மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 6 | பெ. கருணாகரன்

 மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 6 | பெ. கருணாகரன்

விலகலும் விலகல் நிமித்தமும்…

குழந்தைகள் ஒருபுறம் தலைக்கு மேல் வளர்ந்து கொண்டிருந்தாலும் அவர்களது பிஞ்சு விரல்களின் மென்தீண்டல், இன்னும் கைகளில் ஒரு ரோஜாப் பூவைப் போலவே பதிந்து கிடக்கிறது. கைக்குழந்தையாய் தூக்கியபோது, அவர்கள் மீது வீசிய தாய்ப்பால் மற்றும் பவுடர் வாசம் கலந்த சுகந்த மணம் மூக்கின் நுனிகளை வருடவே செய்கின்றன. குழந்தைகளின் சமீபத்துப் புகைப்படங்களை விட, அவர்களது சிறு வயது புகைப்படங்களையே பார்க்க மனம் ஆவலில் துடிக்கிறது. அந்தப் படங்களைப் பார்க்கும்போது, மிக நீண்ட தொடர் வண்டியாக மனதுக்குள் ஒரு ஜிகு புகு ரயில் சந்தோஷக் குதூகலத்துடன் ஓடிக்கொண்டே இருக்கிறது. அந்தப் படங்கள் குழந்தைகளின் குழந்தைமையை ஒரு புராஜெக்டர் போல காட்சிப்படுத்தி சந்தோஷ அழுகையைக் கிளப்புகின்றன. இந்தக் குழந்தை வளராமல் குழந்தையாகவே இருந்துவிடக் கூடாதா என்கிற பகுத்தறிவை மீறிய எண்ணம் குழந்தையாய் ஏங்க வைக்கின்றன.  நெகிழ்ச்சியில் வயிறு தளர்ந்து, ஒரு சிறிய பெருமூச்சும் ஒரு துளி கண்ணீரும் எட்டிப் பார்க்கிறது. பல ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட எங்கள் குடும்பப் புகைப்பட ஆல்பத்தைப் புரட்டிக் கொண்டே வந்தபோது, எழுந்த உணர்வுச் சுழற்சியே மேலே உள்ளவை.

என் மகன் ஹரிஹரனுக்கு அப்போது நான்கு வயது இருக்கலாம். அவனுக்கு பொம்மைக் கார்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஒருநாள் சரவணா ஸ்டோர்ஸில் அவனுக்கு ஒரு பொம்மை கார் வாங்கிக் கொடுத்து அவனது கையைப் பிடித்து வீட்டுக்கு அழைத்து வந்து கொண்டிருந்தேன். வழியில், திடீரென்று அவன் தன் கையிலிருந்த காரை கீழே வீசி விட்டு, ‘‘எனக்கு இது வேணாம்… இந்தக் கார்தான் வேண்டும்…”    என்று சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒரு சிவப்புநிற காரைச் சென்று கட்டிப் பிடித்துக் கொண்டான். கண் கலங்கிவிட்டேன். “பெரியவனாய் வளர்ந்த பிறகு இதை வாங்கிக்கலாம்…”’ என்று சமாதானம் கூறி வீட்டுக்கு அழைத்து வந்தேன். அவனது அந்த நிமிடக் குழந்தைமையை இப்போது, நினைக்கும்போது, இன்னும் நெஞ்சம் நெகிழ்ச்சியில் தளும்புகிறது. அதே குழந்தைமையை அவன் படிபடியாக கடந்து இன்று பதின்ம வயதில் நிற்பதையும் அதையொட்டிய ஒவ்வொரு பரிணாம நிகழ்வும் யோசிக்க யோசிக்க மனம் எதையோ இழந்து தவிப்பதைத் தவிர்க்க முடியவில்லை.

