மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 8 | பெ. கருணாகரன்

 மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 8 | பெ. கருணாகரன்

இதழாளன் என்னும் மனோபாவம்…

சம்பவம் – 1

போரின் அரக்கத்தனத்தை உலகுக்கு அறிவித்த அந்தப் புகைப்படத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விடமுடியாது. 8 ஜூன் 1972. தெற்கு வியட்நாமின் ட்ராங் பேங் என்னும் கிராமம்.  தெற்கு வியட்நாமின் விமானப் படை தவறாக வீசிய நப்பாம் வெடிகுண்டு (Napalm) தாக்கி தன் உடைகள் எரிந்து, உடல் முழுதும் தீக்காயத்துடன், அந்த ஒன்பது வயதுச் சிறுமி உயிருக்குப் பயந்து வலியில் அலறிக் கொண்டே ஓடி வரும் பதைக்க வைக்கும் காட்சி. அந்தப் புகைப்படத்தைப் பார்த்து உலக நாடுகள் அதிர்ந்தன.

அந்தப் புகைப்படத்தை எடுத்தவர் அசோசியேட் பிரஸ் புகைப்படக்காரர் நிக் உட். அதில்  இடம் பெற்ற சிறுமி கிம் பக்.  நிக் உட், அந்தப் புகைப்படத்தை எடுத்ததுடன் நின்று விடாமல் அந்தச் சிறுமி கிம் பக்கையும் மேலும் காயமடைந்த இன்னும் சில குழந்தைகளையும் சாய்கனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்து விட்டே அங்கிருந்து அகன்றார். நியூயார்க் டைம்ஸ் ஆசிரியர் குழுவினர் அந்தப் புகைப்படத்தைத் ஏகப்பட்ட தயக்கத்துடனே வெளியிட்டனர். அந்தப் புகைப்படம் அந்த ஆண்டுக்கான சர்வதேச புகைப்பட விருதான புலிட்சர் விருதை வென்றது.

அடுத்து 14 மாதங்கள் 17 அறுவைச் சிகிச்சைகளுக்குப் பிறகு கிம் பக்கின் உடல் காயங்கள் ஆறின. ஆனால், உடலில் காயத்தினால் ஏற்பட்ட வெடிப்புகளும் வடுக்களும் மறைந்து விடவில்லை.  

நவம்பர் 10, 1994,  கிம்பக் யுனெஸ்கோவின் நல்லெண்ணத் தூதராக அறிவிக்கப்பட்டார்.  1997ஆம் ஆண்டு கிம் பக்  தனது பெயரில் அறக்கட்டளை தொடங்கி, போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ, மன நல உதவிகளைச் செய்து வருவதுடன் போருக்கு எதிராகப் பிரசாரமும் செய்து வருகிறார்.  “நப்பாம் குண்டு அதிக சக்தி கொண்டது. ஆனால், நம்பிக்கை, மன்னிக்கும் தன்மை, அன்பு ஆகிய குணங்கள் அந்த வெடிகுண்டை விட அதிக சக்தி கொண்டவை. ஒவ்வொருவரும் அடுத்தவர் மீது அன்பு செலுத்தக் கற்றுக் கொண்டால் பூமியில் போருக்கான அவசியமே இருக்காது.” – இது போருக்கு எதிரான கிம் பக்கின் பிரச்சாரத்தின்போது ஒருமுறை பேசியது. கிம் பக்கும், நிக் உட்டும் இப்போது நல்ல நண்பர்கள்.

