அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 8 | செல்லம் ஜெரினா
அத்தியாயம் – 8
உள்ளே நுழைந்த மஞ்சுளாவைத் தொடர்ந்து அபய் சக்ரவர்த்தியும் கதவை அடைத்தான் வேகமாக.
“ஏய்! மரியாதையா உன் அம்மா வீட்டுக்கு கிளம்பு.
“நான் ஏன் போகனும்? “
“இங்கேயிருக்கிற தகுதியையும் எனக்கு மனைவிங்கிற யோக்யதையையும் நீ இழந்தாச்சு “
“உளறாதீங்க”
அபய் அவளை நெருங்கி அவள்கூந்தலை கொத்தாகப் பிடித்தான்.
“ஸ்..ஸ்…வலிக்குது! விடுங்க”
“ஓ…இது உனக்கு வலி தருதா? உன் வார்த்தையால எத்தனை பேர் மனசை கஷ்டப்படுத்துறே “
என்றவன் பிடித்திருந்த பிடியை உதற அவள் தடுமாறி சுவற்றில் மோதிக் கொண்டாள். ‘விண்’ணென்று தெறித்த வலியில் அவள் கோபமாய்
“இப்ப என்னாச்சுன்னு இப்படி பேயாட்டம் போடுறீங்க? இல்லாததையா சொன்னேன். “
வெகுண்டாள்.
” என்னடி குரல் உசருது? சங்கறுத்துடுவேன். ஏண்டி என் தாய் மாமன் உனக்கு தண்டச்சோறா? என்ன திமிறுடீ உனக்கு? “
“ஆமாம்! உங்கம்மாவோட ஒட்டிப் பொறந்துட்ட தம்பி! போவிங்களா”
“அடி செருப்பாலே! அவர் தண்டச் சோறு ன்னா நீ என்னடீ …?மூணுவேளை சோறும் நாலு வேளை ஜுசுமா கொட்டிக்கிறே? நீ என்னடி இங்கே கழட்டுறே. அதுவுமில்லாம என் தம்பியப் பத்தி பேசுற? அவங்க அந்தரங்கத்தை புட்டு வைக்கிற இந்த கேடு கெட்ட வேலை எத்தனை நாளா நடக்குது?அவன் பெட்ரூமை எட்டிப்பார்த்தியா வெட்கமாயில்லை உனக்கு? சோறு தானே உண்கறே “
“ச்சீ! உங்க தம்பிதான் போன்ல பேசிட்டு இருந்ததை கேட்டேன்”
“”ஓ …ஒட்டுக்கேட்டியா நாயே! “
“ஒட்டு கேட்கலை! யார்கிட்டையோ சொல்லிட்டிருந்தார்! “
“யாரு என் தம்பீ? பொண்டாட்டியப்பத்தி ..நீ கேட்டே! “
“ஆமா கேட்டேன்! ‘அவளுக்கு நின்னநெனப்பு இல்லாம தாலிகட்டிட்டேன். அவளுக்கும் ஸ்பேஸ் தரணும். அவளா மெதுவா என் மேல கவனம் வைக்கனும். பெரிய குடும்பம் வேற. தடுமாறுவா அதான் கண்ணாலங்கட்டியும் பிரம்மச்சாரிடா ‘ன்னு சொன்னாரு. கேட்டேன்.அதைத்தான் சொன்னேன்.அவ எவ்ளோ ராங்கியா பேசுறா? அதான் வண்டவாளத்தை தண்ட வாளத்துலே ஏத்திட்டேன். மூஞ்சியே செத்துப் போச்சில்லே “
ஓங்கி ஒரு அறை விட்டவன்…”நீயெல்லாம் பொண்ணாடி! த்தூ! உன்னோடவா இத்தினி வருஷம் குடும்பம் நடத்துனேன் நினைக்கவே குமட்டுதுடீ! நம்மை போல பொண்ணாச்சேன்னு கூட நினைக்காம…ச்ச்சீசீ…
அதாண்டி… இத்தினி வருசமாயும் மொட்ட மலடியா நிக்கிறே! வயிறு எப்படி பூக்கும்.? நல்ல மனசு இருந்தாத்தானே பூத்துக் குலுங்கும். உன்னை கட்டிக் கிட்ட பாவத்துக்கு நானும் சிரிப்பா சிரிக்கிறேன். எம் முகத்துலேயே விழிக்காதே. நாளைக்கே உன் அம்மா வீட்டுக்கு போயிடு. இல்லே கொலை விழும் இங்கே “
என்று உறுமியவன் கட்டிலில் படுத்துக் கொண்டு விட்டான்.