குழந்தைகள் குறிப்பாக ஆண் குழந்தைகள் வளர வளர படிப்படியாக நம்மை விட்டு மெல்ல விலகுகிறார்கள். அன்பாலோ, அதிகாரத்தாலோ பெற்றோரின் கைகளுக்குள் தன் கைகள் புதைக்கப்படுவதிலிருந்து  விடுவித்துக் கொள்ளவே துடிக்கிறார்கள். தொடர்ந்து அவர்களது உலகம் வேறு நண்பர்களால்,  தேர்வுகளால், பழக்க வழக்கங்களால் நிரப்பப்படுகின்றன.  இத்தகைய நிலைகளில் உள்ளுக்குள் ஏதோ ஒன்று உடைந்த மாதிரி வலி கலந்த வெறுமை சூழ்கிறது.

சிறுவயதில் ஹரிக்கு திருப்பதி கோயிலுக்கு மொட்டை போடுவதாய் வேண்டுதல். அவனை எல்கேஜியில் சேர்க்கும்போது, தலை நிறைய முடி இருந்தது. தலையை சீவி விட்டு,  இடவலமாகச் சிலுப்பிக் கொண்டால் அப்படியே அப்துல்கலாம் ஹேர் ஸ்டைலில் வந்து நிற்கும். அழகான முடி. ஆனால், பள்ளிக் கூடத்தில் “முடி வெட்டி விடுங்கள். அல்லது ரவுடித்தனமாக இதுபோல் இல்லாமல் தலையைச் சீவி குடுமியாவது போட்டு அனுப்புங்கள். இவனைப் பார்த்து மற்ற குழந்தைகளும் அதேபோல் வருவார்கள். அது எங்களுக்கு டிசிப்பிளின் பிரச்சினை…” என்றார்கள். அடி ஆத்தீ… முடி வளர்ப்பது ஒழுங்கீனமா என்று நினைத்துக் கொண்டு, அவனுக்குச் சடை பின்னிப் பள்ளிக்கு அனுப்பத் தொடங்கினோம். ஹரியை நான்தான் பள்ளிக்குப் பெரும்பாலும் கொண்டு சென்று விடுவேன். அவன் என் கைகளைப் பிடித்துக் கொண்டு பவ்யமாகப் பள்ளிக்கு வருவான். சிலநேரங்களில் கால் வலிக்கிறது என்று சொல்லி தூக்கிக் கொண்டு வரச் சொல்வான்.

ஒன்றை நான் கவனித்தேன். அவன் சடை போட்டிருக்கும்போது மட்டும் ‘உம்’மென்றாகி விடுவான். அப்போது கொஞ்சம் இயல்புக்கு மாறாக இருப்பான். மற்ற மாணவர்களின் தலைமுடியைக் கவனித்துக் கொண்டே வருவான். தன் தலையை அடிக்கடித் தொட்டுப் பார்த்துக் கொள்வான். பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்தவுடன் அவனது முதல் வேலை தன் சடையை அவிழ்த்துவிட்டு, அப்துல் கலாம் ஹேர் ஸ்டைலுக்கு மாறுவதாகத்தான் இருக்கும். சில தினங்களிலேயே எனக்குக் காரணம் புரிந்துவிட்டது. அவன் சடை போட்டுக் கொண்டு பள்ளிக்குச் செல்வது அவனுக்குள் இனம் தெரியாத தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி இருந்தது. அவனிடமே அதுகுறித்துக் கேட்டேன். ‘என்ன ஹரி? கிராப் வெட்டிக்கணுமா?’ என்று. அந்தக் கேள்வியில் அவன் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சி, விவரிக்க இயலாதது. ‘மொட்டை போடும்போது போட்டுக் கொள்வோம். இப்போது கிராப் வெட்டி விடுவோம்’ என்று முடிவு செய்து கிராப் வெட்டி விட்டோம். அப்போது அவன் சலூன் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்ட பார்வையில் பெருமிதம்.