சம்பவம் – 2

பசிக்கொடுமையில் சுவாசத்தை எண்ணிக் கொண்டிருக்கும் குழந்தை. அது எப்போது உயிர்விடும் என்று அருகில் ஆவலுடன் காத்திருக்கும் பிணம் தின்னிக் கழுகு  ஒன்று. இரத்தத்தை உறைய வைக்கும் அந்தப் புகைப்படம் 1993-ல் சூடான் நாட்டில் உணவுப்பஞ்சம் ஏற்பட்டு பட்டினிச் சாவுகள் பெருகியிருந்த நேரத்தில் உலகத்தின் பல இதழ்களிலும் வெளியானது.  சூடானில் ஐக்கிய நாடுகளின் உணவு மையம் அருகே அந்தக் குழந்தை பசியில் பரிதாபமாகச் சோர்ந்து போயிருந்த  காட்சியைப் படம் பிடித்தவர்  அசோசியேட் பிரஸின் புகைப்படக்காரர் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கெவின் கார்ட்டர். அந்தப் புகைப்படத்தைக் கண்டு, உலகநாடுகள் அதிர்ந்தன. சூடானின் பட்டினிக் கொடுரத்தின் தீவிரத்தை  இந்தப் புகைப்படத்துக்குப் பிறகுதான் உலகம் புரிந்து கொண்டது. இந்தப் படத்துக்காக 1994-ம் ஆண்டு கெவினுக்கு புலிட்சர் விருது வழங்கப்பட்டது. விருது கிடைத்த மூன்று மாதங்களிலேயே புலிட்சர் தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டார்.

ஏன்?

கெவினின் தோழி ஜுடித் மேட்லாஃப் சொல்கிறார்…“அன்று மாலையில் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து தொடர்ந்து புகைப்பிடித்தபடி, கெவின் ஒரு குழந்தையைப் போல அழுதுகொண்டே இருந்தார். அந்தக் காட்சி ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து அவரால் மீண்டு வரவே முடியவில்லை”

அந்தக் காட்சி அவரது மனத்தை ஒருபுறம் உலுக்கிக் கொண்டிருக்க அவரைப் பற்றிய விமர்சனங்கள் பல மூலைகளிலிருந்தும். “படம் எடுத்தால் மட்டும் போதுமா? அந்தக் குழந்தையைக் காப்பாற்றிருக்க வேண்டாமா? அந்தக் குழந்தைக்கு அடுத்து என்ன நடந்தது என்று தெரிந்து கொண்டிருக்க வேண்டாமா..?”

விமரிசன அம்புகள் ஏற்கெனவே காயப்பட்டிருந்த அவரது மனதை இன்னும் நோகடித்தன. ஒருகட்டத்தில் உலகத்தை உலுக்கிய புகைப்படம் அவரது மனச்சாட்சியை உலுக்கி மன அழுத்தத்தை அதிகப்படுத்தியது.  விளைவு… தற்கொலை.

அதுசரி… அந்தக் குழந்தை?

தகவல் இல்லை.

இந்த இரண்டு சம்பவங்களுக்கும் சில விஷயங்களில் ஒற்றுமை இருப்பதைக் காண முடியும். உலகப் புகழ் பெற்ற இரண்டு புகைப்படக்காரர்கள். புலிட்சர் விருது வென்ற இரண்டு புகைப்படங்கள். ஆனால், இருவருக்கும் இருவேறு மனோபாவங்கள். ஒருவர் புகைப்படம் எடுத்ததுடன் மனித நேயத்துடன் செயலாற்றியிருக்கிறார். இன்னொருவர் ஒரு புகைப்படக்காரராக மட்டும் கடமையைச் செய்திருக்கிறார். ஒருவேளை கெவின் கார்ட்டர் அந்தக் குழந்தையைக் காப்பாற்றி, ஒரு முகாமில் கொண்டு சென்று விட்டிருந்தால்… அந்தக் குழந்தையின் மீது உலக நாடுகளின் கவனம் குவிந்திருக்கும். அந்தக் குழந்தையும் வளர்ந்து பெரியவளாகி வரும்போது, கிம் பக் போல் வறுமைக்கு எதிராக உலக அளவில் பிரசாரம் செய்யும் போராளியாகக் கூட மாறியிருக்கக் கூடும்.

இந்த இரண்டு சம்பவங்களும் வலியுறுத்தும் ஒரே விஷயம் சமூகப் பொறுப்புணர்வு. படம் எடுப்பது மட்டுமே ஒரு பத்திரிகைப் புகைப்படக்காரரின் வேலையாகி விடுமா? செய்தி சேகரிப்பதோடு மட்டுமே ஒரு பத்திரிகையாளனின் கடமை முடிந்து விடுகிறதா?  அதையெல்லாம் தாண்டி சமூக அக்கறை, மனிதநேயம் இரண்டும் ஒவ்வொரு செய்தியிலும் முக்கியம். இவற்றை மறந்த, புறக்கணித்த எந்தத் தொழிலும் நற்பெயர் தேடித் தரப் போவதில்லை.

