராப் வெட்டி விட்டாருல்ல… அதுக்குத்தான் இந்த பனிஷ்மெண்ட்…’ என்றானாம். சலூன்காரரிடம் கூறி வேண்டுமென்றேதான் அந்தச் சம்பவம் நடந்துள்ளது என்பதை அறிந்த நம் ஓவியர் அதிர்ந்து போனாராம். சிறுவயது மகன்களை சட்டி கிராப் வெட்டிக் கொள்ள வலியுறுத்தும் அப்பாக்கள் உஷார்.

முடி உதிர்வதை இந்தச் சமூகம் மிக சீரியஸாக எடுத்துக் கொள்வதைப் புரிந்துகொண்ட சிலர் இன்று தெருவுக்குத் தெரு ஹேர் கேர் கிளினிக்குகளைத் தொடங்கி கோடிகளில் சம்பாதிக்கத் தொடங்கி விட்டனர். என் நண்பர் ஒருவர், முடி கொட்டுவதைத் தடுப்பதற்காக   ஹேர்கேர் மருத்துவமனை ஒன்றுக்குச்  சிகிச்சைக்குப் போனார். இரண்டு மாதங்களுக்கு வாரா வாரம் சிகிச்சைக்கு வரச் சொல்லியிருந்தார்கள். வாரம் எட்டாயிரம் சிகிச்சைக் கட்டணம். இரண்டு வாரம்தான் போனார். அடுத்து அவர் போகவில்லை.

என்னாச்சு?’ என்று கேட்டபோது, ‘அவங்க பெரிசா ஒண்ணுமே பண்ணலை… தலைக்கு மசாஜ் பண்ணி விட்டு, ஒரு தைலத்தைத் தடவி விடுறாங்க. நம்கிட்டேயும் கொடுத்து டெய்லி அதைத் தடவி ஒரு மணிநேரம் ஊற வெச்சு, குளிக்கச் சொல்றாங்க. அதுக்குப் பெரிசா பலன் ஏதுமில்லை. ஹேர் கேர்னு சொல்லி நமக்கு ‘மொட்டை’ அடிக்கிற வேலைதான் பண்றாங்க…’ என்றார். தற்போது உணவுப் பழக்கம், தலை துவட்டுதல், தலைவாருதல் போன்றவற்றில் சில மாற்றங்களைச் செய்து அவர் முடி உதிர்வதைக் குறைத்துள்ளார்.

பொதுவாக வழுக்கை குறித்து அறிவியலால் உறுதிசெய்யப்படாத ஏராளமான நம்பிக்கைகள் உலவுகின்றன. அவற்றில் ஒன்று, வழுக்கைத் தலையர்கள் அறிவாளிகள். இன்னொரு நம்பிக்கை, அவர்கள் பெண்கள் விஷயத்தில் கில்லாடிகள். உளவியல் அறிஞரான என் நண்பர் ஒருவரிடம் இதுகுறித்துப் பேசிக் கொண்டிருந்தபோது, விஷயத்தைச் சொன்னதும் வாய்விட்டுச் சிரித்தார். தாழ்வு மனப்பான்மையால் வழுக்கைத் தலையர்கள் பரப்பிவிட்ட வதந்தி அது…என்றார்.

பொதுவாக வழுக்கை விழுந்தவர்களை கேலி செய்யும் தவறான மனோபாவம்தான் பரவலாக  நிலவி வருகிறது. இது அவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மையை விதைக்கிறது. தலைமுடி உதிர்வதை உயர்த்திச் சொல்லும்  விதமாகவும் வழுக்கை என்பது மரியாதைக்குரிய விஷயம் என்கிற தோற்றத்தை பெறவுமே வழுக்கை விழுந்தவர்கள் புத்திசாலிகள் என்கிற பரப்புரை, யாரோ ஒரு வழுக்கைத் தலையரால் கிளப்பி விடப்பட்டிருக்க வேண்டும். வழுக்கை விழுந்தவர்கள் பெண்கள் விஷயத்தில் கில்லாடிகள் என்கிற விஷயமும் அத்தகையதே. தலைமுடி பெண்களைக் கவர்கின்ற ஒன்று. தலைமுடி உதிர்ந்து விடுகிற நிலையில் பெண்கள் ஆண்களை கவனிப்பதில்லை என்கிற தாழ்வு மனப்பான்மையில், பெண்களைக் கவர்வதற்காக யாரோ ஒரு ஆதி வழுக்கைத் தலையர் இப்படி ஒரு வதந்தியைக் கிளப்பியிருக்கக் கூடும்…என்றார். எப்படியெல்லாம் கிளம்பி விடுறாங்கப்பா.