எல்கேஜியில் என்னைத் தூக்கிக் கொண்டு வரச் சொன்னவன், யூகேஜி வந்தபிறகு, “கால் வலிக்குதா? தூக்கி வரவா?” என்று கேட்டாலும மறுத்து நடந்தேதான் வருவான். அதன் பிறகு அடுத்த சில வருடங்களில் ஒருநாள் கையைப் பிடித்து அழைத்துச் சென்றபோது, “கையை விடுப்பா… நானே வருவேன்…” என்று பெருமனிதத் தோரணையில் கூறி, அதிர வைத்து நெகிழ வைத்தான்.

அவன் நான்காம் வகுப்பு வந்தபோது, “நீ என் கூட வர வேணாம்பா… ஸ்கூல் பக்கத்தில் தானே இருக்கு. நானே போய்க்கிறேன்…” என்றான். இந்த வார்த்தைகள் சிறிய வலியையும் இனம் தெரியாத இடைவெளியையும் மனதுக்குள் உருவாக்கின.

தன் மகன் குழந்தைமையை இழந்து, தன் விரல் விடுத்து விலகுதல் போன்ற வேறு  சென்டிமென்ட் வலி ஒரு தந்தைக்கு இருந்து விடமுடியாது. ஆனால், பெண் குழந்தைகள் அப்படி அல்ல. அவர்கள் சிறுவயதிலிருந்து வளர்க்கப்படும் இந்தியச் சூழல் அப்படி. அவர்கள் தாயுடன் சமச்சீராகவே பழகிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது வளர்ப்பு இங்கு கண்காணிக்கப்படுகிறது. எனவே, விலகினாலும் அதிகம் விலகிச் சென்று விடமுடியாத நிலைமையை இந்தியப் பெண் குழந்தை வளர்ப்புமுறை தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஆண் குழந்தைகள் வளரும்போது, அவர்களது ராஜாங்கம் தனியாகிறது. தோளுக்கு வளர்ந்த பிள்ளை தோழன் என்பார்கள். ஆனால், தோளுக்கு வளர்ந்த பிறகு பல ஆண் குழந்தைகள் தன் தந்தைகளைத் தோழர்களாக ஏற்றுக் கொள்ள விரும்புவதில்லை என்பதே எதார்த்தம். அது தலைமுறை இடைவெளியாகவும் இருக்கலாம். அல்லது, கட்டுப்பாட்டுக்குள் சிக்க விரும்பாத பதின்ம வயது சுதந்திர வேட்கையாகவும் இருக்கலாம்.   விலகினாலும் அந்தத்  தனித்தியங்கும் தன்னம்பிக்கை ஒரு குழந்தைக்குத் தேவையானதே. தவிரவும் அது இயல்பானதே. ஆனால், இதனை உணரவே மறுக்கிறது பெத்தமனம். ஆனால், அதேநேரம் அதிகப்படியான கட்டுப்பாட்டுடன் வளர்க்கப்படும்  குழந்தைகள் பயம் அல்லது தயக்கம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். போட்டி நிறைந்த உலகில் பயம், தயக்கம் உள்ளவர்கள் கொஞ்சம் அதிகப்படியாய் போராடவே வேண்டியிருக்கும்.

எனவே நம் கைகளுக்குள் அவர்களைத் திணிக்க வேண்டும் என்று நினைக்காமல் அவர்களது உலகைப் புரிந்து கொண்டு, நாமும் அதில் இணைந்து கொண்டால் ஒரு மகன் நல்ல தோழனாக இருப்பதற்கான சாத்தியங்கள் இருக்கிறதுதான். அதேநேரம் தான் தந்தை, வயதில் பெரியவன், இவன் தன்னால் உருவானவன் என்கிற ஈகோவைத் தாண்டி ஒரு அளவுக்குமேல் மாறுவதில்லை தந்தைகளின் மனம். தன்னால் உருவாக்கப்பட்டவன், தனக்கு உரிமையானவன் என்றே முடிவெடுக்கிறார்கள். தான் வடிவமைத்திருக்கும் அச்சுச் சட்டகத்துக்குள் அடங்காமல் அவன் வேறு மாதிரியாக இருக்கக் கூடாது என்றும் நினைக்கிறார்கள்.