இதனைத்தான் சோஷியல் ரெஸ்பான்ஸ்பிளிடி என்கிறார்கள்.  பத்திரிகைச் சுதந்திரம் –  என்பது தனியானதல்ல.  சுதந்திரமும் பொறுப்புணர்வும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். பொறுப்புணர்வில்லாத எந்தச் சுதந்திரமும் சிறப்பாகச் செயல்பட முடியாது.  பொறுப்பணர்வுகளாலேயே ஒரு சுதந்திரம் கௌரவிக்கப்படும். எந்தச் செய்தியை எழுதும் போதும் அக்கறையாய் அணுக வேண்டிய மனோபாவம் ஒரு செய்தியாளனுக்கு அவசியம். எதை எழுதினாலும் இந்தச் சமூகத்துக்கு அதனால் என்ன பயன் என்று ஒரு கேள்வியைக் கேட்டுக் கொண்டு எழுதுவது நலம் பயக்கும்.

சமூக அக்கறை, தனிமனித நேசம் இல்லாமல் முரட்டுத்தனமாக, கண்மூடித்தனமாக  செய்தியை மட்டுமே துரத்திக் கொண்டிருக்கும் தொழிலில் எந்த மனதிருப்தியும் இருக்கப் போவதில்லை. அலுவல்பூர்வமாக பணி ஓய்வு பெறும் நாளில் தான் செய்த தொழிலில் திருப்தியுடன் வெளியேறுவதுதான் ஒரு பத்திரிகையாளனின் மாபெரும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். அதற்குத் தேவை ‘நிக் வுட்’ மனோபாவம். ஊழியம் என்பது ஊதியம் மட்டுமே, அது கிடைத்தால் போதும். வாங்குகிற சம்பளத்துக்கு ஏதோ வேலை பார்த்துவிட்டுப் போவோம் என்கிற தட்டையான பார்வையுடன் பணி புரிவது ஆபத்தானது. இயந்திரத்தனமானது. சம்பாதிக்கத்தான் வேலை பார்க்கிறோம். அதனைக் கொஞ்சம் பகுத்தறிவோடும் செய்யலாமே. நம் எழுத்துக்கள் நாலு பேருக்கு நல்லது செய்வதாக இருப்பது எவ்வளவு பெருமைக்குரியது. கம்பீரமானது.

எழுதும் கட்டுரையால் அதில் சம்பந்தப்பட்டவருக்குப் பயன் உண்டா? ஆபத்து உண்டா என்பதை உணர்ந்து கொள்வது மிக முக்கியம்.  எழுதிய எழுத்துக்களுக்குப் பொறுப்பாளி எழுதியவரே. எனவே எழுதுவதற்கு முன் அதுகுறித்து 360 டிகிரி கோணத்தில் அலச வேண்டியது அவசியம். எனவே, எந்தக் கட்டுரையையும் எழுதுவுதற்கு முன் அதற்கு என்ன நோக்கம்  என்பதை முதலில் ஆராயவேண்டும். அது எழுதப்படுவதன் பின்னணியில் ஒரு சமூக நலன் இருத்தல் சிறப்பு. எழுதப்படும் கட்டுரையால் யாரேனும் அப்பாவிகளுக்குப் பாதிப்பு இருக்குமா என்பதையும் கவனிக்க வேண்டும். ஒருமுறை சாலையோரம் கையேந்திபவன் ஓட்டல் நடத்துபவர் குறித்த கட்டுரை ஒன்று நான் எழுதியபோது, அந்த ஓட்டல்காரரின் வாழ்க்கை அவலத்தை எழுத்தில் கொண்டு வந்தேன். அது நல்ல ஹியூமன் ஸ்டோரி. கட்டுரையில் போலீஸ் மாமூல் பற்றி அவர் கூறியதையும் எழுதியிருந்தேன். மறுநாளே அந்தக் கையேந்தி பவன் ஓட்டல் அங்கிருந்து காவல்துறையால் அகற்றப்பட்டது. அது ஒரு வரி தகவல்தான். அந்தத் தகவல் அவலமானதுதான். ஆனால், அதனை தவித்திருக்கலாம். அந்தத் தகவல் அந்த ஓட்டல்காரருக்கு எவ்வளவு மன அழுத்தத்தைக் கொடுத்திருக்கும்? பின் விளைவுகள் என்னவென்று தெரியாமல் சம்பந்தப்பட்டவர்கள் பேட்டி அளித்தாலும் விளைவுகளை அவதானித்து, சில விஷயங்களைத் தவிர்த்து விடுதலே, எழுத்தைக் கையாளுவதில் உள்ள நுணுக்கமாகும்.  அதுவே நல்ல இதழியலும் ஆகும்.  இதுபோல் சின்ன சின்ன விஷயங்கள்தான். ஆனால், அதன் பின்னணியில் இருப்பது இதழாளனின் மிகப்பெரிய பொறுப்புணர்வு.