கடந்த தலைமுறையின் பிரபல நடிகர் ஒருவர் தன் தலையின் முன் வழுக்கையை மறைக்க ஹேர் பிளாண்டேஷன் செய்து கொண்டார். அந்தச் சிகிச்சை முடிந்த அடுத்த இரண்டு மாதங்களுக்கு அவரைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை. அவர் என்ன ஆனார், எங்கு போனார் என்றும் தெரியவில்லை. அவர் கால்ஷீட் கொடுத்திருந்த படங்களின் ஷுட்டிங்கிலும் கலந்து கொள்ளவில்லை. பிறகு விசாரித்தபோதுதான், ஹேர் பிளாண்டேஷன் சிகிச்சையால் அவர் முகத்தில் அலர்ஜி ஏற்பட்டு, முகத்தின் தோல் தடித்துப் போனதுடன், தலையின் முடிக்கண்களிலிருந்து ரத்தம் ஊற்றத் தொடங்கி விட்டதாம். அதுதான் அவர் யார் பார்வையிலும் சிக்காததற்கான காரணம்.

ஹேர் பிளாண்டேஷனுக்கு சாதாரணமாகவே இரண்டு லட்சம் வரை செலவாகிறதாம். கூடவே இதில் ரிஸ்க்கும் இருக்கிறது. ஆனால், ஹேர் பான்டிங் என்று இன்னொரு சிகிச்சை. இதில் முடியை கொண்டு வந்து தலையில் ஒரு பிரத்யேக சொல்யூஷன் போட்டு ஒட்ட வைத்து விடுகிறார்கள். தேவைப்படும்போது, எடுத்துக் கொள்ளலாம். அதனை எடுப்பதற்கு தனி சொல்யூஷன். கட்டணம் இருபதாயிரம் வரை ஆகிறதாம். இந்தச் சிகிச்சை செய்து கொண்ட நண்பர் ஒருவர் சொன்னது, ‘தலை அரிச்சால் நேரடியா சொறிஞ்சுக்க முடியலே… ஹி… ஹி…

முடி உதிரும் பிரச்னையால் பல ஆண்களுக்குத் திருமணம் தள்ளிப் போவதும் நிகழ்கிறது. என் நண்பர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளருக்கு ஒரே பெண். அவரைப் பார்ப்பதற்கு மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்திருந்தார்கள். அந்தப் பெண்ணுக்கு மாப்பிள்ளையைப் பிடிக்கவில்லை. காரணம் கேட்டபோது, ‘அவர் தலை ‘கிரவுண்டா’ இருக்கு…’ என்று அந்தப் பெண் கூறியுள்ளார். ‘முடி தானே இல்லை… நல்ல வசதியான இடம். நாத்தனார்கள் இல்லை.’ என்று அவரது அம்மா கூறியபோதும், அந்தப் பெண் மறுத்து விட்டாராம். அவர் கூறிய காரணம், ‘என் ஃபிரெண்ட்ஸ் கேலி பண்ணுவாங்க…’ இதேபோன்ற இன்னொரு சம்பவமும் உண்டு.

மதுரையைச் சேர்ந்த ஆனந்தி என்கிற என் தோழி ஒருவருக்கு நேர்ந்த அனுபவம் இது. அவர் வொர்கிங் உமன் ஹாஸ்டலில் தங்கியிருந்த பொழுது அவருடன் தங்கியிருந்த பெண்ணிற்கு திருமணம். இவரால் போக முடியவில்லை. ஒரு மாதம் கழித்து அந்தப் பெண்  தன கணவருடன் ஹாஸ்டலுக்கு வந்தார். இருவருக்கும் ஜோடி பொருத்தம் நன்றாக இருந்தது. கணவரின் முடி சுருள் சுருளாக மிகவும் அழகாக இருந்தது. கணவரை வரவேற்பு அறையில் அமர வைத்துவிட்டு, இவர்கள் எல்லோரும் தங்கள் அறையில்போய் அரட்டையடிக்க ஆரம்பித்தனர். கூல் ட்ரிங்க்ஸ் அனைவருக்கும் வழங்கப்பட்டது. ஒன்றை எடுத்துக் கொண்டு தோழியின் கணவரிடம் கொடுக்க ஆனந்தி  அந்தப் புதுப்பெண்ணுடன் சென்றிருக்கிறார். அங்கு கண்ட காட்சியில் திடுக்கிட்டார்.

ணவர் தலைமுடி இடது கையில் இருக்க, வலது கையால் தலையை சொறிந்து கொண்டிருந்தார். உடனே அந்தத் தோழி ஆனந்தியின் கையை பற்றிக் கொண்டு, ‘தயவு செய்து யாரிடமும் இதைச் சொல்லிவிடாதே…என்று கெஞ்சியிருக்கிறார். ஆனந்தியும் உறுதியளித்த பிறகு அறைக்கு திரும்பியிருக்கிறார்கள்.  தனியாக இருந்த சமயம் அந்தப் பெண் ஆனந்தியிடம் நானும் அவர் முடியின் அழகில் மயங்கிதான் திருமணத்திற்கு சம்மதித்தேன். முதலிரவில் கையில் பால் செம்புடன் உள்ளே நுழைகிறேன். இவர் விக்கை எடுத்துவிட்டு அமர்ந்திருக்கிறார். நான் வேறு யாரோ என்று நினைத்து ‘திருடன்…திருடன்…’ என்று கத்தவே அவர் அவசர அவசரமாக விக்கை அணிந்து கொண்டார். அப்புறம் எப்படி முதலிரவு நடக்கும்? ஒரு வாரம் மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அவர் குணம் தெரிந்த பின்பு அவரைப் புரிந்துகொண்டேன்… தலையிலே முடி இல்லேன்னா என்ன? மனதில் அன்பு இருந்தால் ஓகேதானே…என்று கூறியிருக்கிறார்.