மஞ்சுளா விக்கித்து நின்றாள். இதுவரை குழந்தையில்லாமைக்கு யார்யாரோ பேசிய போதும் அபய் எப்போதுமே அவளை தாங்கித்தான் நிற்பான். அவனே இன்று மலடி என்றதுமே அதைத் தாங்க மாட்டாமல் தவித்தாள்.அடிபட்ட பார்வையாய் அவனைபார்க்க அவனோ கைகளை நெற்றிக்கு மேல் வைத்துக் கொண்டு படுத்திருந்தான். அழுகை பெருக்கெடுத்தது. கழிவிரக்கம் பொங்கியது. தரையிலேயே மடிந்து உட்கார்ந்து அழுதாள். கணவனின் வார்த்தை கருவேலமுள்ளாய் உறுத்தியது..
உடனே கிளம்பி அம்மாவிடம் போய் அழவேண்டும் என்று நினைத்தாள். ஆனால்….
அங்கே அண்ணியிருப்பாளே! இவளைப்போலவே நாக்கை சுழட்டுவாளே திருக்கை மீன் வாலாட்டம்.போனமுறையே எச்சரித்தவள் தானே!
“வந்தியா இருந்தியா உங்கம்மாவோடு குலாவுனியான்னு போயிட்டேயிருக்கனும். அதை விட்டுட்டு நாட்டாமை பண்ணலாம்னு நினைச்சே …கதை கந்தலாயிடும் “
என்று மிரட்டியிருந்தாள் அண்ணி.அம்மாவுமே பாத்து பதனமா நட! எங்க காலத்துக்குப் பொறவு சீரு உங்கண்ணன் தான் செய்யனும். நீ அண்ணியை தன்னைக் கட்டிக் கிட்டு போனாத்தான் சிறப்பா நடக்கும். இல்லைன்னா முதலுக்கே மோசம் தான் என்று பலமுறை அறிவுறுத்தினாலும் மஞ்சுளாவின் பிறவிக்குணம் தலையெடுக்கத்தான் செய்தது.
வந்த புதிதில் அண்ணி நன்றாகத்தானிருந்தாள். ஆடிக்கு அம்மா வீடு போய்விட்டு புகுந்த வீடுவந்தவளை பார்க்க …முக்யமாய் என்ன சீர் கொண்டு வந்தாள் என்று பார்க்கவே மஞ்சு வந்திருந்தாள்.
அண்ணியின் தாய்வீடு நிறக்கவே செய்திருந்தது. ஆனாலும் அண்ணியின் கழுத்திலிருந்த நவின மோஸ்தர் நெக்லேஸ் மஞ்சுவின் கண்ணை உறுத்தியது.
“அண்ணி! அழகாயிருக்கே! கழட்டுங்களேன். பார்ப்போம்”
என்றதும் விகல்பமின்றி மஞ்சுவின் கையில் தந்தாள் வெட்கத்தோடு. அண்ணியின் வெட்கத்தடுமாற்றத்தையெல்லாம் கவனிக்காத மஞ்சு கொக்குக்கு ஒன்றே மதி என்பது போல திருப்பித் திருப்பிப் பார்த்தாள்
“அண்ணி! இது எனக்கு பிடிச்சுருக்கு நான் எடுத்துக்கிடறேன்”
தன் கழுத்தருகே மஞ்சு நெக்லேஸை கொண்டு போக பட்டென்றுவேகமாய் இழுத்தாள் அண்ணி. நெக்லேஸ் அண்ணி கைக்குள் அடங்கி விட மஞ்சு மூர்க்கமானாள்.