பத்திரிகையாளனின் கடமை செய்திகளை வெளியிடுவது மட்டுமல்ல, சில நேரங்களில் சில செய்திகளை வெளியிடாமல் இருப்பதும் கூட முக்கிய கடமையே. செய்தியை வெளியிட வேண்டும் என்ற ஆர்வத்தில் நாம் எழுதும் சில செய்திகள் துர் விளைவுகளை ஏற்படுத்தும்போது ஆயுள் முழுக்க அதனை மறக்க முடியாமல் ‘கெவின் கார்ட்டர்’ போல் மனம் தத்தளிக்கும் சூழல் உருவாகலாம். 1988ஆம் ஆண்டு. நான் இதழியலுக்கு வந்து எட்டு மாதங்களே ஆகியிருந்தன. அப்போது எம்ஜிஆர் இறந்து, தமிழகத்தில் கவர்னர் ஆட்சி நடந்து கொண்டிருந்தது.  விருத்தாசலம் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அன்றுதான் தொடங்கியது. தேர்வுகள் எப்படி நடக்கிறது என்று சும்மா வேடிக்கைப் பார்க்கத்தான் போனேன். ஆனால், அங்கேயோ மாணவர்கள் பிட் அடித்து அதிரவைத்துக் கொண்டிருந்தார்கள். வெளியிலிருந்தும் மாணவர்கள் காம்பௌண்ட் தாண்டிக் குதித்து ஹாலுக்கே சென்று மாணவர்களுக்கு பிட் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். தேர்வுக் கண்காணிப்பாளர்களும் இதனைக் கண்டு கொள்ளாமல் இருந்தார்கள். நான் அதனைக் கட்டுரையாக்கினேன். அந்தக் கட்டுரை பிரசுரமானதும் பள்ளியைப் பறக்கும் படை சுற்றி வளைத்தது. பல மாணவர்கள் டீஃபார் செய்யப்பட்டனர். கடுமையான கெடுபிடி. அந்த ஆண்டு அந்தப் பள்ளி பிட் சென்டராகக் குறிக்கப்பட்டு, தேர்வுத் தாட்கள் கடுமையாகத் திருத்தப்பட்டன. அந்த ஆண்டில் மிகவும் குறைந்த சதவிகிதம் மாணவர்களே தேர்வானார்கள். நன்றாகப் படிக்கும் மாணவர்கள் பலரும் தேர்வாகவில்லை. மிக நன்றாகப் படிக்கும் மாணவர்கள் மிக சொற்ப மதிப்பெண்களே பெற்றிருந்தனர். பல மாணவர்கள் என்னிடம் வந்து அழுதார்கள். அந்தக் கட்டுரையை நான் எழுதியிருக்கக் கூடாது.தட்டையான ஒரு மனோபாவத்துடன் அதனை நான் எழுதியிருப்பதாக உணர்கிறேன். அதனால் இந்தச் சமூகத்துக்கு என்ன நன்மை? பிட் அடிக்கும் மாணவர்கள் மாறி விட்டார்களா? இங்கு உள்ள கல்வி முறையே அபத்தமாக, மாற்றப்பட வேண்டியதாக இருக்கும்போது, அதனை மாற்றுவது குறித்த விவாதங்களும், ஆலோசனைகளும்தான் தேவையே தவிர, இதுபோன்ற பரபரப்பு ரிப்போர்ட்கள் அல்ல. அந்த ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த பல மாணவர்கள் தாங்கள் விருப்பப்பட்ட பாடப் பிரிவில் படிக்க முடியவில்லை. ஏராளமான மாணவர்களின் வாழ்வை இருட்டாக்கி விட்டதான குற்ற உணர்ச்சி இன்னும் உண்டு எனக்குள். ஒருவன் வாழ்வில் விளக்கேற்றி வைத்தால் சந்தோஷப்படலாம். இருட்டாக்கினால்? நம் எழுத்துக்கள் ஒளியேற்றி வைப்பதாய் தானே இருக்க வேண்டும்?   ஒரு பெரிய புற்றுநோய்க்கு டிஞ்சர் தடவி வைத்தியம் பார்ப்பது போன்றதுதான் இத்தகைய கட்டுரைகள்.