எனக்குப் பள்ளி நாட்களில் அடர்த்தியான முடி. அது ஒரு ஜாடையில் ரஜினி ஹேர் ஸ்டைலில் இருக்கும். தலையை லேசாகச் சொடுக்கி இடப்புறத்திலிருந்து வலபுறத்தில் ஆட்டினால், முகத்தில் விழும் முடி தலையில் போய் உட்கார்ந்து கொள்ளும். குப்பத்து ராஜா, இன்ஸ்பெக்டர் ரஜினி என்று ஒரு ரஜினி படத்தையும் விடாமல் அவரைப்போல் ஸ்டைல் காட்டிய பருவம் அது. இந்நிலையில்தான் ஒன்பதாம் வகுப்பில்  ஓர் ஆசிரியர் உருவில் என் ஸ்டைலுக்கு ஆப்பு விழுந்தது.

அந்த ஆசிரியருக்குத் தலையில் முடி கிடையாது. வழுக்கை. வகுப்புக்கு வந்தவுடனே அவரது குறி, அழகாக முடி வளர்த்தவர்கள் மீது பாயும். எந்தப் பிர்ச்னையாக இருந்தாலும் தலைமுடியைப் பிடித்து உலுக்கித்தான் அடிப்பார். நீ என்ன ரஜினியா?’ என்று என்னை நக்கலடிப்பார். இது என்ன ரவுடிக் கணக்கா முடி வளர்த்துக்கிட்டிருக்கே… நாளைக்கு நீ முடி வெட்டிக்கிட்டு வர்றே… இல்லே, நானே உனக்கு மொட்டை அடிச்சுடுவேன் என்று மிரட்டுவார்.

என் வகுப்பில் மட்டுமல்ல… அவர் எந்த வகுப்புகளுக்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் அழகாக முடி வைத்திருக்கும் மாணவர்கள் செத்தார்கள். மற்ற மாணவர்களைச் சாதாரணமாக அடிக்கும் அவர், அழகான முடிகொண்ட மாணவர்களை மட்டும் முடியைப் பிடித்து உலுக்கித்தான் அடிப்பார். ஒரு கட்டத்தில் அழகான முடி கொண்ட எல்லா மாணவர்களும் அவரிடம் சரணாகதி அடைந்து, போலீஸ் கட்டிங் செய்து கொள்ள வேண்டிய நிலை. அவரிடம் அறிவைத்தான் வளத்துக் கொள்ள முடியவில்லை. முடியையாவது வளர்க்கலாம் என்றால் அதற்கும் வழியில்லை. ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு ஆகிய இரண்டு வகுப்புகளும் ஒரு வழியாக சதுர வட்டைத் தலையுடன் கடந்தோடின.

இந்நிலையில் பத்தாம் வகுப்பில் ஃபெயில். அந்த ஒரு வருடமும் காட்டுத்தனமாய் முடி வளர்த்துத் திரிந்தேன். அந்த வருடமே யார் கண் பட்டதோ, டைபாய்ட் வந்து பாதி முடியை இழந்தேன். மீதி முடியை வைத்துக்கொண்டுதான் +2வில் ஸ்டைல் காட்டித் திரிந்தேன்.

ன் கல்லூரி நண்பன் ஒருவனைச் சமீபத்தில் இருபத்தைந்தாண்டுகளுக்குப் பிறகு, ரயிலில் சந்தித்தேன். அவன் என்னைப் பார்த்துக் கேட்டானே கேள்வி, ‘ஏன்டா கர்ணா… காலேஜ்ல ரஜினி கணக்கா உனக்கு முடி இருக்குமே… இப்ப அதில் பாதியைக் காணுமேடா…

நான் கூலாகச் சொன்னேன். இப்ப ஒரிஜினல் ரஜினிக்கே முடி இல்லை கண்ணா… இதெல்லாம் ஒரு விஷயமாடா? வெளியிலே முடி இல்லேன்னாலும் உள்ளே மூளை வளர்ந்தால் போதும்டா… ’ என்றேன் அவனது வழுக்கைத் தலையை தடவிக் கொடுத்தவாறு. அவன் வெட்கப்பட்டு, ஒரு மாதிரி நெளிந்து சிரித்தான்.

(-தொடரும்…)

முந்தையபகுதி – 6 | அடுத்தபகுதி – 8

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...