அதேநேரம், எதார்த்தம் ஆண் குழந்தை வளர வளர அவர்களது உலகத்தில் தந்தை, தாயின்  இடம் சுருங்கிவிடுகிறது. நண்பர்களால் நிறைகிறது அவன் உலகம். பையன் சரியான நண்பர்களோடு சேர்கிறானா? நன்றாகப் படிக்கிறானா என்பது போன்ற பெற்றோரின் கவலை கலந்த காவல்கார உத்தியோகத்தை எந்தக் குழந்தையும் விரும்புவதில்லை. அந்தக் காலக் குழந்தைகள் அப்படி விருப்பமில்லையென்றாலும்  அதை அதிகம் வெளியில் காட்டாமலாவது இருந்தார்கள். இன்றைய ஆண் குழந்தைகள் அதனை வெளிக்காட்டத் தயங்குவதில்லை. பதின்ம வயதில் ஹார்மோன் மாறுபாடுகளால் எரிச்சல், கோபம் அவர்களுக்கு இயல்பானது. இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களிடம் பேசுவதற்கென்று மயிலிறகால் செய்யப்பட்ட மென்மையான மொழி தேவையாய் இருக்கிறது.

அவர்களுக்குச் சுதந்திரம் தேவை. ஆனால், அதற்கென்று நுணுக்கமான எல்லைகளையும் வகுத்துக் கொள்ள வேண்டும். நம் குழந்தைகள் நடந்து செல்வது புதிய பாதை அல்ல. அந்தப் பாதையில் அவர்கள் வயதில் நாம் சிலவற்றைக் கடந்தே வந்திருப்போம். எந்த இடத்தில் முட்கள் இருக்கும் என்கிற சூட்சுமம் நமக்குத் தெரியும். அதனை அறிவுறுத்துவதைத்தான் அவர்கள் மறுதலிக்கிறார்கள். எரிச்சல் காட்டுகிறார்கள். ஒருநாள் மாலை மேற்கு மாம்பலம் சிக்னலில் நான் கண்ட காட்சி, மனதை உறைய வைத்தது. ஹரி வேகமாக சைக்கிளில் சாலையைக் கடக்க முயல்கிறான். அப்போது எதிர்சாரியில் வேகமாக ஒரு கார். திறமையான டிரைவர். பிரேக்கிட்டு காரை நிறுத்திவிட்டு, ஹரியைக் கடிந்து கொண்டு செல்கிறார். அன்றிலிருந்து ஹரி சைக்கிளில் செல்லக் கூடாது என்று கூறி விட்டேன். அதில் அவனுக்குக் கடுமையான கோபம். அவன் தன் கோபத்தை மௌனத்தின் மூலமே வெளிப்படுத்துவான். யாருடனும் பேசமாட்டான். தனிமையாகவே இருப்பான். அவன் கோபத்தில் எரிந்து விழுந்தால் கூட சகித்துக் கொள்ளலாம். அந்த மௌனம்தான் நமக்குப் பெரும் மன அழுத்தத்தைத் தரும். என்னால் அந்த மௌனத்தை ஒருநாள் கூட தாங்க முடியவில்லை. “சரி… சைக்கிளில் போ… இனிமேல் வேகமா போகக் கூடாது…” என்று சொல்லி, தமிழகத்தில் விபத்துகள் அதிகமாகி விட்டதையும் அதற்கான காரணங்களையும் விளக்கி, விபத்தினால் ஏற்படும் இழப்புகளின் வலிகளையும் விவரித்து, சிறுவயதில் எனது கை ஒடிந்த அனுபவத்தையும் அதனால் ஒரு வருடம் நான்பட்ட அவஸ்தைகளையும் சொன்னேன். தலையாட்டினான்.