“அம்மா “
என்று காலை நிலத்தில் உதைதத்தவள் ஆங்காரமாய் கத்தினாள்.
அண்ணியோ அவளை சட்டையே பண்ணாமல் தன் நகைகள் புடைவைகளை அலமாரியில் வைத்து பூட்டி சாவிக் கொத்தை இடுப்பில் செருகிக் கொண்டாள்.
மாமியார் என்னவோ ஏதோ என்றுவர மஞ்சு கண்ணை கசக்கினாள்.
“என்னம்மாயிது? சின்னப்பொண்ணுதானே ஆசைப்படறா. ரெண்டு நாள் ஆசை தீரப் போட்டுட்டு தந்திடப்போறா”
“தரமுடியாது அத்தை! பிறத்தியார் யூஸ் பண்ணினதைநான் திரும்ப யூஸ் பண்ண பிடிக்காது. அத்தோடு இது என் புருஷன் முதன்முதல் எனக்கு வாங்கித் தந்த நகை. தருவதற்கு முடியாது. “
மஞ்சுளாவின் தாய்க்கும் ஆக்ரோஷம் பொங்கியது.என் மகள் கேட்டு இவ தரமாட்டாளா
“யோசிச்சுதான் பேசுறியா மருமகளே என் மகள் பிறத்தியாரா? . “
“யோசிச்சுதான் பேசுறேன். என் வரைக்கும் நாத்தனாரானாலும் மூணாவது மனுஷி தான். எல்லா உறவுக்குமே லிமிட் இருக்கு. எப்பப் பாரு வரும் போதெல்லாம் புடைவை நகைன்னு அள்ளிட்டு போறது. வந்து உட்கார்ந்திட்டு அதிகாரம் வேற. கட்டிக் கொடுத்தாச்சுல்ல. அவங்கவங்க எல்லையிலே நிக்கனும்.. மகனுக்கும் மாமாவுக்கும் தெரியாம நீங்க உங்க பொண்ணுக்குத்தருவது எனக்குத் தெரியாதுன்னு நினைச்சீங்களா.நீங்களும் தான் எல்லையோடு நின்னா மாமியார் மருமக உறவு சுமூகமாயிருக்கும். அவ்ளோதான் நான் சொல்லவேண்டியதை சொல்லிட்டேன்.”
மகளும் தாயும் விழித்துக் கொண்டு நிற்க அவள் வெளியேறினாள்.
அதன் பிறகு சுகமில்லா உறவானது தாய்வீடு. மஞ்சுவிற்கு எப்போதுமே திருப்தியில்லாத மனம். அடுத்தவரை மட்டம் தட்டியே பேசும் குணம். அடுத்தவருக்கு வலிக்குமோ என்றெல்லாம் யோசிக்காமலே பேசுவாள். பெரிய குடும்பத்தின் மூத்த மருமகள் என்ற பெருமையும் தானே புகுந்த வீட்டுக்கு இளவரசி என்ற எண்ணமும்.
இப்போதும் தான்பேசிவைத்த வினையை யோசிக்கத்தானில்லை அவள். கதவு தட்டப்பட்டது. அபய் எழுந்து போய் கதவைத் திறந்தான். வாசலில் நந்தன்.
“அண்ணா! சண்டை போட்டுட்டு இருக்காதே! அண்ணியை சமாதானம் பண்ணு. மாமா சொல்லிட்டு போனார். “
“ஸாரிடா! அவ என்னென்னவோ பேசிட்டாடா..”
“விடுண்ணா ! குழப்பிக்காதே எதையும் போட்டு “
என்றவன் ஹாலில் அமர்ந்து தன் மடிக் கணிணியை வைத்துக் கொண்டு வேலை பார்க்க ஆரம்பித்தான்.