பத்திரிகையாளன் கடமை செய்தி சேகரிப்பதோடு நின்று விடவில்லை. அதற்கு மேலும் அது தொடர்கிறது. தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு ஏதேனும் நன்மை செய்ய வேண்டும் என்கிற துடிப்புடன் அலைந்து கொண்டே இருப்பதுதான்  நல்ல இதழாளனின் மனோபாவமாக இருக்க முடியும்.

நல்ல எழுத்துக்கள் என்பது நல்ல விளைவுகளை ஏற்படுத்துவதாகும்.  நல்ல மொழி நடை என்பது திறமை மட்டுமே. எழுதி எழுதி பயிற்சி எடுத்துக் கொண்டால் மொழி நம் வசமாகி விடும். அதேநேரம் இதழாளனின் மனோபாவம் அப்படியல்ல. அது டிஎன்ஏக்களாலும் சுற்றுச் சூழலாலும் கட்டமைக்கப்படுபவை. அதனை பயிற்சியின் மூலம் செம்மைப்படுத்தி விடமுடியாது. எது நல்லது என்பதைப் புரிந்து கொள்ளும் பகுத்தறிவும் அனுபவமும் அதனைச் செய்து முடிப்பதற்கான சமரசமற்ற மன உறுதியும் தேவை. ஆசிரியர் மாலன் ஒருமுறை எனக்கு அனுப்பிய ஒரு மின்னஞ்சலில் கூறியிருந்ததை இங்கு சுட்டிக் காட்டுகின்றேன்.

 “திறமைக் குறைவை நான் பொறுத்துக் கொள்வேன். ஆனால் பொறுப்புணர்வற்ற தன்மையை நான் சகிக்க மாட்டேன். காரணம் திறமையை வளர்த்துக் கொள்ள இயலும். ஆனால் பொறுப்பின்மை,  அக்கறையின்மையால் விளைவது. அது மனோபாவம்.  என்னைப் பொறுத்தவரையில் பத்திரிகையாளன் என்பது ஒரு வேலை அல்ல. ஒரு தொழில். Profession  அதைக் குறித்த பெருமிதங்கள் எனக்கு உண்டு. நான் பத்திரிகையாளனானதே அந்தப் பெருமிதத்தால்தான். இது ஒருவன் காசுக்குப் பார்க்கிற வேலை அல்ல என்பது என் எண்ணம். இது வெறும் உடல் உழைப்பு அல்ல. மூளையால் மட்டுமே செய்கிற வேலையும் அல்ல. உடல் மூளை இவற்றுடன் மனமும் இணைந்து வேலை செய்ய வேண்டும். எந்தத் தொழிலிலும் இத்தனை அம்சமும் இணைந்தது கிடையாது.”
(-தொடரும்…)

முந்தையபகுதி – 7 | அடுத்தபகுதி – 9

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...