சிறுவயதில் அவனது ஆர்வம் ஓவியங்களின் மீது இருந்தது. கிரேயான் எடுத்துக் கொண்டு எதையாவது வரைந்து கொண்டே இருப்பான். சுனாமி வந்தபோது, தொலைக்காட்சிகளில் அவன் பார்த்த காட்சிகளை வைத்து, கடற்கரையோரம் மனிதர்கள் வரிசையாக இறந்து கிடப்பதைப்போல் படம் வரைந்து அசர வைத்தான். ஐந்து வயதில் அத்தகைய ஆற்றல் நிச்சயம் அபாரம்தான். எட்டு வயதில் கோடை விடுமுறைக்கு ஊருக்குச் சென்றவன் என் அம்மாவை உட்கார வைத்து அங்கு இங்கு அசைய விடாமல் அரைமணிநேரம் முயன்று ஒரு போர்ட்ரெய்ட் ஓவியமாக வரைந்திருந்தான். அந்தப் படம் என் அம்மாவின் 80 சதவிகித சாயலை ஒத்திருந்தது. அந்தப் படம் ‘தி இந்து’ பத்திரிகையில் வெளிவந்தது. இவன் எதிர்காலத்தில் பெரிய ஓவியன் ஆகப் போகிறான் என்று முடிவெடுத்து விட்டேன். நிறைய கார்ட்டூன் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து ஊக்கப்படுத்தினேன். சில ஆண்டுகள் போயின. அவனது ஆர்வம் மீண்டும் பொம்மைக் கார்களின் மீது பதிந்தது.

அப்போது வீட்டில் சுமார் 100 கார்களாவது இருக்கும். எந்தக் காரும் முழுமையாக இருக்காது. பொம்மைக் காரின் மோட்டாரைக் கழற்றி, மரச்சட்டத்தில் மர ஸ்பூன்களால் மின்விசிறி இறக்கைகள் அமைத்து ஒரு ஃபேன் உருவாக்கி, பேட்டரியில் அதனை ஓடவிட்டு, அசர வைத்தான். அப்போது அவன் எட்டாம் வகுப்பு. இப்போது அவனது ஓவிய ஆசை அவனிடமிருந்து காணாமல் போயிருந்தது. அவன் பொறியாளன் ஆவான் போல என்று நினைத்துக் கொண்டிருந்தபோதே, அவனது ஆர்வம் திசை திரும்பி செல்போனில் வந்து நின்றது. இது எந்தத் துறைக்கு ஒருவன் செல்ல வேண்டும் என்பதை முடிவெடுப்பதற்கான வயதா? முடிவெடுப்பதென்றால்? யார் முடிவெடுப்பது? அவனா? நானா? நிச்சயம் அவன்தான். அவனிடமே சிலமுறை கேட்டிருக்கிறேன். ‘என்னவாக வேண்டும் என்று ஆசைப்படுகிறாய்?’ அவனது பதில் ‘சயன்டிஸ்ட்’ என்பதாக இருக்கிறது. சயன்டிஸ்ட் என்றால் எந்தத் துறையைச் சேர்ந்த சயன்டிஸ்ட்? நான் விரிவாக மேற்கொண்டு கேட்கவில்லை. அவனை அவனே உருவாக்கிக் கொள்வான் என்கிற திடமான நம்பிக்கை எனக்குண்டு. என் விருப்பப்படி அல்ல, அவன் விருப்பப்படியே அவன் உருவாகட்டும். அதில் நம் உதவி தேவையென்றால் மட்டுமே உதவுவோம்.

ஒரு பட்டாம்பூச்சியைப் பிடிப்பது போன்றே குழந்தைகளைக் கையாள வேண்டியுள்ளது. அழுத்திப் பிடித்தால் சிறகுகள் சிதைந்து போகலாம். லேசாகப் பிடித்தால் அந்தப் பட்டாம் பூச்சி நம் கைகளிலிருந்தே பறந்தும் போகலாம். சிறகுகள் சிதைந்து போவதை விட, நம் கையில் இல்லா விட்டாலும் பட்டாம்பூச்சிகள் சந்தோஷமாகப் பறந்து போவது பரவாயில்லை  என்றே தோன்றுகிறது…

(-தொடரும்…)

முந்தையபகுதி – 5 | அடுத்தபகுதி – 7

 

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...