அவரவர் சாப்பிட்டு முடிக்க இவன் மட்டும் கொஞ்சம் ரசம் சாதம் போதும் என்று விட்டான். மரகதம் ஒரு கூடையில் ப்ளாஸ்க்கும் சில பழங்களையும் வைத்து தந்தார்.
“தம்பி! நிலா சாப்பாடு வேணாம்னு சொல்லிடுச்சாம். பொன்னி சொன்னா. வெறும் வயிறோடு படுக்க வேணாம் பாலை குடிக்கச் சொல்லு.”
“சரிம்மா! நீங்க போய் படுத்துக் கொள்ளுங்க “
இன்னும் கொஞ்சம் நேரம் பிடித்தது வேலை முடிய. கணிணியையும் கூடையையும் எடுத்துக் கொண்டு தன் அறைக்குள் நுழைந்தான். நிலவழகியைஅறையில் காணவில்லை. பால்கனிப்பக்கம் போனான்.
அங்கிருந்த நீள கவுச் சொன்றில் அவன் மனைவி நிலவழகி உடலைக் குறுக்கிக் கொண்டு படுத்திருந்தாள். கன்னத்தில் கண்ணீர்த்தடம் தெரிந்தது. லேசாகக் கசிந்து பரவிய ஒளியில் ஒரு வெளிச்சப்பூவைப்போல மின்னியதில் நந்தன் மனமும் உடலும் ஒருங்கே சிலிர்த்தது.நூதன உணர்வு குபீரேனப் பூத்தது. கன்னத்திலிருந்த கூந்தலை ஒதுக்கினான். அவளோ பதறியெழுந்தாள்.
“ஹேய்! ஹேய்! நாந்தான். ஏனிப்படி பதறி எழுந்திருக்கிறே “
“நீ…நீங்களா..”
“இங்கே என்னைத் தவிர வேறு யாரு வருவா ..”
“இ..இல்லே..தூங்கிட்டேன்..வந்து யாரோ தொடறாப்போல இருக்கவே…”
“ஆமா அழுதியா என்ன? “
“அதெல்லாமில்லே! நீங்க சாப்பிட்டீங்களா “
“ம் அதெல்லாம் ஆச்சு. அம்மா உனக்கு பால் கொடுத்து விட்டாங்க சாப்பிடச் சொல்லி. இரு எடுத்து வரேன். “
“இல்லையில்லை அப்புறமா நானே…”
“அண்ணி பேசினதை நினைச்சு அழுதியா”
“………..”
“ப்ச்! அவங்க அப்படித்தான். அதையெல்லாம் காதிலே வாங்காதே. எப்படி கண்ணு வீங்கிப்போயிருக்கு. ம் ..சாப்பாடும் வேணாம்னு சொல்லிட்டே என்னடா அழகி இது. “
பேசியபடியே ப்ளாஸ்கிலிருந்த பாலை தம்ளரில் சரித்து அவளிடம் நீட்டினான்.வாங்கிக் கொண்டவள் அருந்த ஆரம்பித்தாள். அழுகையில் முகம் அதுங்கிக் கிடந்தாலும் கவர்ச்சியொன்று மின்னலாய் தெறித்தது. குடை போல கவிந்திருந்த இமை களில் கருப்பாய் வளைவாய் நீளநீளமாய் முடிகள்….என்னை முத்தமிடேன் என்று அழைப்பு விடுத்தன. அவள் நகர்ந்து இடம் தந்தாள். அருகிலமர்ந்து தன்னவளைப் பார்க்கையில் மூச்சடைத்தது நந்தனுக்கு. குடித்ததும் தம்ளர சுவர் திட்டின் மீது வைத்தவளின் மேலுதட்டில் துளிப் பால் ஒட்டிக் கொண்டு இதோ விழுந்து விடுவேன் என்று மிரட்ட நந்தன் தவித்தான்.
“ஹேய்! அப்படியேயிரு “
என்று அவள்முகத்தை இருகைகளில் ஏந்தியவன் நெருக்கமாய் வர இவள் திகைக்க அவனோ தன்நாவினால் அவள் மேலுதட்டில் ஒத்தடம் தந்து அந்தத் துளியை விழுங்கினான். நிலவழகி மூச்சுவிட மறந்து கிறங்கினாள்.
“அழகி…!”
“ம்”
“அண்ணி சொன்னதை பொய்யாக்கிடலாமா? “
அவன் உதடு பேசும்போது இவள் உதடுகளை உரசியது. இருவருள்ளும் தீயை மூட்டியது.
அவளை கைகளில் அள்ளிக்கொண்டு காலால் பால்கனிக் கதவைச் சாத்திவிட்டு அவளை மஞ்சத்தில் கிடத்த அவள் முகமே செக்கர் வானமானது.
“அழகி…அழகிக் குட்டி! “
என்றவன் அவளை இறுக்கிக் கொள்ள அவள் குழைந்து கொடுக்க தாம்பத்தியம் தன் புனிதமான மகரந்தங்களை வெடித்துக் கொண்டு மலர்ந்தது. அவளுள் அவன் புதைய அவனை அவள் ஏந்திக்கொள்ள உறவின் ஸ்வரங்கள் அங்கே சுகராகமெழுப்பின.
மழையில் முதல்துளி எப்போது பூமியைத்தொட்டது என்று யாருக்குத் தெரியும்?
அரும்பு எப்போது விரிந்தது என்று யார் அறிவார்.
எல்லாமே தேவ வினாடியில் நடந்து முடிபவை
அப்பேர்ப்பட்டதொரு நொடியில் நந்தன் நிலவழகியை முழுமையாக தன் ஆளுமைக்கு கொண்டு வந்திருந்தான்.
விடியலில்
எழுந்தவளுக்கு கடந்து போன இரவில் நடந்து முடிந்தவை கதுப்புகளில் சிவப்பையேற்ற. வேகமாக குளித்து முடித்துவிட்டுகீழே போனாள்.
பூஜையறையில் விளக்கேற்றி கைகுவித்தாள். மனமெங்கும் நிறைவு ததும்பியது. அந்த நிறைவோடே ஆரத்தி காட்டினாள்.
ரங்கநாயகி உள்ளே வர கண்ணில் ஆரத்தியை ஒற்றிக்கொண்டு நிலவழகியைப் பார்க்க வாழ்ந்து முடித்த தலைமுறைக்கு வாழ்க்கையை இந்தத் தலைமுறை துவங்கிவிட்டதை கண்டுபிடிப்பதா கஷ்டம்.பொலிவோடு பூத்த முகமும் நாணச் சிவப்பும் ரங்கநாயகி நிலவழகியின் தலையில் கை வைத்து ஆசிர்வதித்தார்.
“இதே சந்தோஷமும் பொலிவும் என்னிக்கும் இருக்கணும்டீ பொண்ணே. இதே வேகத்துலே ஒரு கொள்ளு பேரனையோ பேத்தியையோ பெத்து என் மடியிலே போட்டுடு அது போதும்.
அந்த வெளங்காதவ கொளுத்திப் போட்டதிலும் ஒரு நல்லது நடந்துருச்சு ..அடி பொன்னி! எம் பேத்திக்கு சுத்திப் போடுடீ! கண்ணு பட்டுடும்.”
நிலவழகி முகத்தை பொத்திக் கொண்டாள்.
பொத்திய கைகளை விலக்கும் போது எதிரே நந்தன் நின்று ரசனையும் விஷமமும் உல்லாசமுமாய் பார்த்துக் கொண்டிருந்தான்.
நிலவழகி அடுக்களைக்குள் ஓடி விட்டாள்.
(-சஞ்சாரம் தொடரும்…)
முந்தையபகுதி – 7 | அடுத்தபகுதி – 9